Revised Common Lectionary (Semicontinuous)
லாமேட்
89 கர்த்தாவே, உமது வார்த்தை என்றென்றும் தொடரும்.
உமது வார்த்தை என்றென்றும் பரலோகத்தில் தொடரும்.
90 நீர் என்றென்றும் எப்போதும் நேர்மையானவர்.
கர்த்தாவே, நீர் பூமியை உண்டாக்கினீர், அது இன்னும் நிலைத்திருக்கிறது.
91 உமது சட்டங்களாலும், அவற்றிற்கு ஒரு அடிமையைப்போன்று பூமி
கீழ்ப்படிவதாலும் அது இன்றுவரை நிலைத்திருக்கிறது.
92 உமது போதனைகள் நண்பர்களைப் போல் எனக்கு இல்லாவிட்டால்
எனது துன்பங்களே என்னை அழித்திருக்கும்.
93 கர்த்தாவே, நான் உமது கட்டளைகளை என்றைக்கும் மறக்கமாட்டேன்.
ஏனெனில் அவை என்னை வாழவைக்கின்றன.
94 கர்த்தாவே, நான் உம்முடையவன், எனவே என்னைக் காப்பாற்றும்.
ஏனெனில் நான் உம்முடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கு மிகவும் முயல்கிறேன்.
95 தீயோர் என்னை அழிக்க முயன்றார்கள்.
ஆனால் உமது உடன்படிக்கை என்னை ஞானமுள்ளவனாக்கிற்று.
96 உமது சட்டங்களைத் தவிர,
எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு.
11 மிகாயா என்ற பெயருடைய ஒருவன் கர்த்தரிடமுள்ள எல்லாச் செய்திகளையும் புத்தகச்சுருளில் பாருக் வாசிப்பதிலிருந்து கேட்டான். மிகாயா, கெமரியாவின் குமாரன். கெமரியா, சாப்பானின் குமாரன். 12 மிகாயா புத்தகச்சுருளிலுள்ள செய்திகளை கேட்டதும் ராஜாவின் அரண்மனையில் உள்ள செயலாளனின் அறைக்குச் சென்றான். ராஜாவின் அரண்மனையில் எல்லா அரச அதிகாரிகளும் உட்கார்ந்திருந்தனர். அந்த அதிகாரிகளின் பெயர்களாவன: செயலாளனாகிய எலிசாமா, செமாயாவின் குமாரனாகிய தெலாயா, அக்போரின் குமாரனான எல்நாத்தான், சாப்பானின் குமாரனான கெமரியா, அனனியாவின் குமாரனான சிதேக்கியா, மற்றும் பல பிரபுக்களும் அங்கே இருந்தனர். 13 மிகாயா, பாருக் புத்தகச்சுருளில் வாசித்து கேட்ட அனைத்தையும் அதிகாரிகளிடம் சொன்னான்.
14 பிறகு அனைத்து அதிகாரிகளும் யெகுதி என்னும் பெயருள்ள ஒருவனை பாருக்கிடம் அனுப்பினர். யெகுதி நெத்தானியாவின் குமாரன். நெத்தானியா செலேமியாவின் குமாரன். செலேமியா கூஷியின் குமாரன். யெகுதி பாருக்கிடம், “நீ வாசித்த புத்தகச்சுருளை எடுத்துக்கொண்டு என்னுடன் வா” என்றான்.
நேரியாவின் குமாரனான பாருக் புத்தகச்சுருளை எடுத்துக்கொண்டு யெகுதியோடு அதிகாரிகளிடம் சென்றான்.
15 பிறகு அந்த அதிகாரிகள் பாருக்கிடம், “உட்கார், எங்களிடம் புத்தகச்சுருளை வாசி” என்றனர். எனவே, பாருக் அவர்களுக்குப் புத்தகச்சுருளை வாசித்தான்.
16 அந்த அரச அதிகாரிகள் புத்தகச்சுருளில் உள்ள அனைத்து செய்திகளையும் கேட்டனர். பிறகு அவர்கள் பயந்தனர். ஒருவரையொருவர் பார்த்தனர். அவர்கள் பாருக்கிடம், “நாங்கள் புத்தகச்சுருளில் உள்ள செய்திகளை ராஜா யோயாக்கீமிடம் கூறவேண்டும்” என்றனர். 17 பிறகு அந்த அதிகாரிகள் பாருக்கிடம் ஒரு கேள்வி கேட்டார்கள். அவர்கள், “பாருக், எங்களிடம் சொல். புத்தகச்சுருளில் எழுதப்பட்டுள்ள செய்திகளை நீ எங்கிருந்து பெற்றாய்? எரேமியா சொன்னவற்றை நீ எழுதினாயா?” என்று கேட்டனர்.
