Revised Common Lectionary (Semicontinuous)
அன்னாள் நன்றி சொன்னது (அன்னாளின் ஜெபம்)
2 அன்னாள் ஜெபம் பண்ணி,
“என் இதயம் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருக்கிறது!
நான் என் தேவனுக்குள் மிக்க பலத்துடன் இருப்பதை உணருகிறேன்!
என் எதிரிகளைக் கண்டு நகைக்கிறேன்.
உமது இரட்சிப்பினாலே நான் மகிழ்ச்சி அடைகிறேன்!
2 கர்த்தரைப்போல பரிசுத்தமான வேறு தேவன் இல்லை.
உம்மைத் தவிர வேறு தேவன் இல்லை! நமது தேவனைப் போன்ற ஒரு கன்மலை வேறில்லை.
3 இனி அகம்பாவத்தோடும் தற்பெருமையோடும் பேசாதிருங்கள்!
ஏனென்றால் தேவனாகிய கர்த்தர் எல்லாவற்றையும் அறிவார், செய்கைகள் அவராலே நியாயந்தீர்க்கப்படும்.
4 வலிமையான வீரர்களின் வில்கள் முறிகிறது!
பலவீனமானவர்கள் பெலன் பெறுகிறார்கள்.
5 கடந்த காலத்தில் ஏராளமான உணவுப் பொருட்களை வைத்திருந்த ஜனங்கள் இப்போது உணவுக்காகக் கஷ்டப்பட்டு வேலை செய்யவேண்டும்.
ஆனால் கடந்த காலத்தில் பசியோடு இருந்தவர்கள், எல்லாம் இனிமேல் பசியாயிரார்கள்.
முன்பு குழந்தை பேறு இல்லாமல் இருந்த பெண் இப்போது ஏழு குழந்தைகளைப் பெற்றிருக்கிறாள்!
ஆனால் முன்பு நிறைய குழந்தைகளைப் பெற்ற பெண் அக்குழந்தைகள் தம்மை விட்டு விலகியதால் வருத்தமாயிருக்கிறாள்.
6 கர்த்தர் மரணத்தைக் கொண்டு வருகிறவராகவும் வாழ வைக்கிறவராகவும் இருக்கின்றார்.
அவரே பாதாளத்தில் இறங்கவும், அதிலிருந்து ஏறவும் பண்ணுகிறவர்.
7 கர்த்தர் சிலரை ஏழையாக்குகிறார், அவரே இன்னும் சிலரைச் செல்வந்தராக்குகிறார்.
கர்த்தர் சிலரைத் தாழ்த்துகிறார், மற்றவர்களை மேன்மையாக்குகிறார்.
8 கர்த்தர் ஏழை ஜனங்களை புழுதியிலிருந்து உயிர்ப்பிக்கிறார் மற்றும் அவர்களை குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.
கர்த்தர் ஏழை ஜனங்களை முக்கியமானவர்களாக்குகிறார்.
அவர்களை அவர் இளவரசர்களோடும் மதிப்புக்குரிய விருந்தினர்களோடும் அமர வைக்கிறார்.
கர்த்தர் உலகம் முழுவதையும் படைத்தார்!
இந்த முழு உலகமும் அவருக்குரியது!
9 கர்த்தர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைப் பாதுகாக்கிறார்.
அவர்களை அழிவினின்றும் காப்பார்.
ஆனால் தீயவர்கள் இருளிலே அமைதியாவார்கள்.
அவர்களின் பெலன் அவர்களை வெற்றியடையச் செய்யாது.
10 கர்த்தரை எதிர்ப்பவர்கள் சிதறடிக்கப்படுவார்கள்.
உன்னதமான தேவன் பரலோகத்திலிருந்த தமது எதிரிகளுக்கு எதிராக இடியாய் முழங்குவார்.
கர்த்தர் பூமியின் கடைசி பகுதியையும் நீயாயந்தீர்ப்பார்.
அவர் தமது ராஜாவுக்கு வல்லமையை அளிப்பார்.
