Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 37:23-40

23 ஒரு வீரன் கவனமாக நடப்பதற்கு கர்த்தர் உதவுகிறார்.
    அவன் விழாதபடி கர்த்தர் வழி நடத்துகிறார்.
24 வீரன் ஓடி பகைவனை எதிர்த்தால்
    கர்த்தர் வீரனின் கைகளைப் பிடித்து அவன் விழாதபடி தாங்கிக் கொள்கிறார்.

25 நான் இளைஞனாக இருந்தேன்.
    இப்போது வயது முதிர்ந்தவன்.
நல்லோரை தேவன் கைவிடுவிடுவதை நான் பார்த்ததில்லை.
    நல்லோரின் பிள்ளைகள் உணவிற்காக பிச்சையெடுப்பதை நான் பார்த்ததில்லை.
26 ஒரு நல்ல மனிதன் பிறருக்குத் தாராளமாகக் கொடுக்கிறான்.
    நல்ல மனிதனின் பிள்ளைகள் ஆசீர்வாதமாக இருப்பார்கள்.

27 தீமை செய்ய மறுத்து நல்லவற்றையே நீ செய்தால்
    என்றென்றும் நீ வாழ்வாய்.
28 கர்த்தர் நீதியை விரும்புகிறார்.
    அவரைப் பின்பற்றுவோரை உதவியின்றிக் கைவிட்டதில்லை.
கர்த்தர் அவரைப் பின்பற்றுவோரை எப்போதும் பாதுகாக்கிறார்.
    ஆனால் கெட்ட ஜனங்களை அவர் அழித்துவிடுவார்.
29 தேவன் வாக்களித்த தேசத்தை நல்லோர் பெறுவார்கள்.
    அங்கு அவர்கள் எந்நாளும் வாழ்வார்கள்.

30 ஒரு நல்ல மனிதன் நல்ல போதனையை கொடுக்கிறான்.
    அவன் முடிவுகள் ஒவ்வொருவருக்கும் நியாயமுள்ளவைகள்.
31 கர்த்தருடைய போதனைகள் அவன் இருதயத்தில் இருக்கும்.
    அவன் நல்வழியில் வாழ்வதை விட்டு விலகான்.
32 தீயோர் நல்லோரைத் துன்புறுத்தும் வழிகளை நாடுவார்கள்.
    தீயோர் நல்லோரைக் கொல்ல முனைவார்கள்.
33 அவர்கள் அவ்வாறு செயல்பட தேவன் விடார்.
    நல்லோர் தீயோரென நியாயந்தீர்க்கப்பட கர்த்தர் விடார்.

34 கர்த்தருடைய உதவிக்காகக் காத்திருங்கள், கர்த்தரைப் பின்பற்றுங்கள்.
    தீயோர் அழிக்கப்படுவார்கள்.
    ஆனால் கர்த்தர் உனக்கு முக்கியத்துவமளிப்பார், தேவன் வாக்களித்த தேசத்தை நீ பெறுவாய்.

35 வல்லமைமிக்க தீயோரை நான் கண்டேன்.
    அவன் பசுமையான, வலிய மரத்தைப் போலிருந்தான்.
36 ஆனால் அவன் மடிந்தான்,
    அவனை நான் தேடியபோது அவன் காணப்படவில்லை.

37 தூய்மையாகவும், உண்மையாகவும் இருங்கள். ஏனெனில் அது சமாதானத்தைத் தரும்.
    சமாதானத்தை விரும்பும் ஜனங்களுக்கு பல சந்ததியினர் இருப்பார்கள்.
38 சட்டத்தை மீறுகிற ஜனங்கள் அழிக்கப்படுவார்கள்.
    அவர்களின் சந்ததி நாட்டை விட்டு வெளியேற நேரிடும்.

