Revised Common Lectionary (Complementary)
113 கர்த்தரைத் துதியுங்கள்.
கர்த்தருடைய ஊழியர்களே, அவரைத் துதியுங்கள்!
கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்.
2 கர்த்தருடைய நாமம் என்றென்றும் ஆசீர்வதிக்கப்படுவதாக.
3 சூரியன் உதிக்கும் கிழக்கிலிருந்து சூரியன் மறைகிற மேற்குவரை
கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக.
4 எல்லா தேசங்களிலும் கர்த்தர் உயர்ந்தவர்.
வானங்கள் மட்டும் அவரது மகிமை எழும்புகிறது.
5 எங்கள் தேவனாகிய கர்த்தரைப் போன்றோர் எவருமில்லை.
தேவன் பரலோகத்தின் உயரத்தில் வீற்றிருக்கிறார்.
6 வானத்தையும் பூமியையும் கீழே குனிந்து நோக்கும்வண்ணம்
தேவன் நமக்கு மேலே மிக உயரத்தில் இருக்கிறார்.
7 தூசியிலிருந்து ஏழைகளை தேவன் தூக்கிவிடுகிறார்.
குப்பைக் குவியலிலிருந்து தேவன் பிச்சைக்காரர்களை வெளியேற்றுகிறார்.
8 அந்த ஜனங்களை தேவன் முக்கியமானவர்களாக்குகிறார்.
அந்த ஜனங்களை தேவன் முக்கியமான தலைவர்களாக்குகிறார்.
9 ஒரு பெண்ணிற்குக் குழந்தைகள் இல்லாமல் இருக்கலாம்,
ஆனால் தேவன் அவளுக்குக் குழந்தைகளைத் தந்து அவளை மகிழ்ச்சியாக்குவார்.
கர்த்தரைத் துதியுங்கள்!
30 ராகேல், தன்னால் யாக்கோபுக்குக் குழந்தைகளைக் கொடுக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டாள். அவளுக்கு தன் சகோதரி லேயாள் மீது பொறாமை வந்தது. அவள் யாக்கோபிடம் “எனக்குக் குழந்தையைக் கொடும் அல்லது நான் மரித்துப் போவேன்” என்றாள்.
2 அவனுக்கு அவள் மீது கோபம் வந்தது. அவன், “நான் தேவன் இல்லை. நீ குழந்தை பெற முடியாததற்கு தேவனே காரணம்” என்றான்.
3 பிறகு ராகேல் அவனிடம், “நீர் என் வேலைக்காரி பில்காளோடு பாலின உறவு கொண்டால், எனக்காக அவள் ஒரு குழந்தையைப் பெற்றுத் தருவாள். அவள் மூலம் நான் தாயாக விரும்புகிறேன்” என்றாள்.
4 பின் தனது வேலைக்காரி பில்காளை யாக்கோபிற்குக் கொடுத்தாள். அவன் அவளோடு பாலின உறவு கொண்டான். 5 பில்காள் கருவுற்று ஒரு ஆண் பிள்ளையைப் பெற்றாள்.
6 ராகேல் மகிழ்ந்து, “தேவன் என் பிரார்த்தனையைக் கேட்டு, எனக்கு ஒரு குமாரனை கொடுத்தார்” என்று கூறி அவனுக்கு தாண் என்று பெயர் வைத்தாள்.
7 பில்காள் மீண்டும் கர்ப்பமுற்று இன்னொரு குமாரனைப் பெற்றாள். அவனுக்கு ராகேல் நப்தலி என்று பெயரிட்டு, 8 “எனது சகோதரியோடு போராட நான் கடுமையாக உழைத்திருக்கிறேன். நான் வென்றுவிட்டேன்” என்றாள்.
