Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யோசுவா 5:9-12

கானானில் முதல் பஸ்கா

அப்போது, கர்த்தர் யோசுவாவிடம், “நீங்கள் அனைவரும் எகிப்தில் அடிமைகளாயிருந்தீர்கள். அது உங்களை வெட்கமடையச் செய்தது. ஆனால் இன்று நான் அவ்வெட்கத்தைப் போக்கிவிட்டேன்” என்றார். எனவே யோசுவா அவ்விடத்திற்குக் “கில்கால்” எனப் பெயரிட்டான். இன்றளவும் அந்த இடம் “கில்கால்” என்றே அழைக்கப்படுகிறது.

10 எரிகோவின் சமவெளியிலுள்ள கில்காலில் முகாமிட்டிருந்தபோது இஸ்ரவேல் ஜனங்கள் பஸ்காவைக் கொண்டாடினர். அப்போது மாதத்தின் பதினான்காவது நாள் மாலையாக இருந்தது. 11 பஸ்காவிற்கு மறு நாள், ஜனங்கள் அந்நிலத்தில் விளைந்த உணவை உண்டனர். புளிப்பின்றி செய்த அப்பத்தையும், சுட்ட தானியத்தையும் அவர்கள் சாப்பிட்டனர். 12 மறுநாள், காலையில் வானத்திலிருந்து கிடைத்த விசேஷ உணவு காணப்படவில்லை. கானானில் விளைந்த உணவைச் சாப்பிட்ட நாளில் அது நிகழ்ந்தது. அப்போதிலிருந்து இஸ்ரவேலின் ஜனங்கள் வானத்திலிருந்து விசேஷ உணவைப் பெறவில்லை.

சங்கீதம் 32

மஸ்கீல், என்னும் தாவீதின் பாடல்.

32 பாவங்கள் மன்னிக்கப்பட்ட மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
    பாவங்கள் மூடப்பட்ட மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
குற்றமற்றவன் என கர்த்தர் கூறும் மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
    இரகசியமான பாவங்களை மறைக்க முயலாதிருக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.

தேவனே, நான் மீண்டும், மீண்டும் உம்மிடம் ஜெபித்தேன்.
    ஆனால் என் இரகசியமான பாவங்களைக் குறித்து நான் பேசவில்லை.
    நான் ஜெபித்த ஒவ்வொரு முறையும் என் வலிமை குன்றிப்போயிற்று.
தேவனே, இரவும் பகலும் என் வாழ்க்கையைமென்மேலும் கடினமாக்கினீர்.
    கோடைக் காலத்தில் உலர்ந்து காய்ந்துபோன நிலத்தைப் போலானேன்.

என் பாவங்களையெல்லாம் கர்த்தரிடம் அறிக்கையிடத் தீர்மானித்தேன்.
    கர்த்தாவே, உம்மிடம் என் பாவங்களைப் பற்றிக் கூறினேன்.
    என் குற்றங்கள் எதையும் நான் மறைக்கவில்லை. என் பாவங்களை எல்லாம் நீர் எனக்கு மன்னித்தீர்.

இதற்காக, தேவனே, உம்மைப் பின்பற்றுவோர் உம்மிடம் ஜெபம் செய்யவேண்டும்.
    வெள்ளப் பெருக்கைப்போல் தொல்லைகள் வந்தாலும் உம்மைப் பின்பற்றுவோர் ஜெபிக்கவேண்டும்.
தேவனே, நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்.
    என் தொல்லைகளிலிருந்து நீர் என்னைக் காக்கிறீர்.
நீர் என்னைச் சூழ்ந்து என்னைக் காக்கிறீர்.
    எனவே நீர் என்னைப் பாதுகாத்த வகையை நான் பாடுகிறேன்.

கர்த்தர், “நீ வாழவேண்டிய வழியை உனக்கு போதித்து வழிநடத்துவேன்.
    உன்னைக் காத்து உனக்கு வழிகாட்டியாயிருப்பேன் என்று கூறுகிறார்.
எனவே குதிரையை அல்லது கழுதையைப் போல் மூடனாகாதே.
    அம்மிருகங்களை வழி நடத்துவோர் கடிவாளங்களையும் பயன்படுத்தாமல் அவற்றை கட்டுப்படுத்த இயலாது” என்கிறார்.

10 தீயோருக்கு வேதனைகள் பெருகும்.
    கர்த்தரை நம்புவோரை தேவனுடைய உண்மையான அன்பு சூழ்ந்துகொள்ளும்.
11 நல்லோரே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்.
    பரிசுத்த இருதயமுள்ள ஜனங்களே! களிப்படையுங்கள்.

