Revised Common Lectionary (Complementary)
தாவீதின் மிக்தாம் என்னும் பாடல்.
16 தேவனே, நாம் உம்மைச் சார்ந்திருப்பதால் என்னைக் காத்துக்கொள்ளும்.
2 நான் கர்த்தரை நோக்கி, “கர்த்தாவே, நீர் என் ஆண்டவர்,
என்னிடமுள்ள நற்காரியம் ஒவ்வொன்றும் உம்மிடமிருந்து வருகிறது” என்றேன்.
3 பூமியிலுள்ள தன் சீடருக்கு கர்த்தர் அற்புதமானவற்றைச் செய்கிறார்.
அந்த ஜனங்களை உண்மையாய் நேசிப்பதை கர்த்தர் காட்டுகிறார்.
4 பிற தெய்வங்களைத் தொழுதுகொள்ள ஓடும் ஜனங்களோ வேதனைக்கு ஆளாவார்கள்.
அவ்விக்கிரகங்களுக்கு அவர்கள் படைக்கும் இரத்த பலிகளில் நான் பங்கு கொள்ளமாட்டேன்.
அவ்விக்கிரகங்களின் பெயர்களையும் கூட நான் கூறமாட்டேன்.
5 என் பங்கும் பாத்திரமும் கர்த்தரிடமிருந்தே வரும்.
கர்த்தாவே, எனக்கு உதவும், என் பங்கை எனக்குத் தாரும்.
6 என் பரம்பரைச் சொத்து அற்புதமானது.
நான் பெற்ற பங்கு மிக அழகானது.
7 எனக்கு நன்கு போதித்த கர்த்தரைத் துதிப்பேன்.
இரவில் என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து இந்த ஆலோசனைகள் வருகின்றன.
8 என் கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்.
அவர் என் வலதுபுறத்திலிருப்பதால் நிச்சயமாய் விலகமாட்டேன்.
9 என் இருதயமும் ஆத்துமாவும் மிகவும் மகிழும்.
என் உடலும் பாதுகாப்பாய் வாழும்.
10 ஏனெனில் கர்த்தாவே, என் ஆத்துமாவை மரணத்தின் இடத்தில் இருக்கவிடமாட்டீர்.
உம்மீது நம்பிக்கை வைத்த ஒருவரையும் கல்லறையில் அழுகிப்போக அனுமதிக்கமாட்டீர்.
11 சரியான வழியில் வாழ நீர் எனக்குப் போதிப்பீர்.
கர்த்தாவே, உம்மோடிருப்பதே எனக்குப் பூரண ஆனந்தம் தரும்.
உமது வலதுபுறத்தில் தங்குவதே என்றென்றும் இன்பம் தரும்.
19 தானியேல் (பெல்தெஷாத்சார்) ஒருமணி நேரத்திற்கு மிகவும் அமைதியாக இருந்தான். அவனது சிந்தனை அவனைப் பாதித்தது. எனவே, ராஜா அவனிடம்: “பெல்தெஷாத்சாரே (தானியேல்) கனவோ அல்லது அதன் பொருளோ உன்னைக் கலங்கப் பண்ண வேண்டியதில்லை” என்றான்.
பிறகு பெல்தெஷாத்சார் (தானியேல்) ராஜாவுக்குப் பதில் சொன்னான். என் எஜமானரே! அந்தக் கனவு உமது பகைவரைக் குறித்ததாய் இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அந்தக் கனவின் பொருளும் உமக்கு விரோதமானவர்களைக் குறித்ததாக இருக்கவேண்டுமென நான் விரும்புகிறேன். 20-21 நீர் உமது கனவில் ஒரு மரத்தைப் பார்த்தீர். அம்மரம் பெரிதாகவும் பலமானதாகவும் வளர்ந்தது. அதின் உச்சி வானத்தைத் தொட்டது. அது பூமியின் எல்லா இடங்களிலிருந்தும் பார்க்கக்கூடியதாக இருந்தது. அதன் இலைகள் அழகாய் இருந்தன. அதில் ஏராளமாகப் பழங்கள் இருந்தன. அப்பழங்கள் ஏராளமானவர்களுக்கு உணவாகியது. அது காட்டுமிருங்களுக்கு வீடாகியது. அதன் கிளைகள் பறவைகளுக்குக் கூடாகியது. நீர் பார்த்த மரம் இதுதான். 22 ராஜாவே, நீரே அந்த மரம். நீர் சிறப்பும், வல்லமையும் பெற்றிருக்கிறீர். நீர் வானத்தைத் தொடும் மரத்தைப்போன்று உயர்ந்து உமது வல்லமை பூமியின் அனைத்துப் பாகங்களையும் போய் அடைந்திருக்கிறது.
23 “ராஜாவே, நீர் பரலோகத்திலிருந்து ஒரு பரிசுத்தமான தேவதூதன் வருவதைப் பார்த்தீர். அவன், இம்மரத்தை வெட்டு, இதனை அழித்துப்போடு, அதற்கு இரும்பாலும் வெண்கலத்தாலுமான விலங்கைப் போடு. அதன் தண்டையும் வேர்களையும் பூமியிலேயே விட்டுவிடு. அதனைப் புல்வெளியில் விட்டுவிடு. அது பனியில் நனையும். அவன் காட்டு மிருகத்தைப் போன்று வாழ்வான். ஏழு பருவங்கள் (காலங்கள்) அவன் இவ்வாறு இருக்கும்போதே கடந்துபோகும்.