தாம் அபிஷேகம் பண்ணினவரின் கொம்பை உயரப்பண்ணுவார்” என்றாள்.
21 அந்த ஆண்டில் எல்க்கானா சீலோவிற்குப் பலிகளைக் கொடுப்பதற்காகவும் மற்றும் தேவனுக்குத் தந்த வாக்குறுதியை நிறைவேற்றும்படியும் சென்றான். அவன் தனது குடும்பத்தை தன்னோடு அழைத்துக் கொண்டு சென்றிருந்தான். 22 ஆனால் அன்னாள் செல்லவில்லை, அவள் எல்க்கானாவிடம், “பிள்ளை வளர்ந்து திட உணவு உண்ணும் வயதை அடையும்பொழுது, நான் இவனைச் சீலோவிற்கு அழைத்து வருவேன். பிறகு அவனை கர்த்தருக்குத் தருவேன். அவன் நசரேயனாக இருப்பான். அவன் சீலோவிலேயே தங்கி இருப்பான்” என்றாள்.
23 அன்னாளின் கணவனான எல்க்கானா அவளிடம், “உனக்கு எது நல்லதென்று தெரிகிறதோ அதைச் செய். பையன் பாலை மறந்து உணவு உண்ணும் காலம்வரை நீ வீட்டிலேயே தங்கியிரு. நீ சொன்னபடியே கர்த்தர் உனக்கு செய்வாராக” என்றான். எனவே அன்னாள் தன் குமாரனை வளர்ப்பதற்காக வீட்டிலேயே இருந்தாள்.
சீலோவில் ஏலியிடம் சாமுவேலை அன்னாள் கொண்டுபோகிறாள்
24 பிள்ளை வளர்ந்து உணவு உண்ண ஆரம்பித்ததும் அன்னாள் அவனை அழைத்துக்கொண்டு சீலோவிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திற்குப் போனாள். தன்னோடு மூன்று காளைகளையும், ஒரு மரக்கால் மாவையும் ஒரு துருத்தி திராட்சைரசத்தையும் கொண்டு வந்தாள்.
25 அவர்கள் கர்த்தருக்கு முன் சென்றார்கள். எல்க்கானா காளையைப் பலியாகக் கொன்றான். அவன் முன்பு கர்த்தருக்கென்று வழக்கமாகச் செய்வதுபோல் செய்தான். பின் அன்னாள் ஏலியிடம் பிள்ளையைக் கொடுத்தாள். 26 அன்னாள் ஏலியிடம், “என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் ஐயா, கர்த்தரை நோக்கி ஜெபம் செய்தபடி உங்கள் முன்நின்ற அதே பெண்தான் நான். நான் உண்மையை சொல்கிறேன் என இதன்மூலம் உறுதி கூறுகிறேன். 27 நான் இக்குழந்தைக்காக ஜெபம் செய்து கொண்டேன், கர்த்தர் என் ஜெபத்திற்கு பதில் அளித்தார். கர்த்தர் இந்தக் குழந்தையை எனக்குத் தந்தார். 28 இப்போது நான் இந்தக் குழந்தையை கர்த்தருக்குத் தருகிறேன். அவன் தன் வாழ்நாள் முழுவதும் கர்த்தருக்கு சேவை செய்வான்” என்றாள்.
பிறகு அன்னாள், அந்தப் பிள்ளையை அங்கேயே விட்டு, விட்டு கர்த்தரைத் தொழுதுகொண்டாள்.
