Revised Common Lectionary (Semicontinuous)
ஆசாபின் துதிப் பாடல்களுள் ஒன்று.
83 தேவனே, அமைதியாய் இராதேயும்!
உமது செவிகளை மூடிக்கொள்ளாதேயும்!
தேவனே தயவாய் எதையாவது பேசும்.
2 தேவனே, உமது பகைவர்கள் உமக்கெதிராகத் திட்டங்கள் வகுக்கிறார்கள்.
உமது பகைவர்கள் உடனே தாக்குதல் ஆரம்பிக்கக்கூடும்.
3 உமது ஜனங்களுக்கு எதிராக அவர்கள் இரகசிய திட்டஙகளை வகுக்கிறார்கள்.
நீர் நேசிக்கும் ஜனங்களுக்கு எதிராக உமது பகைவர்கள் திட்டங்களை கலந்து ஆலோசிக்கிறார்கள்.
4 பகைவர்கள் இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்: “வாருங்கள், நாம் பகைவர்களை முற்றிலும் அழிப்போம்.
பின்பு ஒருநாளும் ஒருவனும் ‘இஸ்ரவேல்’ என்னும் பெயரை நினைவு கூரமாட்டான்.”
13 தேவனே, அந்த ஜனங்களைக் காற்றில் பறக்கும் பதராகப் பண்ணும்.
காற்றுப் பறக்கடிக்கும் புல்லைப்போல் அந்த ஜனங்களைச் சிதறடியும்.
14 நெருப்பு காட்டை அழிப்பதைப்போலவும்
பெருநெருப்பு மலைகளைச் சுடுவது போலவும் பகைவனை அழித்துப்போடும்.
15 தேவனே, புயலில் அலைக்கழிக்கப்படும் துகளைப்போல அந்த ஜனங்களை துரத்திவிடும்.
அவர்களை அசையும், அவர்களைப் பெருங்காற்றைப்போல நின்று பறக்கடியும்.
16 தேவனே அவர்கள் உண்மையிலேயே சோர்வுடையவர்கள் என்பதை அந்த ஜனங்கள் அறியும்படி அவர்களுக்குப் போதியும்.
அப்போது அவர்கள் உமது நாமத்தை தொழுதுகொள்ள விரும்புவார்கள்!
17 தேவனே, அந்த ஜனங்களை அச்சுறுத்தி, அவர்கள் என்றென்றும் வெட்கமடையச் செய்யும்.
அவர்களை இழிவுப்படுத்தி, அழித்துப்போடும்.
18 அப்போது நீரே தேவனென்று அவர்கள் அறிவார்கள்.
உமது நாமம் யேகோவா என்பதையும் அவர்கள் அறிவார்கள்.
மிக உன்னதமான தேனாகிய நீர்
உலகம் முழுவதற்கும் தேவன் என்பதையும் அவர்கள் அறிவார்கள்.
10 ஆனால் மோசே கர்த்தரை நோக்கி, “கர்த்தாவே, நான் உமக்கு உண்மையைச் சொல்கிறேன் நான் தேர்ந்த பேச்சாளன் அல்ல. நான் சிறப்பாக எப்போதும் பேசியதில்லை. இப்போது உம்மிடம் பேசிய பிறகும்கூட, நான் சிறந்த பேச்சாளனாக மாறவில்லை. நான் நிதானமாகப் பேசுகிறேன் என்பதும், சிறந்த வார்த்தைகளைப் பயன்படுத்தாத திக்குவாய் உடையவன் என்பதும் உமக்கு தெரியும்” என்று கூறினான்.
11 அப்போது கர்த்தர் அவனை நோக்கி, “யார் மனிதனின் வாயை உண்டாக்கினார்? யாரால் மனிதனைச் செவிடனாகவும், ஊமையாகவும் செய்யமுடியும்? யார் ஒருவனைக் குருடனாக்கக் கூடும்? யார் ஒருவனுக்குப் பார்வை தரமுடியும்? இக்காரியங்களைச் செய்ய வல்லவர் நானே. நான் யேகோவா. 12 எனவே நீ போ! நீ பேசும்போது நான் உன்னோடு இருப்பேன். நீ சொல்லவேண்டிய வார்த்தைகளை நான் உனக்குத் தருவேன்” என்றார்.
13 ஆனால் மோசே, “எனது கர்த்தாவே, வேறு யாரையாவது அனுப்புமாறு உம்மிடம் வேண்டிக்கொள்கிறேன், என்னை அனுப்பவேண்டாம்” என்றான்.