24 “கனவின் பொருள் இதுதான், ராஜாவே, மிக உன்னதமான தேவன் அரசருக்கு இவை ஏற்படும்படி கட்டளையிட்டார். 25 ராஜாவான நேபுகாத்நேச்சாரே, நீர் ஜனங்களை விட்டுப் போகும்படி வற்புறுத்தப்படுவீர். நீர் காட்டு மிருகங்களுக்கு மத்தியில் வாழ்வீர். நீர் மாடுகளைப்போன்று புல்லைத் தின்பீர். நீர் பனியில் நனைவீர். ஏழு பருவங்கள் (ஆண்டுகள்) கடந்துபோகும். பிறகு நீர் உன்னதமான தேவனே மனித இராஜ்யங்களை ஆளுகிறார் என்பதையும், உன்னதமான தேவன் தான் விரும்புகிற எவருக்கும் இராஜ்யங்களைக் கொடுப்பார் என்பதையும் கற்றுக்கொள்வீர்.
26 “மரத்தின் தண்டையும் வேர்களையும் பூமியில் விடவேண்டும் என்பதன் பொருள் இதுதான்: உமது இராஜ்யம் உம்மிடம் திருப்பிக்கொடுக்கப்படும். உமது இராஜ்யத்தை உன்னதமான தேவன் ஆளுகிறார் என்பதை நீர் கற்கும்போது இது நிகழும். 27 எனவே, ராஜாவே, எனது ஆலோசனையை ஏற்றுக்கொள்ளும். நீர் பாவம் செய்வதை நிறுத்தி சரியானவற்றைச் செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறேன். தீமை செய்வதை நிறுத்தும். ஏழை ஜனங்களிடம் இரக்கமாயிரும். பிறகு நீர் வெற்றியுள்ளவராக இருப்பீர்.”
கிறிஸ்துவில் தொடர்ந்து வாழுங்கள்
6 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நீங்கள் அடைந்துள்ளீர்கள். எனவே எதையும் மாற்றிக்கொள்ளாமல் தொடர்ந்து அவரைப் பின்பற்றி வாழுங்கள். 7 கிறிஸ்துவை மட்டும் நீங்கள் சார்ந்திருங்கள். வாழ்க்கையும், பலமும் அவரிடமிருந்து வருகின்றன. உங்களுக்கு அந்த உண்மை கற்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த உண்மையான போதனையில் நீங்கள் தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும். எப்பொழுதும் நன்றி உள்ளவர்களாய் இருங்கள்.
8 பொய்யான எண்ணங்களாலும், பொருளற்ற சொற்களாலும் எவரும் உங்களை வழி நடத்திச் செல்லாதபடி உறுதியாய் இருங்கள். இத்தகைய எண்ணங்கள் கிறிஸ்துவிடமிருந்து வராது. மக்களிடமிருந்தே வருகிறது. இவை உலக மக்களின் பயனற்ற எண்ணங்கள். 9 தேவனுடைய முழுமை கிறிஸ்துவிடம் வாழ்கிறது. 10 கிறிஸ்துவுக்குள் நீங்கள் முழுமையாக இருக்கிறீர்கள். உங்களுக்கு வேறு எதுவும் தேவை இல்லை. அனைத்து அதிகாரங்களையும் ஆள்வோர்களையும் ஆளுபவர் கிறிஸ்து ஆவார்.
11 கிறிஸ்துவுக்குள் நீங்கள் வித்தியாசமான விருத்தசேதனத்தைப் பெற்றிருக்கிறீர்கள். இதுவேறு எவரின் கையாலும் செய்யப்பட்டதன்று. உங்களுடைய பழைய பாவம் மிக்க சுபாவத்தின் சக்தியிலிருந்து கிறிஸ்துவின் விருத்தசேதனம் வழியாக விடுதலையாக்கப்பட்டீர்கள். இது கிறிஸ்துவின் விருத்தசேதனமாகும். 12 நீங்கள் ஞானஸ்நானம் பெற்றபோது உங்கள் பழைமை இறந்து கிறிஸ்துவோடு புதைக்கப்பட்டது. அந்த ஞானஸ்நானத்தில் கிறிஸ்துவுடன் நீங்களும் உயிர்த்தெழுந்தீர்கள். ஏனென்றால் நீங்கள் தேவனுடைய சக்தியில் விசுவாசமாய் இருந்தீர்கள். கிறிஸ்துவை மரணத்திலிருந்து உயிர்த்தெழச் செய்ததன்மூலம் தேவன் தன் வல்லமையை வெளிப்படுத்திவிட்டார்.
13 உங்களது பாவங்களாலும் பாவம் மிக்க சுயசுபாவத்தின் சக்தியிலிருந்தும் விடபட முடியாததாலும் ஆன்மீக நிலையில் இறந்திருந்தீர்கள். ஆனால், தேவன் உங்களைக் கிறிஸ்துவுடன் உயிருடன் இருக்கச் செய்தார். அவர் நமது பாவங்களையும் மன்னித்துவிட்டார். 14 தேவனுடைய சட்டங்களை நாம் மீறிவிட்டதால் நாம் கடன்பட்டிருந்தோம். எந்தெந்த சட்டங்களை நாம் மீறினோம் என்பதை அக்கடன் பட்டியலிட்டது. ஆனால் தேவன் அந்தக் கடனை நமக்கு மன்னித்துவிட்டார். தேவன் அக்கடனை அப்புறப்படுத்தி ஆணிகளால் சிலுவையில் அறைந்துவிட்டார். 15 தேவன் ஆன்மீக நிலையில் ஆள்வோர்களையும் அதிகாரங்களையும் தோற்கடித்தார். இவ்வெற்றியை அவர் சிலுவையின் மூலம் பெற்றார். அவை பலமற்றவை என்பதை தேவன் உலகுக்குக் காட்டினார்.
2008 by World Bible Translation Center