39 கர்த்தர் நல்லோரை மீட்கிறார்.
    நல்லோர் வேதனைப்படும்போது கர்த்தர் அவர்களின் பெலனாவார்.
40 கர்த்தர் நல்லோருக்கு உதவிசெய்து அவர்களைப் பாதுகாக்கிறார்.
    நல்லோர் கர்த்தரைச் சார்ந்திருப்பார்கள்.
    அவர் அவர்களைத் தீயோரிடமிருந்து காக்கிறார்.

1 சாமுவேல் 12

சாமுவேல் இஸ்ரவேலரிடம் ராஜாவைப் பற்றி பேசுகிறான்

12 சாமுவேல் இஸ்ரவேலரிடம், “நீங்கள் என்னிடம் எதை எதிர்ப்பார்த்தீர்களோ அதனைச் செய்துவிட்டேன். உங்களுக்கு ஒரு ராஜாவை நியமித்திருக்கிறேன். இப்போது உங்களை வழி நடத்த ஒரு ராஜா இருக்கிறான். எனக்கு முதுமையும் நரையும் வந்துவிட்டது. ஆனால் என் குமாரர்கள் உங்களுடன் இருக்கிறார்கள். நான் சிறுவயது முதலே உங்களது தலைவனாக இருந்திருக்கிறேன். நான் ஏதாவது தவறு செய்திருந்தால் அதை கர்த்தரிடமும், கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜாவிடமும் சொல்லவேண்டும். நான் ஏதாவது உங்கள் பசுவையோ, கழுதையையோ திருடியிருக்கிறேனா? யாரையாவது புண்படுத்தியோ, ஏமாற்றியோ இருக்கிறேனா? நான் பணத்தையோ பாதரட்சையை லஞ்சமாக பெற்றிருக்கிறேனா? அப்படி எதாவது செய்திருந்தால் நான் அதை சரி செய்துக் கொள்வேன்” என்றான்.

இஸ்ரவேலர்களோ, “இல்லை! நீங்கள் எங்களுக்கு எப்போதும் தீமை செய்யவில்லை. எங்களை ஏமாற்றவோ, எங்கள் பொருட்களை எந்தக் காலத்திலும் எடுத்துக் கொள்ளவோயில்லை!” என்றனர்.

சாமுவேல் அவர்களிடம், “கர்த்தரும், அரசரும் இன்று சாட்சிகளாக உள்ளனர். நீங்கள் சொன்னதை அவர்கள் கேட்கிறார்கள். என்னிடம் தவறில்லை என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர்” என்றான். “ஆமாம்! கர்த்தரே சாட்சி!” என்று ஜனங்கள் சத்தமிட்டனர்.

பின் சாமுவேல் ஜனங்களிடம், “இங்கே நடந்ததை கர்த்தர் பார்த்திருக்கிறார். கர்த்தர் தாமே மோசேயையும், ஆரோனையும், தேர்ந்தெடுத்தவர். அவரே எகிப்திலிருந்து உங்கள் முற்பிதாக்களை மீட்டுக்கொண்டவர். இப்போது அங்கே நில்லுங்கள். உங்களுக்கும், உங்கள் முற்பிதாக்களுக்கும் கர்த்தர் செய்த நன்மைகளைப்பற்றிச் சொல்வேன்.

“யாக்கோபு எகிப்துக்குப் போனார். பின்னர் எகிப்தியர்கள் அவருடைய சந்ததிகளுக்கு வாழ்க்கையை கடின மாக்கித் துன்புறுத்தினார்கள். கர்த்தரிடம் உதவிக்காக அழுதார்கள். கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் அனுப்பினார். அவர்கள் உங்கள் முற்பிதாக்களை எகிப்திலிருந்துக் காப்பாற்றி இங்கே வாழும் பொருட்டு அழைத்து வந்தனர்.

