Revised Common Lectionary (Semicontinuous)
ஆலயத்திற்குப் போகும்போது பாடுவதற்கான சாலொமோனின் பாடல்.
127 கர்த்தர் ஒரு வீட்டைக் கட்டாவிட்டால் அதைக் கட்டுகிறவன் காலத்தை வீணாக்குகிறான்.
கர்த்தர் ஒரு நகரத்தைக் கண்காணிக்காவிட்டால் அதைக் காப்போர் காலத்தை வீணாக்குகிறார்கள்.
2 வாழ்க்கை வாழ்வதற்காக காலையில் எழுவதும் இரவில் வெகுநேரம் விழித்திருப்பதும் பொழுதை வீணாக்குவதாகும்.
தேவன் தாம் நேசிக்கிற ஜனங்களை அவர்கள் உறங்கும்போது கவனித்துக் காக்கிறார்.
3 பிள்ளைகள் கர்த்தரால் வரும் பரிசாகும்.
குழந்தைகள் ஒரு தாயின் சரீரத்திலிருந்து வரும் வெகுமதியாகும்.
4 ஒரு இளைஞனின் குமாரர்கள்
ஒரு வீரன் அம்புகளை வைத்திருக்கும் பையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாவார்கள்.
5 தன் அம்புகள் வைக்கும் பையை குமாரர்களால் நிரப்பும் மனிதன் மிகவும் மகிழ்ச்சியடைவான்.
அம்மனிதன் ஒரு நாளும் தோற்கடிக்கப்படமாட்டான்.
அவனது பகைவர்களுக்கு எதிராகப் பொது இடங்களில் போராடி அவனது குமாரர்கள் அவனைக் காப்பார்கள்.
போவாஸும் மற்ற உறவினனும்
4 நகரவாசலில் ஜனங்கள் கூடும் இடத்திற்கு போவாஸ் சென்றான். தான் சொன்ன உறவினன் வரும்வரை அங்கேயே அவன் காத்திருந்தான். அவன் வந்ததும், “நண்பனே! வா, இங்கே உட்காரு!” என்றான்.
2 பிறகு போவாஸ் சில சாட்சிகளையும் அருகில் அழைத்தான். நகரத்திலுள்ள 10 மூப்பர்களையும் அழைத்து, “இங்கு உட்காருங்கள்!” என்றான். அவர்களும் உட்கார்ந்தனர்.
3 பிறகு போவாஸ் நெருங்கிய உறவினனிடம், “மோவாபின் மலை நகரத்திலிருந்து நகோமி வந்திருக்கிறாள். எலிமெலேக்கின் நிலத்தை அவள் விற்கப்போகிறாள். 4 நான் இங்கே வாழும் ஜனங்களின் முன்னிலையிலும் நமது மூப்பர்களின் முன்னிலையிலும் இதைக்கூற முடிவு செய்தேன். நீ அதனைத் திரும்ப மீட்க வேண்டுமென விரும்பினால் வாங்கிக்கொள்! நீ அந்த நிலத்தை மீட்டுக்கொள்ள விரும்பாவிட்டால் என்னிடம் கூறு. நானே அதை மீட்டுக்கொள்ளும் இரண்டாவது உரிமையாளன். நீ அதனைத் திரும்ப மீட்டுக் கொள்ளாவிட்டால் நான் வாங்கிக் கொள்வேன்” என்றான்.
5 பிறகு போவாஸ், “நீ நகோமியிடமிருந்து நிலத்தை வாங்கும்போதே நீ மரித்துப் போனவனின் மனைவியையும் பெறுவாய், அவள் மோவாபிய பெண்ணான ரூத். அவளுக்குக் குழந்தை பிறந்தால், இந்த நிலமும் அதற்கு உரியதாகும். இதன் மூலம், அந்த நிலம் மரித்துப்போனவனின் குடும்பத்திற்குரியதாகவே விளங்கும்” என்றான்.
