Revised Common Lectionary (Complementary)
4 ஆனால், அவர் நமது நோய்களை எடுத்து தனதாக்கிக்கொண்டார். அவர் நமது வலியை எடுத்துக்கொண்டார். தேவன் அவரைக் தண்டித்துவிட்டார் என்று நாம் நினைத்தோம். அவர் செய்தவற்றுக்காக தேவன் அவரை அடித்தார் என்று நாம் நினைத்தோம். 5 ஆனால், நாம் செய்த தவறுகளுக்குத் துன்பப்படவே அவர் வேதனையைப் பெற்றார். நமது குற்றங்களுக்காக அவர் நசுக்கப்பட்டார். நாம் கொண்ட கடனுக்காக நமது தண்டனை அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவரது காயங்களால் நாம் சுகமடைந்திருக்கிறோம். (மன்னிக்கப்பட்டோம்). 6 ஆனால், இதனைச் செய்தபிறகு நாம் ஆடுகளைப்போல அலைந்துகொண்டிருந்தோம். நம்மில் ஒவ்வொருவரும் நமது சொந்த வழியில் சென்றோம். கர்த்தர் நம் குற்றத்திலிருந்து நம்மை விடுதலை செய்து நமது குற்றங்களை அவர்மீது போட்ட பிறகும் நாம் இதனைச் செய்தோம்.
7 அவர் பாதிக்கப்பட்டார், தண்டிக்கப்பட்டார். ஆனால் அவர் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கொல்லப்படுவதற்காக கொண்டுப்போகப்படும் ஆட்டுக்குட்டியைப்போன்று, அவர் எதுவும் சொல்லவில்லை! தனது மயிரைக் கத்தரிக்கும்போது சத்தமிடாமல் இருக்கும் ஆட்டைப்போல் அவர் அமைதியாக இருந்தார்! அவர் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காகத் தன் வாயைத் திறக்கவில்லை. 8 மனிதர்கள் அவரைப் பலவந்தமாகப் பிடித்தனர், அவரை அவர்கள் நேர்மையாக நியாயந்தீர்க்கவில்லை. எவரும் அவரது எதிர்காலக் குடும்பத்தைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. ஏனென்றால், அவர் உயிரோடு வாழ்கிறவர்களின் நாட்டிலிருந்து பிரிக்கப்பட்டார். எனது ஜனங்களின் பாவங்களுக்காக அவர் தண்டிக்கப்பட்டார்.
9 அவர் மரித்தார், செல்வந்தர்களோடு புதைக்கப்பட்டார். அவர் தீயவர்களோடு புதைக்கப்பட்டார். அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. அவர் எப்பொழுதும் பொய் சொன்னதில்லை, இருந்தாலும் இவை அவருக்கு ஏற்பட்டன.
10 அவரை நசுக்கிவிட கர்த்தர் முடிவுசெய்தார். அவர் துன்பப்படவேண்டும் என்று கர்த்தர் முடிவு செய்தார். எனவே அந்தத் தாசன் தன்னைத்தானே மரிக்க அனுமதித்தார். ஆனால், மிக நீண்ட காலத்திற்குப் புதிய வாழ்க்கை வாழ்வார். அவரது ஜனங்களை அவர் பார்ப்பார். அவர் என்ன செய்ய வேண்டுமென்று கர்த்தர் விரும்பினாரோ அதனை அவர் முழுமையாகச் செய்துமுடிப்பார்.
11 அவர் தனது ஆத்துமாவில் பல்வேறு வகையில் துன்புறுவார். ஆனால் அவர் நடக்கும் நல்லவற்றைப் பார்ப்பார். அவர் தான் கற்றுக்கொண்டவற்றின் மூலம் திருப்தி அடைவார்.
எனவே, “எனது நல்ல தாசன் பல ஜனங்களைக் குற்றத்திலிருந்து விடுவிப்பார். அவர்களது பாவங்களை அவர் எடுத்துக்கொள்வார். 12 இந்தக் காரணத்திற்காக, என் ஜனங்களிடையே அவரை நான் பெரிய மனிதராக்குவேன். அவர் பலமுள்ள ஜனங்களோடு அனைத்து பொருள்களின் பங்கையும் பெறுவார். நான் இதனை அவருக்காகச் செய்வேன். ஏனென்றால், அவர் ஜனங்களுக்காக தன் உயிரைக் கொடுத்து மரித்தார். ஜனங்கள் அவரை ஒரு பயங்கரக் குற்றவாளி எனக் கூறினார்கள். ஆனால் உண்மையென்னவெனில் அவர் பல்வேறு ஜனங்களின் பாவங்களை தம்மேல் சுமந்துகொண்டார். இப்போது அவர் பாவம் செய்த ஜனங்களுக்காகப் பேசுகிறார்.”
