Revised Common Lectionary (Semicontinuous)
96 கர்த்தர் செய்த புதுகாரியங்களைப்பற்றி ஒரு புதுப்பாடலைப் பாடுங்கள்!
உலகம் முழுவதும் கர்த்தரை நோக்கிப் பாடட்டும்.
2 கர்த்தரை நோக்கிப் பாடுங்கள்!
அவரது நாமத்தை ஸ்தோத்தரியுங்கள்!
ஒவ்வொரு நாளும் அவர் நம்மை பாதுகாப்பதைப் பற்றிச் சொல்லுங்கள்!
3 தேவன் உண்மையிலேயே அற்புதமானவர் என்பதை ஜனங்களுக்குக் கூறுங்கள்.
தேவன் செய்கிற வியப்பிற்குரிய காரியங்களை எங்குமுள்ள ஜனங்களுக்குச் சொல்லுங்கள்.
4 கர்த்தர் மேன்மையானவர், துதிகளுக்குரியவர்.
வேறெந்த “தெய்வங்களைக்” காட்டிலும் அவர் அஞ்சத்தக்கவர்.
5 பிற தேசங்களின் “தெய்வங்கள்” எல்லாரும் வெறும் சிலைகளே.
ஆனால் கர்த்தரோ வானங்களை உண்டாகினவர்.
6 அவருக்கு முன்னே அழகிய மகிமை ஒளி வீசும்.
தேவனுடைய பரிசுத்த ஆலயத்தில் பெலனும் அழகும் விளங்கும்.
7 குடும்பங்களும் தேசங்களும்
கர்த்தருக்கு மகிமையும், துதியும் நிரம்பிய பாடல்களைப் பாடுவார்கள்.
8 கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்.
உங்கள் காணிக்கைகளோடு ஆலயத்திற்குச் செல்லுங்கள்.
9 கர்த்தருடைய அழகான ஆலயத்தில் அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
கர்த்தரைப் பூமியிலுள்ள ஒவ்வொருவரும் தொழுதுகொள்ளுங்கள்.
10 கர்த்தரே அரசரென்று தேசங்களுக்கெல்லாம் அறிவியுங்கள்!
அதனால் உலகம் அழிக்கப்படுவதில்லை.
கர்த்தர் ஜனங்களை நியாயமாக அரசாளுவார்.
11 விண்ணுலகங்களே!
மகிழ்ச்சிகொள்ளுங்கள்.
பூமியே! களிகூரு.
கடலும் அதிலுள்ளவையும் களிப்பால் குரல் எழுப்பட்டும்!
12 வயல்களும் அதில் விளைந்துள்ள அனைத்தும் மகிழ்ச்சிகொள்ளட்டும்!
வனத்தின் மரங்களே, பாடி மகிழுங்கள்!
13 கர்த்தர் வருகிறார், ஆதலால் மகிழ்ச்சியடையுங்கள்.
கர்த்தர் உலகை ஆளுகை செய்ய வந்துகொண்டிருக்கிறார்.
நீதியோடும் நியாயத்தோடும்
அவர் உலகை ஆளுகை செய்வார்.
20 யெரொபெயாம் திரும்பி வருவதை இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் அறிந்தனர். எனவே ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அவனை இஸ்ரவேல் முழுமைக்கும் ராஜாவாக்கினார்கள். யூதாவின் கோத்திரத்தினர் மட்டும் தாவீதின் குடும்பத்தைப் பின்பற்றுகிறவர்களாக இருந்தனர்.
21 ரெகொபெயாம் எருசலேமுக்குப் போய் யூதா மற்றும் பென்யமீன் கோத்திரத்தாரை ஒன்று சேர்த்தான். இது 1,80,000 பேர் கொண்ட படையாயிற்று. ராஜா இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராகச் சண்டை போட விரும்பினான். தனது ஆட்சி பீடத்தைத் திரும்பப்பெற விரும்பினான். 22 ஆனால் கர்த்தர் சேமாயா என்ற தீர்க்கதரிசியோடு பேசினார். கர்த்தர், 23 “நீ யூதாவின் ராஜாவாகிய, சாலொமோனின் குமாரன், ரெகொ பெயாமிடம் கூறு. அத்துடன் யூதா மற்றும் பென்யமீன் ஜனங்களிடமும் கூறு. 24 நீ அவர்களிடம், ‘உனது சகோதரர்களோடு சண்டை போடவேண்டாம் என்று கர்த்தர் சொல்கிறார். ஒவ்வொருவரும் வீட்டிற்குப் போங்கள், நான் இவ்வாறு நிகழும்படி செய்தேன்!’ என்று சொல்” என்றார். எனவே ராஜாவின் படையிலுள்ள அனைவரும் கர்த்தருடைய கட்டளைக்கு அடிப்பணிந்து வீட்டிற்குத் திரும்பினார்கள்.
25 சீகேம் என்பது எப்பிராயீம் நாட்டின் மலை நகரம். அதனை ராஜா யெரொபெயாமும் பலம் பொருந்தியதாக ஆக்கி அங்கே வாழ்ந்தான். பின்னர் பெனூவேலைப் பலமாக்கி அங்கே வாழ்ந்தான்.
