Revised Common Lectionary (Complementary)
தாவீதின் ஒரு ஜெபம்.
17 கர்த்தாவே, நியாயத்திற்கான என் ஜெபத்தைக் கேளும்.
எனது ஜெபப் பாடலுக்குச் செவிகொடுத்தருளும்.
எனது நேர்மையான ஜெபத்தைக் கேளும்.
2 என்னைப் பற்றிய சரியான முடிவு எடுப்பீர்.
உம்மால் உண்மையைக் காணமுடியும்.
3 நீர் என் இருதயத்தின் ஆழத்தைப் பார்த்தீர்.
இரவு முழுவதும் என்னோடிருந்தீர்.
என் இருதயத்தை ஆராய்ந்து என்னில் ஒரு குற்றத்தையும் நீர் காணவில்லை.
நான் எந்தத் தீய செயல்களையும் திட்டமிடவில்லை.
4 உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கு என்னால் இயன்றமட்டும் முயன்றேன்.
5 உமது வழிமுறைகளை பின்பற்றினேன்.
உமது வாழ்க்கை வழிகளிலிருந்து என் பாதங்கள் விலகவில்லை.
6 தேவனே, உம்மைக் கூப்பிட்டபோதெல்லாம், எனக்குப் பதிலளித்தீர்.
எனவே, இப்போதும் எனக்குச் செவிகொடும்.
7 தேவனே, உம்மை நம்புகிற உமது வலது பக்கத்திலிருக்கும் ஜனங்களுக்கு உதவுகிறீர்.
உம்மைப் பின்பற்றுகிறவனின் இந்த ஜெபத்திற்குச் செவிகொடும்.
8 கண்ணின் மணியைப்போல என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
உமது சிறகுகளின் நிழலில் என்னை மறைத்துக்கொள்ளும்.
9 கர்த்தாவே, என்னை அழிக்க நினைக்கிற தீயோரிடமிருந்து என்னை மீட்டருளும்.
என்னைத் தாக்க முயல்கிற ஜனங்களிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
10 தங்களைப் பற்றிப் பெருமைபாராட்டுகிற அத்தீயோர் தேவனுக்குச் செவிசாய்க்க முடியாதபடி
பெருமையுடையோராய் இருக்கிறார்கள்.
11 அந்த ஜனங்கள் என்னைத் துரத்தினார்கள்.
இப்போது அவர்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள்.
என்னைத் தாக்குவதற்குத் தயாராக இருக்கிறார்கள்.
12 பிற விலங்குகளைக் கொன்று சாப்பிடக் காத்திருக்கும் சிங்கத்தைப்போன்று அத்தீயோர் காணப்படுகிறார்கள்.
தாக்கக் காத்திருக்கும் சிங்கத்தைப்போல் மறைந்திருக்கிறார்கள்.
13 கர்த்தாவே, எழுந்து பகைவரிடம் சென்று, அவர்கள் சரணடையச் செய்யும்.
உமது வாளால் அத்தீயோரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
14 கர்த்தாவே, உயிருள்ளோர் வாழும் தேசத்திலிருந்து அத்தீயோரை
உமது வல்லமையால் அப்புறப்படுத்தும்.
கர்த்தாவே, பலர் உம்மிடம் உதவிக்காக வருவார்கள். இவ்வாழ்க்கையில் அதிகம் பலனில்லை.
அவர்களுக்கு அதிக உணவளியும்.
வேண்டுவனவற்றை அவர்கள் பிள்ளைகளுக்குக் கொடும்.
அவர்களின் பிள்ளைகளுக்கும் மிகுந்திருக்கும்படியாக அப்பிள்ளைகளுக்குத் திருப்தியாய் உணவளியும்.
15 நான் நீதிக்காக ஜெபிக்கிறேன்.
கர்த்தாவே, உமது முகத்தைக் காண்பேன்.
கர்த்தாவே, உம்மைப் பார்ப்பதால் முழுமையான திருப்திகொள்வேன்.
ஜனங்களிடம் நம்பிக்கை மற்றும் தேவனிடம் நம்பிக்கை
5 கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்:
“மற்ற ஜனங்கள் மீது மட்டும் நம்பிக்கை வைக்கின்றவர்களுக்கு தீமை ஏற்படும்.
மற்ற ஜனங்களை பலத்துக்காகச் சார்ந்திருக்கிறவர்களுக்குத் தீமை ஏற்படும்.
ஏனென்றால், அந்த ஜனங்கள் கர்த்தர் மீது நம்பிக்கை வைப்பதை நிறுத்தினார்கள்.
6 அந்த ஜனங்கள் வனாந்தரத்திலே உள்ள புதரைப் போன்றவர்கள்.
