Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 143

தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று.

143 கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேளும்.
    என் ஜெபத்திற்குச் செவிகொடும்.
    நீர் என் ஜெபத்திற்குப் பதில் தாரும்.
    நீர் உண்மையாகவே நல்லவரும் நேர்மையானவருமானவர் என்பதை எனக்குக் காட்டும்.
உமது ஊழியனாகிய என்னை நியாயந்தீர்க்காதேயும்.
    என் ஆயுள் முழுவதும் ஒருபோதும் களங்கமற்றவன் என நான் நியாயந்தீர்க்கப்படமாட்டேன்.
ஆனாலும் என் பகைவர்கள் என்னைத் துரத்துகிறார்கள்.
    அவர்கள் என் உயிரை புழுதிக்குள் தள்ளிவிட்டார்கள்.
    அவர்கள் நீண்ட காலத்திற்கு முன் மரித்தோரைப்போன்று என்னை இருண்ட கல்லறைக்குள் தள்ளுகிறார்கள்.
நான் எல்லாவற்றையும் விட்டுவிடத் துணிகிறேன்.
    என் தைரியத்தை நான் இழந்துகொண்டிருக்கிறேன்.

ஆனால் பல்லாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த காரியங்களை நான் நினைவுக்கூருகிறேன்.
    நீர் செய்த பலக் காரியங்களையும் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
    உமது மிகுந்த வல்லமையால் நீர் செய்தக் காரியங்களைக் குறித்து நான் பேசிக்கொண்டிருக்கிறேன்!
கர்த்தாவே, நான் என் கரங்களைத் தூக்கி, உம்மிடம் ஜெபம் செய்கிறேன்.
    வறண்ட நிலம் மழைக்காக எதிர் நோக்கியிருப்பதைப்போல நான் உமது உதவிக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.

விரையும், கர்த்தாவே, எனக்கு பதில் தாரும்.
    நான் என் தைரியத்தை இழந்தேன்.
    என்னிடமிருந்து அகன்று திரும்பிவிடாதேயும்.
    கல்லறையில் மாண்டுகிடக்கும் மரித்தோரைப்போன்று நான் மரிக்கவிடாதேயும்.
கர்த்தாவே, இக்காலையில் உமது உண்மை அன்பை எனக்குக் காட்டும்.
    நான் உம்மை நம்புகிறேன்.
    நான் செய்யவேண்டியவற்றை எனக்குக் காட்டும்.
    நான் என் உயிரை உமது கைகளில் தருகிறேன்.
கர்த்தாவே, நான் பாதுகாப்பு நாடி உம்மிடம் வருகிறேன்.
    என் பகைவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
10 நான் செய்யவேண்டுமென நீர் விரும்புகின்றவற்றை எனக்குக் காட்டும்.
    நீரே என் தேவன்.

11 கர்த்தாவே, என்னை வாழவிடும்.
    அப்போது ஜனங்கள் உமது நாமத்தைத் துதிப்பார்கள்.
நீர் உண்மையாகவே நல்லவரென்பதை எனக்குக் காட்டும்.
    என் பகைவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
12 கர்த்தாவே, உமது அன்பை எனக்குக் காட்டும்.
    என்னைக் கொல்ல முயல்கிற என் பகைவர்களைத் தோற்கடியும்.
    ஏனெனில் நான் உமது ஊழியன்.

எரேமியா 32:1-9

எரேமியா ஒரு வயலை வாங்குகிறான்

32 யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவின் ஆட்சியின் பத்தாம் ஆண்டில் கர்த்தருடைய வார்த்தை எரேமியாவிற்கு வந்தது: சிதேக்கியாவின் பத்தாவது ஆட்சியாண்டானது நேபுகாத்நேச்சாருக்கு 18வது ஆட்சி ஆண்டாகும். அந்த நேரத்தில், பாபிலோன் ராஜாவின் படை எருசலேம் நகரத்தைச்சுற்றி வளைத்துக் கொண்டது. எரேமியா கைது செய்யப்பட்டு யூதா ராஜாவின் அரண்மனை முற்றத்தில் காவலர்களின் பொறுப்பில் விடப்பட்டிருந்தான். யூதா ராஜாவாகிய சிதேக்கியா அந்த அரண்மனையின் சிறையில் எரேமியாவை வைத்தான். சிதேக்கியா எரேமியாவின் தீர்க்கதரிசனத்தை விரும்பவில்லை. எரேமியா சொல்லுகிறதாவது, “கர்த்தர் கூறுகிறார்: ‘நான் விரைவில் பாபிலோன் ராஜாவிடம் எருசலேம் நகரத்தைக் கொடுப்பேன். நேபுகாத்நேச்சார் இந்நகரத்தைக் கைப்பற்றுவான். யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா பாபிலோனியர்களின் படைகளிடமிருந்து தப்பிக்கமுடியாது. அவன் உறுதியாக பாபிலோன் ராஜாவிடம் கொடுக்கப்படுவான். சிதேக்கியா பாபிலோன் ராஜாவிடம் நேருக்கு நேர் பேசுவான். சிதேக்கியா அவனைத் தனது சொந்தக் கண்களால் காண்பான். பாபிலோன் ராஜா சிதேக்கியாவைப் பாபிலோனுக்குக் கொண்டு செல்வான். நான் அவனைத் தண்டிக்கும்வரை சிதேக்கியா அங்கே தங்குவான்.’ இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. ‘பாபிலோனியர்களின் படைகளுக்கு எதிராக நீங்கள் போரிட்டால் நீங்கள் வெல்லமுடியாது.’”