9 ஏனெனில் நீ கர்த்தரை நம்புகிறாய்.
மிக உன்னதமான தேவனை நீ உன் பாதுகாப்பிடமாகக்கொண்டாய்.
10 தீயவை உனக்கு நிகழாது,
உன் வீட்டில் எந்தவிதமான நோய்களும் இருப்பதில்லை.
11 தேவன் அவரது தூதர்களை உனக்காகக் கட்டளையிடுவார்.
நீ போகுமிடங்களிலெல்லாம் அவர்கள் உன்னைப் பாதுகாப்பார்கள்.
12 உன் கால் பாறையில் மோதாதபடிக்கு
அவர்கள் கைகள் உன்னைப் பிடித்துக்கொள்ளும்.
13 சிங்கங்களின் மேலும்
விஷம் நிரம்பிய பாம்புகளின் மேலும் நடக்கும் வல்லமை உனக்கு வாய்க்கும்.
14 கர்த்தர்: “ஒருவன் என்னை நம்பினால், நான் அவனை மீட்பேன்.
என் நாமத்தை தொழுது கொண்டு என்னைப் பின்பற்றுவோரை நான் கப்பாற்றுவேன்” என்கிறார்.
15 என்னைப் பின்பற்றுவோர் உதவிக்காக என்னை அழைப்பார்கள்.
நான் அவர்களுக்குப் பதில் கொடுப்பேன்.
அவர்களுக்குத் தொல்லை நேரும்போது நான் அவர்களோடு இருப்பேன்.
நான் அவர்களைக் காப்பாற்றிப் பெருமைப்படுத்துவேன்.
16 என்னைப் பின்பற்றுவோருக்கு நான் நீண்ட ஆயுளைக் கொடுப்பேன்.
நான் அவர்களைக் காப்பாற்றுவேன்.
5 ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் ஏனைய மனிதர்களுக்கு உதவும் பொருட்டு மனிதரின் மத்தியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மனிதனே ஆவான். காணிக்கைகளையும், பாவங்களுக்கான பலிகளையும், மற்றும் மக்கள் தேவனுக்குச் செய்ய வேண்டியதையெல்லாம் அவன் செலுத்துகிறான். 2 அறியாமை உடையவர்களிடமும், தவறு செய்கிறவர்களிடமும் அந்தப் பிராதான ஆசாரியனால் மென்மையாக இருக்க முடிகிறது. ஏனெனில் அவனும் பலவீனத்துக்குட்பட்டவனே ஆவான். 3 இதனால் தான், மற்றவர்களுக்காகக் காணிக்கைகளைச் செலுத்துவதற்கு முன்னால், தன் சொந்தப் பாவங்களுக்காக அவன் காணிக்கை செலுத்த வேண்டும்.
4 பிரதான ஆசாரியனாக இருப்பது ஒரு கௌரவமாகும். ஆனால் தன்னைத் தானே யாரும் பிரதான ஆசாரியனாகத் தேர்ந்தெடுத்துக்கொள்வதில்லை. தேவன் ஆரோனைத்[a] தேர்ந்தெடுத்ததைப் போல், தேவனே அவனைத் தேர்ந்தெடுக்கவேண்டும். 5 கிறிஸ்துவின் செயலும் அப்படித்தான். பிரதான ஆசாரியன் ஆகும் பெருமைக்கு அவர் தன்னைத்தானே தேர்ந்தெடுக்கவில்லை. தேவன் அவரைத் தேர்ந்தெடுத்தார். அவர் கிறிஸ்துவிடம்,
“நீர் எனது குமாரன்.
