Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 112

[a]112 கர்த்தரை துதியுங்கள்!

கர்த்தருக்குப் பயந்து அவரை மதிக்கிற மனிதன் சந்தோஷமாயிருப்பான்.
    அவன் தேவனுடைய கட்டளைகளை நேசிக்கிறான்.
அவன் சந்ததியினர் பூமியில் பெரியோராயிருப்பார்கள்.
    நல்லோரின் சந்ததியினர் நிச்சயமாக ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
அம்மனிதனின் குடும்பம் செல்வத்தில் சிறந்திருக்கும்.
    அவன் நன்மை என்றென்றைக்கும் தொடரும்.
தேவன் நல்லோருக்கு இருளில் பிரகாசிக்கும் ஒளியைப் போன்றவர்.
    தேவன் நன்மையும், தயவும், இரக்கமுமுள்ளவர்.
தயவும், தயாளகுணமும் பெற்றிருப்பது ஒருவனுக்கு நல்லது.
    தனது வியாபாரத்தில் நியாயமாயிருப்பது ஒருவனுக்கு நல்லது.
அவன் விழமாட்டான்,
    ஒரு நல்ல மனிதன் என்றென்றும் நினைவுக்கூரப்படுவான்.
அவன் தீய செய்திக்குப் பயப்படமாட்டான்.
    அவன் கர்த்தரை நம்புகிறதால் தன்னம்பிக்கையோடிருப்பான்.
அவன் தன்னம்பிக்கையுள்ளவன். அவன் பயப்படமாட்டான்.
    அவன் தனது பகைவர்களைத் தோற்கடிப்பான்.
அவன் ஏழைகளுக்கு இலவசமாகப் பொருள்களைக் கொடுக்கிறான்.
    அவனது நன்மை என்றென்றைக்கும் தொடரும்.

10 தீயோர் இதைக்கண்டு கோபமடைவார்கள்.
    அவர்கள் கோபத்தால் தங்கள் பற்களைக் கடிப்பார்கள்.
பின்பு அவர்கள் மறைந்து போவார்கள்.
    தீயோர் அவர்கள் மிகவும் விரும்புவதைப் பெறுவதில்லை.

எரேமியா 3:6-14

இரண்டு தீய சகோதரிகள்: இஸ்ரவேல் மற்றும் யூதா

யோசியா ராஜா யூதா நாட்டை ஆண்டுக்கொண்டிருந்த காலத்தில், கர்த்தர் என்னோடு பேசினார். அவர், “எரேமியா, இஸ்ரவேல் செய்த தீமைகளை நீ பார்த்தாய். எவ்வாறு அவள் எனக்கு விசுவாசமில்லாமல் நடந்துகொண்டாள், என்பதை நீ அறிவாய். ஒவ்வொரு மலை உச்சியின் மேலும் பச்சை மரங்களின் கீழும், விக்கிரகங்களோடும், சோரம் போய் அவள் பாவம் செய்தாள். நான் எனக்குள்ளே, ‘இஸ்ரவேல் தீயவற்றையெல்லாம் செய்து முடித்த பிறகு, என்னிடம் திரும்பி வருவாள்’ என்றேன், ஆனால் அவள் என்னிடம் திரும்பி வரவில்லை. இஸ்ரவேலின் விசுவாசமில்லாத சகோதரியான யூதா, அவள் என்ன செய்தாள் என்று பார்த்தாள். இஸ்ரவேல் விசுவாசம் இல்லாமல் போனது. நான் ஏன் அவளை அனுப்பினேன், என்று இஸ்ரவேல் அறிந்தது. யூதா சோரமாகிய பாவத்தைச் செய்ததால், நான் அவளை விவாகரத்து செய்துவிட்டேன் என்று இஸ்ரவேல் அறிந்துகொண்டது. ஆனால் அது அவளது விசுவாசமற்ற சகோதரியைப் பயப்படுத்தவில்லை. யூதா பயப்படவில்லை. யூதா வெளியே போய், வேசியைப்போன்று நடித்தாள். யூதா கவலைப்படாமல், அவள் வேசியைப் போன்று நடித்துக்கொண்டிருந்தாள். எனவே அவள் தன் நாட்டை ‘அசுத்தம்’ ஆக்கிவிட்டாள். கல்லாலும் மரத்தாலும் ஆன விக்கிரகங்களைத் தொழுதுகொள்வதின் மூலம் அவள் சோரமாகிய பாவத்தைச் செய்தாள். 10 இஸ்ரவேலின் விசுவாச மற்ற சகோதரி (யூதா) என்னிடம் முழுமனதோடு திரும்பி வரவில்லை. அவள் என்னிடம் திரும்பி வந்ததாக நடித்தாள்” என்று சொல்லுகிறார்.

