Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 113

113 கர்த்தரைத் துதியுங்கள்.

கர்த்தருடைய ஊழியர்களே, அவரைத் துதியுங்கள்!
    கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்.
கர்த்தருடைய நாமம் என்றென்றும் ஆசீர்வதிக்கப்படுவதாக.
சூரியன் உதிக்கும் கிழக்கிலிருந்து சூரியன் மறைகிற மேற்குவரை
    கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக.
எல்லா தேசங்களிலும் கர்த்தர் உயர்ந்தவர்.
    வானங்கள் மட்டும் அவரது மகிமை எழும்புகிறது.

எங்கள் தேவனாகிய கர்த்தரைப் போன்றோர் எவருமில்லை.
    தேவன் பரலோகத்தின் உயரத்தில் வீற்றிருக்கிறார்.
வானத்தையும் பூமியையும் கீழே குனிந்து நோக்கும்வண்ணம்
    தேவன் நமக்கு மேலே மிக உயரத்தில் இருக்கிறார்.
தூசியிலிருந்து ஏழைகளை தேவன் தூக்கிவிடுகிறார்.
    குப்பைக் குவியலிலிருந்து தேவன் பிச்சைக்காரர்களை வெளியேற்றுகிறார்.
அந்த ஜனங்களை தேவன் முக்கியமானவர்களாக்குகிறார்.
    அந்த ஜனங்களை தேவன் முக்கியமான தலைவர்களாக்குகிறார்.
ஒரு பெண்ணிற்குக் குழந்தைகள் இல்லாமல் இருக்கலாம்,
    ஆனால் தேவன் அவளுக்குக் குழந்தைகளைத் தந்து அவளை மகிழ்ச்சியாக்குவார்.

கர்த்தரைத் துதியுங்கள்!

ஏசாயா 42:14-21

தேவன் மிகவும் பொறுமையானவர்

14 “நீண்ட காலமாக நான் எதையும் சொல்லவில்லை.
    என்னை நான் கட்டுப்படுத்திக் கொண்டேன். நான் எதுவும் சொல்லவில்லை.
ஆனால், இப்போது நான் அலறுகிறேன், ஒரு பெண் பிள்ளை பெறும்போது கதறுவதுபோல,
    நான் கடினமாகவும் உரக்கவும் மூச்சுவிடுகிறேன்.
15 நான் மலைகளையும் குன்றுகளையும் அழிப்பேன்.
    நான் அங்கே வளருகின்ற தாவரங்களை வாடச் செய்வேன்.
நான் ஆறுகளை வறண்ட நிலமாக்குவேன்.
    நான் தண்ணீருள்ள குளங்களையும் வறளச் செய்வேன்.
16 பிறகு, நான் குருடர்களை அவர்கள் அதுவரை அறியாத வழிகளில் நடத்திச் செல்வேன்.
    நான் குருடர்களை அவர்கள் அதுவரை சென்றிராத இடங்களுக்கு அழைத்துச் செல்வேன்.
நான் அவர்களுக்காக இருளை வெளிச்சமாக்குவேன்.
    நான் கரடு முரடான பாதையை மென்மையாக்குவேன்.
நான் வாக்களித்ததைச் செய்வேன்!
    நான் எனது ஜனங்களை விட்டுவிடமாட்டேன்.
17 ஆனால், சிலர் என்னைப் பின்பற்றுவதை நிறுத்திவிட்டார்கள்.
    அவர்களிடம் பொன்னால் மூடப்பட்ட சிலைகள், இருக்கின்றன.
‘நீங்களே எங்கள் தெய்வங்கள்’ என்று அவர்கள் அந்தச் சிலைகளிடம் கூறுகின்றனர்.
    அந்த ஜனங்கள் அவர்களது பொய்த் தெய்வங்களை நம்புகின்றனர்.
    ஆனால் அந்த ஜனங்கள் ஏமாற்றப்படுவார்கள்.

தேவனுக்குச் செவிசாய்க்க இஸ்ரவேலர்கள் மறுத்தார்கள்

18 “செவிடர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்!
    குருடர்களே என்னைப் பாருங்கள், உங்களால் காணமுடியும்!
19 உலகத்தில் என் தாசனே மிகவும் குருடன்.
    இந்த உலகத்திற்கு நான் அனுப்பிய தூதுவனே செவிடன்.
    நான் உடன்படிக்கை செய்துக்கொண்ட ‘கர்த்தருடைய தாசனே’ மிகவும் குருடனாயிருக்கின்றான்.
20 எனது தாசன் அவன் என்ன செய்ய வேண்டும் என்பதைக் காண்கின்றான்.
    ஆனால் அவன் எனக்குக் கீழ்ப்படியவில்லை.
அவன் தனது காதுகளால் கேட்க முடியும்.
    ஆனால் அவன் நான் சொல்வதைக் கேட்க மறுக்கிறான்.”
21 கர்த்தர் தமது தாசன் நல்லவனாக இருக்க விரும்புகிறார்.
    கர்த்தர் தமது அற்புதமான போதனைகளை மகிமைப்படுத்த விரும்புகிறார்.

