Revised Common Lectionary (Complementary)
மஸ்கீல், என்னும் தாவீதின் பாடல்.
32 பாவங்கள் மன்னிக்கப்பட்ட மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
பாவங்கள் மூடப்பட்ட மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
2 குற்றமற்றவன் என கர்த்தர் கூறும் மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
இரகசியமான பாவங்களை மறைக்க முயலாதிருக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
3 தேவனே, நான் மீண்டும், மீண்டும் உம்மிடம் ஜெபித்தேன்.
ஆனால் என் இரகசியமான பாவங்களைக் குறித்து நான் பேசவில்லை.
நான் ஜெபித்த ஒவ்வொரு முறையும் என் வலிமை குன்றிப்போயிற்று.
4 தேவனே, இரவும் பகலும் என் வாழ்க்கையைமென்மேலும் கடினமாக்கினீர்.
கோடைக் காலத்தில் உலர்ந்து காய்ந்துபோன நிலத்தைப் போலானேன்.
5 என் பாவங்களையெல்லாம் கர்த்தரிடம் அறிக்கையிடத் தீர்மானித்தேன்.
கர்த்தாவே, உம்மிடம் என் பாவங்களைப் பற்றிக் கூறினேன்.
என் குற்றங்கள் எதையும் நான் மறைக்கவில்லை. என் பாவங்களை எல்லாம் நீர் எனக்கு மன்னித்தீர்.
6 இதற்காக, தேவனே, உம்மைப் பின்பற்றுவோர் உம்மிடம் ஜெபம் செய்யவேண்டும்.
வெள்ளப் பெருக்கைப்போல் தொல்லைகள் வந்தாலும் உம்மைப் பின்பற்றுவோர் ஜெபிக்கவேண்டும்.
7 தேவனே, நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்.
என் தொல்லைகளிலிருந்து நீர் என்னைக் காக்கிறீர்.
நீர் என்னைச் சூழ்ந்து என்னைக் காக்கிறீர்.
எனவே நீர் என்னைப் பாதுகாத்த வகையை நான் பாடுகிறேன்.
21 “இப்போது, யோபுவே, உன்னை தேவனுக்குக் கொடுத்து அவரோடு சமாதானம் செய்துக்கொள்.
இதைச் செய், உனக்கு நல்லவை பல வாய்க்கும்.
22 அவரது போதனையை ஏற்றுக்கொள்.
அவர் சொல்வதைக் கவனமாகக் கேள்.
23 யோபுவே, சர்வ வல்லமையுள்ள தேவனிடம் திரும்பி வா, உன் பழைய நிலைக்கு அழைத்துச் செல்லப்படுவாய்.
ஆனால், நீ உனது வீட்டிலிருந்து தீமையை அகற்ற வேண்டும்.
24 உனது பொன்னை நீ தூசியாகக் கருதவேண்டும்.
பள்ளத்தாக்கின் பாறைகளைப் போல, உனது உயர்ந்த பொன்னைக் கருதவேண்டும்.
25 சர்வ வல்லமையுள்ள தேவனே, உனக்குப் பொன்னாகட்டும்.
அவரே உனக்கு வெள்ளிக் குவியல் ஆகட்டும்.
26 அப்போது நீ சர்வ வல்லமையுள்ள தேவனில் களிகூருவாய்.
அப்போது நீ தேவனை நோக்கிப் பார்ப்பாய்.
27 நீ அவரிடம் ஜெபிப்பாய், அவர் உன்னைக் கேட்பார்.
நீ செய்வதாக உறுதியளித்த காரியங்களை, அப்போது நீ செய்யமுடியும்.
28 நீ ஏதேனும் செய்யத் தீர்மானித்தால், அது வெற்றியடையும்,
உனது எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும்.
29 பெருமையுள்ளோரை வெட்கமடையச் செய்கிறார்.
ஆனால் தேவன் எளியோருக்கு உதவுகிறார்.
30 அப்போது நீ தவறு செய்யும் ஜனங்களுக்கு உதவ முடியும்.
