Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஆதியாகமம் 24:34-38

ரெபெக்காளைப் பெண் கேட்டுப் பேசுதல்

34 வேலையாள், “நான் ஆபிரகாமின் வேலைக்காரன். 35 கர்த்தர் எல்லாவகையிலும் என் எஜமானனை சிறப்பாக ஆசீர்வதித்திருக்கிறார். என் எஜமானன் பெரிய மனிதராகிவிட்டார். அவருக்கு ஆட்டு மந்தைகளையும் மாட்டு மந்தைகளையும் கர்த்தர் கொடுத்திருக்கிறார். அவரிடம் தங்கமும் வெள்ளியும் உள்ளன. நிறைய வேலைக்காரர்களும் உள்ளனர். ஒட்டகங்களும் கழுதைகளும் இருக்கின்றன. 36 சாராள் என் எஜமானனின் மனைவி. அவள் தனது முதிய வயதில் ஆண் குழந்தையை பெற்றாள். எனது எஜமானன் தனக்குரிய அனைத்தையும் அவனுக்கே கொடுத்திருக்கிறார். 37 என் எஜமானன் என்னை ஒரு வாக்குறுதி செய்யுமாறு வற்புறுத்தினார். என் எஜமானன் என்னிடம், ‘என் குமாரன் கானான் நாட்டுப் பெண்ணை மணந்துகொள்ள நீ அனுமதிக்கக் கூடாது. நாம் கானானியர்களுக்கிடையில் வாழ்கிறோம். ஆனால் இங்குள்ள பெண்ணை என் குமாரன் மணந்துகொள்ளக் கூடாது. 38 அதனால் எனது தந்தையின் நாட்டிலுள்ள எனது குடும்பத்தாரிடம் போய் என் குமாரனுக்குப் பெண்ணைத் தேர்ந்தெடுக்கவேண்டும்’ என்று சொன்னார்.

ஆதியாகமம் 24:42-49

42 “இன்று அந்தக் கிணற்றருகில் வந்து ‘என் எஜமானன் ஆபிரகாமின் தேவனாகிய கர்த்தாவே! எனது பயணத்தை வெற்றிகரமாக்கும். 43 நான் இந்தக் கிணற்றருகில் ஒரு இளம் பெண்ணுக்காகக் காத்திருப்பேன். அவளிடம் குடிக்க தண்ணீர் கேட்பேன். 44 பொருத்தமான பெண் எனில் சிறப்பான முறையில் சரியான பதிலைத் தருவாள். அவள், “இந்த தண்ணீரைக் குடியுங்கள். உங்கள் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொடுப்பேன்” என்பாள். அதன் மூலம் இந்தப் பெண்ணே என் எஜமானின் குமாரனுக்கு கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டவள் என்று அறிவேன்’” என்று பிரார்த்தனை செய்தேன்.

45 “நான் வேண்டுதல்களை முடிக்கும் முன்னரே ரெபெக்காள் தண்ணீர் எடுப்பதற்காக கிணற்றுக்கு வந்தாள். அவள் தோளில் குடத்தோடு வந்து தண்ணீரை நிரப்பினாள். நான் அவளிடம் குடிக்க தண்ணீர் கேட்டேன். 46 அவள் உடனே வேகமாகக் குடத்தை இறக்கி எனக்கு தண்ணீர் ஊற்றினதுடன், ‘இந்த தண்ணீரைக் குடியுங்கள். நான் உங்கள் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொண்டு வருகிறேன்’ என்றாள். எனவே நான் தண்ணீரைக் குடித்தேன். பிறகு அவள் என் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொடுத்தாள். 47 பிறகு நான் ‘உனது தந்தை யார்?’ என்று கேட்டேன். அதற்கு அவள், ‘என் தந்தை பெத்துவேல், அவர் நாகோருக்கும் மில்க்காளுக்கும் குமாரன்’ என்றாள். பிறகு அவளுக்கு நான் காதணிகளும் கடகங்களும் கொடுத்தேன். 48 பின்னர் நான் குனிந்து கர்த்தருக்கு நன்றி சொன்னேன். என் எஜமானனாகிய ஆபிரகாமின் தேவனாகிய கர்த்தரைப் புகழ்ந்தேன். என்னைச் சரியான வழியில் நடத்தியதற்காக நான் நன்றி சொன்னேன். என் எஜமானனின் சகோதரரது பேத்தியையே தேவன் காட்டிவிட்டார். 49 இப்போது சொல்லுங்கள். என் எஜமானன் மீது நீங்கள் கருணையும் நேசமும் வைத்து உங்கள் பெண்ணைக் கொடுப்பீர்களா? அல்லது உங்கள் பெண்ணைக் கொடுக்க மறுப்பீர்களா? சொல்லுங்கள். பின்னரே நான் செய்ய வேண்டியதை முடிவு செய்ய வேண்டும்” என்றான்.