எரேமியா கைதியாக இருந்தபோது அவன், “கர்த்தரிடமிருந்து இந்த வார்த்தை என்னிடம் வந்தது. இதுதான் செய்தி: ‘எரேமியா, உனது பெரியப்பாவின் குமாரன் அனாமெயேல் விரைவில் உன்னிடம் வருவான். அவன் உனது பெரியப்பா சல்லூமின் குமாரன். அனாமெயேல் உன்னிடம், “எரேமியா, அனாதோத் அருகிலுள்ள எனது வயலை வாங்கிக்கொள். அதை விலைக்கு வாங்கு. ஏனென்றால் நீதான் எனக்கு மிக நெருங்கிய உறவினன். இது உனது உரிமை. அந்த வயலை வாங்குவது உனது பொறுப்புமாகும்”’ என்பான்.

“பிறகு, கர்த்தர் சொன்னதுப்போன்று அப்படியே நிகழந்தது. எனது பெரியப்பாவின் குமாரன் அனாமெயேல் என்னிடம் சிறைச்சாலையில் முற்றத்திற்கு வந்தான். அனாமெயேல் என்னிடம், ‘எரேமியா, ஆனதோத் நகரத்தின் அருகில் உள்ள எனது வயலை விலைக்கு வாங்கிக்கொள். பென்யமீன் கோத்திரத்தில் உள்ளவர்களின் நாட்டில் இவ்வயல் உள்ளது. அந்நிலம் உனக்கு உரியது. ஏனென்றால், அது உனது உரிமை. எனவே அதைச் சொந்தமாக்கிக் கொள்’” என்றான்.

எனவே, நான் இதுதான் கர்த்தரிடமிருந்து வந்த வார்த்தை என்று அறிந்தேன். நான் எனது பெரியப்பாவின் குமாரன் அனாமெயேலிடமிருந்து வயலை வாங்கினேன். நான் அவனுக்காக 17 சேக்கல் வெள்ளியை எடை போட்டுக் கொடுத்தேன்.

எரேமியா 32:36-41

36 “ஜனங்களாகிய நீங்கள், ‘பாபிலோன் ராஜா எருசலேமைக் கைப்பற்றுவான். அவன் பட்டயங்கள், பசி, பயங்கரமான நோய்களைப் பயன்படுத்தி நகரைத் தோற்கடித்துவிடுவான்’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்கிறார், 37 ‘இஸ்ரவேல் மற்றும் யூதாவின் ஜனங்கள் தங்கள் நாட்டைவிட்டு போகும்படி நான் வற்புறுத்தினேன். அந்த ஜனங்களோடு நான் கோபமாக இருந்தேன். ஆனால், நான் அவர்களை மீண்டும் இந்த இடத்திற்குக் கொண்டு வருவேன். நான் எங்கே போகும்படி வற்புறுத்தினேனோ அங்கே அவர்களை மீண்டும் சேகரிப்பேன். இந்த இடத்திற்கு நான் மீண்டும் கொண்டு வருவேன். அவர்களை சமாதானத்தோடும் பாதுகாப்போடும் வாழவிடுவேன். 38 இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்கள் எனது ஜனங்கள் ஆவார்கள். நான் அவர்களது உண்மையாக தேவன் ஆவேன். 39 நான் அவர்கள் ஒரே ஜனங்களாக இருப்பதற்கான ஆசையைக் கொடுப்பேன். அவர்களுக்கு ஒரே நோக்கம் இருக்கும். தம் வாழ்நாள் முழுவதும் என்னை உண்மையாக வழிபட விரும்புவார்கள். அவர்கள் உண்மையாகவே அதைச் செய்ய விரும்புவார்கள். அவர்கள் பிள்ளைகளும் அவ்வாறே செய்வார்கள்.