26-27 யெரொபெயாம் தனக்குள்ளேயே, “ஜனங்கள் எருசலேமில் தொடர்ந்து கர்த்தருடைய ஆலயத்திற்கு காணிக்கைகளை அளிக்கச் செல்வார்களேயானால், பின் அவர்கள் தாவீதின் குடும்பத்தால் ஆளப்படவேண்டும் என விரும்புவார்கள். அவர்கள் ரெகொபெயாமைப் பின்பற்றி, அவனை மீண்டும் ராஜாவாக்குவார்கள். என்னைக் கொன்றுவிடுவார்கள்” என எண்ணினான். 28 எனவே அவன் தன்னைச் சார்ந்தவர்களோடு கலந்து யோசித்தான். அவன் இரண்டு தங்க கன்றுக்குட்டிகளைச் செய்தான். ஜனங்களிடம், “இனிமேல் நீங்கள் எருசலேம் போய் தொழுதுகொள்ள வேண்டாம். உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த தெய்வங்கள் இவைகள் தான்” என்றான். 29 பின்னர் பெத்தேலில் ஒரு கன்றுகுட்டியும், தாண் நகரில் ஒரு கன்றுக் குட்டியும் வைத்தான். 30 ஜனங்கள் பெத்லேலுக்கும் தாணுக்கும் போய் கன்றுக்குட்டிகளின் உருவங்களை வழிபட்டனர். இது பெரிய பாவமானது.
31 யெரொபெயாமும் உயர்ந்த மலையிடங்களில் ஆலயங்களைக் கட்டினான். அதற்கு ஆசாரியர்களாக இஸ்ரவேலின் வெவ்வேறு கோத்திரங்களிலிருந்து தேர்ந்தெடுத்தான். (அவன் லேவியர் கோத்திரத்திலிருந்து மட்டும் ஆசாரியர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை). 32 ராஜா புதிய விடுமுறைநாளையும் உருவாக்கினான். இது பஸ்கா பண்டிகையைப்போன்று யூதாவில் விழாவாயிற்று. ஆனால் இது எட்டாவது மாதத்தில் 15வது நாள், முதல் மாதத்தின் 15வது நாள் இல்லை. அந்த காலத்தில் பெத்தேலில் பலிபீடத்தில் பலவித பலிகளைச் செய்தான். அப்பலிகள் அவனால் செய்யப்பட்ட காளைகளுக்கு உரியதாயிற்று. அங்கே பெத்தேல் நகரிலேயே ராஜா ஆசாரியர்களை தேர்ந்தெடுத்து தொழுகைக்கு ஏற்பாடு செய்தான். 33 இவ்வாறு ராஜா, இஸ்ரவேலுக்கு உரிய விடுமுறைக்கு தன் சொந்த நாளை தேர்ந்தெடுத்துக் கொண்டான். இது எட்டாவது மாதத்தின் 15வது நாள். அப்போது அவன் பலிபீடத்தில் பலியிட்டு நறுமணப் பொருட்களை எரித்தான். இவை பெத்தேல் நகரில் நடந்தது.
தூண்டிவிடும் தேவ அன்பு
11 கர்த்தருக்குப் பயப்படுவது என்றால் என்ன பொருள் என நாம் அறிவோம். எனவே மக்கள் உண்மையை ஏற்றுக்கொள்ளும்படி உதவ நாங்கள் முயற்சி செய்கிறோம். உண்மையில் நாங்கள் யார் என்பது தேவனுக்குத் தெரியும். எங்களைப் பற்றி உங்கள் இதயங்களுக்கும் தெரியும் என்று நம்புகிறேன். 12 நாங்கள் மீண்டும் உங்களுக்கு எங்களை நிரூபித்துக்கொள்ள முயற்சி செய்யவில்லை. ஆனால் எங்களைப் பற்றி நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறோம். எங்களைக் குறித்து நீங்கள் பெருமைப்பட்டுக்கொள்வதற்கான காரணங்களையும் சொல்லியிருக்கிறோம். இப்போது வெளிப்படையாய்த் தெரியும் சில காரணங்களுக்காகத் தம்மைத்தாமே பாராட்டிக்கொள்ளும் சிலருக்குத் தெரிவிக்க உங்களிடம் ஒரு பதில் உள்ளது. ஒரு மனிதனின் இதயத்துக்குள் என்ன இருக்கிறது என்பதைப் பற்றிக் கவலை இல்லாதவர்கள் அவர்கள். 13 நாங்கள் பைத்தியம் என்றால் அதுவும் தேவனுக்காகத்தான். நாங்கள் தெளிந்த, சரியான புத்தி உள்ளவர்கள் என்றால் அதுவும் உங்களுக்காகத்தான். 14 கிறிஸ்துவின் அன்பு எங்களைத் தூண்டிவிடுகிறது. ஏனென்றால் ஒவ்வொருவருக்குமாக அவர் இறந்தார் என்பது, அனைவருமே இறந்துவிட்டதையே குறிக்கும் என்று நமக்குத் தெரியும். 15 கிறிஸ்து மக்கள் அனைவருக்காகவும் இறந்து போனதால், உயிரோடு இருக்கிறவர்கள் இனிமேல் தங்களுக்கென்று இராமல், தங்களுக்காக மரித்து எழுந்த கிறிஸ்துவுக்காக உயிர் வாழவேண்டும்.
16 எனவே, இந்த நேரத்திலிருந்து, நாங்கள் ஒருவரையும் மற்ற உலக மக்களைப் போன்று சரீரத்தில் அறியமாட்டோம். முன்பு நாங்களும் மற்றவர்களைப் போன்றே கிறிஸ்துவை சரீரத்தில் அறிந்திருந்தோம். இனிமேல் அவ்வாறு எண்ணவில்லை. 17 எவராவது கிறிஸ்துவுக்குள் இருந்தால் அவன் புதிதாகப் படைக்கப்பட்டவனாகிறான். பழையவை மறைந்தன. அனைத்தும் புதியவை ஆயின.
2008 by World Bible Translation Center