18 பாருக், “ஆம், எரேமியா சொன்னான். நான் மையால் இப்புத்தகச்சுருளில் எழுதினேன்” என்று பதில் சொன்னான்.
19 பிறகு அரச அதிகாரிகள் பாருக்கிடம், “நீயும் எரேமியாவும் போய் ஒளிந்துக்கொள்ளுங்கள். எங்கே ஒளிந்திருக்கிறீர்கள் என்று யாரிடமும் சொல்லாதீர்கள்” என்றனர்.
20 பிறகு அரச அதிகாரிகள் அப்புத்தகச்சுருளை எழுத்தாளனான எலிசாமாவின் அறையிலே வைத்தனர். அவர்கள் ராஜாவாகிய யோயாக்கீமிடம் சென்றனர். அவர்கள் அவனிடம் புத்தகச்சுருளைப் பற்றிச் சொன்னார்கள்.
21 எனவே, ராஜா யோயாக்கீம் யெகுதியை அனுப்பி புத்தகச்சுருளை வரவழைத்தான். யெகுதி எழுத்தாளனான எலிசாமாவின் அறையிலிருந்து புத்தகச்சுருளைக் கொண்டுவந்தான். பிறகு யெகுதி ராஜாவிடம் புத்தகச்சுருளை வாசித்தான். ராஜாவைச்சுற்றி அனைத்து அதிகாரிகளும் நின்றனர். 22 இது நடந்த காலம் ஒன்பதாவது மாதம். எனவே, ராஜா யோயாக்கீம் குளிர்காலத்துக்கான அறையில் உட்கார்ந்திருந்தான். ராஜாவுக்கு முன்னால் நெருப்புக் குண்டத்தில் நெருப்பு எரிந்துக்கொண்டிருந்தது. 23 யெகுதி புத்தகச்சுருளை வாசிக்கத் தொடங்கினான். அவன் இரண்டு மூன்று பத்திகள் வாசித்ததும் ராஜாவாகிய யோயாக்கீம் புத்தகச்சுருளைப் பிடுங்கினான். பிறகு அவன் அந்தப் பத்திகள் எழுதப்பட்டிருந்த புத்தகச்சுருளைச் சிறிய கத்தியால் வெட்டி நெருப்பிற்குள் போட்டான். இறுதியாக புத்தகச்சுருள் முழுவதும் நெருப்பில் எரிந்துப்போயிற்று. 24 ராஜா யோயாக்கீமும் அவனது வேலைக்காரர்களும் புத்தகச்சுருளில் உள்ளவற்றை வாசிக்கக் கேட்டபோது அவர்கள் பயப்படவில்லை. அவர்கள் தாங்கள் செய்த தப்புக்காக வருத்தத்தைக் காட்ட தங்கள் ஆடைகளைக் கிழிக்கவில்லை.
25 எல்நாத்தன், தெலாயா மற்றும் கெமரியா ராஜா யோயாக்கீமிடம் புத்தகச்சுருளை எரிக்க வேண்டாம் என்று சொல்ல முயன்றனர். ஆனால் ராஜா அவர்கள் சொன்னதைக் கேட்கவில்லை. 26 யோயாக்கீம் ராஜா சிலரிடம் எழுத்தாளனான பாருக்கையும் தீர்க்கதரிசி எரேமியாவையும் கைது செய்யும்படிக் கட்டளையிட்டான். அவர்கள், ராஜாவின் குமாரன் யெரமெயேல், அஸ்ரியேலின் குமாரன் செராயா, அப்தெயேலின் குமாரனான செலேமியாவும் ஆவார்கள். ஆனால் அவர்களால் பாருக்கையும் எரேமியாவையும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. ஏனென்றால், கர்த்தர் அவர்களை மறைத்துவிட்டார்.
பவுலின் மகிழ்ச்சி
2 எங்களுக்காக உங்கள் இதயங்களைத் திறந்து வைத்திருங்கள். நாங்கள் யாருக்கும் தீமை செய்ததில்லை. நாங்கள் எவரது நம்பிக்கையையும் அழித்ததில்லை. எவரையும் ஏமாற்றியதில்லை. 3 உங்களைக் குற்றம் சாட்டுவதற்காக இதனைக் கூறவில்லை. எங்கள் வாழ்வும் சாவும் உங்கள் உடனே இருக்கும் அளவுக்கு உங்களை நாங்கள் நேசிக்கிறோம் என்பதை ஏற்கெனவே உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன். 4 நான் உங்களைப் பற்றி உறுதியாக உணர்கிறேன். உங்களைப் பற்றிப் பெருமைப்படுகிறேன். நீங்கள் எனக்கு மிகுந்த தைரியம் கொடுக்கிறீர்கள். அதனால் அனைத்து துன்பங்களுக்கு இடையிலும் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.