இன்று நான் உமக்குப் பிதா ஆனேன்” என்று கூறினார்.(A)
6 இன்னொரு இடத்தில் தேவன் சொல்கிறார்,
“நீர் எப்பொழுதும் மெல்கிசேதேக்கைப்
போன்று ஆசாரியராக இருப்பீர்”(B)
7 கிறிஸ்து பூமியில் வாழ்ந்தபோது, அவர் தேவனிடம் உரத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் பிரார்த்தனை செய்தார். மரணத்திலிருந்து அவரைக் காப்பாற்ற வல்ல ஒருவரிடம் அவர் பிரார்த்தனை செய்தார். தேவன் மீது இயேசுவுக்கு இருந்த மிகுந்த மரியாதையின் காரணமாக தேவன் அப்பிரார்த்தனையை பின்னர் கேட்டார். 8 அவர் தேவனுடைய குமாரனாக இருந்தாலும் கூட அவர் துன்பங்களின் மூலம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். 9 இயேசு முழுமையானவரான பின்னர் தமக்குக் கீழ்ப்படிகிற எல்லாருக்கும் நிரந்தர இட்சிப்பின் காரணரானார். 10 இயேசு, மெல்கிசேதேக்கைப் போன்றே பிரதான ஆசாரியராக தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிறப்புச் சலுகை கேட்டவர்கள்
(மத்தேயு 20:20-28)
35 பிறகு செபெதேயுவின் குமாரர்களாகிய யாக்கோபும், யோவானும் இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள், “போதகரே நீங்கள் எங்களுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்றனர்.
36 அவர்களிடம் இயேசு, “நான் உங்களுக்காக என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” எனக் கேட்டார்.
37 “உங்கள் இராஜ்யத்தில் உங்களுக்கென்று மகிமை உள்ளது. எங்களில் ஒருவர் உங்கள் வலது பக்கத்திலும் இன்னும் ஒருவர் இடது பக்கத்திலும் இருக்க வாய்ப்புத்தர வேண்டும்” என்றனர்.
38 அதற்கு இயேசு, “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்பது உங்களுக்குப் புரியவில்லை. நான் ஏற்கப்போகும் பாடுகளை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? நான் ஞானஸ்நானம் பெறும் விதத்திலேயே நீங்களும் பெற்றுக்கொள்ள முடியுமா?” என்று கேட்டார்.
39 அவர்கள், “ஆமாம், எங்களால் முடியும்” என்றனர். இயேசு அவர்களிடம், “நான் படப்போகும் துன்பங்களை எல்லாம் நீங்களும் படவேண்டியதிருக்கும். நான் பெறப்போகும் ஞானஸ்நானத்தை நீங்களும் பெறவேண்டியதிருக்கும். 40 எனக்கு வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் இருக்கப்போகின்றவர்களை என்னால் தீர்மானிக்க முடியாது. அந்த இடத்திற்காகச் சிலர் இருக்கின்றார்கள். அவர்களுக்காகவே அந்த இடங்கள் தயார் செய்யப்பட்டிருக்கின்றன” என்றார்.
41 ஏனைய பத்து சீஷர்களும் இயேசு சொல்வதைக் கேட்டனர். அவர்களுக்கு யாக்கோபு மீதும், யோவான் மீதும் கோபம் ஏற்பட்டது. 42 இயேசு தன் சீஷர்களை எல்லாம் தம்மிடம் அழைத்தார். அவர்களிடம், “யூதர் அல்லாத மக்கள் ஆள்வோர்கள் எனக் கருதப்படுகின்றனர். இந்த ஆள்வோர்கள் தம் அதிகாரத்தை மக்கள்மீது செலுத்துவதையே பெரிதும் விரும்புகிறார்கள். அவர்களின் முக்கியத் தலைவர்கள் தம் அதிகாரத்தை மக்கள் மீது செலுத்துவதையே பெரிதும் விரும்புகிறார்கள் என்று நீங்கள் அறிவீர்கள். 43 ஆனால், நீங்கள் மேற்கொள்ளும் வழி இதுவாக இருக்கக் கூடாது. உங்களில் ஒருவன் பெரியவனாக விரும்பினால் அவன் ஒரு வேலைக்காரனைப்போல மற்றவர்களுக்குச் சேவைசெய்ய வேணடும். 44 உங்களில் ஒருவன் மிகவும் முக்கியஸ்தனாக விரும்பினால் அவன் அடிமையைப்போல உங்கள் எல்லாருக்கும் சேவை செய்ய வேண்டும். 45 இது போலவே, மனித குமாரன் பிறருடைய பணிவிடைகளைப் பெறுவதற்காக வரவில்லை. அவர் மற்றவர்களுக்குப் பணிவிடை செய்யவே வந்துள்ளார். அவர் பல மக்களைக் காப்பாற்றுவதற்காகத் தன் உயிரைத் தர வந்துள்ளார்” என்றார்.
2008 by World Bible Translation Center