Revised Common Lectionary (Semicontinuous)
99 கர்த்தர் ராஜா.
எனவே தேசங்கள் அச்சத்தால் நடுங்கட்டும்.
கேருபீன் தூதர்களுக்கு மேலே தேவன் ராஜாவாக வீற்றிருக்கிறார்.
எனவே உலகம் அச்சத்தால் நடுங்கட்டும்.
2 சீயோனில் கர்த்தர் மேன்மையானவர்.
ஜனங்கள் எல்லோருக்கும் அவர் பெரிய தலைவர்.
3 எல்லா ஜனங்களும் உமது நாமத்தைத் துதிக்கட்டும்.
தேவனுடைய நாமம் அஞ்சத்தக்கது.
தேவன் பரிசுத்தர்.
4 வல்லமையுள்ள ராஜா நீதியை நேசிக்கிறார்.
தேவனே, நீரே நன்மையை உண்டாக்கினீர்.
யாக்கோபிற்கு (இஸ்ரவேல்) நீர் நன்மையையும் நியாயத்தையும் தந்தீர்.
5 நமது தேவனாகிய கர்த்தரைத் துதியுங்கள்.
அவரது பரிசுத்த பாதப்படியில் தொழுதுகொள்ளுங்கள்.
6 மோசேயும் ஆரோனும் அவரது ஆசாரியர்களில் இருவர்.
அவர் நாமத்தை அழைத்த மனிதர்களில் சாமுவேலும் ஒருவன்.
அவர்கள் கர்த்தரிடம் ஜெபித்தபோது
அவர் அவர்களுக்குப் பதில் தந்தார்.
7 உயர்ந்த மேகத்திலிருந்து தேவன் பேசினார்.
அவர்கள் அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
தேவன் அவர்களுக்குச் சட்டத்தைக் கொடுத்தார்.
8 எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் அவர்கள் ஜெபங்களுக்குப் பதில் தந்தீர்.
ஜனங்கள் செய்யும் தீய காரியங்களுக்கு அவர்களைத் தண்டிப்பவர் என்பதையும்,
மன்னிக்கும் தேவன் நீரே என்பதையும் அவர்களுக்கு நீர் காட்டினீர்.
9 நமது தேவனாகிய கர்த்தரைத் துதியுங்கள்.
அவரது பரிசுத்த மலையை நோக்கி விழுந்து வணங்கி அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
நமது தேவனாகிய கர்த்தர் உண்மையிலேயே பரிசுத்தர்.
6 உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் சுதந்திரமாக வசிக்க உங்களுக்கு இந்த நல்ல தேசத்தை தருகின்றார். ஆனால் நீங்கள் நல்லவர்கள் அல்ல, மிகவும் பிடிவாதமுள்ள ஜனங்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
கர்த்தரின் கோபத்தை நினைத்துப்பார்
7 “பாலைவனத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நீங்கள் ஏற்படுத்திய கோபத்தினை நினைத்துப் பாருங்கள், மறந்துவிடாதீர்கள்! நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட நாள் முதல் இவ்விடத்தில் வந்து சேரும்வரை கர்த்தருக்குக் கீழ்ப்படிய மறுத்தீர்கள். 8 ஒரேப் மலையிலும் நீங்கள் கர்த்தருக்குக் கடுங்கோபத்தை உண்டாக்கினீக்கள்! கர்த்தர் உங்களை அழித்துவிட நினைக்கும் அளவிற்கு கோபத்தை உண்டாக்கினீர்கள். 9 கர்த்தர் உங்களுக்காக உடன்படிக்கையை எழுதிய கற்பலகைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நான் மலைமீது ஏறிச்சென்றேன். மலை மீதே 40 நாட்கள் இரவும், பகலும் தங்கினேன். நான் உணவு உண்ணாமலும், தண்ணீர் குடிக்காமலும் இருந்தேன். 10 அப்போது கர்த்தர் என்னிடம் அந்தக் கற்பலகைகளைத் தந்தார். தேவன் அவரது கட்டளைகளை அந்த இரண்டு கற்பலகைகளில் தமது விரல்களால் எழுதியிருந்தார். தேவன் எழுதிய ஒவ்வொன்றும் நீங்கள் மலையருகில் கூடியபோது அக்கினியின் நடுவிலிருந்து பேசிய வார்த்தைகளின்படியே இருந்தன.