நினைவுகொள்ளவேண்டிய விஷயங்கள்
11 நீயோ தேவனுடைய மனிதன். எனவே நீ இவற்றில் இருந்து விலகி இருக்கவேண்டும். சரியான வழியில் வாழ முயற்சி செய். தேவனுக்கு சேவை செய். விசுவாசம், அன்பு, பொறுமை, சாந்தம் ஆகியவற்றை வைத்துக்கொள். 12 விசுவாசம் வைத்தல் பந்தயத்தில் ஓடுவது போன்றது. அதில் வெற்றி பெறக் கடுமையாகப் பாடுபடு. நித்தியஜீவனைப் பற்றிக்கொள். அத்தகைய வாழ்க்கைக்காகவே நீ அழைக்கப்பட்டாய், அநேக மக்களுக்கு முன்னிலையில் கிறிஸ்துவின் பேருண்மையை நீ அறிக்கை பண்ணியுமிருக்கிறாய். 13 தேவனுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் முன்பாக நான் ஒரு ஆணையை இடுகிறேன். பொந்தியு பிலாத்துவின் முன்னால் நிற்கும்போது அவர் பேருண்மைக்கு சாட்சியம் வழங்கினவர். கிறிஸ்து இயேசு ஒருவரே எல்லாவற்றிற்கும் வாழ்வளிக்கிறார். 14 அதனால் இப்பொழுது உனக்குக் கூறுகிறேன், உனக்கு ஆணையிட்டுள்ளபடி செய். நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து திரும்பி வரும்வரை குற்றம் இல்லாமலும் பிழை இல்லாமலும் சரியாகச் செய். 15 தேவன் அதனைச் சரியான நேரத்தில் நிகழும்படி செய்வார். தேவன் ஆசீர்வதிக்கப்பட்டவராகவும், ஏக சக்கரவர்த்தியாகவும் இருக்கிறார். அவரே ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவாகவும், கர்த்தர்களுக்கெல்லாம் கர்த்தராகவும் விளங்குகிறார். 16 அவர் ஒருவரே என்றும் மரிப்பதில்லை. அவர் யாராலும் அருகில் நெருங்கி வரமுடியாத ஒளியில் வாழ்கிறார். எந்த மனிதனும் அவரை ஒரு போதும் பார்த்ததில்லை. யாராலும் அவரைப் பார்க்கமுடியாது. என்றென்றைக்கும் அவருக்குக் கனமும் வல்லமையும் உண்டாகுவதாக ஆமென்.
17 இந்த ஆணைகளைச் செல்வர்களிடம் கூறு. பெருமிதம் கொள்ளவேண்டாம் என அவர்களுக்குச் சொல். செல்வத்தின் மீது விசுவாசம் நிரந்தரமாக வைக்கவேண்டாம் என்றும், தேவன் மீது விசுவாசம் வைக்குமாறும் கூறு. செல்வம் விசுவாசிப்பதற்கு உரியதன்று. ஆனால் தேவன் நம்மை செழிப்பாகப் பாதுகாக்கிறார். அவற்றை நாம் சந்தோஷமாக அனுபவிக்க அவர் கொடுக்கிறார். 18 நல்ல செயல்களைச் செய்யுமாறு செல்வர்களிடம் கூறு. வள்ளல்களாகவும், பகிர்ந்துகொள்ள விரும்புகிறவர்களாகவும் இருக்கக் கூறு. 19 இவற்றைச் செய்வதன் மூலம் அவர்கள் பரலோகத்தில் ஒரு பொக்கிஷத்தைச் சேமித்து வைக்கிறார்கள். அது அவர்களுக்குப் பலமான அஸ்திபாரமாக எதிர்கால வாழ்வைக் கட்ட உதவியாக இருக்கும். அதனால் உண்மையான வாழ்வைப் பெறுவர்.
20 தீமோத்தேயுவே, தேவன் உன்னிடம் நம்பிக்கையுடன் பல நல்ல காரியங்களைத் தந்திருக்கிறார். அவற்றைப் பாதுகாத்துக்கொள். தேவனிடமிருந்து வராத முட்டாள்தனமான காரியங்களைப் பேசுகிறவர்களிடமிருந்து விலகு. உண்மைக்கு எதிராக வாதம் செய்கிறவர்களிடமிருந்தும் விலகிப் போ. அவர்கள் “ஞானம்” என்று அழைப்பதெல்லாம் தவறான “ஞானம்” ஆகும். 21 சிலர் தங்களிடம் அந்த “ஞானம்” உள்ளதாகக் கூறிக்கொள்கிறார்கள். அவர்கள் உண்மையான போதனையில் இருந்து விலகிப்போனார்கள்.
தேவனுடைய கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக!
2008 by World Bible Translation Center