“ஆனால் உங்கள் முற்பிதாக்கள் தமது தேவனாகிய கர்த்தரை மறந்துவிட்டனர். எனவே கர்த்தர் அவர்களை சிசெராவிடம் அடிமைகளாகுமாறு செய்தார். சிசெரா, ஆத்சோர் என்னும் இடத்தில் இருந்த படையின் சேனாதிபதி. பின்னர் கர்த்தர் அவர்களை பெலிஸ்தரின் கையிலும் மோவாப் ராஜாக்களிடமும் அடிமையாக்கினார். உங்கள் முற்பிதாக்களுக்கு எதிராக அவர்கள் எல்லோரும் சண்டையிட்டனர். 10 ஆனால், உங்கள் முற்பிதாக்கள் கர்த்தரிடம் உதவி கேட்டு அழுதார்கள். அவர்கள், ‘நாங்கள் பாவம் செய்துவிட்டோம். கர்த்தரை விட்டு பொய்த் தெய்வங்களான பாலையும், (பாகாலையும்) அஸ்த்தரோத்தையும் சேவித்தோம். இப்போது எங்களைப் பகைவர்களிடம் இருந்து காப்பாற்றுங்கள். நாங்கள் உங்களுக்கு சேவை செய்கிறோம்’ என்றனர்.

11 “எனவே, கர்த்தர் எருபாகாலையும், (கிதியோன்) பேதானையும், யெப்தாவையும், சாமுவேலையும் அனுப்பினார். கர்த்தர் உங்களைச் சுற்றியுள்ள பகைவர்களிடமிருந்து காப்பாற்றினார். நீங்கள் பாதுகாப்பாயுள்ளீர்கள். 12 ஆனால், நாகாஸ் ராஜா உங்களுக்கு எதிராகச் சண்டையிட வந்தான். நீங்கள், ‘இல்லை! எங்களை ஆள ஒரு ராஜா வேண்டும்!’ என்றீர்கள்! தேவனாகிய கர்த்தர் ஏற்கெனவே உங்கள் ராஜாவாக இருந்தார்! எனினும் நீங்கள் கேட்டீர்கள். 13 இப்போது ஒரு ராஜாவைத் தோந்தெடுத்துள்ளீர்கள். கர்த்தர் அவரை உங்கள் ராஜாவாக்கினார். 14 கர்த்தருக்குப் பயந்து அவரை மதிக்க வேண்டும். நீங்கள் அவருக்கு சேவை செய்து அவரது கட்டளைகளுக்கு கீழ்ப்படிய வேண்டும். அவருக்கு எதிராகப் போராடக்கூடாது. நீங்களும் உங்கள் ராஜாவும் உங்கள் தேவனாகிய கர்த்தரை பின்பற்றவேண்டும். இவற்றைச் செய்தால் தேவன் உங்களைக் காப்பார். 15 ஆனால், நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படியாவிட்டால் அவரது கட்டளைகளுக்கு எதிராக போரிட்டால் பின் அவர் உங்களுக்கு எதிராவார். கர்த்தர் உங்களையும் உங்கள் ராஜாவையும் அழிப்பார்!

16 “இப்பொழுது நீங்கள் அமைதலாயிருந்து கர்த்தர் உங்கள் கண்களுக்கு முன் செய்யப்போகும் பெரியக் காரியத்தைப் பாருங்கள். 17 இப்போது கோதுமை அறுவடைக்காலம். நான் கர்த்தரிடம் ஜெபிப்பேன். இடியையும் மழையையும் கேட்பேன். நீங்கள் ராஜா வேண்டுமென்று கேட்டது கர்த்தருக்கு விரோதமான காரியம் என்பதை அறிந்துகொள்வீர்கள்” என்றான்.