9 லேயாள் தனக்கு மேலும் குழந்தை இல்லாததைக் கவனித்தாள். மேலும் குழந்தை வேண்டும் என்று தன் வேலைக்காரி சில்பாளை யாக்கோபுக்குக் கொடுத்தாள். 10 பிறகு சில்பாளுக்கும் ஒரு குமாரன் பிறந்தான். 11 “நான் பாக்கியசாலி” என்று லேயாள் மகிழ்ந்தாள். பின் அவனுக்கு காத் என்று பெயரிட்டாள். 12 சில்பாள் மேலும் ஒரு குமாரனைப் பெற்றாள். 13 லேயாள் “நான் மேலும் மகிழ்ச்சி அடைகிறேன். என்னை பார்க்கும் பெண்களும் மகிழ்ச்சியுடன் அழைப்பார்கள்” என்று எண்ணினாள். எனவே அவனுக்கு ஆசேர் என்று பெயரிட்டாள்.
14 கோதுமை அறுவடைக் காலத்தில் ரூபன் வயலுக்குப் போனான். அங்கு சில புதுவகை மலர்களைக்[a] கண்டான். அதனைப் பறித்துக்கொண்டு தன் தாயான லேயாளிடம் வந்தான். ராகேல் இதனைப் பார்த்து, “உன் குமாரன் கொண்டுவந்த மலர்களில் சிலவற்றை எனக்குக் கொடு” என்று கேட்டாள்.
15 அதற்கு லேயாள், “ஏற்கெனவே என் கணவனை எடுத்துக்கொண்டிருக்கிறாய். இப்போது என் குமாரன் கொண்டு வந்த மலர்களையும் எடுக்கப் பார்க்கிறாயா?” என்று மறுத்தாள்.
ஆனால் ராகேலோ, “நீ அந்த மலர்களைக் கொடுத்தால் இன்று இரவு நீ யாக்கோபோடு பாலின உறவுகொள்ளலாம்” என்று சொன்னாள்.
16 யாக்கோபு அன்று இரவு வயலில் இருந்து திரும்பினான். அவனை லேயாள் போய் சந்தித்து, “இன்று இரவு நீங்கள் என்னோடு தூங்கவேண்டும். நான் அதற்காக என் குமாரன் கொண்டு வந்த மலர்களைக் கொடுத்திருக்கிறேன்” என்றாள். அவன் அன்று இரவு அவளோடு இருந்தான்.
17 தேவன் லேயாளை மீண்டும் கர்ப்பவதியாக அனுமதித்தார். அவள் ஐந்தாவது குமாரனைப் பெற்றாள். 18 லேயாள், “நான் என் கணவனுக்கு வேலைக்காரியை கொடுத்ததால் தேவன் எனக்குப் பரிசு கொடுத்திருக்கிறார்” என்று மகிழ்ந்தாள். தன் குமாரனுக்கு இசக்கார் என்று பெயரிட்டாள்.
19 லேயாள் மீண்டும் கர்ப்பமாகி ஆறாவது குமாரனைப் பெற்றாள். 20 லேயாள் “தேவன் எனக்கு அற்புதமான பரிசு கொடுத்திருக்கிறார். இப்போது யாக்கோபு என்னை நிச்சயம் ஏற்றுக்கொள்வார். நான் அவருக்கு ஆறு குமாரர்களைக் கொடுத்திருக்கிறேன்” என்று மகிழ்ச்சி அடைந்தாள். அவனுக்கு செபுலோன் என்று பெயர் வைத்தாள்.
21 பிறகு அவள் ஒரு குமாரத்தியைப் பெற்றாள். அவளுக்கு தீனாள் என்று பெயர் வைத்தாள்.
22 பிறகு தேவன் ராகேலின் பிரார்த்தனையைக் கேட்டு, அவளும் குழந்தை பெறுவதற்கான வாய்ப்பைக் கொடுத்தார். 23-24 அவள் கர்ப்பமாகி ஒரு குமாரனைப் பெற்றாள். “தேவன் எனது அவமானத்தை அகற்றி ஒரு குமாரனைத் தந்துவிட்டார்” என்று மகிழ்ச்சியடைந்தாள். அவள் தன் குமாரனுக்கு யோசேப்பு என்று பெயர் வைத்தாள்.