2 கொரி 5:16-21

16 எனவே, இந்த நேரத்திலிருந்து, நாங்கள் ஒருவரையும் மற்ற உலக மக்களைப் போன்று சரீரத்தில் அறியமாட்டோம். முன்பு நாங்களும் மற்றவர்களைப் போன்றே கிறிஸ்துவை சரீரத்தில் அறிந்திருந்தோம். இனிமேல் அவ்வாறு எண்ணவில்லை. 17 எவராவது கிறிஸ்துவுக்குள் இருந்தால் அவன் புதிதாகப் படைக்கப்பட்டவனாகிறான். பழையவை மறைந்தன. அனைத்தும் புதியவை ஆயின. 18 இவை அனைத்தும் தேவனிடமிருந்து வந்தன. கிறிஸ்துவின் மூலம் தேவன் அவருக்கும் நமக்கும் இடையில் சமாதானத்தை உருவாக்கினார். மக்களை சமாதானத்திற்குள் கொண்டு வந்து சேர்க்கும் பணியை எங்களுக்குக் கொடுத்திருக்கிறார். 19 தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்தார். அவருக்கும் உலகத்துக்கும் இடையில் சமாதானத்தை உருவாக்கினார் என்று சொல்கிறேன். கிறிஸ்துவுக்குள், தம் பாவங்கள் குறித்து குற்ற உணர்ச்சி கொண்ட மக்களை தேவன் குற்றவாளிகளாக நிறுத்துவதில்லை. இச்சமாதானச் செய்தியை மக்களுக்குத் தெரிவிக்கும் பொருட்டு எங்களுக்குக் கொடுத்தார். 20 எனவே, கிறிஸ்துவுக்காகப் பேச நாங்கள் அனுப்பப்பட்டிருக்கிறோம். எங்கள் மூலம் தேவன் உங்களை அழைக்கிறார். நாங்கள் கிறிஸ்துவுக்காகப் பேசுகிறோம். நீங்கள் அனைவரும் தேவனோடு சமாதானமாக இருக்க வேண்டுகிறோம். 21 கிறிஸ்துவிடம் பாவம் இல்லை. ஆனால் தேவன் நமக்காக அவரைப் பாவம் ஆக்கினார். நாம் கிறிஸ்துவுக்குள் தேவனுக்கு ஏற்றவர்களாக இருக்கவேண்டும் என்பதற்காக தேவன் இதைச் செய்தார்.

லூக்கா 15:1-3

ஆடு, வெள்ளிக்காசு உவமை

(மத்தேயு 18:12-14)

15 வரி வசூலிப்போர் பலரும், தீயோரும் இயேசு கூறுவதைக் கேட்க வந்தார்கள். உடனே பரிசேயரும் வேதபாரகரும் குறை கூற ஆரம்பித்தவர்களாக, “பாருங்கள்! இந்த மனிதன் (இயேசு) தீயோரை வரவேற்று அவர்களோடு அமர்ந்து உணவு உண்கிறார்” என்றனர்.

அப்போது அவர்களுக்கு இயேசு பின்வரும் உவமையைக் கூறினார்:

லூக்கா 15:11-32

காணாமற்போன குமாரன்

11 அப்போது இயேசு, “ஒரு மனிதனுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தனர். 12 இளைய குமாரன் தந்தையை நோக்கி, ‘நமக்குச் சொந்தமான எல்லாப் பொருட்களிலும் எனது பங்கை எனக்குத் தாருங்கள்’ என்று கூறினான். எனவே தந்தை செல்வத்தை இரண்டு பிள்ளைகளுக்கும் பங்கிட்டுக் கொடுத்தான்.

13 “சில நாட்களுக்குப் பிறகு இளைய குமாரன் தனக்குரிய எல்லாப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டுப் போனான். வேறொரு தூர தேசத்துக்கு அவன் பிரயாணம் செய்தான். அங்கு அவன் பணத்தை மூடனைப்போல் வீணாகச் செலவழித்தான். 14 அவன் தன்னிடமிருந்த பணம் அனைத்தையும் செலவு செய்தான். அதற்குப் பின்னர், அந்நாட்டில் வறட்சி நிலவியது. மழை பெய்யவில்லை. அந்நாட்டில் எல்லாருக்கும் தேவையான அளவுக்கு உணவு கிடைக்கவில்லை. அந்த குமாரன் பசியாலும், பணமின்மையாலும் துன்பப்பட்டான். 15 எனவே அந்த நாட்டில் வாழ்ந்த ஒருவனிடம் அவன் வேலைக்கு அமர்ந்தான். பன்றிகளுக்குத் தீவனமிடுமாறு அந்த குமாரனை அம்மனிதன் அனுப்பினான். 16 அந்த குமாரன் பசிமிகுதியால் பன்றிகள் சாப்பிட்டுக்கொண்டிருந்த உணவையாகிலும் உண்ண வேண்டுமென விரும்பினான். ஆனால் அவனுக்கு ஒருவரும் எந்த உணவையும் கொடுக்கவில்லை.

