Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஆதியாகமம் 22:1-14

ஆபிரகாம், தேவனால் சோதிக்கப்படுதல்

22 இதற்குப் பிறகு, தேவன் ஆபிரகாமின் விசுவாசத்தைச் சோதிக்க விரும்பினார். எனவே தேவன் “ஆபிரகாமே” என்று அழைத்தார்.

ஆபிரகாமும், “நான் இங்கே இருக்கிறேன்” என்றான்.

தேவன் அவனிடம், “உன்னுடைய அன்பிற்குரிய, ஒரே குமாரனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு மோரியா தேசத்திற்குச் செல். அங்கு உன் குமாரனை எனக்கு தகன பலியாகக் கொடு. எந்த இடத்தில் அதைச் செய்ய வேண்டுமென்று நான் உனக்குச் சொல்வேன்” என்றார்.

காலையில் ஆபிரகாம் எழுந்து தனது கழுதையைத் தயார் செய்தான். ஈசாக்கையும் இரண்டு வேலைக்காரர்களையும் அழைத்துக்கொண்டான். பலிக்கு விறகுகளையும் எடுத்துக்கொண்டான். தேவன் போகச் சொன்ன இடத்திற்கு அவர்கள் போனார்கள். அவர்கள் மூன்று நாட்கள் பயணம் செய்தபின் தொலைவில் தேவன் குறிப்பிட்ட இடம் தெரிந்தது. ஆபிரகாம் தனது வேலைக்காரர்களிடம், “கழுதையோடு நீங்கள் இங்கேயே தங்கியிருங்கள், நானும் என் குமாரனும் அவ்விடத்திற்கு தொழுதுகொள்ளப் போகிறோம். பிறகு உங்களிடம் திரும்பி வருவோம்” என்றான்.

பலிக்கான விறகுகளை எடுத்து குமாரனின் தோள் மீது வைத்தான். ஆபிரகாம் கத்தியையும், நெருப்பையும் எடுத்துக்கொண்டு, அவனும் அவனது குமாரனும் சேர்ந்து போனார்கள்.

ஈசாக்கு தன் தந்தையைப் பார்த்து, “அப்பா” என்று அழைத்தான்.

ஆபிரகாமும், “என்ன மகனே” எனக் கேட்டான்.

ஈசாக்கு அவனிடம், “விறகும், நெருப்பும் நம்மிடம் உள்ளது. பலியிடுவதற்கான ஆட்டுக்குட்டி எங்கே?” என்று கேட்டான்.

அதற்கு ஆபிரகாம், “தேவனே தனக்கான பலிக்குரிய ஆட்டுக்குட்டியைக் கொடுப்பார் மகனே” என்று பதில் சொன்னான்.

ஆபிரகாமும் அவனது குமாரனும் தேவன் போகச் சொன்ன இடத்திற்கு போய்ச் சேர்ந்தனர். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை கட்டி அதின்மேல் விறகுகளை அடுக்கினான். பின் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் கிடத்தினான். 10 பிறகு ஆபிரகாம் கத்தியை எடுத்து குமாரனை வெட்டுவதற்குத் தயாரானான்.

11 அப்போது கர்த்தருடைய தூதன் ஆபிரகாமைத் தடுத்து நிறுத்தி, “ஆபிரகாமே, ஆபிரகாமே” என்று அழைத்தார்.

ஆபிரகாம், “நான் இங்கே இருக்கிறேன்” என்று பதிலளித்தான்.

12 தேவதூதன்: “உனது குமாரனைக் கொல்ல வேண்டாம். அவனை எவ்விதத்திலும் காயப்படுத்த வேண்டாம். நீ தேவனை மதிப்பவன் என்றும், கீழ்ப்படிபவன் என்பதையும் நான் தெரிந்துகொண்டேன். நீ எனக்காக உன் ஒரே ஒரு குமாரனையும் கொல்லத் தயாராக உள்ளாய் என்பதையும் தெரிந்துகொண்டேன்” என்றார்.

13 ஆபிரகாம் தொலைவில் தன் கண் முன் ஒரு ஆட்டுக் கடாவைக் கண்டான். அதன் கொம்புகள் புதரில் சிக்கிக்கொண்டிருந்தன. ஆபிரகாம் அதனை விடுவித்து தேவனுக்குப் பலியிட்டான். ஆபிரகாமின் குமாரன் காப்பாற்றப்பட்டான். 14 அதனால் ஆபிரகாம் அந்த இடத்திற்கு, “யேகோவா யீரே”[a] என்று பெயரிட்டான். “கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும்” என்று இன்றைக்கும் கூட ஜனங்கள் கூறுகின்றனர்.

சங்கீதம் 13

இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.

13 கர்த்தாவே, எத்தனை காலம் என்னை மறப்பீர்?
    என்றென்றும் மறந்திருப்பீரோ? என்னை ஏற்க எத்தனைக் காலம் மறுப்பீர்?
எவ்வளவு காலத்துக்கு நீர் என்னை மறந்திருப்பீர்.
    என் இருதயத்தில் எத்தனைக் காலம் துக்கம் அனுபவிக்கட்டும்?
    எத்தனைக் காலம் என் பகைவன் என்னை வெற்றி கொள்வான்?

எனது தேவனாகிய கர்த்தாவே, என்னைப் பாரும்!
    எனக்குப் பதில் தாரும்! என் பதிலை நான் அறியட்டும்!
    இல்லையெனில் நான் மடிவேன்.
அது நடந்தால் என் பகைவன், “நான் அவனை வென்றேன்” என்பான்.
    என்னைத் தோற்கடித்தால் என் பகைவன் மகிழ்வான்.

