Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
உபாகமம் 26:1-11

முதல் அறுவடை

26 “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற தேசத்தில் நீங்கள் விரைவில் நுழையப் போகிறீர்கள். நீங்கள் அந்த நிலத்தில் குடிகொண்டு சுதந்திரமாய் வாழப் போகிறீர்கள். கர்த்தர் உங்களுக்கு வழங்கிய நிலத்தில் விளைந்தவற்றை நீங்கள் அறுவடை செய்யும்போது, உங்களின் விளைச்சலின் முதல் பலனை கூடைகளில் எடுத்து வைத்துவிட வேண்டும். பின் நீங்கள் அறுவடை செய்ததின் முதல் பங்கை எடுத்துக்கொண்டு உங்கள் தேவனாகிய கர்த்தர் சிறப்பாகத் தேர்ந்தெடுத்த அவரது ஆலயத்திற்கு கொண்டுசென்று, அங்கே ஆலய சேவையில் இருக்கின்ற ஆசாரியரிடம்: ‘கர்த்தர் நமது முற்பிதாக்களுக்கு ஒரு தேசத்தைக் கொடுப்பேன் என்று ஆணையிட்டார். இன்று தேவனாகிய கர்த்தரிடத்தில், நான் அந்தத் தேசத்திற்கு வந்து விட்டேன் என்று அறிக்கையிடுகிறேன்’ என்று கூறு.

“பின் அந்த ஆசாரியன் உன்னிடமிருந்து அந்தக் கூடையை எடுத்து கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்பு வைப்பான். பின் அவ்விடத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் முன்பு நீங்கள்: ‘அலைந்து திரிந்த அரேமியரான எனது முற்பிதாக்கள் எகிப்துக்குச் சென்று அங்கு தங்கினார்கள். செல்லும்போது கொஞ்சம் ஜனங்களே அவன் குடும்பத்தினராய் இருந்தனர். ஆனால் எகிப்தில் அவர்கள் பெரிய ஜனமாக பெருகினார்கள். வலிமை வாய்ந்த ஜனமாக அதிக ஜனங்களை கொண்டவர்களாக இருந்தனர். எகிப்தியர்கள் எங்களைச் சிறுமைப்படுத்தி, எங்களை அடிமைகளாக்கினார்கள். எங்களை வேதனைப்படுத்தி மிகவும் கடினமான வேலைகளைச் செய்யும்படி கட்டாயப்படுத்தினார்கள். பின் நாங்கள் எங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தரிடம் ஜெபித்தோம். அவர்களைப்பற்றி முறையீடு செய்தோம். கர்த்தர் நாங்கள் கூறியவற்றைக் கேட்டார். எங்களது இன்னல்களையும், கடின உழைப்பையும், நாங்கள் அடைந்த வருத்தங்களையும் கர்த்தர் பார்த்தார். பின் கர்த்தர் எகிப்திலிருந்து எங்களைத் தனது மிகுந்த ஆற்றலாலும், பலத்தினாலும் மீட்டுக்கொண்டு வந்தார். அவர் மிகுந்த அற்புதங்களையும், அதிசயங்களையும் பயன்படுத்தினார். வியக்கத்தக்க நிகழ்ச்சிகளைச் செய்தார். அதனால் எங்களை இந்த தேசத்திற்கு மீட்டுக் கொண்டு வந்தார். பாலும், தேனும் ஓடக் கூடிய இந்த வளமான தேசத்தை எங்களுக்குத் தந்தார். 10 இப்போதும் இதோ கர்த்தாவே நீர் எங்களுக்குத் தந்த தேசத்திலிருந்து நாங்கள் பெற்ற முதல் அறுவடையின் பலனைக் கொண்டு வந்துள்ளோம்’ என்று சொல்ல வேண்டும்.