17 “இளைஞன் தன் மூடத்தனத்தை உணர்ந்தான். அவன், ‘என் தந்தையின் எல்லா வேலைக்காரர்களுக்கும் மிகுதியான உணவு கிடைக்கும். நானோ உணவின்றி இங்கு இறக்கும் நிலையில் இருக்கிறேன். 18 நான் இங்கிருந்து என் தந்தையிடம் போய்: தந்தையே, நான் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தேன். உங்களிடமும் தவறு செய்தேன். 19 உங்கள் குமாரன் என்று அழைக்கப்படும் அளவுக்கு நான் தகுதியுள்ளவன் அல்லன். நான் உங்கள் வேலைக்காரர்களில் ஒருவனாக வாழ அனுமதியுங்கள் என்று சொல்லுவேன்’ என்று எண்ணினான். 20 எனவே அந்த குமாரன் அங்கிருந்து தன் தந்தையிடம் சென்றான்.

குமாரன் திரும்பிவருதல்

“அந்த குமாரன் தொலைவில் வரும்போதே அவனது தந்தை பார்த்துவிட்டார். அந்த குமாரனின் நிலையைக் கண்டு தந்தை வருந்தினார். எனவே தந்தை மகனிடம் ஓடினார். குமாரனை அரவணைத்து முத்தமிட்டார். 21 குமாரன், ‘தந்தையே, நான் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தேன். உங்களுக்கும் தவறு இழைத்தேன். உங்கள் குமாரன் என்று அழைக்கப்படுவதற்கேற்ற தகுதி எனக்குக் கிடையாது’ என்றான்.

22 “ஆனால் தந்தை வேலைக்காரரை நோக்கி, ‘விரைந்து செல்லுங்கள். விலையுயர்ந்த ஆடைகளைக் கொண்டுவந்து அவனுக்கு உடுத்துங்கள். அவன் விரலுக்கு மோதிரம் அணிவித்துக் காலுக்கு நல்ல பாதரட்சைகளை அணியச் செய்யுங்கள். 23 நம் கொழுத்த கன்றை கொண்டுவாருங்கள். அதைச் சமைத்து திருப்தியாகச் சாப்பிடுவோம். ஒரு விருந்து வைப்போம். 24 என்னுடைய இந்த குமாரன் இறந்து போயிருந்தான். மீண்டும் உயிரோடு வந்துள்ளான். அவன் காணாமல் போயிருந்தான், இப்போது மீண்டும் கண்டு பிடிக்கப்பட்டான்’ என்று கூறினார். எனவே விருந்து ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்கள்.

மூத்த குமாரன் வருதல்

25 “மூத்த குமாரன் வயலில் இருந்தான். அவன் வீட்டுக்கு அருகாமையில் திரும்பி வந்து கொண்டிருந்தான். இசை, ஆடல் ஆகியவற்றின் சத்தத்தைக் கேட்டான். 26 எனவே மூத்த குமாரன் வேலைக்காரச் சிறுவர்களில் ஒருவனை அழைத்து, ‘இவையெல்லாம் எதற்காக நடைபெறுகின்றன?’ என்று கேட்டான். 27 வேலைக்காரன், ‘உங்கள் சகோதரன் திரும்பி வந்துள்ளார். உங்கள் தந்தை கொழுத்த கன்றை உண்பதற்காகக் கொன்றுள்ளார். உங்கள் சகோதரன் பாதுகாப்பாகவும் நல்ல முறையிலும் மீண்டும் வீட்டுக்குத் திரும்பி இருப்பதால் உங்கள் தந்தை மகிழ்ச்சியாக இருக்கிறார்’ என்றான்.

28 “மூத்த குமாரன் கோபமுற்று விருந்துக்குச் செல்லவில்லை. எனவே தந்தை வெளியே வந்து அவனிடம் வற்புறுத்தினார். உள்ளே வருமாறு அழைத்தார். 29 குமாரன் தந்தையை நோக்கி, ‘நான் உங்களுக்கு ஓர் அடிமையைப் போல் பல ஆண்டுகள் உழைத்தேன்! உங்கள் கட்டளைக்கு எப்போதும் கீழ்ப்படிந்து நடந்தேன். ஆனால் ஒரு வெள்ளாட்டையாகிலும் நீங்கள் எனக்காகக் கொன்றதில்லை. எனக்கும் என் நண்பர்களுக்கும் நீங்கள் விருந்தளித்ததில்லை. 30 ஆனால் உங்கள் இன்னொரு குமாரன் பணத்தை எல்லாம் வேசிகளிடம் செலவழித்தான். பின்னர் வீடு திரும்பியதும் அவனுக்காகக் கொழுத்த கன்றுக் குட்டியை கொன்றீர்கள்’ என்றான்.

31 “ஆனால் தந்தை அவனை நோக்கி, ‘மகனே! நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய். எனக்குரியவை அனைத்தும் உனக்கு உரியவை. 32 நாம் சந்தோஷமாக விருந்துண்ண வேண்டும். ஏனெனில் உன் சகோதரன் இறந்து போயிருந்தான், இப்போது உயிரோடு வந்துள்ளான். காணாமல் போயிருந்தான், ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டான்’ என்றார்” என்று கூறினார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center