Revised Common Lectionary (Complementary)
தேத்
65 கர்த்தாவே, நீர் உமது பணியாளாகிய எனக்கு நல்லவற்றைச் செய்தீர்.
நீர் செய்வதாக எனக்கு உறுதியளித்தபடியே செய்தீர்.
66 கர்த்தாவே, ஞானமுள்ள முடிவுகளை எடுப்பதற்குரிய அறிவை எனக்குத் தாரும்.
உமது கட்டளைகளை நான் நம்புகிறேன்.
67 நான் துன்புறும்முன்பு, பல தவறுகளைச் செய்தேன்.
ஆனால் இப்போது, நான் உமது கட்டளைகளுக்குக் கவனமாகக் கீழ்ப்படிகிறேன்.
68 தேவனே, நீர் நல்லவர், நீர் நல்ல காரியங்களைச் செய்கிறீர்.
உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
69 என்னைக் காட்டிலும் உயர்ந்தோரெனத் தங்களைக் கருதியவர்கள் என்னைப் பற்றித் தீய பொய்களைக் கூறினார்கள்.
ஆனால் கர்த்தாவே, நான் என் முழு இருதயத்தோடும் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதைத் தொடர்ந்தேன்.
70 அந்த ஜனங்கள் மூடர்கள், ஆனால் நானோ
உமது போதனைகளைக் கற்பதில் களிப்படைகிறேன்.
71 துன்புறுவது எனக்கு நல்லது.
நான் உமது சட்டங்களைக் கற்றிருக்கிறேன்.
72 கர்த்தாவே, உமது போதனைகள் எனக்கு நல்லவை.
ஆயிரம் பொன்னையும் வெள்ளியையும் பார்க்கிலும் அவை நல்லவை.
விக்கிரகங்களை தொழுதுகொள்வதினால் அடையும் தண்டனைகள்
2 “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற நகரங்கள் ஏதேனும் ஒன்றில் அக்கிரமமான செயல் கர்த்தருக்கு எதிராக நடந்ததைக்குறித்து நீங்கள் கேள்விப்படலாம். கர்த்தருக்கு எதிராக அந்த அக்கிரமச் செயலை உங்களைச் சார்ந்த ஆணோ, அல்லது பெண்ணோ செய்திருக்கலாம். கர்த்தருடைய உடன்படிக்கையை மீறி அவர்கள் நடந்திருப்பார்கள். 3 அதாவது, அவர்கள் அந்நிய தெய்வங்களையோ அல்லது சூரியன், சந்திரன், நட்சத்திரம் போன்ற வான சேனைகளையோ தொழுதுகொள்வதை நீங்கள் கேள்விப்பட்டால், அவைகளெல்லாம் நான் உங்களுக்கு வழங்கிய கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமான செயல்களாகும். 4 இது போன்ற தீயசெய்திகளை நீங்கள் கேள்விப்பட்டால், நீங்கள் அதைக் குறித்து விசாரிக்க வேண்டும். நீங்கள் அதை நன்றாகத் தீர ஆராய்ந்து அது உண்மையென்று கண்டறிந்தால், இஸ்ரவேலில் இப்படிப்பட்ட ஒரு அருவருக்கத்தக்க நிகழ்ச்சி நடந்தது உண்மையாகும்போது, 5 நீங்கள் அந்தத் தீயசெயலைச் செய்தவனைத் தண்டிக்க வேண்டும். நீங்கள் அத்தகைய தீயச் செயலைச் செய்த அந்த ஆணையோ, அல்லது பெண்ணையோ, வெளியே இழுத்துவந்து நகர எல்லையின் பொது இடத்தில் கற்களால் அடித்து அவர்களைக் கொன்றுவிடுங்கள். 6 ஆனால் ஒரே ஒரு சாட்சியின் கூற்றைக் கேட்டு நீங்கள் அவனுக்குக் கொலைத் தண்டனையை கொடுத்து விடாதீர்கள். இரண்டு அல்லது மூன்று சாட்சிகள் அவன் இந்த தீயச் செயல்களை செய்தது உண்மைதான் என்று கூறினால், பின் நீங்கள் அந்தத் துரோகியை கொன்றுவிடலாம். 7 தீமை செய்தவன் கொல்லப்படும்படி சாட்சிகளே முதலில் அவன்மீது கற்களை எறியவேண்டும். பின்னரே மற்ற ஜனங்கள் அனைவரும் அவன் மரிக்கும்வரை கற்களால் அடிக்க வேண்டும். இதன் மூலமே நீங்கள் உங்களிடமிருந்து அந்தத் தீமையை விலக்கிட முடியும்.
