Revised Common Lectionary (Semicontinuous)
இஸ்ரவேல் ஜனங்களுக்குத் தொல்லை
8 அப்போது யோசேப்பை அறிந்திராத ஒரு புதிய ராஜா எகிப்தை அரசாள ஆரம்பித்தான். 9 இந்த ராஜா தம் ஜனங்களை நோக்கி, “இஸ்ரவேலின் ஜனங்களைப் பாருங்கள்! அவர்கள் மிக அதிகமாயிருக்கிறார்கள்! நம்மைக் காட்டிலும் அவர்கள் பலம்மிக்கவர்கள்! 10 இஸ்ரவேலர் பலம் பொருந்தியவர்களாய் வளர்ந்துகொண்டிருப்பதைத் தடை செய்ய நாம் திட்டங்கள் வகுக்க வேண்டும். போர் ஏற்படுமானால், இஸ்ரவேலர் நமது பகைவரோடு சேர்ந்துகொள்வதுடன், நம்மைத் தோற்கடித்து, நம்மிடமிருந்து தப்பித்துக்கொள்ளக்கூடும்” என்றான்.
11 இஸ்ரவேல் ஜனங்களின் வாழ்க்கையைச் சிரமமாக்குவதென எகிப்திய ஜனங்கள் முடிவெடுத்து, அவர்களிடையே மேற்பார்வையாளர்களை எகிப்தியர் நியமித்தார்கள். இந்த மேற்பார்வையாளர்கள் பித்தோம், ராமசேஸ் நகரங்களை ராஜாவுக்காகக் கட்டும்படியாக இஸ்ரவேலரைக் கட்டாயப்படுத்தினர். தானியங்களையும் பிற பொருட்களையும் சேர்த்து வைப்பதற்காக ராஜா இந்நகரங்களைப் பயன்படுத்தினான்.
12 மிகக் கடினமாக உழைக்கும்படியாக எகிப்தியர்கள் இஸ்ரவேலரை வற்புறுத்தினார்கள். எந்த அளவுக்கு இஸ்ரவேல் ஜனங்களை வேலை செய்யும்பொருட்டு கட்டாயப்படுத்தினார்களோ, அந்த அளவுக்கு அவர்கள் மிகுதியாகப் பெருகிப் பரவினார்கள். இஸ்ரவேல் ஜனங்களைக் கண்டு எகிப்திய ஜனங்கள் அதிக பயமடைந்தனர். 13 எனவே, எகிப்தியர்கள் இஸ்ரவேலரை இன்னும் கடினமாக உழைக்கும்படியாகக் கட்டாயப்படுத்தினார்கள்.
14 இஸ்ரவேலரின் வாழ்க்கையை எகிப்தியர்கள் கடினமாக்கினார்கள். செங்கல்லும், சாந்தும் செய்யும்படியாக இஸ்ரவேலரை அவர்கள் வற்புறுத்தி வேலை வாங்கினார்கள். வயல்களிலும் கடினமாக உழைக்கும்படியாக அவர்களைக் கட்டாயப்படுத்தினர். அவர்கள் செய்த ஒவ்வொரு வேலையிலும் கடினமாக உழைக்குமாறு, கட்டாயப்படுத்தினார்கள்.
தேவனைப் பின்பற்றிய மருத்துவச்சிகள்
15 இஸ்ரவேல் பெண்கள் குழந்தை பெறுவதற்கு உதவ சிப்பிராள், பூவாள் என்ற இரண்டு எபிரெய மருத்துவச்சிகள் இருந்தனர். எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளிடம் பேசி, 16 “எபிரெயப் பெண்களின் பிரசவத்திற்கு நீங்கள் இருவரும் தொடர்ந்து உதவுங்கள். பெண் குழந்தை பிறந்தால், அக்குழந்தை உயிரோடிருக்கட்டும். குழந்தை ஆணாக இருந்தால், நீங்கள் அதைக் கொன்றுவிட வேண்டும்!” என்றான்.
17 ஆனால் மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயப்படுகிறவர்களானதால் அவர்கள் ராஜாவின் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் எல்லா ஆண் குழந்தைகளையும் உயிரோடு விட்டனர்.
