Revised Common Lectionary (Semicontinuous)
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.
20 தொல்லைகள் சூழ்ந்திருக்கையில் நீ கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது கர்த்தர் பதிலளிக்கட்டும்.
யாக்கோபின் தேவன் உன் பெயரை முக்கியமாக்கட்டும்.
2 அவரது பரிசுத்த இடத்திலிருந்து தேவன் உதவி அனுப்பட்டும்.
சீயோனிலிருந்து அவர் உனக்குத் துணை நிற்கட்டும்.
3 நீ அளித்த அன்பளிப்புகளை தேவன் நினைவுகூரட்டும்.
உன் பலிகளையெல்லாம் அவர் ஏற்றுக்கொள்ளட்டும்.
4 தேவன் உனக்குத் தேவையான எல்லாவற்றையும் தருவார் என நம்புகிறேன்.
உன் எல்லாத் திட்டங்களையும் நிறைவேற்றுவார் என நம்புகிறேன்.
5 தேவன் உனக்கு உதவும்போது நாம் மகிழ்வடைவோம்.
நாம் தேவனுடைய நாமத்தைத் துதிப்போம்.
நீ கேட்பவற்றை யெல்லாம் கர்த்தர் தருவார் என்று நான் நம்புகிறேன்.
6 கர்த்தர் தான் தேர்ந்தெடுத்த ராஜாவுக்கு உதவுகிறார் என இப்போது அறிகிறேன்.
தேவன் அவரது பரிசுத்த பரலோகத்தில் இருந்தார்.
அவர் தேர்ந்தெடுத்த ராஜாவுக்குப் பதில் தந்தார்.
அவனைப் பாதுகாக்க தேவன் தன் உயர்ந்த வல்லமையைப் பயன்படுத்தினார்.
7 சிலர் தங்கள் இரதங்களை நம்புகின்றனர்.
மற்றோர் தங்கள் வீரர்களை நம்புகின்றனர்.
ஆனால் நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தரை நினைக்கின்றோம்.
அவரின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவோம்.
8 அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.
அவர்கள் யுத்தத்தில் மடிந்தனர்.
ஆனால் நாங்கள் வென்றோம்!
நாங்கள் வெற்றிபெற்றவர்கள்.
9 கர்த்தர் தாம் தேர்ந்தெடுத்த ராஜாவை மீட்டார்!
தேவன் தேர்ந்தெடுத்த ராஜா உதவி வேண்டினான். தேவன் பதில் தந்தார்!
யோதாமின் கதை
7 சீகேம் நகரத்தின் தலைவர்கள் அபிமெலேக்கை ராஜாவாக்கினார்கள் என்பதை யோதாம் கேள்விப்பட்டான். அவன் அதைக் கேள்விப்பட்டபோது அவன் கெரிசீம் மலையின் மேல் போய் நின்றான். யோதாம் பின்வரும் உவமையை ஜனங்களுக்கு உரக்கக் கூறினான்:
“சீகேம் நகரத்தின் தலைவர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். பின் தேவன் உங்களுக்குச் செவிசாய்க்கட்டும். 8 ஒருநாள் மரங்கள் தம்மை ஆள்வதற்கு ஓர் ராஜாவைத் தேர்ந்தெடுக்க முடிவுசெய்தன. மரங்கள் ஒலிவமரத்திடம், ‘எங்களுக்கு நீ ராஜாவாக இருந்து ஆளுகை செய்’ என்றன.
9 “ஆனால் ஒலிவமரம், ‘மனிதர்களும் தேவனும் எனது எண்ணெய்க்காக என்னைப் போற்றுகின்றனர். நான் எண்ணெய் தருவதை நிறுத்திவிட்டு பிற மரங்களை ஆளும்படி போக முடியுமா?’ என்றது.
10 “பின் மரங்கள் அத்திமரத்தைப் பார்த்து, ‘நீ வந்து எங்களுக்கு ராஜாவாயிரு’ என்றன.
11 “ஆனால் அத்திமரம், ‘நான் நல்ல, இனிய பழம் தருவதை நிறுத்திவிட்டுப் பிற மரங்களை ஆட்சி செய்ய வர முடியுமா?’ என்றது.
12 “பின் மரங்கள் திராட்சைக் கொடியைப் பார்த்து, ‘எங்களுக்கு ராஜாவாக இரு’ என்றன.
13 “அதற்குத் திராட்சைக்கொடி, ‘எனது ரசம் மனிதர்களையும் ராஜாக்களையும் மகிழ்விக்கின்றது. நான் ரசத்தை உண்டாக்குவதை நிறுத்திவிட்டு மரங்களை ஆளமுடியுமா?’ என்று பதில் சொன்னது.
