Revised Common Lectionary (Semicontinuous)
71 கர்த்தாவே, நான் உம்மை நம்புகிறேன்,
எனவே நான் என்றும் ஏமாற்றமடையமாட்டேன்.
2 உமது நல்ல செயலினால், நீர் என்னை மீட்பீர். நீர் என்னைக் காப்பாற்றுவீர்.
நான் சொல்வதைக் கேளும், என்னை மீட்டருளும்.
3 பாதுகாப்பிற்காக ஓடிவரக்கூடிய புகலிடமான அரணாக நீர் எனக்கு இரும்.
நீர் என் கன்மலை என் பாதுகாப்பிடம்.
எனவே என்னைக் காப்பதற்குரிய ஆணையைக் கொடும்.
4 என் தேவனே, கெட்ட ஜனங்களிடமிருந்து என்னை மீட்டருளும்.
கொடியோரும் தீயோருமான ஜனங்களிடமிருந்து என்னை மீட்டருளும்.
5 என் ஆண்டவரே, நீரே என் நம்பிக்கை.
நான் சிறுவனாக இருந்தபோதே உம்மை நம்பினேன்.
6 நான் பிறப்பதற்கு முன்பிருந்தே உம்மையே சார்ந்திருக்கிறேன்.
என் தாயின் கருவில் இருந்தபோதே நான் உம்மைச் சார்ந்திருந்தேன்.
நான் உம்மிடம் எப்போதும் ஜெபம் பண்ணினேன்.
யோசியாவின் மரணம்
20 யோசியா ஆலயத்திற்கு அனைத்து நல்ல செயல்களையும் செய்து முடித்தான். பிறகு எகிப்து ராஜாவாகிய நேகோ தன் படைகளோடு ஐபிராத்து ஆற்றின் கரையிலுள்ள கர்கேமிஸ் நகரத்தின் மீது போர் செய்ய சென்றான். உடனே யோசியா ராஜாவும் அவனோடு போரிடச் சென்றான். 21 ஆனால் நேகோ யோசியாவுக்குத் தூதுவர்களை அனுப்பினான். அவர்கள்,
“யோசியா ராஜாவே! இந்தப் போர் உங்களுக்கு எதிரானது அல்ல. நான் உனக்கு எதிராகச் சண்டை செய்ய வரவில்லை. நான் என் பகைவர்களுக்கு எதிராகச் சண்டை செய்ய வந்திருக்கிறேன். தேவன் என்னை விரைவாகச் செல்லுமாறு சொன்னார். தேவன் என் பக்கத்தில் உள்ளார். எனவே எனக்கு எதிராகப் போரிடவேண்டாம். நீ எனக்கு எதிராகப் போரிட்டால் தேவன் உன்னை அழிப்பார்!” என்றனர்.
22 ஆனால் யோசியா அங்கிருந்து விலகவில்லை. அவன் நேகோவோடு போரிட முடிவுசெய்தான். எனவே அவன் உருவத்தை மாற்றிக்கொண்டு போரிட களத்துக்குச் சென்றான். தேவனுடைய கட்டளையைப் பற்றி நேகோ சொன்னதை யோசியா ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டான். யோசியா போரிட மெகிதோ பள்ளத்தாக்குக்குச் சென்றான். 23 போர்க்களத்தில் ராஜா யோசியாவின்மேல் அம்புகள் பாய்ந்தன. அவன் தன் வேலைக்காரர்களிடம், “நான் பலமாகக் காயப்பட்டிருக்கிறேன். நீங்கள் என்னைத் தூக்கிச் செல்லுங்கள்!” என்றான்.
24 எனவே, வேலைக்காரர்கள் யோசியாவை அவனது இரதத்திலிருந்து இறக்கி, வேறொரு இரதத்தில் ஏற்றினார்கள். இரண்டாவது இரதமும் அவனால் போர்க்களத்துக்குக் கொண்டுவரப்பட்டதுதான். பின் யோசியாவை எருசலேமிற்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவன் மரித்தான். அவன் முற்பிதாக்களின் கல்லறைகளுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டான். யூதா மற்றும் எருசலேமில் உள்ள ஜனங்கள் அனைவரும் யோசியாவின் மரணத்திற்காகப் பெரிதும் துக்கப்பட்டார்கள். 25 யோசியாவிற்காக எரேமியா புலம்பல் பாடல்களை எழுதிப் பாடினான். இன்றும் ஆண் பெண் பாடகர்கள் அப்பாடல்களைப் பாடி வருகிறார்கள். அவை இன்றுவரை இஸ்ரவேலில் வழங்கிவருகிறது. புலம்பல் பாடல்கள் என்ற புத்தகத்தில் அவை எழுதப்பட்டுள்ளன.
