Revised Common Lectionary (Semicontinuous)
113 கர்த்தரைத் துதியுங்கள்.
கர்த்தருடைய ஊழியர்களே, அவரைத் துதியுங்கள்!
கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்.
2 கர்த்தருடைய நாமம் என்றென்றும் ஆசீர்வதிக்கப்படுவதாக.
3 சூரியன் உதிக்கும் கிழக்கிலிருந்து சூரியன் மறைகிற மேற்குவரை
கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக.
4 எல்லா தேசங்களிலும் கர்த்தர் உயர்ந்தவர்.
வானங்கள் மட்டும் அவரது மகிமை எழும்புகிறது.
5 எங்கள் தேவனாகிய கர்த்தரைப் போன்றோர் எவருமில்லை.
தேவன் பரலோகத்தின் உயரத்தில் வீற்றிருக்கிறார்.
6 வானத்தையும் பூமியையும் கீழே குனிந்து நோக்கும்வண்ணம்
தேவன் நமக்கு மேலே மிக உயரத்தில் இருக்கிறார்.
7 தூசியிலிருந்து ஏழைகளை தேவன் தூக்கிவிடுகிறார்.
குப்பைக் குவியலிலிருந்து தேவன் பிச்சைக்காரர்களை வெளியேற்றுகிறார்.
8 அந்த ஜனங்களை தேவன் முக்கியமானவர்களாக்குகிறார்.
அந்த ஜனங்களை தேவன் முக்கியமான தலைவர்களாக்குகிறார்.
9 ஒரு பெண்ணிற்குக் குழந்தைகள் இல்லாமல் இருக்கலாம்,
ஆனால் தேவன் அவளுக்குக் குழந்தைகளைத் தந்து அவளை மகிழ்ச்சியாக்குவார்.
கர்த்தரைத் துதியுங்கள்!
ஈசாக்குக்கு ஒரு மனைவி
24 ஆபிரகாம் மிகவும் வயோதிபனாக இருந்தான். அவனையும், அவன் செய்த காரியங்களையும் கர்த்தர் ஆசீர்வதித்தார். 2 ஆபிரகாமுக்கு ஒரு வேலைக்காரன் இருந்தான். அவனே ஆபிரகாமுக்குச் சொந்தமான எல்லாவற்றுக்கும் பொறுப்பானவனாக இருந்தான். ஒரு நாள் ஆபிரகாம் அவனை அழைத்து, “எனது தொடையின் கீழ் உன் கைகளை வை. 3 நான் உன்னிடமிருந்து ஒரு வாக்குறுதியை வாங்க விரும்புகிறேன், வானத்திற்கும் பூமிக்கும் அதிபதியான தேவனாகிய கர்த்தருக்கு முன்னால் எனக்கு வாக்குறுதிக் கொடு. கானானியர்களிடமிருந்து ஒரு பெண்ணை என் குமாரன் மணந்துகொள்ள நீ அனுமதிக்கக் கூடாது. நாம் இவர்கள் மத்தியில் வாழ்கிறோம். எனினும் ஒரு கானான் தேசத்துப் பெண்ணை, அவன் மணந்துகொள்ளக் கூடாது. 4 எனது சொந்த ஜனங்கள் இருக்கிற என் நாட்டிற்குத் திரும்பிப்போ. அங்கு என் குமாரன் ஈசாக்குக்கு மணமுடிக்க ஒரு பெண்ணைப் பார்த்து அவளை இங்கு அழைத்துக்கொண்டு வா” என்றான்.
5 அதற்கு அந்த வேலைக்காரன், “ஒருவேளை அந்தப் பெண் இந்த நாட்டிற்கு என்னோடு வர மறுக்கலாம். எனவே உங்கள் குமாரனையும் என்னோடு நான் அழைத்துச் செல்லலாமா?” என்று கேட்டான்.
