Revised Common Lectionary (Complementary)
இராகத் தலைவனுக்கு தாவீது எழுதிய பாடல். பத்சேபாளோடு தாவீது செய்த பாவத்திற்குப் பிறகு தீர்க்கதரிசியாகிய நாத்தான் தாவீதிடம் சென்ற காலத்தில் இது பாடப்பட்டது.
51 தேவனே உமது மிகுந்த அன்பான தயவினாலும் மிகுந்த இரக்கத்தினாலும் என்னிடம் இரக்கமாயிரும்.
என் பாவங்களை அழித்துவிடும்.
2 தேவனே, எனது குற்றத்தைத் துடைத்துவிடும்.
என் பாவங்களைக் கழுவிவிடும்.
என்னை மீண்டும் தூய்மைப்படுத்தும்!
3 நான் பாவம் செய்தேனென அறிவேன்.
அப்பாவங்களை எப்போதும் நான் காண்கிறேன்.
4 நீர் தவறெனக்கூறும் காரியங்களைச் செய்தேன்.
தேவனே, நான் உமக்கு விரோதமாக பாவம் செய்தேன்.
நான் தவறு செய்தவன் என்பதையும், நீர் நியாயமானவர் என்பதையும், ஜனங்கள் அறியும் பொருட்டு இவற்றை அறிக்கையிடுகிறேன்.
உமது முடிவுகள் நியாயமானவை.
5 நான் பாவத்தில் பிறந்தேன்.
என் தாய் என்னைப் பாவத்தில் கருவுற்றாள்.
6 தேவனே! நான் உண்மையும் நேர்மையும் உள்ளவனாக விரும்பினால்
உண்மையான ஞானத்தை என்னுள்ளே வையும்.
7 ஈசோப்பு செடியால் என்னைத் தூய்மையாக்கும்.
பனியைக் காட்டிலும் நான் வெண்மையாகும் வரை என்னைக் கழுவும்!
8 என்னை மகிழ்ச்சியாக்கும். மீண்டும் மகிழ்ச்சியாக இருக்கும் வகையைக் கூறும்.
நீர் நொறுக்கின என் எலும்புகள் மீண்டும் மகிழ்ச்சியடையட்டும்.
9 எனது பாவங்களைப் பாராதேயும்!
அவற்றை யெல்லாம் நீக்கிவிடும்
10 தேவனே, எனக்குள் ஒரு பரிசுத்த இருதயத்தைச் சிருஷ்டியும்!
எனது ஆவியை மீண்டும் பலமாக்கும்.
11 என்னைத் தூரத் தள்ளாதேயும்!
என்னிடமிருந்து உமது பரிசுத்த ஆவியை எடுத்துவிடாதேயும்!
12 உமது உதவி என்னை மகிழ்விக்கிறது!
மீண்டும் அந்தச் சந்தோஷத்தை எனக்குக் கொடும்.
எனது ஆவியைப் பலப்படுத்தி உமக்குக் கீழ்ப்படிவதற்குத் தயாராக இருக்கச்செய்யும்.
13 நீர் கூறும் வாழ்க்கை நெறியைப் பாவிகளுக்குப் போதிப்பேன்,
அவர்கள் உம்மிடம் திரும்புவார்கள்.
14 தேவனே, என்னைக் கொலைக் குற்றவாளியாக்காதேயும்.
என் தேவனே, நீரே எனது மீட்பர்.
நீர் எவ்வளவு நல்லவர் என்பதை நான் பாடச் செய்யும்.
15 என் ஆண்டவரே, நான் என் வாயைத் திறந்து உம்மைத் துதித்துப் பாடுவேன்!
16 நீர் பலிகளை விரும்பவில்லை.
நீர் விரும்பாத பலிகளை நான் கொடுக்கத் தேவையில்லை!
17 தேவன் விரும்பும் பலி பணிவான ஆவியே.
தேவனே, உடைந்து நொறுங்கிப்போன இருதயத்தோடு உம்மிடம் வருபவரை நீர் தள்ளிவிடமாட்டீர்.
18 தேவனே, சீயோனிடம் நல்லவராகவும் இரக்கமுடையவராகவும் இரும்.
எருசலேமின் சுவர்களை எழுப்பும்.
19 அப்போது நீர் நல்ல பலிகளையும் தகன பலி முழுவதையும் ஏற்று மகிழமுடியும்.