அப்புதர் ஜனங்களே வாழாத வனாந்தரத்திலே உள்ளது.
அப்புதர் வெப்பமும் வறட்சியும் உள்ள பூமியில் உள்ளது.
அப்புதர் கெட்ட மண்ணில் உள்ளது.
அப்புதர் தேவனால் தர முடிகிற நல்லவற்றைப்பற்றி அறியாதது.
7 ஆனால், கர்த்தருக்குள் நம்பிக்கை வைக்கிறவன் ஆசீர்வதிக்கப்படுவான்.
ஏனென்றால், கர்த்தர் நம்பத்தகுந்தவர் என்பதை காட்டுவார்.
8 அந்த மனிதன் தண்ணீர்க்கரையில் நடப்பட்ட மரத்தைப்போன்ற பலத்தோடு இருப்பான்.
அந்த மரம் தண்ணீரைக் கண்டுக்கொள்கிற வேர்களை உடையதாக இருக்கும்.
அந்த மரம் கோடைகாலம் வரும்போது உலர்ந்து போவதில்லை.
அதன் இலைகள் எப்போதும் பசுமையாக இருக்கும்.
மழைப் பெய்யாத ஆண்டுகளில் அது கவலைப்படுவதில்லை.
அந்த மரம் எப்பொழுதும் பழங்களை உற்பத்தி செய்யும்.
9 “ஒருவனின் இருதயம் மிகவும் தந்திரமானது!
இருதயம் மிகவும் சுகவீனம் அடையக் கூடும்.
உண்மையில் எவரும் ஒருவனின் இருதயத்தை புரிந்துகொள்வதில்லை.
10 ஆனால், நானே கர்த்தர்.
என்னால் ஒருவனின் இருதயத்தைப் பார்க்கமுடியும்.
நான் ஒருவனின் மனதை சோதிக்கமுடியும்.
ஒவ்வொருவனிடமும் என்ன இருக்கிறது என்பதை என்னால் முடிவு செய்யமுடியும்.
என்னால், ஒவ்வொருவருக்கும் அவர்களின் செயல்களுக்கு ஏற்ப சரியான கூலியைக் கொடுக்கமுடியும்.
11 சில நேரங்களில் ஒரு பறவை, தான் இடாத
முட்டையைக் குஞ்சு பொரிக்க வைக்கும்.
ஏமாற்றி பொருள் சம்பாதிக்கிற ஒவ்வொருவனும்
இப்பறவையைப் போன்றவன்.
அவனது வாழ்க்கை பாதியில் இருக்கும்போதே
அவன் அப்பணத்தை இழப்பான்.
அவனது வாழ்வின் இறுதியில்,
அவன் ஒரு முட்டாளாக இருந்தான் என்பது தெளிவாகும்.”
12 தொடக்கத்திலிருந்தே, தேவனுக்கு நமது ஆலயமே
மகிமையான சிங்காசனமாக இருந்தது.
இது மிக முக்கியமான இடமாகும்.
13 கர்த்தாவே, இஸ்ரவேலர்களின் நம்பிக்கையே நீர்தான்.
கர்த்தாவே, நீர் ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றைப் போன்றவர்.
ஒருவன் கர்த்தரைப் பின்பற்றுவதை நிறுத்தினால்
அவன் இகழப்பட்டு அவனது வாழ்வு குறுகியதாக்கப்படும்.
எரேமியாவின் மூன்றாவது முறையீடு
14 கர்த்தாவே, நீர் என்னைக் குணப்படுத்தினால்
நான் உண்மையில் சுகமாவேன்.
என்னைக் காப்பாற்றும்,
நான் உண்மையில் காப்பாற்றப்படுவேன்.
கர்த்தாவே, நான் உம்மைத் துதிக்கிறேன்!
15 யூதாவின் ஜனங்கள் என்னிடம் தொடர்ந்து கேள்விகளைக் கேட்கிறார்கள்.
அவர்கள் “எரேமியா, கர்த்தரிடமிருந்து வந்த செய்தி என்ன?
அச்செய்தி எப்பொழுது நிறைவேறும்?” என்கின்றனர்.
16 கர்த்தாவே, நான் உம்மை விட்டு ஓடிப்போகவில்லை.
நான் உம்மைப் பின்தொடர்ந்தேன்.
நீர் விரும்புகிற மேய்ப்பனாக நான் இருந்தேன்.
ஒரு பயங்கரமான நாள் வருவதை நான் விரும்பவில்லை.
கர்த்தாவே, நான் சொன்னவற்றை நீர் அறிவீர்.
எல்லாம் நிகழ்ந்துக்கொண்டிருப்பதை நீர் பார்க்கிறீர்.
17 கர்த்தாவே, என்னை அழித்து விடாதீர்.