எதிர்காலச் சிறப்பு
18 இப்பொழுது துன்பப்படுகிறோம். ஆனால் நமக்குக் கொடுக்கப்படப் போகும் சிறப்பை நிகழ்காலத் துன்பத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இத்துன்பம் ஒன்றுமில்லாமல் போகும். 19 தேவனால் உருவாக்கப்பட்ட அனைத்தும் தேவன் தன் பிள்ளைகள் யாரென்பதை வெளிப்படுத்தப் போகும் நாளுக்காக ஆவலோடு காத்திருக்கின்றன. அவை அதனைப் பெரிதும் விரும்புகின்றன. 20 தேவனால் படைக்கப்பட்ட அனைத்தும் பயனற்றவையாக மாற்றப்பட்டுள்ளன. அவை மாற்றமடைய விரும்பாவிட்டாலும் தேவன் அவற்றை மாற்றிவிட முடிவு செய்துள்ளார். 21 ஆனாலும் “தேவனால் படைக்கப்பட்டவையெல்லாம் அழிவிலிருந்து விடுதலை பெறும்” என்ற நம்பிக்கையுண்டு. தேவன் படைத்த எல்லாம், தேவனுடைய பிள்ளைகளுக்குரிய விடுதலையையும், மகிமையையும் பெறும் என்ற நம்பிக்கையும் உண்டு.
22 ஒரு பெண், குழந்தை பெறுவதற்கான நேரத்தை வலியோடு எதிர்ப்பார்த்துக்கொண்டிருப்பது போன்று தேவனால் படைக்கப்பட்டவையெல்லாம் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கின்றன. 23 உலகம் மட்டுமல்ல. நாமும் உள்ளுக்குள் வேதனையோடு காத்துக்கொண்டிருக்கிறோம். தேவனுடைய வாக்குறுதியினுடைய முதல் பாகம் போல் நாம் ஆவியின் முதல் பலனைப் பெற்றிருக்கிறோம். நம்மை தேவன் தமது பிள்ளைகளாக்குவார் என்று நாமும் எதிர்பார்க்கிறோம். அதாவது நாம் நமது சரீரத்தின் விடுதலைக்காக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். 24 அந்த நம்பிக்கையால்தான் நாம் பாதுகாக்கப்பட்டுள்ளோம். கண்ணால் காண முடிவதை நம்புவது என்பது உண்மையில் நம்பிக்கையன்று, நம்மிடம் ஏற்கெனவே இருப்பதை மக்கள் நம்பவேண்டியதில்லை. 25 இதுவரை நாம் பெறாததைப் பெறுவதற்குப் பொறுமையோடு காத்திருப்போம்.
26 அதோடு ஆவியானவர் நமக்கு உதவுகிறார். நாம் பலவீனமானவர்கள். ஆவியானவர் நமது பல வீனங்களில் உதவுகிறார். நாம் எவ்வாறு வேண்டிக்கொள்வது என்பதைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம். எனினும் ஆவியானவர் நமக்காக தேவனிடம் வேண்டுகிறார். அவரது வேண்டுதல்களை வார்த்தைகளால் விளக்கிச் சொல்ல இயலாது. 27 மக்களின் மனதில் உள்ளதை தேவன் ஆராய்கிறார். ஆவியானவரின் மனதில் உள்ளதும் தேவனுக்குத் தெரியும். ஏனென்றால் தேவனுடைய விருப்பப்படியே ஆவியானவரின் வேண்டுதல்கள் மக்களுக்காக அமைந்திருக்கும்.
28 தன்னை நேசிக்கும் மக்களுக்கு தேவன் எல்லாவற்றின் மூலமும் நன்மை செய்கிறார் என்பதை நாம் அறிகிறோம். தேவன் இம்மக்களைத் தம் திட்டப்படியே தேர்ந்தெடுத்துள்ளார். 29 தேவன் அம்மக்களை உலகம் படைக்கப்படுவதற்கு முன்னரே அறிந்திருக்கிறார். அம்மக்களைத் தம் குமாரனைப் போலவே இருக்கும்படி முடிவு செய்தார். அநேக சகோதரர்களுக்குள்ளே தமது குமாரனே முதற் பேறானவராய் இருக்க வேண்டும் என விரும்பினார். 30 எனவே தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாய் இருப்பதற்கு முன்குறித்திருக்கிறார். அவர்களைத் தேர்ந்தெடுத்தார். அவர்களை நீதிமான்களாக்கினார். அவர்களை மகிமையும்படுத்தினார்.
2008 by World Bible Translation Center