18 எகிப்திய ராஜா மருத்துவச்சிகளை அழைத்து, “நீங்கள் ஏன் இதைச் செய்தீர்கள்? ஆண் குழந்தைகளை ஏன் உயிரோடு விடுகிறீர்கள்?” என்று கேட்டான்.
19 மருத்துவச்சிகள் ராஜாவை நோக்கி, “எபிரெயப் பெண்கள் எகிப்தியப் பெண்களைக் காட்டிலும் வலிமையானவர்கள். நாங்கள் உதவுவதற்குப் போகும் முன்னரே அவர்களுக்குக் குழந்தை பிறந்துவிடுகின்றது” என்றனர். 20-21 தேவன் மருத்துவச்சிகளின்மேல் மகிழ்ச்சி அடைந்து அவர்களுக்கு நன்மை செய்தார். அவர்கள் தங்கள் குடும்பங்களுடன் செழிப்படையச் செய்தார்.
எபிரெய ஜனங்கள் தொடர்ந்து பல குழந்தைகளைப் பெற்றெடுத்து, வலிமை மிகுந்தோர் ஆயினர். 22 எனவே பார்வோன், தனது சொந்த ஜனங்களிடம், “எபிரெயரின் எல்லாப் பெண் குழந்தைகளும் உயிரோடிருக்கட்டும், ஆனால் ஒவ்வொரு ஆண் குழந்தை பிறக்கும்போதும், அதனை நைல் நதியில் வீசிவிட வேண்டும்” என்று ஆணையிட்டான்.
குழந்தையான மோசே
2 லேவியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் லேவியின் குடும்பத்திலிருந்த ஒரு பெண்ணை மணந்தான். 2 அப்பெண் கருவுற்று ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். தாய் அக்குழந்தையின் அழகைக் கண்டு அதை மூன்று மாதங்கள் மறைத்து வைத்தாள். 3 அது ஆணாக இருந்ததால், அக்குழந்தை கண்டுபிடிக்கப்பட்டு கொல்லப்படுமோ என்று தாய் பயந்தாள். மூன்று மாதங்களுக்குப் பிறகு அவள் ஒரு கூடையைச் செய்து, அது மிதக்கும்படியாக கீல் பூசி, குழந்தையை அக்கூடையில் வைத்து, நதியில் உயரமான புற்களிடையே கூடையை மிதக்கவிட்டாள். 4 குழந்தையின் சகோதரி அங்கு நின்று நடப்பதைக் கவனித்தாள். குழந்தைக்கு நிகழப்போவதைப் பார்க்க விரும்பினாள்.
5 அப்போதுதான் பார்வோனின் குமாரத்தி குளிப்பதற்காக நதிக்கு வந்தாள். உயர்ந்த புற்களிடையே இருந்த கூடையை அவள் கண்டாள். நதியருகே அவளது வேலைக்காரிகள் நடந்துகொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரிடம் கூடையை எடுத்து வருமாறு அவள் கூறினாள். 6 ராஜாவின் குமாரத்தி கூடையைத் திறந்து அதில் ஒரு ஆண் குழந்தையைக் கண்டாள். அக்குழந்தை அழுதுகொண்டிருந்தது. அவள் அதற்காக மனமிரங்கினாள். அது எபிரெயக் குழந்தைகளில் ஒன்று என்பதை அவள் அறிந்தாள்.
7 அங்கே நின்றுகொண்டிருந்த குழந்தையின் சகோதரி ராஜாவின் குமாரத்தியை நோக்கி, “நான் போய் குழந்தைக்குப் பாலூட்டுவதற்கும், அதைக் கவனித்துக்கொள்வதற்கும் ஒரு எபிரெயப் பெண்ணை அழைத்து வரட்டுமா?” என்றாள்.
8 ராஜாவின் குமாரத்தியும், “தயவு செய்து அவ்வாறே செய்” என்றாள்.
எனவே அப்பெண் சென்று, குழந்தையின் தாயையே அழைத்து வந்தாள்.
9 ராஜாவின் குமாரத்தி அத்தாயை நோக்கி, “குழந்தையை எடுத்து எனக்காக அதற்குப் பாலூட்டு. அவனைக் கவனித்துக்கொள்வதற்காக உனக்குப் பணம் கொடுப்பேன்” என்றாள்.