40 “‘நான் இஸ்ரவேல் மற்றும் யூதாவின் ஜனங்களோடு ஒரு உடன்படிக்கைச் செய்வேன். இந்த உடன்படிக்கை என்றென்றும் இருக்கும். இந்த உடன்படிக்கையில் நான் அந்த ஜனங்களிடம் இருந்து என்றென்றும், திரும்பமாட்டேன். நான் எப்பொழுதும் அவர்களுக்கு நல்லவனாக இருப்பேன். அவர்கள் என்னை மதிக்க விரும்பும்படிச் செய்வேன். பிறகு அவர்கள் என்னிடமிருந்து விலகமாட்டார்கள். 41 அவர்கள் என்னை மகிழ்ச்சி அடையும்படிச் செய்வார்கள். நான் அவர்களுக்கு நன்மை செய்வதில் மகிழ்வேன். நான் அவர்களை இந்த தேசத்தில் உறுதியாகவே நட்டு வளரும்படிச் செய்வேன். நான் இதனை எனது மனப்பூர்வமாகவும் ஆத்மபூர்வமாகவும் செய்வேன்.’”

மத்தேயு 22:23-33

சதுசேயரின் தந்திரம்

(மாற்கு 12:18-27; லூக்கா 20:27-40)

23 அதே நாளில் சில சதுசேயர்கள் இயேசுவிடம் வந்தார்கள். (யாரும் மரணத்திலிந்து உயிர்த்தெழ முடியாது என்று நம்புகிறவர்கள் சதுசேயர்கள்) சதுசேயர்கள் இயேசுவிடம் ஒரு கேள்வி கேட்டனர். 24 அவர்கள், “போதகரே, திருமணமான ஒருவன் குழந்தைகள் இல்லாமல் இறந்துவிட்டால் அவனது சகோதரன் அவனது மனைவியை மணக்கவேண்டுமென மோசே நமக்குக் கூறியுள்ளார். அப்படியெனில், அவர்கள் இறந்த சகோதரனுக்குக் குழந்தை பெறுவார்கள். 25 எங்களில் ஏழு சகோதரர்கள் இருந்தார்கள். முதலாமவன் மணம் செய்து கொண்டான். ஆனால் அவன் குழந்தைகள் இல்லாமலேயே இறந்துவிட்டான். 26 அவனது சகோதரன் அப்பெண்ணை மணந்து கொண்டான். பின், இரண்டாவது சகோதரனும் இறந்துவிட்டான். அதே போல மூன்றாவது சகோதரனுக்கும் மற்ற சகோதரர்கள் அனைவருக்கும் நடந்தது. 27 இறுதியாக அப்பெண்ணும் இறந்தாள். 28 ஏழு பேர் அவளை மணந்தார்கள். எனவே, மரணத்திலிருந்து அவர்கள் உயிர்த்தெழும்பொழுது அவள் யாருடைய மனைவியாக இருப்பாள்?” என்று கேட்டார்கள்.

29 அதற்கு இயேசு, “வேத வாக்கியங்கள் என்ன கூறுகிறது என்பது உங்களுக்குத் தெரியாததால் உங்களுக்குப் புரியவில்லை. மேலும் தேவனின் வல்லமையைக்குறித்து உங்களுக்குத் தெரியவில்லை. 30 மனிதர்கள் மரணத்திலிருந்து உயிர்த்தெழும்பொழுது, அவர்களுக்குத் திருமணங்கள் நடக்கமாட்டா. உயிர்த்தெழும் அனைவரும் பரலோகத்திலிருக்கும் தேவதூதர்களுக்கு ஒப்பாவார்கள். 31 மரணத்திலிருந்து உயிர்த்தெழுவதைக் குறித்து தேவன் என்ன சொல்லியுள்ளார் என்பதைப் படித்திருக்கிறீர்களல்லவா? 32 தேவன், ‘ஆபிரகாமின் தேவன் நானே, ஈசாக்கின் தேவன் நானே, யாக்கோபின் தேவன் நானே’(A) அவர்களின் தேவன் என்று தேவன் தம்மைப்பற்றி கூறினார். அவர் இறந்தவர்களின் தேவன் அல்ல. அவர் வாழ்கிறவர்களின் தேவன்” என்றார்.

33 அதைக் கேட்ட அனைவரும் இயேசுவின் போதனையைக் கண்டு வியந்தனர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center