14 அப்போது மோசேயின்மேல் கர்த்தர் கோபம் கொண்டு, “நல்லது! உனக்கு உதவியாக நான் ஒருவனைத் தருவேன். லேவியனாகிய உனது சகோதரன் ஆரோனை நான் பயன்படுத்துவேன். அவன் தேர்ந்த பேச்சாளன். அவன் உன்னைப் பார்க்க வந்துகொண்டிருக்கிறான். அவன் உன்னைப் பார்த்து சந்தோஷப்படுவான். 15 அவன் உன்னோடுகூட பார்வோனிடம் வருவான். நீ கூற வேண்டியதை உனக்குச் சொல்வேன். நீ அதை ஆரோனுக்குச் சொல். பார்வோனிடம் பேச வேண்டிய தகுந்த வார்த்தைகளை ஆரோன் தெரிந்துகொள்வான். 16 உனக்காக ஆரோன் ஜனங்களிடமும் பேசுவான். நீ ஒரு பேரரசனைப் போலிருப்பாய், உனக்குரிய பேச்சாளனாக அவன் இருப்பான்.[a] 17 எனவே போ. உனது கைத்தடியையும் எடுத்துச்செல். நான் உன்னோடிருக்கிறேன் என்பதை ஜனங்களுக்குக் காட்டுவதற்கு உனது கைத்தடியையும், பிற அற்புதங்களையும் பயன்படுத்து” என்றார்.
மோசே எகிப்துக்குத் திரும்பி வருதல்
18 அப்போது மோசே தன் மாமனாகிய எத்திரோவிடம் திரும்பிப்போனான். மோசே எத்திரோவை நோக்கி, “நான் எகிப்துக்குத் திரும்பிப்போக அனுமதி கொடும். எனது ஜனங்கள் இன்னும் உயிரோடிருக்கிறார்களா என்று பார்க்கவேண்டும்” என்றான்.
எத்திரோ மோசேயை நோக்கி, “நீ சமாதானத்தோடு போய்வா” என்றான்.
19 மோசே இன்னும் மீதியானில் இருக்கும்போதே, தேவன் மோசேயை நோக்கி, “இப்போது நீ எகிப்திற்குத் திரும்பிப் போவதற்குப் பொருத்தமான வேளை. உன்னைக் கொல்ல விரும்பிய மனிதர்கள் மரித்து போய்விட்டனர்” என்றார்.
20 எனவே மோசே, தன் மனைவியையும், குழந்தைகளையும் கழுதையின்மேல் ஏற்றிக்கொண்டு, எகிப்திற்குத் திரும்பிப் போனான். தேவனின் வல்லமையைப் பெற்றிருந்த தனது கைத்தடியையும் மோசே எடுத்துக்கொண்டான்.
21 மோசே எகிப்தை நோக்கிப் பிரயாணம் செய்துகொண்டிருந்தபோது, தேவன் அவனோடு பேசினார். அவர், “நீ பார்வோனோடு பேசும்போது, உனக்கு நான் அளித்துள்ள வல்லமையினால் எல்லா அற்புதங்களையும் செய்து காட்ட வேண்டும் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள். ஆனால் பார்வோன் மிகவும் பிடிவாதமாக இருக்கும்படியாகச் செய்வேன். ஜனங்களைப் போகும்படியாக அவன் அனுமதிக்கமாட்டான். 22 அப்போது நீ பார்வோனைப் பார்த்து, ‘இஸ்ரவேல் எனது முதற்பேறான குமாரன். 23 என் குமாரன் கிளம்பிப் போய் என்னைத் தொழுதுகொள்ளவிடு என்று உனக்குக் கூறுகிறேன்! இஸ்ரவேல் போவதற்கு நீ அனுமதி அளிக்க மறுத்தால், நான் உனது முதற்பேறான குமாரனைக் கொல்வேன், என்று கர்த்தர் சொல்கிறார்’ என்று சொல்” என்றார்.
மோசேயின் குமாரன் விருத்தசேதனம் செய்யப்படுதல்
24 எகிப்திற்குச் செல்லும் வழியில் இரவைக் கழிப்பதற்காக மோசே ஓரிடத்தில் தங்கினான். கர்த்தர் அவ்விடத்தில் மோசேயைச் சந்தித்து அவனைக் கொல்ல முயன்றார்.[b] 25 ஆனால் சிப்போராள் கூர்மையான கல்லினால் செய்யப்பட்டக் கத்தியினால் தனது குமாரனின் நுனித்தோலை அறுத்தெடுத்து, நுனித் தோலினால் மோசேயின் பாதங்களைத் தொட்டு, “நீர் எனக்கு இரத்த சம்பந்தமான கணவன்” என்றாள். 26 குமாரனுக்கு அவளே விருத்தசேதனம் செய்யும்படியாக நேரிட்டதால் சிப்போராள் இவ்வாறு கூறினாள். எனவே தேவன் மோசேயை மன்னித்து அவனைக் கொல்லாமல்விட்டார்.