எனவே, அப்பெண் குழந்தையை எடுத்துச் சென்று, அதனை வளர்த்தாள். 10 குழந்தை வளர்ந்தது. சில காலத்திற்குப் பிறகு, அவள் அக்குழந்தையை ராஜாவின் குமாரத்தியிடம் கொடுத்தாள். ராஜாவின் குமாரத்தி குழந்தையைத் தன் சொந்த குமாரனாகவே ஏற்றுக்கொண்டாள். அக்குழந்தையை தண்ணீரிலிருந்து எடுத்ததால் அவனுக்கு மோசே என்று பெயரிட்டாள்.
ஆலயத்திற்குப் போகும்போது பாடுவதற்கென்று தாவீது அளித்த பாடல்.
124 கர்த்தர் நமது சார்பில் இருந்திராவிட்டால், நமக்கு என்ன நேர்ந்திருக்கும்?
இஸ்ரவேலே, எனக்குப் பதில் கூறு.
2 ஜனங்கள் நம்மைத் தாக்கியபோது, கர்த்தர் நமது சார்பில்
இருந்திராவிட்டால் நமக்கு என்ன நேர்ந்திருக்கும்?
3 கோபம் வந்தபோதெல்லாம் நம் பகைவர்கள் நம்மை
உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.
4 நம்மை அடித்துச்செல்லும் பெருவெள்ளத்தைப் போன்றும்,
நம்மை அமிழ்த்துவிடும் நதியைப் போன்றும்
நம் பகைவர்களின் சேனைகள் நம்மிடம் நடந்துகொண்டிருக்கும்.
5 நம் வாய்மட்டும் எழுந்து நம்மை அமிழ்த்திவிடும்
தண்ணீரைப்போன்று அப்பெருமைக்காரர்கள் நடந்துக்கொண்டிருப்பார்கள்.
6 கர்த்தரைத் துதியுங்கள்!
நம் பகைவர்கள் நம்மைப் பிடித்துக்கொல்வதற்கு கர்த்தர் அனுமதிக்கவில்லை.
7 வலையில் அகப்பட்டுப் பின்னர் தப்பிச்சென்ற பறவையைப் போல நாம் இருக்கிறோம்.
வலை அறுந்தது, நாம் தப்பினோம்.
8 நமக்கு உதவி கர்த்தரிடமிருந்து வந்தது.
கர்த்தரே பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.
வாழ்க்கையை தேவனுக்குக் கொடுங்கள்
12 சகோதர சகோதரிகளே! ஏதாவதுகொஞ்சம் செய்யுங்கள் என வேண்டுகிறேன். தேவன் நம்மிடம் மிகுந்த இரக்கத்தைக் காட்டியிருக்கிறார். உங்கள் சரீரங்களை தேவனுக்கு உயிர்ப் பலியாகத் தாருங்கள். இதுவே அவரை வழிபடுவதற்கான பக்தி வழியாகும். தேவன் இதில் திருப்தியடைகிறார். 2 உலகிலுள்ள மக்களைப் போன்று ஆக வேண்டுமென உங்களை மாற்றிக்கொள்ளாதீர்கள். ஆனால் மனதில் புதிய எண்ணங்களால் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். பிறகு தேவனுடைய விருப்பத்தை உங்களால் ஏற்றுக்கொள்வது பற்றி முடிவு செய்ய முடியும். நல்லவை எவை, தேவனுக்கு விருப்பமானவை எவை என்று உங்களால் அறிந்துகொள்ள முடியும்.
3 தேவன் எனக்கொரு சிறப்பான வரத்தைக் கொடுத்திருக்கிறார். அதனால்தான் உங்களில் ஒவ்வொருவருக்கும் சொல்ல என்னிடம் சில காரியங்கள் இருக்கின்றன. உங்கள் நிலைமைக்கு மீறிய நினைப்பினைக்கொள்ளாதீர்கள். உண்மையாகவே நீங்கள் யார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். தேவன் உங்களுக்குக் கொடுத்த விசுவாசத்தின்படியே ஒவ்வொருவனும் தம்மைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். 4 நம் ஒவ்வொருவருக்கும் ஒரு சரீரம் உள்ளது. அதற்குப் பல உறுப்புகளும் உள்ளன. எல்லா உறுப்புகளும் ஒரே வேலையைச் செய்வதில்லை. 5 இது போலவே, நாம் பல வகை மக்கள். ஆனால் கிறிஸ்துவுக்குள் நாம்அனைவரும் ஒரே சரீரமாக இருக்கிறோம். நாம் அந்த சரீரத்தின் பல உறுப்புகள். சரீரத்தில் ஒவ்வொரு உறுப்பும் மற்ற உறுப்புகளைச் சார்ந்துள்ளன.