ஜனங்கள் மீண்டும் உமது பலிபீடத்தில் காளைகளைப் பலியிடுவார்கள்.
10 “ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய உங்கள் முற்பிதாக்களிடம் உங்கள் தேவனாகிய கர்த்தர் இந்தப் பூமியை உங்களுக்குத் தருவதாகக் கூறினார். கர்த்தர் உங்களுக்கு அந்த பூமியைக் கொடுப்பார். நீங்கள் இதுவரை உருவாக்காத வளமான பெரிய நகரங்களைத் தருவார். 11 நீங்கள் வைத்திராத சிறந்த நல்ல பொருட்கள் பலவற்றைக்கொண்ட வீடுகளை கர்த்தர் உங்களுக்குத் தருவார். நீங்கள் இதுவரைத் தோண்டியிருக்காத கிணறுகளைத் தருவார். நீங்கள் இதுவரைப் பயிரிடாத திராட்சைத் தோட்டங்கள், ஒலிவ மரங்கள் போன்றவற்றை கர்த்தர் உங்களுக்குத் தருவார். நீங்கள் திருப்தியாக உண்ணலாம்.
12 “ஆனால் எச்சரிக்கையாய் இருங்கள்! கர்த்தரை மறந்துவிடாதிருங்கள். நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தீர்கள், ஆனால் கர்த்தர் உங்களை அந்த அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வந்தார். 13 உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மரியாதை செய்து அவர் ஒருவரை மட்டும் சேவியுங்கள். அவரது பெயரை மட்டுமே வைத்து மற்றவருக்கு வாக்களியுங்கள் (பிற பொய்த் தெய்வங்களின் பெயரைப் பயன்படுத்தாதிருங்கள்!) 14 நீங்கள் கண்டிப்பாக பிற பொய்த் தெய்வங்களைப் பின்பற்றக் கூடாது. உங்களைச் சுற்றியிருக்கின்ற ஜனங்களின் பிற பொய்த் தெய்வங்களை நீங்கள் பின்பற்றக் கூடாது. 15 உங்கள் தேவனாகிய கர்த்தர் எப்போதும் உங்களுடன் இருக்கிறார். அவர் தமது ஜனங்கள் பிற பொய்த் தெய்வங்களை தொழுதுகொள்வதை வெறுக்கின்றார். எனவே, நீங்கள் அத்தகைய தெய்வங்களைப் பின்பற்றினால் உங்கள் மீது கர்த்தர் மிகவும் கோபங்கொள்வார். அவர் உங்களை இந்தப் பூமியில் இருந்தே அழித்துவிடுவார்.
16 “நீங்கள் மாசாவிலே செய்ததுபோல் உங்கள் தேவனாகிய கர்த்தரை சோதனை செய்யாதீர்கள். 17 உங்கள் தேவனாகிய கர்த்தருடைய, கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். அவர் உங்களுக்காக வழங்கிய எல்லா போதனைகளையும், சட்டங்களையும் நீங்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். 18 நீங்கள் கர்த்தரைத் திருப்திப்படுத்தும்படி நல்லவற்றையும், சரியானவற்றையும் மட்டுமே செய்யவேண்டும். அப்போது எல்லாம் உங்களுக்கு நன்றாகவே நடக்கும். கர்த்தர் உங்கள் முற்பிதாக்களுக்கு உறுதியளித்த தேசத்தில் போய் நல்ல நிலங்களை எடுத்துக்கொள்ளலாம். 19 கர்த்தர் சொன்னது போல் உங்கள் எதிரிகள் அனைவரையும் நீங்கள் துரத்திவிடலாம்.
