Revised Common Lectionary (Semicontinuous)
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்.
130 கர்த்தாவே, நான் மிகுந்த துன்பத்திற்குள்ளாயிருக்கிறேன்,
எனவே நான் உதவிக்காக உம்மைக் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்.
2 என் ஆண்டவரே, எனக்குச் செவிகொடும்.
உதவிக்காக எழுப்பும் என் குரலைக் கேளும்.
3 கர்த்தாவே, ஜனங்கள் செய்கிற எல்லாப் பாவங்களுக்காகவும்
நீர் அவர்களைத் தண்டித்தால் ஒருவனும் உயிரோடிருக்கமாட்டான்.
4 கர்த்தாவே, உமது ஜனங்களை மன்னியும்.
அப்போது உம்மைத் தொழுதுகொள்வதற்கு ஜனங்கள் இருப்பார்கள்.
5 கர்த்தர் எனக்கு உதவும்படி, நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.
என் ஆத்துமா அவருக்காகக் காத்திருக்கிறது. கர்த்தர் கூறுவதை நான் நம்புகிறேன்.
6 நான் என் ஆண்டவருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.
காலை வேளைக்கெனக் காத்து நிற்கும் காவலாளரைப்போல் நான் இருக்கிறேன்.
7 இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு. கர்த்தரிடம் மட்டுமே உண்மையான அன்பைக் காண முடியும்.
கர்த்தர் நம்மை மீண்டும், மீண்டும் காப்பாற்றுகிறார்.
8 கர்த்தர் இஸ்ரவேலை அவர்களின் எல்லாப் பாவங்களுக்காகவும் மன்னிப்பார்.
யோசேப்பின் தந்திரமான திட்டம்
44 பிறகு யோசேப்பு வேலைக்காரர்களிடம்:
“இவர்களின் பைகளில் எவ்வளவு தானியம் போட முடியுமோ அவ்வளவு போடுங்கள். அவர்களால் கொண்டுபோக முடிகிறவரை போடுங்கள். தானியத்தோடு அவர்களின் பணத்தையும் போட்டுவிடுங்கள். 2 இளைய சகோதரனின் பைக்குள் பணத்தோடு குறிப்பாக எனது வெள்ளிக் கோப்பையையும் போடுங்கள்” என்றான். வேலைக்காரர்களும் அவ்வாறே செய்தார்கள்.
3 மறுநாள் அதிகாலையில் சகோதரர்களும் அவர்களின் கழுதைகளும் அவர்களின் நாட்டுக்குத் திரும்பி அனுப்பப்பட்டனர். 4 அவர்கள் புறப்பட்டுப் போனதும் அவன் வேலைக்காரர்களிடம் “போய் அவர்களைப் பின் தொடருங்கள். அவர்களை நிறுத்தி, ‘நாங்கள் நல்லபடியாக நடந்துகொண்டோம். நீங்கள் ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறீர்கள், எங்கள் எஜமானின் வெள்ளிக் கோப்பையை ஏன் திருடினீர்கள்? 5 எங்கள் எஜமானர் அந்தக் கோப்பையில்தான் திராட்சைரசம் குடிப்பார். அவர் இதனைக் குறிகூறவும் பயன்படுத்துவார். நீங்கள் என்ன செய்தீர்களோ அது தவறு என்று கேளுங்கள்’” என்றான்.
6 வேலைக்காரர்களும் அவ்வாறே செய்து, யோசேப்பு சொல்லச் சொன்னதைச் சொன்னார்கள்.
7 ஆனால் சகோதரர்களோ வேலைக்காரர்களிடம், “ஏன் இவ்வாறு ஆளுநர் சொன்னார்? நாங்கள் எதுவும் அவ்வாறு செய்யவில்லையே. 8 எங்கள் பைகளில் கண்டுபிடித்த பணத்தைத் திரும்பக்கொண்டு வந்திருக்கிறோம். நாங்கள் ஏன் உங்கள் எஜமானரின் வெள்ளியையும் தங்கத்தையும் திருடுகிறோம்? 9 எங்களில் எவராவது ஒருவரது பையில் அந்த வெள்ளிக் கோப்பை இருக்குமானால் அவன் சாகட்டும். நீங்கள் அவனைக் கொல்லுங்கள். நாங்கள் உங்கள் அடிமையாகிறோம்” என்றனர்.
10 வேலைக்காரனோ, “நீங்கள் சொல்வது போலவே செய்வோம். ஆனால் அந்த மனிதனை நான் கொல்லமாட்டேன். அந்த வெள்ளிக் கோப்பை யாரிடம் உள்ளதோ அவன் எங்கள் அடிமையாவான். மற்றவர்களை விட்டுவிடுவேன்” என்றான்.