“பின் நீங்கள் அந்த அறுவடையின் பலனை உங்கள் தேவனாகிய கர்த்தர் முன்பு வைத்து தாழ்ந்து பணிந்து அவரை ஆராதிக்க வேண்டும். 11 பின் நீங்கள் சேர்ந்து உண்டு மகிழ்ந்து உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் கொடுத்த எல்லா நன்மைகளினிமித்தமும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். நீங்கள் அந்த நன்மைகளில் எல்லாம் லேவியர்களுக்கும் மற்றும் உங்களைச் சார்ந்து வாழ்கின்ற அந்நியர்களுக்கும் பங்களிக்க வேண்டும்.

சங்கீதம் 91:1-2

91 மிக உன்னதமான தேவனிடம் மறைந்துகொள்ள நீ போகமுடியும்.
    சர்வ வல்லமையுள்ள தேவனிடம் பாதுகாப்பிற்காக நீ போக முடியும்.
நான் கர்த்தரை நோக்கி, “நீரே என் பாதுகாப்பிடம், என் கோட்டை,
    என் தேவனே, நான் உம்மை நம்புகிறேன்” என்று கூறுகிறேன்.

சங்கீதம் 91:9-16

ஏனெனில் நீ கர்த்தரை நம்புகிறாய்.
    மிக உன்னதமான தேவனை நீ உன் பாதுகாப்பிடமாகக்கொண்டாய்.
10 தீயவை உனக்கு நிகழாது,
    உன் வீட்டில் எந்தவிதமான நோய்களும் இருப்பதில்லை.
11 தேவன் அவரது தூதர்களை உனக்காகக் கட்டளையிடுவார்.
    நீ போகுமிடங்களிலெல்லாம் அவர்கள் உன்னைப் பாதுகாப்பார்கள்.
12 உன் கால் பாறையில் மோதாதபடிக்கு
    அவர்கள் கைகள் உன்னைப் பிடித்துக்கொள்ளும்.
13 சிங்கங்களின் மேலும்
    விஷம் நிரம்பிய பாம்புகளின் மேலும் நடக்கும் வல்லமை உனக்கு வாய்க்கும்.

14 கர்த்தர்: “ஒருவன் என்னை நம்பினால், நான் அவனை மீட்பேன்.
    என் நாமத்தை தொழுது கொண்டு என்னைப் பின்பற்றுவோரை நான் கப்பாற்றுவேன்” என்கிறார்.
15 என்னைப் பின்பற்றுவோர் உதவிக்காக என்னை அழைப்பார்கள்.
    நான் அவர்களுக்குப் பதில் கொடுப்பேன்.
அவர்களுக்குத் தொல்லை நேரும்போது நான் அவர்களோடு இருப்பேன்.
    நான் அவர்களைக் காப்பாற்றிப் பெருமைப்படுத்துவேன்.
16 என்னைப் பின்பற்றுவோருக்கு நான் நீண்ட ஆயுளைக் கொடுப்பேன்.
    நான் அவர்களைக் காப்பாற்றுவேன்.

ரோமர் 10:8-13

மேலும் “தேவனுடைய போதனைகள் உங்களுக்கு அருகில் உள்ளது. அவை உங்கள் வாயிலும் இதயத்திலும் உள்ளன” என்றும் எழுதப்பட்டிருக்கின்றது. அப்போதனைகள் மக்களிடம் நாம் சொல்லத்தக்க நம்பிக்கையைப் பற்றிய போதனைகளாகும். உனது வாயால் நீ “இயேசுவே கர்த்தர்” என்று சொல்வாயானால் இரட்சிக்கப்படுவாய். உனது இதயத்தில் நீ “தேவன் இயேசுவை மரணத்திலிருந்து உயிர்த்தெழச் செய்தார்” என்று நம்புவாயானால் இரட்சிக்கப்படுவாய். 10 நாம் இதயத்தில் விசுவாசித்தால் தேவனுக்கேற்ற நீதிமானாகிறோம். நாம் விசுவாசிப்பதை வாயால் சொன்னால் இரட்சிக்கப்படுகிறோம்.