கர்த்தாவே, எனக்கு உதவும் உம் அன்பில் நான் நம்பிக்கை வைத்தேன்.
    நீர் என்னைக் காத்து என்னை மகிழச் செய்தீர்.
கர்த்தர் நல்லதை எனக்குச் செய்ததால் சந்தோஷப் பாடலை கர்த்தருக்காய் பாடுவேன்.

ரோமர் 6:12-23

12 ஆகையால் நீங்கள் சரீரங்களின் இச்சைப்படி பாவத்திற்குக் கீழ்ப்படிய அனுமதிக்காதீர்கள். சாவுக்கு ஏதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாமல் இருப்பதாக. 13 நீங்கள் உங்கள் சரீரத்தின் பாகங்களை அநீதியின் கருவிகளாகப் பாவத்திற்கு ஒப்புக் கொடுக்காதீர்கள். ஆனால் நீங்கள் உங்களை இறந்தவர்களிடமிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். உங்கள் சரீர உறுப்புகளை நீதிக்குரிய கருவிகளாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள். 14 பாவம் உங்களது எஜமானன் அல்ல. ஏனென்றால் நீங்கள் சட்ட விதிகளின் கீழ்ப்பட்டவர்கள் அல்லர். நீங்கள் இப்போது தேவனுடைய கிருபைக்குக் கீழ்ப்பட்டவர்களே.

நீதிக்கு அடிமைகள்

15 அதனால் இப்போது என்ன செய்யலாம்? நாம் சட்டவிதிக்குக் கீழ்ப்படாமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருப்பதால் பாவம் செய்யலாமா? 16 கூடாது. ஒருவனுக்குக் கீழ்ப்படிய உங்களை நீங்கள் ஒப்படைப்பீர்கள். எனவே நிஜமாகவே அவனுக்கு அடிமையாவீர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். நீங்கள் கீழ்ப்படியும் அவனே எஜமானன் ஆவான். உங்களால் பாவத்தைப் பின்பற்றலாம் அல்லது தேவனுக்குக் கீழ்ப்படியலாம். ஆத்துமாவின் இறப்புக்கே பாவம் வழிவகுக்கிறது. ஆனால் தேவனுக்குக் கீழ்ப்படிவதால் அவருக்கேற்ற நீதிமான்களாகிறீர்கள். 17 கடந்த காலத்தில் நீங்கள் பாவத்துக்கு அடிமைகளாக இருந்தீர்கள். பாவம் உங்களைக் கட்டுப்படுத்தியது. இப்பொழுது நீங்கள் உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேசத்திற்கு முழுமனதோடு கீழ்ப்படிகிறீர்கள். இதற்காக தேவனுக்கு நன்றி சொல்லுங்கள். 18 நீங்கள் பாவத்திலிருந்து விடுதலை ஆனீர்கள். இப்போது நீங்கள் நன்மைக்கே அடிமையானீர்கள். 19 இதை நான் மக்களுக்குத் தெரிந்த ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குகிறேன். ஏனென்றால் இதனைப் புரிந்துகொள்வது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கும். முன்பு நீங்கள் உங்கள் சரீரத்தின் உறுப்புகளை அசுத்தத்திற்கும், அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்தீர்கள். அதைப் போலவே இப்போது நீங்கள் உங்கள் உடலுறுப்புகளை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்.

20 முந்தைய காலத்தில் நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாக இருந்தீர்கள். அப்போது நல் வாழ்வு உங்களைக் கட்டுப்படுத்த இயலவில்லை. 21 நீங்கள் பாவம் செய்தீர்கள். இப்போது அவற்றுக்காக வெட்கப்படுகின்றீர்கள். அதனால் உங்களுக்கு என்ன பலன்? அதனால் மரணமே கிடைத்தது. 22 ஆனால் இப்போது பாவத்தில் இருந்து விலகியிருக்கிறீர்கள். தேவனுடைய அடிமையாய் இருக்கிறீர்கள். இதனால் தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வை உருவாக்குகிறீர்கள். இது இறுதியில் நித்திய வாழ்வைத் தரும். 23 பாவத்தின் சம்பளம் மரணம். பாவம் செய்தவர்களுக்கு அதுவே பலன். ஆனால் தேவன் தம் மக்களுக்கு இலவசமான வரத்தைக் கொடுக்கிறார். அது நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள்ளான நித்திய வாழ்வே ஆகும்.

மத்தேயு 10:40-42

உங்களை ஏற்றுக்கொள்பவர்களை தேவன் ஆசீர்வதிப்பார்

(மாற்கு 9:41)

40 “உங்களை ஏற்றுக்கொள்கிறவன் என்னையும் ஏற்றுக்கொண்டவன். என்னை ஏற்றுக்கொள்கிறவன், என்னை அனுப்பியவரையும் (தேவனையும்) ஏற்றுக்கொண்டவன். 41 தீர்க்கதரிசியைக் கண்டு அவரை ஒப்புக்கொள்கிறவன், தீர்க்கதரிசி பெறும் வெகுமதியைப் பெறுவான். நல்லவரை அவர்கள் நல்லவர்கள் என்பதற்காக ஏற்றுக்கொள்கிறவன், நல்லவர்களுக்குக் கிடைக்கும் வெகுமதியைப் பெறுவான். 42 யாரேனும் என்னைப் பின்பற்றுகிறவர்களுக்குச் சிறிய அளவேனும் உதவினால், அவன் தக்க வெகுமதியை நிச்சயம் பெறுவான். என்னைப் பின்பற்றுகிறவர்களுக்கு ஒரு குவளைத் தண்ணீர் கொடுத்திருந்தாலும், அவனுக்குத் தக்க வெகுமதி நிச்சயம் கொடுக்கப்படும்.”

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center