பென்யமீன் சிக்கிக்கொள்ளுதல்
11 ஒவ்வொருவரும் தங்கள் பையை விரைவாக அவிழ்த்து தானியத்தைத் தரையில் கொட்டினர். 12 வேலைக்காரன் ஒவ்வொரு பையிலும் தேடினான். மூத்தவனிலிருந்து இளையவன் வரை என வரிசையாகத் தேடினான். அவன் பென்யமீனின் பையில் கோப்பையைக் கண்டு பிடித்தான். 13 சகோதரர்கள் மிகவும் துக்கப்பட்டனர். தம் துயரத்தை வெளிப்படுத்தும்படி தங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொண்டனர். தங்கள் பைகளைக் கழுதைகளின்மீது வைத்துக்கொண்டு நகரத்திற்குத் திரும்பினார்கள்.
14 யூதாவும் பிற சகோதரர்களும் யோசேப்பின் வீட்டிற்கு வந்தனர். யோசேப்பு அங்கேயே இருந்தான். அவர்கள் அவனுக்கு முன்னால் விழுந்து வணங்கினார்கள். 15 யோசேப்பு, “ஏன் இவ்வாறு செய்தீர்கள்? நான் இரகசியங்களை அறிந்துகொள்ள சிறப்பான வழிகள் உண்டு என்று உங்களுக்குத் தெரியாதா? என்னைத் தவிர வேறு எவராலும் சிறப்பாகச் செய்ய முடியாது!” என்றான்.
16 யூதா, ஐயா, “நாங்கள் சொல்வதற்கு எதுவுமில்லை. விளக்கிச் சொல்லவும் வழியில்லை. நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க முடியவில்லை. நாங்கள் எப்போதோ செய்த தவறுக்கு இப்போது தேவன் தண்டிக்கிறார். நாங்களும் பென்யமீனும் இனி உங்கள் அடிமைகள்” என்றான்.
17 ஆனால் யோசேப்போ, “உங்கள் அனைவரையும் அடிமையாக்க நான் விரும்பவில்லை. என் கோப்பையைத் திருடியவனை மட்டுமே அடிமையாக்குவேன். உங்கள் தந்தையிடம் நீங்கள் அனைவரும் சமாதானமாகத் திரும்பிப் போகலாம்” என்றான்.
யூதா பென்யமீனுக்காக வாதாடுதல்
18 யூதா யோசேப்பிடம் போய், “ஐயா! எங்களை வெளிப்படையாகப் பேச விடுங்கள். எங்களிடம் கோபப்படாதீர்கள். நீங்கள் பார்வோன் மன்னரைப் போன்றவர் என்பதை அறிவோம். 19 முன்பு இங்கு வந்தபோது ‘உங்களுக்குத் தந்தையோ சகோதரரோ இருக்கிறார்களா’ என்று கேட்டீர்கள். 20 நாங்கள் எங்களுக்குத் தந்தை இருக்கிறார், அவர் முதியவர். இளைய சகோதரன் இருக்கிறான். அவன் எங்கள் தந்தையின் முதிய வயதில் பிறந்ததால் அவனைப் பெரிதும் நேசிக்கிறார். அவனோடு கூடப்பிறந்தவன் மரித்துப் போனான். இவன் ஒருவன் தான் அத்தாயின் குமாரர்களில் உயிரோடு இருக்கிறான். எனவே எங்கள் தந்தை இவனைப் பெரிதும் நேசிக்கிறார் என்றோம். 21 பிறகு நீங்கள், ‘அவனையும் அழைத்துக்கொண்டு வாருங்கள். நான் அவனைப் பார்க்க விரும்புகிறேன்’ என்றீர்கள். 22 அதற்கு நாங்கள், ‘அவனால் வரமுடியாது அவனைத் தந்தை விடமாட்டார். அவனைப் பிரிந்தால் எங்கள் தந்தை மரித்துபோவார்’ என்றோம். 23 ஆனால் நீங்களோ எங்களிடம், ‘நீங்கள் அவனை அழைத்துக்கொண்டு வரவேண்டும் இல்லாவிட்டால் இனிமேல் தானியம் தரமுடியாது’ என்றீர்கள். 24 அதனால் நாங்கள் எங்கள் தந்தையிடம் போய் நீங்கள் சொன்னதையெல்லாம் சொன்னோம்.