ஆதியாகமம் 24:58-67

58 அவர்கள் அவளை அழைத்து, “இப்போது இவரோடு போக விரும்புகிறாயா?”

என்று கேட்டனர், “ஆம், நான் போகிறேன்” என்று அவள் சொன்னாள்.

59 எனவே, அவர்கள் அவளை வேலையாளோடும் ஆட்களோடும் அனுப்ப அனுமதி கொடுத்தனர். ரெபெக்காளின் தாதியும் அவளோடு போனாள். 60 அவள் அவர்களை விட்டுப் போகும்போது அவளை ஆசீர்வதித்து:

“எங்கள் சகோதரியே லட்சக்கணக்கான ஜனங்களுக்கு நீ தாயாவாய்.
    உனது சந்ததியார் தங்கள் பகைவரை வெல்லுவார்கள். நகரங்களைக் கைப்பற்றுவார்கள்” என்றனர்.

61 பின் ரெபெக்காளும் அவளது தாதியும் ஒட்டகத்தின் மீது ஏறி அமர்ந்து வேலையாளைப் பின் தொடர்ந்து போனார்கள். அவன் அவர்களை அழைத்துக் கொண்டு போனான்.

62 ஈசாக்கு, பெயர்லகாய்ரோயியை விட்டு பாலைவனப் பகுதியில் வசித்துக்கொண்டிருந்தான். 63 ஒரு நாள் மாலை தியானம் செய்ய அவன் வயலுக்குச் சென்றான். அப்போது வெகு தூரத்திலிருந்து ஒட்டகங்கள் வருவதைப் பார்த்தான்.

64 ரெபெக்காளும் ஈசாக்கைப் பார்த்தாள். பின் அவள் ஒட்டகத்திலிருந்து இறங்கினாள். 65 அவள் வேலைக்காரனிடம், “வயலில் நம்மை சந்திக்க வருகிறாரே அந்த இளைஞன் யார்?”

என்று கேட்டாள். அதற்கு அவன், “அவர்தான் என் எஜமானனின் குமாரன்” என்று பதில் சொன்னான். அவள் தன் முகத்தைத் துணியால் மறைத்துக்கொண்டாள்.

66 ஈசாக்கிடம் வேலைக்காரன் நடந்ததை எல்லாம் விபரமாகச் சொன்னான். 67 பின் ஈசாக்கு அவளை அழைத்துக்கொண்டு அவனது தாயான சாராளின் கூடாரத்திற்குப் போனான். அன்று அவள் அவனது மனைவியானாள். ஈசாக்கு ரெபெக்காளைப் பெரிதும் நேசித்தான். அவன் தாயின் மரணத்தினால் அடைந்த துக்கம் குறைந்து அமைதியும் ஆறுதலும் பெற்றான்.

சங்கீதம் 45:10-17

10 மகளே, கேள்,
    கவனமாகக் கேள், நீ புரிந்துகொள்வாய்.
உன் ஜனங்களையும், உன் தந்தையின் குடும்பத்தையும் மறந்துவிடு.
11     ராஜா உன் அழகை விரும்புகிறார்.
அவர் உன் புது மணமகன்.
    நீ அவரைப் பெருமைப்படுத்துவாய்.
12 தீருவின் செல்வந்தர்கள் ஜனங்கள் உனக்குப் பரிசுகள் தருவார்கள்.
    அவர்கள் உன்னைக் காண விரும்புவார்கள்.