6 நமக்குப் பலவிதமான வரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வரமும் நமக்கு தேவனுடைய இரக்கத்தால் கிடைத்தது. நம்மிடையே தீர்க்கதரிசனம் சொல்லுகிற வரத்தைப் பெற்றவன் அதனை தன் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் பயன்படுத்த வேண்டும். 7 சேவை செய்வதற்கான வரத்தைப் பெற்ற ஒருவன் நன்றாக சேவை செய்வானாக. போதிக்கும் வரத்தைப் பெற்ற ஒருவன் போதிப்பானாக! 8 மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்லும் வரத்தைப் பெற்ற ஒருவன் அவ்வாறே ஆறுதல் சொல்வானாக. மற்றவர்களுக்குத் தாராளமாகக் கொடுத்து உதவுகிற வரத்தைப் பெற்ற ஒருவன் ஏராளமாகக் கொடுத்து உதவுவானாக! தலைவனாக இருக்க வரத்தைப் பெற்றவன் கடுமையாகப் பணியாற்றி சிறந்த தலைவனாக இருப்பானாக! மற்றவர்களிடம் இரக்கம் காட்டும் வரத்தைப்பெற்ற ஒருவன் மகிழ்ச்சியோடு இரக்கம் காட்டுவானாக!
இயேசுவே கிறிஸ்து என பேதுருவின் அறிக்கை
(மாற்கு 8:27-30; லூக்கா 9:18-21)
13 செசரியா பிலிப்பு என்ற இடத்திற்கு இயேசு சென்றார். இயேசு தம் சீஷர்களிடம், “மனித குமாரனாகிய என்னை யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார்.
14 அதற்கு சீஷர்கள், “சிலர் உம்மை யோவான்ஸ்நானகன் என்கிறார்கள். சிலர் உம்மை எலியா என்கிறார்கள். மேலும் சிலர் உம்மை எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்கிறார்கள்” எனப் பதில் அளித்தார்கள்.
15 பின் இயேசு தம் சீஷர்களிடம், “நான் யாரென்று நீங்கள் கூறுகிறீர்கள்?” என்று கேட்டார்.
16 அதற்கு சீமோன் பேதுரு, “நீரே கிறிஸ்து, (ஜீவனுள்ள தேவனுடைய குமாரன்)” என்று பதிலளித்தான்.
17 இயேசு அவனிடம், “யோனாவின் குமாரனாகிய சீமோனே! நீ ஆசீர்வதிக்கப்பட்டவன். உனக்கு யாரும் அதைக் கற்பிக்கவில்லை. நான் யார் என்பதைப் பரலோகத்தில் இருக்கும் என் பிதா உனக்குக் காட்டினார். 18 எனவே, நான் சொல்கிறேன். நீயே பேதுரு[a] (பாறை போன்றவன்.) என் சபையை இப்பாறையின் மீது கட்டுவேன். மரணத்தின் வலிமை என் சபையை வீழ்த்த முடியாது. 19 பரலோக இராஜ்யத்தின் திறவு கோல்களை உனக்குத் தருவேன். நீ இப்பூலோகத்தில் வழங்கும் நியாயத்தீர்ப்பு, (மெய்யாகவே) தேவனின் நியாயத்தீர்ப்பாகும். இப்பூலோகத்தில் நீ வாக்களிக்கும் மன்னிப்பு, தேவனின் மன்னிப்பாகும்” என்று சொன்னார்.
20 தான் கிறிஸ்து என்பதை ஒருவருக்கும் சொல்லக் கூடாது எனத் தமது சீஷர்களை இயேசு எச்சரித்தார்.
2008 by World Bible Translation Center