துன்பக் காலத்தில் நான் உம்மை நம்பியிருக்கிறேன்.
18 ஜனங்கள் என்னைக் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த ஜனங்களை அவமானப்படும்படி செய்யும்.
என்னை மனந்தளரவிடாதீர்.
அந்த ஜனங்களை பயப்படச் செய்யும்.
ஆனால் என்னை பயப்படச் செய்யாதிரும்.
எனது பகைவர்களுக்கு அந்தப் பயங்கரமான நாளை வரப்பண்ணும்.
அவர்களை உடையும், அவர்களை மீண்டும் உடையும்.
இயேசுவின் வல்லமை
(மாற்கு 3:20-30; லூக்கா 11:14-23; 12:10)
22 பின்னர், சிலர் இயேசுவிடம் ஒரு மனிதனை அழைத்து வந்தனர். குருடனான அவனால் பேசவும் முடியவில்லை. ஏனென்றால் அவனுக்குள் ஒரு பிசாசு இருந்தது. இயேசு அவனைக் குணப்படுத்தினார். அவனால் பார்க்கவும் பேசவும் முடிந்தது. 23 வியப்புற்ற மக்கள், “தேவன் தாம் அனுப்பிவைப்பதாக வாக்களித்த தாவீதின் குமாரன் இவர்தான் போலும்!” என்றனர்.
24 மக்கள் இவ்வாறு கூறுவதைப் பரிசேயர்கள் கேட்டனர். பரிசேயர்கள், “பெயல்செபூலின் வல்லைமையையே இயேசு பிசாசுகளை ஓட்டுவதற்குப் பயன்படுத்துகிறார்” என்று கூறினர். பெயல்செபூல் பிசாசுகளின் தலைவன்.
25 இயேசு பரிசேயர்களின் எண்ணங்களை அறிந்தார். எனவே இயேசு, “தனக்குள் சண்டையிட்டுக்கொள்ளும் பிரிவுகளைக்கொண்ட எந்த இராஜ்யமும் அழிந்துவிடும். பிரிவுகொள்ளுகின்ற எந்த நகரமும் நிலைக்காது. பிரிகின்ற எந்தக் குடும்பமும் முன்னேற்றம் அடையாது. 26 எனவே சாத்தான்[a] தன்னுடைய பிசாசுகளையே துரத்தினால், சாத்தான் பிரிந்திருக்கிறான். எனவே சாத்தானின் இராஜ்யம் நிலைத்திருக்காது. 27 நான் பிசாசுகளை விரட்டும்பொழுது சாத்தானின் வல்லமையை நான் பயன்படுத்துவதாக நீங்கள் கூறுகிறீர்கள். அது உண்மையெனில், உங்கள் மனிதர்கள் பிசாசுகளை விரட்ட எந்த சக்தியைப் பயன்படுத்துகிறார்கள்? எனவே, உங்கள் மக்களே நீங்கள் சொல்வது பொய் என்று நிரூபிக்கிறார்கள். 28 ஆனால், பிசாசுகளை விரட்ட நான் தேவ ஆவியின் வல்லமையைப் பயன்படுத்துகிறேன். தேவனுடைய இராஜ்யம் உங்களிடம் வந்துள்ளது என்பதை இது காட்டுகிறது. 29 ஒருவன் வலிமையான மனிதனின் வீட்டுக்குள் புகுந்து திருட நினைத்தால், முதலில் அவ்வலிமையான மனிதனைக் கட்டிப்போட வேண்டும். பின்னரே, அவன் அவ்வலிமையான மனிதனின் வீட்டிலிருந்து பொருட்களைத் திருட முடியும். 30 என்னுடன் இல்லாதவன் எனக்கு எதிரானவன். என்னுடன் சேர்ந்து செயல் புரியாதவன் எனக்கு எதிராகச் செயல்படுகிறவன்.
31 “அதனால் நான் சொல்லுகிறேன், மனிதர்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் மன்னிக்கப்படுவார்கள். மேலும் மனிதர்கள் சொல்லுகின்ற எல்லாத் தீயவற்றுக்கும் மன்னிப்புண்டு. ஆனால், பரிசுத்த ஆவிக்கு எதிராகப் பேசுகிறவனுக்கு மன்னிப்பு கிடைக்காது. 32 மனித குமாரனுக்கு எதிராகப் பேசுகிறவனுக்கு மன்னிப்பு கிடைக்கும். ஆனால் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராகப் பேசுகிறவனுக்கு மன்னிப்பு கிடைக்காது. இப்பொழுதோ அல்லது எதிர்காலத்திலோ அவன் மன்னிக்கப்படமாட்டான்.
2008 by World Bible Translation Center