25 “இறுதியில் எங்கள் தந்தை, ‘போய் இன்னும் தானியம் வாங்கிக்கொண்டு வாருங்கள்’ என்றார். 26 நாங்கள் எங்கள் தந்தையிடம் ‘நாங்கள் எங்கள் இளைய சகோதரன் இல்லாமல் போகமாட்டோம். ஆளுநர் இவனைப் பார்க்காவிட்டால் தானியம் தர முடியாது என்று கூறியிருக்கிறார்’ என்றோம். 27 பிறகு என் தந்தை, ‘என் மனைவி ராகேல் எனக்கு இரண்டு குமாரர்களைக் கொடுத்தாள். 28 ஒரு குமாரனை வெளியே அனுப்பினேன். அவனைக் காட்டு மிருகங்கள் கொன்றுவிட்டன. அவனை இன்றுவரை காணவில்லை. 29 அடுத்த குமாரனையும் நீங்கள் அழைத்துப் போய் அவனுக்கு ஏதாவது நடந்தால் நான் மரணமடையுமளவுக்கு வருத்தமடைவேன்’ என்றார். 30 இப்போதும் எங்களின் இளைய சகோதரன் இல்லாமல் நாங்கள் போகும்பொழுது என்ன நடக்கும் என்பதைக் கற்பனை செய்யுங்கள். அவனே எங்கள் தந்தையின் வாழ்வில் மிக முக்கியமானவன். 31 அவன் எங்களுடன் இல்லை என்பதை எங்கள் தந்தை அறிந்தால் அவர் மரித்துவிடுவார். மேலும் அது எங்களுடைய தவறாகும். நாங்கள் எங்கள் தந்தையை மிகக் கவலைகொண்ட மனிதராக அவரது கல்லறைக்கு அனுப்புவோம்!
32 “நான் என் தந்தையிடம் இவனுக்காக பொறுப்பேற்று வந்துள்ளேன். ‘நான் இவனைத் திரும்ப அழைத்துக்கொண்டு வராவிட்டால் என் வாழ்க்கை முழுவதும் என்னைப் பழிக்கலாம்’ என்றேன். 33 எனவே நான் உங்களை கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். இவனை இவர்களோடு அனுப்பி வையுங்கள். நான் இங்கே உங்களுக்கு அடிமையாக இருக்கிறேன். 34 இவன் இல்லாமல் நான் என் தந்தையிடம் போகமாட்டேன். என் தந்தைக்கு என்ன நேருமோ என்று எனக்கு அச்சமாக இருக்கிறது” என்றான்.
13 நான் இப்போது யூதரல்லாத மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறேன். நான் யூதரல்லாதவர்களுக்கு அப்போஸ்தலனாயிருக்கிறேன். என்னால் முடிந்தவரை என் வேலைகளை முடிக்க வேண்டும். 14 நான் என் நாட்டு மக்களை வைராக்கியம் உள்ளவர்களாக மாற்ற வேண்டும். இந்த வழியில் அவர்களில் சிலரையாவது இரட்சிப்பிற்குள் கொண்டுவர உதவமுடியும். 15 தேவன் யூதர்களிடமிருந்து விலகிக்கொண்டார். உலகிலுள்ள மற்றவர்களுக்கு அவர் நெருக்கமானார். அவர் யூதர்களை ஏற்றுக்கொள்ளும்போது, அவரது மக்கள் மரணத்திலிருந்து உயிர்த்தெழுவது உறுதியாக இருக்கும். 16 ஒரு அப்பத்தின் முதல் துண்டு தேவனுக்குப் படைக்கப்படுமானால் மற்றக் முழுதும் புனிதமாகிவிடும். ஒரு மரத்தின் வேர்கள் புனிதமாய் இருந்தால் மற்ற கிளைகளும்கூட புனிதமாகிவிடும்.