லூக்கா 1:5-25

சகரியாவும் எலிசபெத்தும்

ஏரோது யூதேயாவை ஆண்ட காலத்தில் சகரியா என்னும் ஆசாரியன் வாழ்ந்து வந்தான். சகரியா அபியாவின் பிரிவினரைச்[a] சார்ந்தவன். ஆரோனின் குடும்பத்தாரைச் சார்ந்தவள் சகரியாவின் மனைவி. அவள் பெயர் எலிசபெத். தேவனுக்கு முன்பாக சகரியாவும், எலிசபெத்தும் உண்மையாகவே நல்லவர்களாக வாழ்ந்தார்கள். தேவன் கட்டளையிட்டவற்றையும், மக்கள் செய்யும்படியாகக் கூறியவற்றையும் அவர்கள் செய்து வந்தனர். அவர்கள் குற்றமற்றவர்களாகக் காணப்பட்டனர். ஆனால், சகரியாவுக்கும், எலிசபெத்துக்கும் குழந்தைகள் இல்லை. எலிசபெத் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் நிலையில் இல்லை. அதோடு இருவரும் முதியோராக இருந்தனர்.

தன் மக்களுக்காக தேவனுக்கு முன்னர் ஒரு ஆசாரியனாக சகரியா பணியாற்றி வந்தான். தேவனின் பணியை அவனது பிரிவினர் செய்ய வேண்டிய காலம் அது. நறுமணப் புகையைக் காட்டுவதற்காக ஆசாரியர் தங்களுக்குள் ஒருவரை எப்போதும் தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள். சகரியா அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். எனவே சகரியா தேவாலயத்திற்குள் நறுமணப்புகை காட்டுவதற்காகச் சென்றான். 10 ஏராளமான மக்கள் வெளியே இருந்தனர். நறுமணப்புகை காட்டும்போது அவர்கள் பிரார்த்தித்துக்கொண்டிருந்தனர்.

11 அப்போது புகை காட்டும் மேசையின் வலது புறத்தில் தேவதூதன் சகரியாவுக்கு முன்பாக வந்து நின்றான். 12 தூதனைப் பார்த்தபோது சகரியா குழப்பமும் பயமும் அடைந்தான். 13 ஆனால் தூதன் அவனைப் பார்த்து, “சகரியாவே, பயப்படாதே. உனது பிரார்த்தனையை தேவன் கேட்டார். உனது மனைவியாகிய எலிசபெத் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பாள். அவனுக்கு யோவான் என்று பெயரிடுவாயாக. 14 நீ மிகவும் சந்தோஷமாக இருப்பாய். அவனது பிறப்பால் பல மக்கள் மகிழ்ச்சி அடைவர். 15 கர்த்தருக்காகப் பெரிய மனிதனாக யோவான் விளங்குவான். அவன் திராட்சை இரசமோ, மதுபானமோ பருகுவதில்லை. பிறக்கிறபோதே பரிசுத்த ஆவியால் நிரம்பியவனாக யோவான் காணப்படுவான்.

16 “நம் தேவனாகிய கர்த்தரிடம் பல யூதர்கள் திரும்புவதற்கு யோவான் உதவுபவன். 17 கர்த்தருக்கு முன்பாக யோவான் முன்னோடியாகச் செல்வான். எலியாவைப் போல் யோவானும் வல்லமை வாய்ந்தவனாக இருப்பான். எலியாவின் ஆவியை உடையவனாக அவன் இருப்பான். தந்தையருக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் இடையே அமைதி நிலவும்படியாகச் செய்வான். பல மக்கள் தேவனுக்குக் கீழ்ப்படிவதில்லை. அவர்களை எல்லாம் மீண்டும் சரியானதென்று மக்கள் எண்ணவேண்டிய பாதைக்கு யோவான் அழைத்து வருவான். கர்த்தரின் வருகைக்கு மக்களை யோவான் தயார் செய்வான்” என்றான்.

18 சகரியா தூதனை நோக்கி, “நீங்கள் சொல்வது உண்மையென்று நான் எவ்வாறு அறிய முடியும்? நான் வயது முதிர்ந்தவன். என் மனைவியும் வயதானவள்” என்றான்.

19 தூதன் அவனுக்குப் பதிலாக, “நான் காபிரியேல். தேவனுக்கு முன்பாக நிற்பவன். உன்னிடம் பேசவும், இந்த நல்ல செய்தியை உன்னிடம் எடுத்துரைக்கவும் தேவன் என்னை அனுப்பினார். 20 இப்போது கேட்பாயாக! இந்தக் காரியங்கள் நடக்கும் நாள்வரைக்கும் நீ பேச முடியாதிருப்பாய். உனது பேசும் சக்தியை நீ இழப்பாய், ஏன்? நான் கூறியதை நீ நம்பாததாலேயே இப்படி ஆகும். ஆனால் இவை அனைத்தும் அதனதன் சரியான சமயத்தில் உண்மையாகவே நடக்கும்” என்றான்.

21 வெளியே சகரியாவுக்காக மக்கள் காத்திருந்தனர். அவன் ஆலயத்தின் உள்ளே வெகு நேரம் இருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். 22 அப்போது சகரியா வெளியே வந்தான். ஆனால் அவர்களோடு பேச முடியவில்லை. அவன் ஆலயத்திற்குள் ஒரு காட்சியைக் காண நேர்ந்தது என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர். சகரியாவால் பேச முடியவில்லை. மக்களுக்குச் சைகைகளையே காட்ட முடிந்தது. 23 சகரியா, ஆலயப் பணி முடிந்ததும் தன் வீட்டுக்குச் சென்றான்.

24 பின்னர் சகரியாவின் மனைவி எலிசபெத் கருவுற்றாள். ஆகவே, அவள் ஐந்து மாதங்கள் வீட்டை விட்டு வெளியே போகவில்லை. பின் எலிசபெத், 25 “தேவன் எனக்குச் செய்திருப்பதைப் பாருங்கள். எனது மக்கள் என் நிலையை எண்ணி வெட்கி இருந்தனர். ஆனால் கர்த்தர் அந்த அவமானத்தைப் போக்கி விட்டார்” என்று கூறினாள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center