11 “இரவும் பகலுமாய் 40 நாட்கள் முடிந்த பின்பு, கர்த்தர் அந்த உடன்படிக்கையின்படி எழுதிய இரண்டு கற்பலகைகளையும் என்னிடம் கொடுத்தார். 12 பின் கர்த்தர் என்னிடம், ‘நீ எழுந்து இங்கிருந்து விரைவாக இறங்கிப்போ. நீ எகிப்திலிருந்து அழைத்துவந்த ஜனங்கள் தங்களைத் தாங்களே கெடுத்துக்கொண்டார்கள், என்னுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதை இவ்வளவு விரைவாக நிறுத்திவிட்டார்கள். அவர்கள் பொன்னை வார்த்து தங்களுக்கென்று ஒரு விக்கிரகத்தை உருவாக்கினார்கள்’ என்று கூறினார்.
13 “மேலும் கர்த்தர் என்னிடம், ‘நான் இந்த ஜனங்களைக் கவனித்தேன். இவர்கள் மிகவும் பிடிவாதமுள்ளவர்கள்! 14 என்னைவிட்டு விடு! இவர்கள் எல்லோரையும் அழித்து விடுகிறேன். இவர்களில் ஒருவரது பெயரைக்கூட தங்கவிடமாட்டேன்! உன்னிடமிருந்து இவர்களைவிட மிகப் பெரிய பலம் வாய்ந்த ஜனங்கள் இனத்தை உருவாக்குவேன்’ என்று கூறினார்.
பேதுருவும் கொர்நேலியுவும்
10 செசரியா நகரில் கொர்நேலியு என்னும் மனிதன் இருந்தான். ரோமப் படையில் “இத்தாலிய” வகுப்பில் அவன் ஒரு படை அதிகாரியாக இருந்தான். 2 கொர்நேலியு நல்ல மனிதன். அவனும் அவன் வீட்டில் வாழ்ந்த எல்லா மக்களும் உண்மையான தேவனை வணங்கினர். தனது பணத்தின் பெரும் பகுதியையும் அவன் ஏழை மக்களுக்குக் கொடுத்தான். கொர்நேலியு தேவனிடம் எப்போதும் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தான். 3 ஒருநாள் மதியத்திற்குப்பின் மூன்று மணியளவில் கொர்நேலியு ஒரு காட்சியைக் கண்டான். அவன் தெளிவாக அதைக் கண்டான். அக்காட்சியில் தேவனிடமிருந்து ஒரு தூதன் அவனிடம் வந்து “கொர்நேலியுவே!” என்றான்.
4 கொர்நேலியு தேவதூதனைக் கண்டு பயந்து, “ஆண்டவரே, என்ன வேண்டும்?” என்றான்.
தேவதூதன் கொர்நேலியுவிடம், “தேவன் உனது பிரார்த்தனைகளுக்குச் செவிசாய்த்தார். நீ ஏழை மக்களுக்குக் கொடுக்கும் தருமங்களை அவர் பார்த்தார். தேவன் உன்னை நினைவுகூருகிறார். 5 யோப்பா நகரத்திற்குச் சில மனிதரை அனுப்பு, சீமோன் என்னும் மனிதனை அழைத்து வருவதற்கு அம்மனிதர்களை அனுப்பு. சீமோன், பேதுரு எனவும் அறியப்படுகிறான். 6 சீமோன் எனப்படும் தோல் தொழிலாளியோடு சீமோன் பேதுரு தங்கிக்கொண்டிருக்கிறான். கடற்கரையில் உள்ள ஒரு பெரிய வீட்டில் இப்போது இருக்கிறான்” என்றான். 7 கொர்நேலியுவோடு பேசிய தேவதூதன் அகன்றான். பின் கொர்நேலியு இரண்டு வேலைக்காரர்களையும், ஒரு வீரனையும் அழைத்தான். அந்த வீரன் ஒரு நல்ல மனிதன். கொர்நேலியுவின் நெருக்கமான உதவியாளர்களில் அவ்வீரனும் ஒருவன். 8 கொர்நேலியு அம்மூன்று மனிதருக்கும் எல்லாவற்றையும் விளக்கினான். பின் அவன் அவர்களை யோப்பாவிற்கு அனுப்பினான்.
2008 by World Bible Translation Center