13 அரச குமாரத்தி
    பொன்னில் பதிக்கப் பெற்ற விலையுயர்ந்த அழகிய மணியைப் போன்றவள்.
14 மணமகள் அழகிய ஆடையணிந்து ராஜாவிடம் அழைத்துவரப்பட்டாள்.
    மணத் தோழியர் அவளைத் தொடர்ந்தனர்.
15 அவர்கள் மகிழ்ச்சி பொங்க வந்தனர்.
    மனமகிழ்வோடு அரண்மனைக்குள் நுழைந்தனர்.

16 ராஜாவே, உம் குமாரர்கள் உமக்குப் பின் ஆட்சி செய்வார்கள்.
    தேசம் முழுவதும் அவர்களை ஆளச் செய்வீர்.
17 உமது நாமத்தை என்றென்றும் புகழ் பெறச் செய்வேன்.
    என்றென்றும் ஜனங்கள் உம்மைத் துதிப்பார்கள்.

உன்னதப்பாட்டு 2:8-13

அவள் மீண்டும் பேசுகிறாள்

நான் என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்.
    இங்கே அது வந்தது.
    மலைகளுக்கு மேல் துள்ளி வந்தது.
    குன்றுகளுக்குமேல் சறுக்கி வந்தது.
என் நேசர் வெளிமான்
    அல்லது குட்டி மானைப் போன்றவர்.
அவர் எங்கள் சுவற்றுக்குப் பின்னால் நிற்பதையும்,
    ஜன்னல் திரையின் வழியாகப் பார்ப்பதையும் நீங்கள் பார்க்கலாம்.
10 என் நேசர் என்னிடம், “எழுந்திரு என் அன்பே! என் அழகே!
    வெளியே போகலாம்.
11 பார், மழைக்காலம் போய்விட்டது.
    மழை வந்து போனது.
12 பூமியில் பூக்கள் மலர்ந்துள்ளன.
    இது பாடுவதற்குரிய காலம்.
    கவனி, புறாக்கள் திரும்பிவிட்டன.
13 அத்தி மரங்களில் காய்கள் தோன்றியுள்ளன.
    திராட்சைக் கொடிகள் மணம் வீசுவதை நுகர்ந்துபார்.
எழுந்திரு என் அன்பே, அழகே,
    நாம் வெளியே போகலாம்.”

ரோமர் 7:15-25

15 நான் செய்வது எனக்கே புரியவில்லை. நான் செய்ய விரும்பும் நல்ல காரியங்களை என்னால் செய்ய முடியவில்லை. நான் என்னால் வெறுக்கப்படும் தீயவற்றையே செய்கிறேன். 16 நான் இப்படி விரும்பாததைச் செய்தவனாய் இருக்க, சட்ட விதியை நல்லது என நான் ஒத்துக்கொள்வதாக பொருள்படும். 17 உண்மையில் நான் கெட்டவற்றை செய்பவனில்லை. ஆனால் என்னுள் இருக்கிற பாவம் அவ்வாறு செய்யத் தூண்டுகிறது. 18 என்னிடத்தில் நன்மை வாழ்வதில்லை. இது எனக்குத் தெரியும். நன்மை செய்ய வேண்டும் என்னும் விருப்பம் என்னிடமுள்ளது. ஆனால் நன்மை செய்வதோ என்னிடத்தில் இல்லை. 19 எனவே நான் விரும்புகிற நன்மையைச் செய்யவில்லை. நான் விரும்பாத தீமையையே செய்துவருகிறேன். 20 அவ்வாறு எனக்கு விருப்பம் இல்லாததைச் செய்தால் நான் அல்ல, எனக்குள் இருக்கிற பாவம்தான் அப்படிச் செய்கிறது.

21 அதனால் நன்மை செய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையே உண்டு என்ற விதியை அறிந்துகொண்டேன். 22 என் மனதிற்குள், தேவனுடைய சட்டவிதியோடு மகிழ்ச்சியாய் இருக்கிறேன். 23 ஆனால் வேறொரு விதியும் என் சரீரத்திற்குள் இயங்குவதை அறிகிறேன். என் மனம் ஒத்துக்கொள்ளும் விதிக்கு எதிராக அது ஒரு போரையே நிகழ்த்துகிறது. அதுதான் பாவம் பற்றிய விதி ஆகும். அது என் உடலை அடக்கி, அதன் கைதியாக்கிக்கொள்கின்றது. 24 நான் நிர்ப்பந்தமான மனிதன். என்னை இந்த சரீரத்திடம் இருந்து யார் காப்பாற்றுவார்கள்? 25 தேவனே காப்பாற்றுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவனுக்கு நன்றி சொல்கிறேன்.

