Revised Common Lectionary (Complementary)
146 கர்த்தரை துதி!
என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
2 என் வாழ்க்கை முழுவதும் நான் கர்த்தரைத் துதிப்பேன்.
என் வாழ்க்கை முழுவதும் நான் அவருக்குத் துதிகளைப் பாடுவேன்.
3 உதவிக்காக உங்கள் தலைவர்களை சார்ந்திராதீர்கள்.
ஜனங்களை நம்பாதீர்கள். ஏனெனில் ஜனங்கள் உங்களைக் காப்பாற்றமுடியாது.
4 ஜனங்கள் மரித்தபின் புதைக்கப்படுவார்கள்.
அப்போது உதவி செய்வதற்கான அவர்கள் திட்டங்கள் எல்லாம் மறைந்துபோகும்.
5 ஆனால் தேவனிடம் உதவி வேண்டுகிற ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
அந்த ஜனங்கள் அவர்களின் தேவனாகிய கர்த்தரை சார்ந்திருக்கிறார்கள்.
6 கர்த்தர் பரலோகத்தையும், பூமியையும் உண்டாக்கினார்.
கர்த்தர் கடலையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினார்.
கர்த்தர் அவற்றை என்றென்றும் பாதுகாப்பார்.
7 ஒடுக்கப்பட்ட ஜனங்களுக்கு ஆண்டவர் நீதி வழங்குகிறார்.
தேவன் ஏழைகளுக்கு உணவளிக்கிறார்.
சிறைகளில் பூட்டி வைக்கப்பட்ட ஜனங்களை கர்த்தர் விடுவிக்கிறார்.
8 குருடர் மீண்டும் காண்பதற்கு கர்த்தர் உதவுகிறார்.
தொல்லையில் சிக்குண்ட ஜனங்களுக்கு கர்த்தர் உதவுகிறார்.
கர்த்தர் நல்லோரை நேசிக்கிறார்.
9 நம் நாட்டிலுள்ள அந்நியர்களை கர்த்தர் காப்பாற்றுகிறார்.
விதவைகளையும் அநாதைகளையும் கர்த்தர் கவனித்துக் காக்கிறார்.
ஆனால் கர்த்தர் தீயோரை அழிக்கிறார்.
10 கர்த்தர் என்றென்றும் அரசாளுவார்!
சீயோனே, உன் தேவன் என்றென்றும் எப்போதும் அரசாளுவார்!
கர்த்தரைத் துதியுங்கள்!
17 “உங்களைச் சார்ந்துள்ள அந்நியர்களையும், அநாதைகளையும், நியாயமாகவே நடத்துவதில் உறுதிகொண்டு இருக்க வேண்டும். விதவைகளின் ஆடைகள் துணிமணிகளை அடமானமாக ஒருபோதும் வாங்கிகொள்ளக்கூடாது. 18 எகிப்தில் நீங்கள் ஏழை அடிமைகளாக இருந்ததை மறந்துவிடாதீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் அங்கிருந்து உங்களை மீட்டுவந்து நீங்கள் சுதந்திரமாக வாழ அமைத்துக் கொடுத்ததை மறந்துவிடாதீர்கள். அதனால்தான் ஏழை ஜனங்களிடம் நீங்கள் இவ்வாறாக நடந்து கொள்ளவேண்டும் என்று சொல்லுகிறேன்.