26-27 யோசியாவின் தொடக்க காலமுதல் முடிவுவரை அவன் செய்த அனைத்து செயல்களும் யூதா மற்றும் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. கர்த்தரிடம் அவன் எவ்வளவு உண்மையானவனாக இருந்தான் என்பதையும், கர்த்தருடைய சட்டங்களுக்கு எவ்வாறு அடிபணிந்தான் என்பதையும் அப்புத்தகம் விளக்குகிறது.
எபேசுவில் பவுல்
19 அப்பொல்லோ கொரிந்து நகரில் இருந்தபோது எபேசு நகருக்குச் செல்லும் வழியில் பவுல் சில உள்பகுதிகளின் வழியாகப் போய்க்கொண்டிருந்தான். பவுல் எபேசுவில் சீஷர்கள் சிலரைக் கண்டுபிடித்தான். 2 பவுல் அவர்களை நோக்கி, “நீங்கள் விசுவாசித்தபோது பரிசுத்த ஆவியானவரைப் பெற்றீர்களா?” என்று கேட்டான்.
இந்தச் சீஷர்கள் அவனுக்கு, “நாங்கள் பரிசுத்த ஆவியானவரைப் பற்றிக் கேள்விப்படவே இல்லை” என்றனர்.
3 எனவே பவுல் அவர்களை நோக்கி, “பின் நீங்கள் எத்தகைய ஞானஸ்நானம் பெற்றீர்கள்?” என்று கேட்டான்.
அவர்கள், “யோவான் கற்பித்த ஞானஸ்நானம் அது” என்றார்கள்.
4 பவுல், “மக்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்க விரும்புவதைக் காட்டுவதற்கு யோவான் அவர்களை ஞானஸ்நானம் பெறும்படியாகக் கூறினான். அவனுக்குப் பின் வருகிற ஒருவரை நம்பும்படியாக யோவான் மக்களுக்குக் கூறினான். அவர் இயேசுவே” என்றான்.
5 அவர்கள் இதனைக் கேட்டபோது கர்த்தராகிய இயேசுவின் பெயரில் ஞானஸ்நானம் பெற்றார்கள். 6 அப்போது பவுல் அவனது கைகளை அவர்கள்மீது வைத்தபோது பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மீது வந்தார். அவர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசவும் தீர்க்கதரிசனம் சொல்லவும் ஆரம்பித்தனர். 7 இக்குழுவில் சுமார் பன்னிரண்டு மனிதர்கள் இருந்தனர்.
8 பவுல் ஜெப ஆலயத்திற்குள் சென்று, மிகவும் துணிவாகப் பேசினான். பவுல் மூன்று மாதங்கள் இதைச் செய்தான். அவன் யூதர்களிடம் தேவனுடைய இராஜ்யத்தைப் பற்றிப் பேசி, அவற்றை யூதர்கள் ஏற்றுக்கொள்ளும்படித் தூண்ட முயற்சித்தான். 9 ஆனால் சில யூதர்கள் பிடிவாதமாக இருந்தனர். அவர்கள் நம்ப மறுத்தனர். இந்த யூதர்கள் தேவனுடைய வழியைக் குறித்துத் தீயவற்றைப் பேசினர். எல்லா மக்களும் இவற்றை கேட்டனர். எனவே பவுல் இந்த யூதரை விட்டு நீங்கி, இயேசுவின் சீஷர்களைத் தன்னோடு அழைத்துச் சென்றான். திறன்னு என்ற ஒருவனின் பள்ளிக்கூடம் இருந்த இடத்திற்குப் பவுல் போனான். பவுல் அங்கிருந்த மக்களுடன் தினமும் கலந்துரையாடினான். 10 பவுல் இதை இரண்டு வருடங்கள் செய்தான். இச்செயலால் ஆசியாவில் வசித்துக்கொண்டிருந்த ஒவ்வொரு யூதனும் கிரேக்கனும் தேவனுடைய வார்த்தையைக் கேட்டனர்.
2008 by World Bible Translation Center