ஆதலால் என் மனதார நான் தேவனுடைய சட்டவிதிக்கு சேவை செய்கிறேன். ஆனால் நான் மாமிசத் தன்மையால் பாவத்தின் சட்டத்திற்கு சேவை செய்கிறேன்.

மத்தேயு 11:16-19

16 “இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களைக் குறித்து நான் என்ன சொல்ல முடியும்? எப்படிப்பட்டவர்கள் அவர்கள்? கடை வீதியில் அமர்ந்திருக்கும் பிள்ளைகளைப் போன்றவர்கள் இன்றைய மக்கள். ஒரு கூட்ட பிள்ளைகள் மற்றொன்றைப் பார்த்து,

17 “‘உங்களுக்காக இசைத்தோம்,
    ஆனாலும், நீங்கள் நடனமாடவில்லை.
சோகப் பாடல் ஒன்றைப் பாடினோம்,
    ஆனாலும், நீங்கள் சோகம் கொள்ளவில்லை’

என்று அழைக்கிறது.

18 “மக்கள் அப்படிப்பட்டவர்கள் என்று நான் ஏன் கூறுகிறேன்? யோவான் மற்றவர்களைப்போல உண்ணவில்லை. திராட்சை இரசம் குடிக்கவில்லை. ஆனால் மக்கள் ‘யோவானுக்குள் ஒரு பிசாசு இருக்கிறது’, என்று சொல்கிறார்கள். 19 மனிதகுமாரன் வந்திருந்து மற்றவர்களைப் போலவே உண்ணுகிறார்: திராட்சை இரசமும் குடிக்கிறார். மக்களோ, ‘அவரைப் பாருங்கள்!’ அதிகமாக உண்ணுகிறார். அதிகமாக திராட்சை இரசமும் குடிக்கிறார். வரி வசூலிப்பவர்களுக்கும் தீயவர்களுக்கும் அவர் நண்பர் என்று சொல்கிறார்கள். ஆனால் ஞானம் அதன் செயல்களால் தீர்மானிக்கப்படுகிறது.”

மத்தேயு 11:25-30

இயேசு தரும் இளைப்பாறுதல்

(லூக்கா 10:21-22)

25 பிறகு இயேசு, “பரலோகத்திற்கும் பூலோகத்திற்கும் ஆண்டவராகிய பிதாவே! உமக்கு நான் நன்றி கூறுகிறேன். ஏனென்றால், இவற்றை நீர் ஞானவான்களிடமிருந்து மறைத்துள்ளீர். ஆனால் இவற்றைக் குழந்தையைப் போன்ற மக்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறீர். 26 ஆம். பிதாவே, நீர் மெய்யாகவே இவை நடைபெற வேண்டும் என விரும்பியதால் இப்படிச் செய்தீர்” என்றார்.

27 “என் பிதா எனக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளார். குமாரனை வேறு யாரும் அறியார்; பிதாவே குமாரனை அறிவார். அதைப் போலவே, பிதாவைக் குமாரன் மட்டுமே அறிவார்; வேறு யாரும் அறியார். மேலும், பிதாவானவரைப்பற்றி அறிந்தவர்களையே குமாரனும் போதனை செய்யத் தேர்ந்தெடுக்கிறார்.

28 “களைப்படைந்து மிகுந்த பாரம் சுமக்கிறவர்களே என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு ஓய்வு அளிப்பேன். 29 என் பணிகளை ஏற்றுக்கொண்டு என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். நான் சாந்தமும் பணிவும் கொண்டவன். உங்கள் ஆத்துமாவிற்கு ஓய்வைக் கண்டடைவீர்கள். 30 நான் உங்களை ஏற்றுக்கொள்ளச் சொல்லும் வேலை எளிதானது. நான் உங்களைச் சுமக்கச் சொல்லும் பளு இலேசானது” என்று இயேசு கூறினார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center