11 “கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கிற எவரும் வெட்கப்படுவதில்லை”(A) என்று எழுதப்பட்டிருக்கிறது. 12 இதில் “எவரும்” என்று குறிப்பிடப்பட்டிருப்பதற்குக் காரணம் உண்டு. அவர்கள் யூதர்களாகவோ, யூதரல்லாதவர்களாகவோ இருக்கலாம். அவர் ஒருவரே அனைவருக்கும் உரிய கர்த்தராவார். தன்னிடம் நம்பிக்கை உள்ள அனைவருக்கும் ஆசீர்வாதம் தருகிறார். 13 “கர்த்தர் மேல் விசுவாசம் வைக்கும் ஒவ்வொருவரும் இரட்சிக்கப்படுவர்”(B) என்று எழுதப்பட்டிருக்கிறது.

லூக்கா 4:1-13

இயேசு சோதிக்கப்படுதல்

(மத்தேயு 4:1-11; மாற்கு 1:12-13)

யோர்தான் நதியில் இருந்து இயேசு திரும்பினார். அவர் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார். ஆவியானவர் இயேசுவை வனாந்தரத்திற்குச் செல்ல ஏவினார். அங்கு பிசாசு இயேசுவை நாற்பது நாட்கள் சோதனைக்கு உட்படுத்தினான். அந்நாட்களில் இயேசு எதையும் உண்ணவில்லை. சோதனைக் காலமான அந்த நாட்கள் கழிந்த பின்னர், இயேசுவுக்கு மிகுந்த பசி உண்டாயிற்று.

பிசாசு இயேசுவை நோக்கி, “நீர் தேவனுடைய குமாரனானால், இந்தக் கல்லுகளை அப்பங்களாகும்படி சொல்லும்” என்றான்.

அதற்கு இயேசு, “வேதவாக்கியங்களில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: “‘மக்களை உயிரோடு பாதுகாப்பது அப்பம் மட்டுமல்ல,’” என்றார்.(A)

அப்போது பிசாசு அவரை உயரமான ஓர் இடத்துக்கு அழைத்துக்கொண்டு போய் ஒரு நொடிக்குள் உலகின் எல்லா இராஜ்யங்களையும் காண்பித்தான். பிசாசு இயேசுவை நோக்கி, “உனக்கு இந்த எல்லா இராஜ்யங்களையும், அதிகாரங்களையும், அவற்றின் மகிமையையும் கொடுப்பேன். அவை எல்லாம் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. நான் கொடுக்க விரும்புகிறவனுக்கு அவற்றைக் கொடுக்கமுடியும். நீர் என்னை வணங்கினால் இவை அனைத்தையும் உமக்குக் கொடுப்பேன்” என்று கூறினான்.

பதிலாக இயேசு, “வேதவாக்கியங்களில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது, “‘உங்கள் தேவனாகிய கர்த்தரை மட்டும் வழிபடுங்கள்; அவருக்கு மட்டுமே சேவை செய்யுங்கள்.’”(B) என்றார்.

பின் பிசாசு இயேசுவை எருசலேமுக்கு அழைத்துச் சென்றான். தேவாலயத்தின் உயர்ந்த இடத்தில் இயேசுவை நிற்க வைத்தான். அவன் இயேசுவிடம், “நீர் தேவனுடைய குமாரனானால் கீழே குதியும்,

10 “‘தேவன் தம் தூதர்களுக்கு உம்மைக் காக்கும்படியாகக் கட்டளையிடுவார்.(C)
11 உமது பாதங்கள் பாறையில் இடித்துவிடாதபடிக்கு அவர்கள்
    தம் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள்’(D)

என்று வேதவாக்கியங்களில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது” என்றான்.

12 அவனுக்கு இயேசு, “‘உன் தேவனாகிய கர்த்தரைச் சோதிக்காதே’(E)

என்றும் கூட வேதவாக்கியங்கள் சொல்கிறதே” என்று பதில் சொன்னார்.

13 பிசாசு இயேசுவை எல்லா வகையிலும் சோதித்து முடித்தான். இன்னும் தகுந்த காலம் வரும் வரைக்கும் காத்திருக்க முடிவு செய்து அவரிடமிருந்து விலகிச் சென்றுவிட்டான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center