18 எனவே, சாமுவேல் கர்த்தரிடம் ஜெபித்தான். அன்றே கர்த்தர் இடியையும் மழையையும் அனுப்பினார். ஜனங்கள் கர்த்தருக்கும் சாமுவேலுக்கும் மிகவும் பயந்தனர். 19 அனைத்து ஜனங்களும் சாமுவேலிடம், “உம்முடைய அடியார்களாகிய எங்களுக்காக உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் ஜெபியுங்கள், நாங்கள் அழிந்துவிட விட்டு விடாதேயும்! நாங்கள் பலமுறை பாவம் செய்திருக்கிறோம். இப்போது ராஜாவைக் கேட்டு மேலும் பாவம் செய்து விட்டோம்” என்றனர்.

20 சாமுவேல் அவர்களிடம், “அஞ்சாதீர்கள், இது உண்மை! நீங்கள் எல்லா தீமைகளையும் செய்தீர்கள். ஆனால் கர்த்தரைப் பின்பற்றுவதை நிறுத்தாதீர்கள். முழு மனதோடு கர்த்தருக்கு சேவை செய்யுங்கள். 21 விக்கிரகங்கள் வெறும் சிலைகளே அவைகள் உதவாது. அவற்றைத் தொழுதுகொள்ள வேண்டாம். விக்கிரகங்கள் உங்களுக்கு உதவாது! காப்பாற்றாது! அவைகள் ஒன்றுமில்லை.

22 “ஆனால், கர்த்தர் தம் ஜனங்களைக் கைவிடமாட்டார். கர்த்தர் உங்களை தமது சொந்த ஜனங்களாக ஆக்கிக்கொள்ள விருப்பம் கொண்டார். எனவே, அவரது பெரிய பெயரினிமித்தம் தம் ஜனங்களை அவர் விட்டுவிடமாட்டார். 23 என்னைப் பொறுத்த வரை உங்களுக்காக நான் ஜெபிப்பதை என்றும் நிறுத்தமாட்டேன். நிறுத்தினால், கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தவனாவேன். நல்வாழ்க்கைக்கான சரியான வழியை போதித்துக்கொண்டே இருப்பேன். 24 ஆனால், நீங்கள் கர்த்தரை கனம் பண்ண வேண்டும். முழு இருதயத்துடன் அவருக்கு சேவை செய்ய வேண்டும். அவர் செய்த அதிசயமான காரியங்களை மறவாதீர்கள்! 25 நீங்கள் கடினப்பட்டு தீமை செய்தால், தேவன் உங்களையும் உங்கள் ராஜாவையும் அழுக்கை துடப்பத்தால் நீக்குவதுப்போல் எறிந்துவிடுவார்” என்றான்.

யோவான் 13:1-17

சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்

13 இது ஏறக்குறைய பஸ்கா பண்டிகைக்கான நேரம். இதுதான் இந்த உலகத்தை விட்டுச் செல்வதற்கான நேரம் என்பதை இயேசு அறிந்திருந்தார். இயேசு, தன் பிதாவிடம் திரும்பிப் போவதற்கான காலம் இது. இயேசு அவருடைய மக்களின் மீது பெரிதான அன்பை எப்போதும் வைத்திருந்தார். இப்பொழுது, அவருக்கு அவர்களிடம் கொண்ட அன்பை வெளிப்படுத்தும் நேரமாயிற்று.

இயேசுவும் அவர் சீஷர்களும் மாலை உணவுக்காக அமர்ந்தனர். ஏற்கெனவே சாத்தான் யூதாஸ்காரியோத்தின் மனதில் புகுந்து அவனை இயேசுவுக்கு எதிராக ஆக்கியிருந்தான். (யூதாஸ் சீமோனின் குமாரன்) இயேசுவுக்கு அவரது பிதா எல்லாவிதமான அதிகாரத்தையும் கொடுத்திருந்தார். இயேசு இதனை அறிந்திருந்தார். தேவனிடமிருந்து தான் வந்ததாக இயேசு தெரிந்துவைத்திருந்தார். அதோடு அவர் தன் பிதாவிடமே திரும்பிப் போகவேண்டும் என்பதனை அறிந்திருந்தார். அவர்கள் உணவு உண்டுகொண்டிருக்கும்போது, இயேசு எழுந்து ஆடைகளைக் கழற்றி வைத்தார். ஒரு துண்டை எடுத்துத் தன் இடுப்பில் கட்டிக் கொண்டார். பிறகு இயேசு ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றினார். அவர் தம் சீஷர்களின் கால்களைக் கழுவிச் சுத்தப்படுத்த ஆரம்பித்தார். பின் தன் இடுப்புத் துண்டால் அவர்கள் கால்களைத் துடைத்தார்.