நீ தேவனிடம் ஜெபிப்பாய். அவர் அந்த ஜனங்களுக்கு மன்னிப்பார்.
ஏனெனில் நீ அத்தனை பரிசுத்தமாக இருப்பாய்” என்றான்.
யோபு பதில் கூறுகிறான்
23 அப்போது யோபு பதிலாக:
2 “நான் இன்றைக்கு இன்னும் மனங்கசந்து முறையிடுகிறேன்.
ஏனெனில் நான் இன்னும் துன்புற்றுக்கொண்டிருக்கிறேன்.
3 எங்கே தேவனைப் பார்க்கக் கூடுமென நான் அறிந்திருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.
தேவனிடம் போகும் வழியை அறிய விரும்புகிறேன்.
4 நான் தேவனிடம் என் நியாயத்தை விளக்குவேன்.
நான் களங்கமற்றவனெனக் காட்டும் விவாதங்களால் என் வாய் நிரம்பியிருக்கும்.
5 என் விவாதங்களுக்கு தேவன் எவ்வாறு பதிலளிப்பார் என்று அறிவேன்.
தேவனுடைய பதில்களைப் புரிந்துகொள்வேன்.
6 தேவன் எனக்கெதிராக அவரது வல்லமையைப் பயன்படுத்துவாரா?
இல்லை அவர் எனக்குச் செவிகொடுப்பார்!
7 நான் ஒரு நேர்மையான மனிதன்.
என் கதையை நான் கூற, தேவன் அனுமதிப்பார்.
அப்போது என் நீதிபதி என்னை விடுதலையாக்குவார்!
8 “ஆனால் நான் கிழக்கே போனால், அங்கே தேவன் இல்லை.
நான் மேற்கே போனால், அங்கும் நான் தேவனைக் காணேன்.
9 தேவன் வடக்கே பணி செய்யும்போது, நான் அவரைப் பார்க்க முடியவில்லை.
தேவன் தெற்கே திரும்பும்போதும், நான் அவரைக் காணவில்லை.
10 ஆனால் தேவன் என்னை அறிவார்.
அவர் என்னைப் பரிசோதித்துக்கொண்டிருக்கிறார், நான் பொன்னைப்போன்று தூயவனெனக் காண்பார்.
11 தேவன் விரும்புகிறபடியே நான் எப்போதும் வாழ்ந்திருக்கிறேன்.
நான் தேவனைப் பின்பற்றுவதை நிறுத்தியதேயில்லை.
12 நான் தேவனுடைய கட்டளைகளுக்கு எப்போதும் கீழ்ப்படிகிறேன்.
என் உணவைக் காட்டிலும் அதிகமாக தேவனுடைய வாயிலிருந்து வரும் வார்த்தைகளை நான் நேசிக்கிறேன்.
13 “ஆனால் தேவன் மாறுகிறதில்லை.
ஒருவனும் தேவனுக்கெதிராக நிற்கமுடியாது.
தேவன் தான் விரும்புகின்றவற்றையெல்லாம் செய்கிறார்.
14 தேவன் எனக்கென்று அவர் திட்டமிட்டவற்றைச் செய்வார்.
எனக்காக வேறு பல திட்டங்களையும் அவர் வைத்திருக்கிறார்.
15 அதனாலே நான் தேவனுக்குப் பயந்திருக்கிறேன்.
இக்காரியங்களை நான் புரிந்துக்கொள்கிறேன்.
ஆகையால் நான் தேவனுக்குப் பயந்திருக்கிறேன்.
16 தேவன் என் இருதயத்தை இளைக்கச் (சோர்வடைய) செய்கிறார், நான் என் தைரியத்தை இழக்கிறேன்.
சர்வ வல்லமையுள்ள தேவன் என்னை அஞ்சச் செய்கிறார்.
17 என் முகத்தை மூடும் கருமேகத்தைப் போன்று எனக்கு நேர்ந்த தீயகாரியங்கள் உள்ளன.
ஆனால் அந்த இருள் என்னை அடக்காது.
