Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 19

இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.

19 வானங்கள் தேவனுடைய மகிமையைக் கூறுகின்றன.
    தேவனுடைய கரங்கள் செய்த நல்ல செயல்களை ஆகாயங்கள் அறிவிக்கின்றன.
ஒவ்வொரு புதுநாளும் அந்தக் கதையை மேலும் கூறும்.
    ஒவ்வொரு இரவும் தேவனுடைய வல்லமையை மேலும், மேலும் உணர்த்தும்.
உண்மையில் பேச்சையோ, வார்த்தையையோ கேட்கமுடியாது.
    நாம் கேட்கவல்ல சத்தத்தை அவை எழுப்புவதில்லை.
ஆனால் அவற்றின் “குரல்” உலகமெங்கும் செல்கிறது.
    அவற்றின் “வார்த்தைகள்” பூமியின் இறுதியை எட்டுகின்றன.

    ஆகாயம் சூரியனின் வீட்டைப் போன்றிருக்கும்.
படுக்கையறையிலிருந்து வெளிவரும் மகிழ்ச்சியான மணமகனைப்போல் சூரியன் வெளிப்படும்.
    பந்தயத்திற்கு ஆசையாய் காத்திருக்கும் ஓட்ட வீரனைப் போல் சூரியன் வானத்தின் குறுக்கே தன் வழியில் செல்லும்.
ஆகாயத்தின் ஒருமுனையில் தொடங்கி அதன் மறுமுனை வரைக்கும் சூரியன் எங்கும் ஓடும்.
    அதன் வெப்பத்திற்கு எதுவும் தப்ப இயலாது. கர்த்தருடைய போதனைகளும் அப்படிப்பட்டவையே.

கர்த்தருடைய போதனைகள் குறையற்றவை.
    அவை தேவனுடைய ஜனங்களுக்குப் பெலனைக் (ஆற்றலை) கொடுக்கும்.
கர்த்தருடைய உடன்படிக்கை நம்பத்தக்கது.
    அறிவற்றோர் ஞானமடைவதற்கு அது உதவும்.
கர்த்தருடைய சட்டங்கள் நியாயமானவை.
    அவை ஜனங்களை சந்தோஷப்படுத்தும்.
கர்த்தருடைய கட்டளைகள் நல்லவை.
    வாழத்தக்க வழியை அவை ஜனங்களுக்குக் காட்டும்.

கர்த்தரைத் தொழுதுகொள்வது எப்போதும் வெளிச்சமாய் பிரகாசிக்கிற ஒளி போன்றது.
    கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவை, செம்மையானவை. அவை முற்றிலும் சரியானவை.
10 கர்த்தருடைய போதனைகள் சுத்தமான பொன்னைக்காட்டிலும் பெருமதிப்புடையவை.
    தேனடையிலிருந்து வரும் உயர்ந்த தேனைக் காட்டிலும் அவை இனிமையானவை.

11 கர்த்தருடைய போதனைகள் அவர் வேலையாளை எச்சரிக்கின்றன.
    அவருக்குக் கீழ்ப்படிவதால் நல்லவை நிகழும்.
12 கர்த்தாவே, ஒருவனும் தன் எல்லா பிழைகளையும் காணமுடியாது.
    எனவே மறைவான பாவங்கள் நான் செய்யாதிருக்க உதவும்.
13 கர்த்தாவே, நான் செய்ய விரும்பும் பாவங்களிலிருந்து என்னை விலக்கும்.
    அப்பாவங்கள் என்னை ஆள அனுமதியாதிரும்.
நீர் உதவினால்
    நான் பாவங்களிலிருந்து விலகி தூயவனாய் இருக்க முடியும்.
14 என் வார்த்தைகளும் எண்ணங்களும் உமக்கு ஏற்றதாய் இருக்கட்டும்.
    கர்த்தாவே, நீர் என் பாறை. நீரே என்னை விடுவிப்பவர்.