6 ஆபிரகாம் அவனிடம், “இல்லை என் குமாரனை அந்த இடத்திற்கு உன்னோடு அழைத்துச் செல்லக் கூடாது. 7 வானத்திற்கு தேவனாகிய கர்த்தர் என்னை என் தாய் நாட்டிலிருந்து இங்கு அழைத்து வந்துள்ளார். அது என் தந்தைக்கும் என் குடும்பத்திற்கும் தாய்நாடு. ஆனால் கர்த்தர் இந்தப் புதிய நாடே எனது குடும்பத்தின் தாய்நாடு என்று வாக்குறுதிச் செய்திருக்கிறார். எனவே கர்த்தர் தன் தூதனை உனக்கு முன் அனுப்புவாராக. பெண்ணைத் தேர்ந்தெடுக்க உனக்கு உதவுவார். 8 ஆனால் அந்தப் பெண் உன்னோடு இங்கு வர சம்மதிக்காவிட்டால் உனது வாக்குறுதியிலிருந்து நீ விடுதலை பெறுகிறாய். ஆனால் என் குமாரனை மட்டும் அங்கு அழைத்துக்கொண்டு போகக் கூடாது” என்று கூறினான்.
9 அதன்படி, அந்த வேலைக்காரன் தன் எஜமானனின் காலடியில் தன் கையை வைத்து வாக்குறுதி செய்தான்.
பெண்ணைத் தேடுதல்
10 ஆபிரகாமின் வேலைக்காரன் பத்து ஒட்டகங்களோடு அங்கிருந்து புறப்பட்டான். அவன் தன்னோடு பலவித அழகான பரிசுப்பொருட்களையும் எடுத்து சென்றான். அவன் நாகோரின் நகரமான மெசொப்பொத்தாமியாவிற்குச் சென்றான்.
5 முதியோர்களிடம் கோபமாகப் பேசாதே. ஆனால் அவர்களைத் தந்தையாக மதித்து நடத்து. இளைஞர்களை சகோதரர்களாக மதித்து நடத்து. 2 முதிய பெண்களைத் தாயாகக் கருது. வயது குறைந்த பெண்களை சகோதரிகளாக நினை. அவர்களை எப்பொழுதும் நல்ல முறையில் நடத்து.
மற்றவர்களோடு வாழ்வதற்கான சில விதிமுறைகள்
3 உண்மையிலேயே தனியாக உள்ள விதவைகளைப் பாதுகாத்து மதித்து நட. 4 ஆனால் ஒரு விதவைக்குப் பிள்ளைகளோ, பேரப்பிள்ளைகளோ இருந்தால், இவர்கள் தம் பெற்றோர்களுக்கு உதவுவதன் மூலம் தன் குடும்பத்தை மதிக்க வேண்டும் என்பதை முதலில் கற்கவேண்டும். இவர்கள் இதைச் செய்தால் பெற்றோர்களுக்கும் மூதாதையர்களுக்கும் நன்றிக் கடன் செலுத்தியவர்களாவார்கள். இதையே தேவன் ஒப்புக்கொள்கிறார். 5 விதவையாக இருக்கும் ஒருத்தி தேவனைத் தன் ஒரே விசுவாசமாகக்கொண்டிருப்பாள். இரவு பகல் என அவள் எப்பொழுதும் பிரார்த்தனை செய்வாள். தேவனிடம் உதவியை வேண்டுவாள். 6 தனக்கு சந்தோஷம் தரும் செயல்களைச் செய்வதிலேயே ஒரு விதவை தன் வாழ்வை கழித்தாளெனில் உயிரோடு இருந்தாலும் இறந்தவளுக்குச் சமமாவாள். 7 அங்குள்ள விசுவாசிகளிடம் தங்கள் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளும்படி கூறு. அதனால் மற்றவர்கள் அவர்கள் தவறாக நடந்துகொள்கிறார்கள் என்று கூறமாட்டார்கள். 8 ஒருவன் தன் சொந்த மக்களிடமும் அக்கறை காட்ட வேண்டும். அதைவிட முக்கியமாக அவன் தன் சொந்தக் குடும்பத்தில் அக்கறை காட்ட வேண்டும். ஒருவன் இதைச் செய்யாவிட்டால் பிறகு அவன் உண்மையான விசுவாசத்தைக் கைவிட்டவன் ஆகிறான். அவன் விசுவாசம் அற்றவனை விட மோசமானவனாகிறான்.
2008 by World Bible Translation Center