சிக்கலான நீதிமன்ற முடிவுகள்
8 “உங்கள் நீதிமன்றங்களால் தீர்ப்புக்கூற முடியாமல் போகும் அளவிற்கு சில பிரச்சினைகள் உங்களிடம் இருக்கலாம், அவை கொலைக் குற்றமாகவோ, அல்லது இரண்டு நபர்களின் வாக்கு வாதங்களோ, அல்லது சண்டையில் ஒருவருக்கு ஏற்பட்ட காயம் குறித்த சேதங்களையோ குறித்த வழக்குகளாக இருக்கலாம். உங்கள் ஊர்களிலுள்ள உங்களது நீதிபதிகளால் இத்தகைய வழக்குகளுக்குச் சரியான தீர்ப்பைக் கூற இயலாமல் இருந்தால், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் சிறப்பாக தேர்ந்தெடுத்த இடத்திற்குச் செல்ல வேண்டும். 9 லேவிக் கோத்திரத்திலிருந்து வந்த ஆசாரியர்கள் அங்கே இருப்பார்கள். நீங்கள் அவர்களிடம் சென்று அன்றைய பொறுப்பில் இருக்கின்ற நியாயாதிபதியினிடத்தில் அந்தப் பிரச்சினைக்கான முடிவுகளைப் பெறலாம். 10 கர்த்தர் சிறப்பாகத் தேர்ந்தெடுத்த இடத்தில் இருக்கின்ற அவர்கள், உங்களுக்கு அளிக்கின்ற தீப்புகளுக்கு இணங்கி, அவர்கள் உங்களுக்கு விதிக்கின்றபடி செய்யக் கவனமாய் இருப்பீர்களாக. 11 நீங்கள் அவர்கள் கூறும் முடிவுகளை ஏற்றுக்கொண்டு, அவர்கள் விதிக்கின்றபடியே அவர்களது நியாயத்தீர்ப்புகளைப் பின்பற்ற வேண்டும். அவர்கள் சொன்ன எதையும் மாற்றாமல் அப்படியே செய்யவேண்டும்!
12 “அச்சமயத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஊழியம் செய்யும் ஆசாரியனின் வார்த்தைகளையோ, அல்லது நீதிபதியின் தீர்ப்பையோ ஏற்காமலும், கீழ்ப்படியாமலும் இருக்கிறவர்களை நீங்கள் தண்டிக்க வேண்டும். அவன் கண்டிப்பாக மரிக்க வேண்டும். இஸ்ரவேலில் இருந்து அந்தத் தீயவனை நீங்கள் அகற்றிவிடவேண்டும். 13 இந்தத் தண்டனையைக் கேட்கும் அனைத்து ஜனங்களும் அதைத் கண்டு பயந்து இதுபோன்ற தவறினைச் செய்யாதிருப்பார்கள்.
அரசு அதிகாரத்திற்கு அடிபணியவும்
13 நீங்கள் அனைவரும் ஆட்சியாளர்களுக்கு அடிபணிய வேண்டும். ஆட்சி செய்யும் ஒவ்வொருவருக்கும் ஆட்சி புரியும் அதிகாரத்தை தேவன் கொடுத்திருக்கிறார். இப்பொழுது அதிகாரம் செய்கின்றவர்களுக்கு தேவனாலேயே அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 2 எனவே அரசு அதிகாரத்திற்கு எதிராக இருப்பவன் உண்மையில் தேவனுடைய கட்டளைக்கு எதிராக இருக்கிறான் என்றே பொருளாகும். அரசுக்கு எதிராகச் செயல்படுபவன் உண்மையில் தண்டிக்கப்படத்தக்கவன். 3 நன்மை செய்கிறவர்கள் ஆள்வோர்களிடம் அச்சப்படவேண்டிய தேவையில்லை. ஆனால் தீமை செய்கிறவர்கள் ஆள்வோர்களிடம் அச்சப்படவேண்டும். நீங்கள் ஆள்வோர்களைக் கண்டு அச்சம்கொள்வதில் இருந்து விடுதலை பெறவேண்டுமா? அப்படியானால் நன்மையை மட்டும் செய்யுங்கள். நீங்கள் நன்மையைச் செய்தால் அவர்கள் உங்களைப் பாராட்டுவார்கள்.
4 ஒரு ஆள்வோன் என்பவன் உங்களுக்கு உதவி செய்வதற்காக தேவனால் நியமிக்கப்பட்டவன். ஆனால் நீங்கள் தப்பு செய்தால் அஞ்சவேண்டும். உங்களைத் தண்டிக்கிற அதிகாரம் அவர்களுக்குண்டு. அதை அவர்கள் பயன்படுத்துவார்கள். தேவனுடைய பணியாளாகவே அவர்கள் தண்டனை வழங்குவார்கள். 5 எனவே நீங்கள் அரசாங்கத்திற்கு அடிபணியுங்கள். நீங்கள் பணியாவிட்டால் தண்டிக்கப்படுவீர்கள். நீங்கள் செய்யத்தக்க நல்ல காரியமே அரசுக்குப் பணிவதுதான்.
6 இதற்காகத்தான் நீங்கள் வரிகளைச் செலுத்துகிறீர்கள். அவர்கள் தேவனுக்காகவும் உங்களுக்காகவும் உழைத்து வருகிறார்கள். தம் நேரமனைத்தையும் ஆட்சி செலுத்துவதிலேயே செலவழிக்கிறார்கள். 7 அனைவருக்கும் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யுங்கள். கொடுக்க வேண்டிய வரிகளையும் கொடுத்துவிடுங்கள். மரியாதை செலுத்த வேண்டியவர்களுக்கு மரியாதை செலுத்துங்கள். எவருக்கு பயப்பட வேண்டுமோ அவர்களுக்கு பயப்படுங்கள்.
2008 by World Bible Translation Center