11 கர்த்தர் என்னிடம் சொன்னதாவது, “இஸ்ரவேல் என்னிடம் விசுவாசமாக இருக்கவில்லை. ஆனால் விசுவாசமற்ற யூதாவைவிட அவளுக்கு சிறந்த காரணங்கள் இருந்தன. 12 எரேமியா, வடக்குத் திசையைப் பார்த்து இச்செய்தியைக் கூறு:

“‘விசுவாசமற்ற இஸ்ரவேல் ஜனங்களே திரும்பி வாருங்கள்’
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
‘நான் உங்கள் மேலுள்ள கோபத்தைக் காட்டுவதில்லை.
    நான் இரக்கம் உள்ளவர்’ என்று கர்த்தர் சொல்லுகிறார்.
‘நான் என்றென்றும் உங்கள்மேல்
கோபங்கொள்ளமாட்டேன்.
13 ஆனால் நீ இதுவரை செய்த உன் பாவத்தை ஒப்புக்கொள்ளவேண்டும்.
    நீ உனது தேவனாகிய கர்த்தருக்கு எதிராகத் திரும்பினாய்,
அதுவே உன் பாவம், மற்ற நாடுகளிலிருந்து வந்த ஜனங்களின் விக்கிரகங்களை நீ தொழுதுகொண்டாய்.
    ஒவ்வொரு பச்சையான மரத்தின் அடியிலும் உள்ள விக்கிரகங்களைத் தொழுதுகொண்டாய்.
    நீ எனக்கு அடிபணியவில்லை’”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.

14 “ஜனங்களாகிய நீங்கள் விசுவாசமற்றவர்கள். ஆனால் என்னிடம் திரும்பி வாருங்கள்!” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

“நான் உனது ஆண்டவர். நான் ஒவ்வொரு நகரத்திலிருந்து ஒருவனையும், ஒவ்வொரு குடும்பத்திலிருந்து இரண்டுபேரையும் எடுத்து சீயோனுக்குக் கொண்டுவருவேன்.

மத்தேயு 5:27-36

கற்பைக் குறித்த போதனை

27 “‘பிறன் மனைவியுடன் உறவுகொள்ளும் பாவத்தைச் செய்யாதே’(A) என்று கூறப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். 28 ஆனால் நான் சொல்கிறேன். ஒரு பெண்ணைக் காமக் கண் கொண்டு நோக்கி, அவளுடன் உடலுறவுகொள்ள விரும்பினாலே, அவன் அவளுடன் விபச்சாரம் செய்தவனாகிறான். 29 உங்கள் வலது கண் நீங்கள் பாவம் செய்யக் காரணமானால், அதைப் பிடுங்கி எறியுங்கள். உங்கள் சரீரம் முழுவதும் நரகத்தில் வீழ்வதைக் காட்டிலும் அவ்வுடலின் ஓர் உறுப்பை இழப்பது நன்று. 30 உங்கள் வலது கை உங்களைப் பாவம் செய்ய வைத்தால், அதை வெட்டி எறியுங்கள். உங்கள் சரீரம் முழுவதும் நரகத்தில் வீழ்வதைக் காட்டிலும் அவ்வுடலின் ஒரு பகுதியை இழப்பது நன்று.

விவாகரத்துப்பற்றிய போதனை

(மத்தேயு 19:9; மாற்கு 10:11-12; லூக்கா 16:18)

31 “‘தன் மனைவியை விவாகரத்து செய்கிற எவரும் அவளுக்கு எழுத்தின் மூலமாக சான்றிதழ் அளிக்க வேண்டும்’(B) என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. 32 ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், தன் மனைவியை விவாகரத்து செய்கிறவன் அவளை விபச்சாரப் பாவத்தின் குற்ற உணர்வுக்குள்ளாக்குகிறான். தன் மனைவி வேறொரு ஆடவனுடன் சரீர உறவு வைத்திருப்பது மட்டுமே ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்யத்தக்க காரணமாகும். விவாகரத்து செய்யப்பட்ட அப்பெண்ணை மணம் புரிகிறவனும் விபச்சாரம் செய்தவனாகிறான்.

வாக்குறுதிகளைப்பற்றிய போதனை

33 “‘நீ ஒரு சத்தியம் செய்தால், அதை மீறக் கூடாது என்றும், கர்த்தருக்குச் செய்வதாகச் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுவாயாக’[a] என்றும், வெகு காலத்திற்கு முன்னரே நமது மக்களுக்குச் சொல்லப்பட்டிருப்பதை அறிவீர்கள். 34 ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒருபோதும் சத்தியம் செய்யாதீர்கள். பரலோக இராஜ்யத்தின் பெயரால் சத்தியம் செய்யாதீர்கள். ஏனென்றால், பரலோக இராஜ்யம் தேவனின் அரியாசனம். 35 பூமியின் பெயராலும் சத்தியம் செய்யாதீர்கள். ஏனென்றால், பூமி தேவனுக்குச் சொந்தமானது. எருசலேம் நகரத்தின் பெயராலும் சத்தியம் செய்யாதீர்கள். ஏனென்றால், எருசலேம் மகா ராஜாவின் நகரம். 36 உங்கள் தலை மீதும் சத்தியம் செய்யாதீர்கள். உங்கள் தலையின் ஒரு முடியைக் கூட உங்களால் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ இயலாது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center