1 இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுருவிடமிருந்து, எங்களைப் போலவே மதிப்புமிக்க விசுவாசத்தைப் பெற்ற மக்களாகிய உங்களுக்கு: நம்முடைய தேவனுடைய நீதியாலும் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவாலும் இந்த விசுவாசத்தை நீங்கள் பெற்றீர்கள். சரியானதையே அவர் செய்கிறார்.
2 தேவனை உண்மையாக அறிவதன் மூலமும், நமது கர்த்தராகிய இயேசுவின் மூலமும் உங்களுக்கு மென்மேலும் கிருபையும் சமாதானமும் கொடுக்கப்படுவதாக!
நமக்குத் தேவையான எல்லாவற்றையும் தேவன் கொடுத்திருக்கிறார்
3 தேவனுடைய வல்லமை இயேசுவிடம் உள்ளது. நாம் வாழ்வதற்கும், தேவனுக்கு சேவை செய்வதற்கும் தேவையான எல்லாவற்றையும் அவரது வல்லமை நமக்குக் கொடுத்திருக்கிறது. நாம் அவரை அறிவதால் நமக்கு இவை கொடுக்கப்பட்டுள்ளன. இயேசு தன் மகிமையாலும், கருணையினாலும் நம்மை அழைத்தார். 4 அவரது மகிமையாலும், நன்மையினாலும் அவர் நமக்கு வாக்களித்த மிகப் பெரிய உயர்ந்த பரிசுகளைக் கொடுத்திருக்கிறார். அப்பரிசுகளால் நீங்கள் தேவனுடைய தன்மையை பகிர்ந்து அடைய முடியும். தீய ஆசைகளால் உலகில் உருவாகும் அழிவுகளிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியும்.
5 உங்களுக்கு இந்த ஆசிகள் இருப்பதால், நல்லதை உருவாக்கவும், நல்லவற்றின் மூலம் அறிவை உருவாக்கவும் உங்கள் விசுவாசத்தின் மூலம் எல்லா முயற்சிகளையும் நீங்கள் எடுக்க வேண்டும். 6 அறிவால் சுயக்கட்டுப்பாட்டை உருவாக்கவும், சுயக்கட்டுப்பாட்டால் சகிப்புத்தன்மையை உருவாக்கவும், சகிப்புத்தன்மையால் தேவனுக்கான அர்ப்பணிப்பை உருவாக்கவும் முயல வேண்டும். 7 தேவ பக்தியின் மூலம் சகோதர சகோதரிகளின் மேல் நேசமும், உங்கள் சகோதர சகோதரிகளின் மேல் உள்ள இந்த நேசத்தின் மூலம் அன்பை உருவாக்கவும் முயற்சி செய்யுங்கள். 8 இவையனைத்தும் உங்களைத் துடிப்பானவர்களாகவும், ஆக்கம் உள்ளவர்களாகவும் ஆக்கும். நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றி முழுக்க அறிந்துகொள்ள இத்தகுதிகள் உங்களுக்கு உதவும். 9 ஆனால் இவையனைத்தும் ஒருவனிடம் இல்லாதிருந்தால் அவனால் தெளிவாகப் பார்க்க இயலாது. அம்மனிதன் குருடனாக இருப்பான். தனது பழைய பாவங்களினின்று அவன் கழுவப்பட்டவன் என்பதை அவன் மறந்து போனவனாவான்.
10 எனது சகோதர சகோதரிகளே, தேவன் உங்களை அழைத்து, அவருக்குரியோராகத் தேர்ந்துகொண்டார். எனவே உங்கள் அழைப்பையும் தேர்வையும் நிரந்தரமாக்கிக்கொள்ள இன்னும் அதிக ஆவலுடையவர்களாக நீங்கள் இருக்கவேண்டும். அவையனைத்தையும் நீங்கள் செய்தால், நீங்கள் ஒருபோதும் வீழ்ச்சியைடைவதில்லை. 11 நமது கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நித்திய இராஜ்யத்தில் நீங்கள் மிகச் சிறந்த வரவேற்பைப் பெறுவீர்கள்.
2008 by World Bible Translation Center