தேவன் செய்தவற்றை உங்கள் பிள்ளைகளுக்குப் போதியுங்கள்
20 “வருங்காலத்தில், ‘நமது தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு வழங்கிய போதனைகளுக்கும், சட்டங்களுக்கும், நியாயங்களுக்கும் அர்த்தம் என்ன?’ என்று உன்னுடைய குமாரன் உன்னிடம் கேட்கலாம். 21 நீ உன் மகனிடம் சொல், ‘நாங்கள் எகிப்தில் பார்வோனுக்கு அடிமைகளாக இருந்தோம். அப்போது கர்த்தர் தன் வல்லமையான கரத்தினாலே எகிப்திலிருந்து எங்களை வெளியேறச் செய்து மீட்டுக்கொண்டார். 22 கர்த்தர் அங்கே சிறந்த அற்புதங்களைச் செய்தார். கர்த்தர் எங்கள் கண்களுக்கு முன்பே எகிப்தின் மீதும், பார்வோன் மீதும், அவன் குடும்பம் அனைத்தின் மீதும், கொடிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்தார். 23 பின்பு கர்த்தர் நமது முற்பிதாக்களுக்கு கூறியபடி இந்த தேசத்தை நமக்குக் கொடுக்கும்படி நம்மை எகிப்திலிருந்து வெளியேறச் செய்தார், 24 கர்த்தர் போதித்த அனைத்தையும் நாம் பின்பற்றும்படி கர்த்தர் நமக்கு கட்டளையிட்டார். நாம் நமது தேவனாகிய கர்த்தருக்கு மிகுந்த மரியாதை செலுத்த வேண்டும். அப்போது கர்த்தர் நாம் இன்று இருக்கிற வண்ணமாக எப்போதும் வாழ்ந்து செழிப்பாக இருக்கும்படிச் செய்வார். 25 நமது தேவனாகிய கர்த்தர் சொன்னபடியே அவரது சட்டங்களை நாம் கவனமாகப் பின்பற்றினோம் என்றால், அப்போது தேவன் நாம் மிக நல்ல காரியத்தைச் செய்தோம்’” என்று சொல்வார்.
17 யாரேனும் உங்களுக்குத் தீமை செய்தால் அவர்களுக்குத் தீமையையே திரும்பிச் செய்யாதீர்கள். எல்லாராலும் நல்லவை என்று எண்ணப்படுவதையே நீங்களும் எவ்வளவு செய்ய முடியும் என்று பாருங்கள். 18 முடிந்தளவு எல்லா மக்களோடும் சமாதானமாய் இருங்கள். 19 என் அன்பு நண்பர்களே, எவரேனும் உங்களுக்குத் தீமை செய்தால் அவர்களைத் தண்டிக்க முயலாதீர்கள். தேவன் தன் கோபத்தால் அவர்களைத் தண்டிக்கும் வரையில் பொறுத்திருங்கள்.
“நானே தண்டிக்கிறேன்.
நானே பதிலுக்குப் பதில் செய்வேன்”(A)
என்று கர்த்தர் கூறுகிறார் என்று எழுதப்பட்டுள்ளது.
20 “உங்கள் பகைவன் பசியாய் இருந்தால்
அவனுக்கு உணவைக் கொடுங்கள்.
அவன் தாகமாய் இருந்தால் அவன்
குடிக்க ஏதாவது கொடுங்கள்.
இதன் மூலம் அவனை வெட்கம்கொள்ளச் செய்யலாம்.”(B)
21 பாவத்திடம் தோல்வி அடைந்துவிடாதீர்கள். நன்மை செய்வதின் மூலம் தீமையை நீங்கள் தோற்கடித்து விடுங்கள்.
பிறரை நேசிப்பதே பிரமாணம்
8 எதற்காகவும் மற்றவர்களிடம் கடன் படாதிருங்கள். அன்புக்கு மட்டும் கடன்படுங்கள். மற்றவர்களிடம் அன்பு செலுத்துகிற ஒருவன் உண்மையில் சட்டமுழுவதிற்கும் அடிபணிந்தவனாய் இருப்பான். 9 இவற்றையெல்லாம் நான் எதற்காகக் கூறுகிறேன் என்றால் “விபசாரம் செய்யாதிருங்கள். கொலை செய்யாதிருங்கள். களவு செய்யாதிருங்கள். அடுத்தவர்க்கு உரிய பொருட்களை விரும்ப வேண்டாம்.”(A) சட்டவிதி இவற்றைச் சொல்கிறது. இவை எல்லா கட்டளைகளும், “தன்னை தானே நேசித்துக்கொள்வது போலவே ஒருவன் அடுத்தவனையும் நேசிக்க வேண்டும்”(B) என்று ஒரு விதியையே சொல்கின்றன. 10 அன்பானது மற்றவர்களுக்குத் தவறு செய்யாதது. எனவே, அன்பு சட்டவிதியின் நிறைவேறுதலாய் இருக்கிறது.
2008 by World Bible Translation Center