இயேசு, சீமோன் பேதுருவிடம் வந்தார். ஆனால் பேதுருவோ இயேசுவிடம், “ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவக்கூடாது” என்றான்.

அதற்கு இயேசு அவனிடம், “நான் என்ன செய்கிறேன் என்று இப்போது உனக்குத் தெரியாது. ஆனால் பிறகு நீ புரிந்துகொள்வாய்” என்றார்.

பேதுருவோ, “இல்லை நீர் என் கால்களைக் கழுவவேகூடாது” என்றான்.

இயேசுவோ, “நான் உன் கால்களைக் கழுவாவிட்டால், நீ என்னோடு பங்குள்ளவனாக இருக்க முடியாது” என்றார்.

உடனே பேதுரு, “ஆண்டவரே, அப்படியானால் என் கால்களோடு, என் கைகளையும் தலையையும்கூடக் கழுவுங்கள்” என்றான்.

10 “ஒரு மனிதன் குளித்தபிறகு அவனது சரீரம் எல்லாம் சுத்தமாகிவிடுகிறது. அதன் பிறகு அவன் கால்களை மட்டும் கழுவினால் போதும். நீங்கள் சுத்தமாக இருக்கிறீர்கள். ஆனால் அனைவரும் அல்ல” என்றார் இயேசு. 11 யார் தனக்கு எதிராக மாறியுள்ளவன் என்று இயேசுவுக்குத் தெரியும். அதனால்தான் இயேசு “நீங்கள் அனைவரும் சுத்தமாக இல்லை” என்று கூறினார்.

12 இயேசு அவர்களின் கால்களைச் சுத்தப்படுத்தி முடித்தார். பிறகு அவர் தன் ஆடைகளை அணிந்துகொண்டு சாப்பாடு மேசைக்குத் திரும்பினார். இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்குக்காகச் செய்தவற்றை நீங்கள் புரிந்துகொண்டீர்களா? 13 நீங்கள் என்னை ‘ஆண்டவரே’ என்று அழைக்கிறீர்கள், இதுதான் சரியானது, ஏனென்றால் உண்மையில் நான் ஆண்டவராகவே இருக்கிறேன். 14 நான் உங்கள் போதகராகவும் ஆண்டவராகவும் இருக்கிறேன். ஆனால் நான் ஒரு வேலைக்காரனைப்போன்று உங்கள் கால்களைக் கழுவினேன். ஆகையால் நீங்கள் ஒருவருக்கொருவர் உங்கள் கால்களைக் கழுவிக்கொள்ளுங்கள். 15 இதை நான் ஒரு முன்மாதிரியாகவே செய்தேன். நான் உங்களுக்குச் செய்ததுபோலவே நீங்களும் ஒருவருக்கொருவர் செய்துகொள்ளுங்கள். 16 நான் உங்களுக்கு உண்மையாகவே கூறுகிறேன். ஒரு வேலைக்காரன் தன் எஜமானனைவிடப் பெரியவன் அல்ல. ஒருவன் என்னதான் பெரிய காரியங்களைச் செய்தாலும் அனுப்பப்பட்டவன் அனுப்பியவரைவிட பெரியவனல்ல. 17 நீங்கள் இவற்றை அறிந்துகொண்டால், அவற்றைச் செய்யும்போது மகிழ்ச்சியடைவீர்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center