6 அந்த நெருங்கிய உறவினனோ, “என்னால் அந்த நிலத்தைத் திரும்ப வாங்கிக் கொள்ள முடியாது. அது எனக்கே உரியதாகவேண்டும். ஆனால் என்னால் விலைகொடுத்து வாங்கமுடியாது. நான் அவ்வாறு செய்தால் என் நிலத்தை இழந்துபோனவன் ஆகிறேன். நீங்களே அந்நிலத்தை வாங்கிக்கொள்ளுங்கள்” என்றான். 7 (இஸ்ரவேலில் முற்காலத்தில், ஒருவன் ஒரு சொத்தை வாங்கினாலோ மீட்டுக் கொண்டாலோ, ஒருவன் தனது பாதரட்சையை எடுத்து மற்றவனிடம் கொடுக்கவேண்டும். இது வாங்கியதற்கான ஒரு சான்றாக விளங்கும்.) 8 எனவே நெருக்கமான உறவினன், “நிலத்தை வாங்கிக்கொள்” என்று கூறி, தனது பாதரட்சையை எடுத்து போவாஸிடம் கொடுத்தான்.
9 பிறகு போவாஸ் மூப்பர்களிடமும், மற்ற ஜனங்களிடமும், “இன்று நான் நகோமியிடமிருந்து எலிமெலேக்குக்கும், கிலியோனுக்கும், மக்லோனுக்கும் சொந்தமாக இருந்த எல்லாவற்றையும் வாங்கிக்கொள்கிறேன். 10 நான் ரூத்தையும் என் மனைவியாகப் பெற்றுக்கொள்கிறேன். இவ்வாறு நான் செய்வதால், மரித்துப்போனவனின் சொத்தானது அவனது குடும்பத்துக்கு உரியதாகவே விளங்கும். இதன் மூலம் அவனது பெயரானது அவனது குடும்பத்தையும் சொத்துக்களையும் விட்டு பிரிக்கப்படாமல் இருக்கும். இன்று இதற்கு நீங்களே சாட்சிகளாக இருக்கிறீர்கள்” என்றான்.
6 நாம் பலவீனர்களாக இருக்கும்போதே கிறிஸ்து நமக்காக மரித்தார். நாம் தேவனுக்கு எதிராக வாழ்ந்துகொண்டிருந்த காலத்தில் சரியான நேரத்தில் கிறிஸ்து நமக்காக மரித்தார். 7 ஒருவன் எவ்வளவுதான் நீதிமானாக இருந்தாலும், மிகச் சிலரே அவனது வாழ்வைப் பாதுகாப்பதற்காக தம் உயிரைக் கொடுப்பர். ஒருவன் மிக நல்லவனாக இருந்தால்தான் இன்னொருவன் அவனுக்காக உயிரைக் கொடுக்கிறான். 8 ஆனால் நாம் பாவிகளாக இருக்கும்போதே நமக்காக கிறிஸ்து உயிரைவிட்டார். இதன் மூலம் தேவன் நம்மீதுகொண்ட பேரன்பை நிரூபித்துவிட்டார்.
9 கிறிஸ்துவின் இரத்தத்தால் நாம் தேவனுக்கேற்ற நீதிமான்களாகிவிட்டோம். எனவே, மிக உறுதியாகக் கிறிஸ்துவின் மூலம் நாம் தேவனுடைய கோபத்திலிருந்து இரட்சிக்கப்படுவோம். 10 நாம் தேவனுக்குப் பகைவர்களாக இருந்தபோது, தேவனோ கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் நம்மை நண்பர்களாக்கிக் கொண்டார். எனவே, இப்போது உறுதியாக நாமனைவரும் அவரது நண்பர்களே. தேவன் தனது குமாரனின் உயிர் மூலம் நம்மை இரட்சிப்பார். 11 இப்போது நாம் இரட்சிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமே தேவனிடம் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஏனென்றால் இயேசுவின் மூலமே நாம் தேவனுடைய நண்பர்களானோம்.
2008 by World Bible Translation Center