14 “இறுதியில் எல்லா மரங்களும் முட்புதரைப் பார்த்து, ‘எங்களுக்கு ராஜாவாயிரு’ என்றன.
15 “அந்த முட்புதர் மரங்களைப் பார்த்து, ‘நான் உங்களுக்கு உண்மையாகவே ராஜாவாக வேண்டுமென்றால், என் நிழலின் கீழ் வாருங்கள். உங்களுக்கு அவ்வாறு செய்ய விருப்பமில்லையென்றால், முட்புதரிலிருந்து நெருப்பு எழட்டும். நெருப்பு லீபனோனிலுள்ள கேதுரு மரங்களையும் எரிக்கட்டும்’ என்றது.
கிறிஸ்துவின் பகைவரைப் பின்பற்றாதீர்கள்
18 எனது அன்பான பிள்ளைகளே, முடிவு நெருங்குகிறது. போலிக் கிறிஸ்து வந்துகொண்டிருப்பதைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் பகைவர்கள் பலர் இங்கு ஏற்கெனவே உள்ளனர். எனவே முடிவு நெருங்குகிறது என்பதை நாம் அறிவோம். 19 நமது குழுவிலேயே கிறிஸ்துவின் பகைவர்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் நம்மை விட்டுச் சென்றுவிட்டனர். அவர்கள் நம்மோடு சேர்ந்தவர்களாக வாழவில்லை. உண்மையிலேயே நம் குழுவில் உள்ளவர்களாக அவர்கள் இருந்திருந்தால், அவர்கள் நம்மோடு தங்கியிருப்பார்கள். ஆனால் அவர்கள் நம்மைப் பிரிந்தனர். அவர்களில் ஒருவர் கூட நம்மோடு உண்மையாகச் சேர்ந்திருந்ததில்லை என்பதை இது காட்டுகிறது.
20 புனிதமான ஒருவர் உங்களுக்குக் கொடுத்த பரிசை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். எனவே உங்கள் எல்லோருக்கும் உண்மை தெரியும். 21 ஏன் நான் உங்களுக்கு எழுதுகிறேன்? நீங்கள் உண்மையை அறியாததால் எழுதுகிறேனா? இல்லை! நீங்கள் உண்மையை அறிந்திருப்பதாலேயே இக்கடிதத்தை எழுதுகிறேன். உண்மையிலிருந்து எந்தப் பொய்யும் வருவதில்லை என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
22 எனவே யார் பொய்யன்? இயேசுவை கிறிஸ்துவல்ல என்று கூறுபவனே பொய்யன். அவனே போலிக் கிறிஸ்து. அம்மனிதன் பிதாவிலோ அல்லது குமாரனிலோ நம்பிக்கை வைப்பதில்லை. 23 ஒருவன் குமாரனில் நம்பிக்கை வைக்காமலிருந்தால் அவன் பிதாவை உடையவனல்ல. குமாரனை ஏற்கிற ஒருவனுக்கு பிதாவும்கூட இருக்கிறார்.
24 துவக்கத்திலிருந்தே நீங்கள் கேட்ட போதனையைப் பின்பற்றுவதைத் தொடருங்கள். அப்போதனையைத் தொடர்ந்து பின்பற்றினால், நீங்கள் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள். 25 நமக்கு குமாரன் வாக்களித்த நித்திய ஜீவன் இதுதான்.
26 உங்களைத் தவறான வழிக்குள் நடத்த முயன்றுகொண்டிருக்கிற மக்களைக் குறித்தே இக்கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன். 27 கிறிஸ்து உங்களுக்குக் கொடுத்த சிறப்பான அபிஷேகம் உங்களிடையே நிலைத்திருக்கிறது. எனவே உங்களுக்குப் போதிப்பதற்கு எந்த மனிதனும் தேவையில்லை. அவர் உங்களுக்குக் கொடுத்த அந்த அபிஷேகமானது எல்லாவற்றையும் உங்களுக்குப் போதிக்கிறது. அந்த அபிஷேகம் உண்மையானது. அது பொய்யானதன்று. எனவே அவரது அபிஷேகம் போதித்ததைப் போல கிறிஸ்துவில் வாழ்வதைத் தொடருங்கள்.
28 ஆம், எனது அன்பான பிள்ளைகளே, அவரில் வாழுங்கள். நாம் இதைச் செய்தால் கிறிஸ்து மீண்டும் வரும் நாளில் அச்சமற்றவர்களாக இருக்க முடியும். அவர் வரும் போது நாம் மறைந்துகொள்ளவோ, வெட்கமடையவோ தேவையில்லை.
2008 by World Bible Translation Center