17 ஒலிவ மரத்தின் சில கிளைகளை ஒடித்தெறிந்து விட்டு அந்த இடத்தில் காட்டு ஒலிவ மரத்தின் கிளைகளை ஒட்ட வைத்தால் எப்படி இருக்ககுமோ அப்படி இருக்கிறீர்கள். யூதரல்லாத நீங்கள் காட்டு ஒலிவ மரத்தைப் போன்றவர்கள். யூதரல்லாத நீங்கள் யூதர்களோடு இணைத்து வைக்கப்பட்டு, நீங்களும் அதே வேர்களைப் பங்கிட்டு, மரச் சாற்றிலிருந்து குடிக்கிறீர்கள். யூதர்களின் பலனையும் பெறுகின்றீர்கள். 18 நீங்கள் அந்தக் கிளைகளைப்பற்றிப் பெருமை பாராட்ட வேண்டாம். அதற்கான எந்தக் காரணமும் உங்களுக்கு இல்லை. நீங்கள் வேர்களுக்கு உயிர்கொடுக்கவில்லை. வேர்களே உங்களுக்கு உயிரைக் கொடுக்கின்றன. 19 “நான் ஒட்டவைக்கப்படுவதற்காகவே அந்தக் கிளைகள் முறித்துப் போடப்பட்டதென்று சொல்லுகிறாயே.” 20 அது உண்மை. ஆனால் விசுவாசம் இல்லாததால்தான் அக்கிளைகள் முறிக்கப்பட்டன. உனது விசுவாசத்தினால்தான் நீ அந்த மரத்தின் ஒரு பகுதியானாய். இதற்காகப் பெருமைப்படாதே, பயப்படு. 21 உண்மையான கிளைகளை மரத்தோடு நிலைத்திருக்க தேவன் அனுமதிக்கவில்லை என்றால் நீ விசுவாசம் இழந்துவிட்டால் உன்னையும் இணைந்து இருக்க அனுமதிக்கமாட்டார்.
22 தேவன் இரக்கமுடையவர் எனினும் பயங்கரமானவரும் கூட என்பதை அறிந்துகொள். தன்னைப் பின்பற்றுவதை நிறுத்துகின்ற மக்களை அவர் தண்டிக்கிறார். நீங்கள் அவரைப் பின்பற்றினால் அவர் உங்களிடம் அன்போடு இருப்பார். நீங்கள் அவரைப் பின்பற்றுவதை நிறுத்தினால் மரத்திலிருந்து வெட்டியெறியப்படுவீர்கள். 23 மீண்டும் யூதர்கள் தேவன் மீது விசுவாசம் வைக்கத் தொடங்கினால் தேவன் மீண்டும் அவர்களை ஏற்றுக்கொள்வார். அவர்கள் துவக்கத்தில் எப்படியிருந்தார்களோ அப்படி அவர்களை தேவன் உருவாக்குவார். 24 காட்டுமரக் கிளைகள் ஒரு ஒலிவ மரத்தின் கிளையாக ஒட்டி வளர்வது இயற்கையன்று, யூதரல்லாதவர்களாகிய நீங்கள் காட்டு ஒலிவ மரத்திலிருந்து வெட்டப்பட்ட கிளைகளைப் போன்றவர்கள். இப்பொழுது நல்ல ஒலிவ மரத்தோடு சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறீர்கள். யூதர்களோ நல்ல ஒலிவமரத்தில் வளர்ந்த கிளைகளைப் போன்றவர்கள். எனவே, நிச்சயமாக அவர்கள் தங்கள் சொந்த மரத்தில் மீண்டும் ஒட்டிக்கொள்வார்கள்.
25 சகோதர சகோதரிகளே, நீங்கள் இந்த இரகசிய உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த உண்மையானது உங்களுக்குப் புரியாததைப் புரிந்துகொள்ள உதவும். “இஸ்ரவேலின் ஒரு பகுதியினருக்குக் கடின இதயம் உண்டாயிருக்கும். குறிப்பிட்ட யூதரல்லாதவர்கள் தேவனிடம் சேர்ந்த பின்பு இது மாறும் என்பதுதான் அந்த உண்மை. 26 இவ்வாறு இஸ்ரவேலர்கள் அனைவரும் காப்பாற்றப்படுவர்.
“மீட்பர் சீயோனிலிருந்து வருவார்.
யாக்கோபின் குடும்பத்திலிருந்து தீமைகளை அகற்றுவார்.
27 நான் அவர்களது பாவங்களை விலக்கும் போது நான்
இந்த உடன்படிக்கையைச் செய்துகொள்வேன்”(A)
என்று எழுதப்பட்டிருக்கிறது.
28 தேவனுடைய நற்செய்தியை யூதர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். அதனால் அவர்கள் தேவனுடைய எதிரிகள் ஆயினர். இது யூதரல்லாதவர்களுக்கு உதவியாய் ஆயிற்று. ஆனால் யூதர்கள் அனைவரும் இப்பொழுது தேவனுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாய் இருப்பதால் அவர் அவர்களைப் பெரிதும் நேசிக்கிறார். அவர்களின் தந்தைகளுக்குக் கொடுத்த வாக்கின்படி தேவன் அவர்களை நேசிக்கிறார். 29 தேவன் தனது கிருபையையும் அழைப்பையும் எப்பொழுதும் மாற்றிக்கொள்ளமாட்டார்.
2008 by World Bible Translation Center