நெகேமியா 2:1-10

அர்தசஷ்டா ராஜா நெகேமியாவை எருசலேமிற்கு அனுப்புகிறான்

அர்தசஷ்டா ராஜாவின் இருபதாம் ஆட்சியாண்டில், நிசான் மாதத்தில் கொஞ்சம் திராட்சைரசம் ராஜாவுக்கு கொண்டுவரப்பட்டது. நான் திராட்சைரசத்தை எடுத்து ராஜாவுக்கு கொடுத்தேன். நான் ராஜாவோடு இருக்கும்போது எப்பொழுதும் துக்கமாக இருந்ததில்லை. ஆனால் இப்பொழுது நான் துக்கமாய் இருந்தேன். எனவே ராஜா என்னிடம், “நீ நோயுற்றிருக்கிறாயா? ஏன் துக்கமாய் காணப்படுகிறாய்? உனது இதயம் துக்கத்தால் நிறைந்திருப்பது போன்று நான் எண்ணுகிறேன்” என்று கேட்டான்.

பிறகு நான் மிகவும் பயந்தேன். பயந்தாலும் கூட நான் ராஜாவிடம், “ராஜா என்றென்றும் வாழ்வாராக! நான் துக்கமாய் இருக்கிறேன். ஏனென்றால் எனது முற்பிதாக்களின் கல்லறைகள் உள்ள நகரம் பாழாயிற்று. அதன் வாசல்கள் நெருப்பால் எரிக்கப்பட்டன” என்றேன்.

பிறகு ராஜா என்னிடம், “நான் என்ன செய்ய வேண்டும் என்று நீ விரும்புகின்றாய்?” என்று கேட்டான்.

நான் பதில் சொல்வதற்கு முன்னால் நான் பரலோகத்தில் இருக்கிற தேவனிடம் ஜெபம் செய்தேன். பிறகு நான் ராஜாவுக்கு, “இது ராஜாவுக்கு பிடித்தமானதாக இருந்தால், நான் உமக்கு நல்லவனாக இருந்திருந்தால், தயவுசெய்து எனது முற்பிதாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள யூதாவிற்கு என்னை அனுப்பும். யூதாவில் நான் போய் எருசலேம் நகரத்தை மீண்டும் கட்ட விரும்புகிறேன்” என்று பதில் சொன்னேன்.

இராணி ராஜாவுக்கு அடுத்து அமர்ந்துக் கொண்டிருந்தாள். ராஜா என்னிடம், “நீ போய் வர எவ்வளவு காலம் எடுக்கும். நீ இங்கே எப்பொழுது திரும்பி வருவாய்?” என்று கேட்டான்.

ராஜா என்னை அனுப்புவதில் சந்தோஷப்பட்டான். எனவே நான் அவனுக்குக் குறிப்பிட்ட காலத்தைச் சொன்னேன்.

நான் ராஜாவிடம், “ராஜாவுக்கு விருப்பமானால் எனக்கு உதவலாம். நான் உதவி கேட்கலாமா? ஐபிராத்து நதிக்கு மேற்கிலுள்ள பகுதிகளின் ஆளுநர்களிடம் காட்ட எனக்கு சில கடிதங்களைத் தயவு செய்துக் கொடும். யூதாவிற்கு போகும் வழியில், அவர்களின் பகுதிகளின் வழியாகப் போவதற்கான அனுமதியை ஆளுநர்களிடம் பெற இக்கடிதங்கள் எனக்குத் தேவைப்படுகின்றன. வாசல்கள், சுவர்கள், ஆலயத்தைச் சுற்றியுள்ள சுவர்கள் மற்றும் எனது வீடு ஆகியவற்றிற்குத் தேவையான மரத்தடிகள் எனக்குத் தேவைப்படுகின்றது. எனவே உம்மிடமிருந்து ஆசாப்பிற்கு ஒரு கடிதம் எனக்குத் தேவை. உமது காடுகளுக்கு ஆசாப் பொறுப்பு அதிகாரி” என்றேன்.

ராஜா எனக்குக் கடிதங்களைக் கொடுத்தான். நான் கேட்டவற்றையெல்லாம் கூட கொடுத்தான். ஏனென்றால் தேவன் என்னிடம் கருணையோடு இருந்ததால், ராஜா இவற்றைச் செய்தான்.