19 “நீங்கள் உங்கள் விளைநிலங்களில் அறுவடை செய்து எடுத்து வரும்போது கொஞ்சம் தானியத்தை மறந்து அங்கேயே விட்டுவிட்டு வந்தீர்கள் என்றால் அவற்றை எடுக்க நீங்கள் திரும்பிச் செல்லக்கூடாது. அவை அந்நியர்களுக்கும் ஆதரவற்ற அநாதைகளுக்கும், விதவைகளுக்கும் இருக்கட்டும். கொஞ்சம் தானியத்தை அவர்களுக்காக அங்கேயேவிட்டு வந்தால், உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் செய்கின்ற எல்லாக் காரியங்களையும் ஆசீர்வதிப்பார். 20 நீங்கள் உங்கள் ஒலிவ மரத்தை உதிர்த்துவிட்டுத் திரும்பிய பின்பு மீண்டும் அதன் கிளைகளிலே தப்பியவற்றைப் பறிப்பதற்குத் திரும்பிப்போக வேண்டாம். அவற்றை உங்களைச் சார்ந்த அந்நியர்களுக்கும், ஆதரவற்ற அநாதைகளுக்கும், விதவைகளுக்கும் விட்டு வைப்பீர்களாக. 21 நீங்கள் உங்கள் திராட்சைத் தோட்டங்களில் திராட்சைப் பழங்களைப் பறித்து சேர்த்த பின்பு தப்பிக்கிடக்கும் பழங்களைப் பறிப்பதற்கு மீண்டும் அங்கே செல்ல வேண்டாம். அந்தத் திராட்சைப் பழங்கள் உங்களைச் சார்ந்த அந்நியர்களுக்கும், ஆதரவற்ற அநாதைகளுக்கும், விதவைகளுக்கும் விட்டு வைப்பீர்களாக. 22 நீங்கள் எகிப்தில் ஏழை அடிமைகளாக இருந்ததை நினைத்துப்பாருங்கள். அதனால்தான் இந்த ஏழை ஜனங்களுக்காக இவைகளைச் செய்யுங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
அத்திமரம் பட்டுப்போவதை இயேசு அறிவித்தல்
(மத்தேயு 21:18-19)
12 மறுநாள், அவர்கள் பெத்தானியாவை விட்டுப் புறப்பட்டனர். அவருக்குப் பசித்தது. 13 இயேசு இலைகள் நிறைந்த அத்தி மரம் ஒன்றைப் பார்த்தார். அவர் அதனருகில் சென்று ஏதேனும் பழங்கள் உள்ளனவா என்று கவனித்தார். அதில் பழங்கள் ஏதுமில்லை. வெறும் இலைகளே இருந்தன. அது கனி கொடுப்பதற்கு உரிய சரியான காலம் இல்லை. 14 ஆகையால் இயேசு அத்தி மரத்திடம், “இனி மக்கள் யாரும் உன்னிடமிருந்து ஒரு போதும் பழத்தைத் தின்னமாட்டார்கள்” என்றார். இயேசு சொன்னதை சீஷர்களும் கேட்டுக்கொண்டிருந்தனர்.
விசுவாசத்தின் வல்லமை
(மத்தேயு 21:20-22)
20 மறுநாள் காலையில் இயேசு தனது சீஷர்களோடு நடந்துகொண்டிருந்தார். முந்தின நாள் இயேசு சபித்த அத்தி மரத்தை அவர்கள் பார்த்தனர். அம்மரம் செத்து, காய்ந்து, வேரும் உலர்ந்துபோய் இருந்தது. 21 பேதுரு அம்மரத்தைப்பற்றி நினைவுகூர்ந்து இயேசுவிடம், “போதகரே! பாருங்கள். நேற்று இம்மரம் பட்டுப்போகுமாறு சொன்னீர்கள். இன்று இது உலர்ந்து இறந்துவிட்டது” என்றான்.
22 அதற்கு இயேசு, “தேவனிடம் விசுவாசம் வைத்திருங்கள். 23 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். ‘மலையே போ, போய்க் கடலில் விழு!’ என்று உங்களால் மலைக்கு ஆணையிட முடியும். உங்கள் மனதில் சந்தேகம் இல்லாதிருந்தால், நீங்கள் சொல்வது நடக்கும் என்கிற விசுவாசம் உங்களுக்கு இருக்குமானால், தேவன் உங்களுக்காக அவற்றைச் செய்வார். 24 ஆகையால் உங்கள் பிரார்த்தனையின்போது தேவனிடம் காரியங்களைக் கேளுங்கள். அவற்றைக் கிடைக்கப்பெற்றோம் என்று நீங்கள் நம்பினால் அவை உங்களுக்கு உரியதாகும்.
2008 by World Bible Translation Center