5 நாங்கள் மக்கதோனியாவுக்கு வந்தபோது எங்களுக்கு ஓய்வு இல்லாமல் இருந்தது. எங்களைச் சுற்றிலும் நெருக்கடிகள் இருந்தன. நாங்கள் வெளியே போராடிக்கொண்டும் உள்ளுக்குள் பயந்துகொண்டும் இருந்தோம். 6 ஆனால் தேவன் துன்பப்படுகிறவர்களுக்கு ஆறுதல் தருகிறார். தீத்து வந்தபோது தேவன் ஆறுதல் தந்தார். 7 அவனது வருகையிலும், நீங்கள் அவனுக்குக் கொடுத்த ஆறுதலாலும் நாங்கள் ஆறுதலடைந்தோம். என்னை நீங்கள் பார்க்க விரும்பியதைப் பற்றி தீத்து கூறினான். உங்களது தவறுகளுக்கு நீங்கள் வருந்தியது பற்றியும் கூறினான். என்மீது நீங்கள் கொண்ட அக்கறையைப் பற்றி அவன் சொன்னபோது மகிழ்ச்சி அடைந்தேன்.
8 நான் உங்களுக்கு எழுதிய நிருபம் ஏதேனும் வருத்தத்தை தந்திருக்குமானால் அதை எழுதியதற்காக நான் இப்பொழுது வருத்தப்படவில்லை. அந்நிருபம் உங்களுக்கு வருத்தத்தை தந்தது என அறிவேன். அதற்காக அப்பொழுது வருந்தினேன். ஆனால் அது கொஞ்ச காலத்துக்குத்தான் உங்களுக்குத் துயரத்தைத் தந்தது. 9 இப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது நீங்கள் துயரப்படும்படி ஆனதால் அன்று. அத்துயரம் உங்கள் இதயங்களை மாற்றியதற்காக நான் மகிழ்கிறேன். தேவனுடைய விருப்பப்படியே நீங்கள் துக்கப்பட்டீர்கள். எனவே நீங்கள் எங்களால் எவ்வகையிலும் பாதிக்கப்படவில்லை. 10 தேவனுடைய விருப்பப்படி நேரும் வருத்தம் ஒருவனது இதயத்தை மாற்றி, வாழ்வையும் மாற்றுகிறது. அவனுக்கு இரட்சிப்பையும் தருகிறது. அதற்காக வருத்தப்படவேண்டாம். ஆனால் உலகரீதியிலான துயரங்களோ மரணத்தை வரவழைக்கின்றது. 11 தேவனின் விருப்பப்படியே நீங்கள் வருத்தம் அடைந்தீர்கள். இப்பொழுது அவ்வருத்தம் உங்களுக்கு எதைக் கொண்டு வந்தது என்று பாருங்கள். அது உங்களிடம் ஜாக்கிரதையை உருவாக்கியது. குற்றமற்றவர்கள் என உங்களை நிரூபிக்கத் தூண்டியது. அது கோபத்தையும், பயத்தையும் தந்தது. அது என்னைக் காணத் தூண்டியது. அது உங்களை அக்கறை கொள்ளச் செய்தது. அது நல்லவற்றைச் செய்ய ஒரு காரணமாயிற்று. இக்காரியத்தில் எவ்விதத்திலும் நீங்களும் குற்றம் இல்லாதவர்கள் என்று உங்களை நிரூபித்துக்கொண்டீர்கள். 12 நான் உங்களுக்கு நிருபம் எழுதியதின் காரணம் ஒருவன் தவறு இழைத்துவிட்டான் என்பதாலல்ல, அதேபோல ஒருவன் பாதிக்கப்பட்டுவிட்டான் என்பதாலும் உங்களுக்கு நிருபம் எழுதவில்லை. தேவனுக்கு முன்பாக உங்களுக்காக நாங்கள் கொண்டுள்ள அக்கறையை நீங்கள் காணும்பொருட்டே அப்படி எழுதினேன். இதனால்தான் நாங்கள் ஆறுதலடைந்தோம்.
2008 by World Bible Translation Center