எனவே, நான் ஐபிராத்து நதியின் மேற்குப் பகுதியின் ஆளுநர்களிடம் சென்றேன். ராஜாவிடமிருந்து பெற்ற கடிதங்களை ஆளுநர்களிடம் கொடுத்தேன். ராஜா என்னுடன் படை அதிகாரிகளையும் குதிரை வீரர்களையும் அனுப்பியிருந்தான். 10 நான் என்ன செய்துகொண்டிருக்கின்றேன் என்பது பற்றி சன்பல்லாத்தும் தொபியாவும் கேள்விப்பட்டனர். அவர்கள் இடிந்து போனார்கள். இஸ்ரவேல் ஜனங்களுக்கு உதவ ஒருவன் வந்திருக்கிறான் என்று அறிந்து கோபமுற்றனர். சன்பல்லாத் ஓரோனியனிலிருந்தும் தொபியா அம்மோனியாவிலிருந்தும் வந்த அதிகாரிகள்.

ரோமர் 12:1-8

வாழ்க்கையை தேவனுக்குக் கொடுங்கள்

12 சகோதர சகோதரிகளே! ஏதாவதுகொஞ்சம் செய்யுங்கள் என வேண்டுகிறேன். தேவன் நம்மிடம் மிகுந்த இரக்கத்தைக் காட்டியிருக்கிறார். உங்கள் சரீரங்களை தேவனுக்கு உயிர்ப் பலியாகத் தாருங்கள். இதுவே அவரை வழிபடுவதற்கான பக்தி வழியாகும். தேவன் இதில் திருப்தியடைகிறார். உலகிலுள்ள மக்களைப் போன்று ஆக வேண்டுமென உங்களை மாற்றிக்கொள்ளாதீர்கள். ஆனால் மனதில் புதிய எண்ணங்களால் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். பிறகு தேவனுடைய விருப்பத்தை உங்களால் ஏற்றுக்கொள்வது பற்றி முடிவு செய்ய முடியும். நல்லவை எவை, தேவனுக்கு விருப்பமானவை எவை என்று உங்களால் அறிந்துகொள்ள முடியும்.

தேவன் எனக்கொரு சிறப்பான வரத்தைக் கொடுத்திருக்கிறார். அதனால்தான் உங்களில் ஒவ்வொருவருக்கும் சொல்ல என்னிடம் சில காரியங்கள் இருக்கின்றன. உங்கள் நிலைமைக்கு மீறிய நினைப்பினைக்கொள்ளாதீர்கள். உண்மையாகவே நீங்கள் யார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். தேவன் உங்களுக்குக் கொடுத்த விசுவாசத்தின்படியே ஒவ்வொருவனும் தம்மைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். நம் ஒவ்வொருவருக்கும் ஒரு சரீரம் உள்ளது. அதற்குப் பல உறுப்புகளும் உள்ளன. எல்லா உறுப்புகளும் ஒரே வேலையைச் செய்வதில்லை. இது போலவே, நாம் பல வகை மக்கள். ஆனால் கிறிஸ்துவுக்குள் நாம்அனைவரும் ஒரே சரீரமாக இருக்கிறோம். நாம் அந்த சரீரத்தின் பல உறுப்புகள். சரீரத்தில் ஒவ்வொரு உறுப்பும் மற்ற உறுப்புகளைச் சார்ந்துள்ளன.

நமக்குப் பலவிதமான வரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வரமும் நமக்கு தேவனுடைய இரக்கத்தால் கிடைத்தது. நம்மிடையே தீர்க்கதரிசனம் சொல்லுகிற வரத்தைப் பெற்றவன் அதனை தன் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் பயன்படுத்த வேண்டும். சேவை செய்வதற்கான வரத்தைப் பெற்ற ஒருவன் நன்றாக சேவை செய்வானாக. போதிக்கும் வரத்தைப் பெற்ற ஒருவன் போதிப்பானாக! மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்லும் வரத்தைப் பெற்ற ஒருவன் அவ்வாறே ஆறுதல் சொல்வானாக. மற்றவர்களுக்குத் தாராளமாகக் கொடுத்து உதவுகிற வரத்தைப் பெற்ற ஒருவன் ஏராளமாகக் கொடுத்து உதவுவானாக! தலைவனாக இருக்க வரத்தைப் பெற்றவன் கடுமையாகப் பணியாற்றி சிறந்த தலைவனாக இருப்பானாக! மற்றவர்களிடம் இரக்கம் காட்டும் வரத்தைப்பெற்ற ஒருவன் மகிழ்ச்சியோடு இரக்கம் காட்டுவானாக!

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center