தேவனின் முன்னிலையில் மோசேயும் ஆரோனும்
27 கர்த்தர் ஆரோனோடு பேசினார். கர்த்தர் அவனிடம், “பாலைவனத்தில் சென்று மோசேயைப் பார்” என்றார். எனவே ஆரோன் சென்று, தேவனின் மலையில் மோசேயைச் சந்தித்தான். ஆரோன் மோசேயைக் கண்டு, அவனை முத்தமிட்டான். 28 தேவன் அவனை அனுப்பினார் என்பதை நிரூபிப்பதற்காக அவன் செய்யவேண்டிய காரியங்களையும் அற்புதங்களையும் குறித்து மோசே ஆரோனுக்குச் சொன்னான். தேவன் அவனுக்குச் சொன்ன எல்லாவற்றையும் மோசே ஆரோனுக்குக் கூறினான்.
29 மோசேயும் ஆரோனும் சென்று இஸ்ரவேல் ஜனங்களின் மூப்பர்களை (தலைவர்களை) ஒன்றாகக் கூட்டினார்கள். 30 அப்போது ஆரோன் ஜனங்களிடம் கர்த்தர் மோசேயிடம் கூறிய எல்லாக் காரியங்களையும் கூறினான். எல்லா ஜனங்களும் பார்க்கும்படியாக அடையாளங்களைச் செய்து காட்டினான். 31 தேவன் மோசேயை அனுப்பினார் என்பதை ஜனங்கள் நம்பினார்கள். தேவன் அவர்களின் துன்பங்களைக் கண்டார் எனவும், அவர்களுக்கு உதவுவதற்காக அவன் வந்துள்ளான் என்பதையும் இஸ்ரவேல் ஜனங்கள் அறிந்தார்கள். எனவே அவர்கள் தலைகுனிந்து தேவனைத் தொழுதுகொண்டார்கள்.
சர்தை சபைக்கு இயேசுவின் நிருபம்
3 “சர்தை சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது: ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் கொண்டிருக்கிறவர் இவைகளை உனக்கு கூறுகிறார்.
“நீங்கள் செய்பவற்றை நான் அறிவேன். நீங்கள் உயிர் வாழ்வதாக மக்கள் கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் நீங்கள் செத்துப் போனவர்களே. 2 எழும்புங்கள். செத்துப்போகிற நிலையில் உள்ளவற்றை வலிமையுள்ளதாய் ஆக்குங்கள். முழுமையாய் சாகும் முன் பலப்படுத்திக்கொள்ளுங்கள். தேவனுக்கு நீ செய்ததெல்லாம் போதுமானதாக இல்லை என நான் காண்கின்றேன். 3 எனவே நீங்கள் பெற்றவற்றையும், கேள்விப்பட்டவற்றையும் மறவாதீர்கள். அவற்றுக்கு அடிபணியுங்கள். உங்கள் மனதையும், வாழ்வையும் மாற்றுங்கள். நீங்கள் விழித்தெழுங்கள். அல்லது நான் திருடனைப்போல வந்து உங்களை ஆச்சரியப்படுத்துவேன். எப்பொழுது நான் வருவேன் என உங்களுக்குத் தெரியாது.
4 “ஆனால் உங்கள் குழுவில் சிலர் பரிசுத்தமானவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் என்னோடு நடப்பார்கள். அவர்கள் வெள்ளை ஆடைகளை அணிவார்கள். ஏனென்றால் அதற்கு அவர்கள் தகுதியானவர்கள். 5 வெற்றிபெறுகிற ஒவ்வொருவரும் இவர்களைப்போல் வெண்ணிற ஆடைகளை அணிந்துகொள்வார்கள். நான் அவர்களது பெயர்களை ஜீவப் புத்தகத்திலிருந்து எடுத்துப்போட மாட்டேன். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள். இதனை நான் என் பிதாவின் முன்பும், தூதர்களுக்கு முன்பும் சொல்வேன்.” 6 சபைகளுக்கு ஆவியானவர் சொல்வதை கேட்கிற யாவரும் கவனிக்க வேண்டும்.
2008 by World Bible Translation Center