Revised Common Lectionary (Complementary)
23-24 ஆனால் தேவன் மேலேயுள்ள மேகங்களைத் திறந்தார்.
உணவுக்கான மன்னா அவர்கள் மீது பொழிந்தது.
வானில் கதவுகள் திறக்கப்பட்டு வானிலுள்ள கிடங்கிலிருந்து
தானியங்கள் கீழே கொட்டினாற்போல காட்சி தந்தது.
25 தேவதூதர்களின் உணவை ஜனங்கள் உண்டார்கள்.
அவர்கள் திருப்தியடையும்வரை தேவன் மிகுதியான உணவை அனுப்பினார்.
26-27 தேவன் கிழக்கிலிருந்து ஒரு பெருங்காற்று வீசுமாறு செய்தார்.
காடைகள் மழையைப்போன்று அவர்கள் மீது வீழ்ந்தன.
தேமானிலிருந்து தேவன் காற்றை வீசச்செய்தார்.
பறவைகள் மிகுதியாக இருந்தமையால் நீல வானம் இருண்டது.
28 பாளையத்தின் நடுவே
கூடாரங்களைச் சுற்றிலும் அப்பறவைகள் வீழ்ந்தன.
29 அவர்களுக்கு உண்பதற்கு மிகுதியான உணவு இருந்தது.
ஆனால் தங்களின் பசியால் தாங்களே பாவம் செய்யும்படி தங்களை அவர்கள் ஆட்படுத்திக்கொண்டார்கள்.
43 கர்த்தர் மோசேயையும், ஆரோனையும் நோக்கி, “பஸ்கா பண்டிகையின் விதிகள் இவை: அந்நியன் யாரும் பஸ்காவை உண்ணக் கூடாது. 44 ஆனால் ஒருவன் ஒரு அடிமையை வாங்கி அவனுக்கு விருத்தசேதனம் செய்வித்தால், அந்த அடிமை பஸ்காவை உண்ணலாம். 45 ஆனால் ஒருவன் உங்கள் நாட்டில் வாழ்ந்தாலும், கூலி வேலைக்கு உங்களால் அமர்த்தப்பட்டவனாக இருந்தாலும், அம்மனிதன் பஸ்கா உணவை உண்ணக்கூடாது, இஸ்ரவேல் ஜனங்களுக்கு மட்டுமே பஸ்கா உரியது.
46 “ஒவ்வொரு குடும்பமும் அவர்கள் வீட்டில் அவ்வுணவை உண்ண வேண்டும். வீட்டிலிருந்து வெளியே அவ்வுணவை எடுத்துச் செல்லக் கூடாது. ஆட்டுக்குட்டியின் எலும்புகளை முறிக்க வேண்டாம். 47 இஸ்ரவேலின் எல்லா ஜனங்களும் இப்பண்டிகையைக் கொண்டாட வேண்டும். 48 உங்களோடு வசிக்கும் இஸ்ரவேலன் அல்லாத ஒருவன் கர்த்தரின் பஸ்காவில் பங்குகொள்ள விரும்பினால், அவனுக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டும். அப்போது அவன் இஸ்ரவேலின் குடிமகனாகக் கருதப்படுவான். அவன் பஸ்கா உணவில் பங்குகொள்ள முடியும். ஆனால் ஒரு மனிதன் விருத்தசேதனம் செய்துகொள்ளாவிட்டால், அவன் பஸ்கா உணவை உண்ண முடியாது. 49 இந்த விதிகள் எல்லோருக்கும் பொதுவானவை. இஸ்ரவேலின் குடி குமாரன் அல்லது உங்கள் நாட்டில் வசிக்கும் இஸ்ரவேல் அல்லாத எல்லோருக்கும் விதிகள் பொதுவானதாகவே இருக்கும்” என்றார்.
50 கர்த்தர் மோசேக்கும், ஆரோனுக்கும் கொடுத்த கட்டளைகளின்படி இஸ்ரவேலின் ஜனங்கள் குழுக்களாக எல்லோரும் எகிப்தை விட்டுபோனார்கள். 51 அதே நாளில் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே வழிநடத்தினார். ஜனங்கள் குழுக்களாக புறப்பட்டனர்.
13 பிறகு கர்த்தர் மோசேயிடம், 2 “இஸ்ரவேலில் ஒரு தாயின் வயிற்றில் பிறக்கும் முதல் ஆண் குழந்தை ஒவ்வொன்றும் எனக்குரியதாகும். முதலில் பிறந்த ஒவ்வொரு ஆண் குழந்தையும், முதலில் பிறந்த ஒவ்வொரு விலங்கும் எனக்குரியதாகும்” என்றார்.
27 எனவே தகுதியற்ற வகையில் இந்த அப்பத்தை உண்டாலோ, அல்லது கர்த்தரின் இந்தப் பாத்திரத்தில் பருகினாலோ, அப்போது அந்த மனிதன் கர்த்தரின் சரீரத்துக்கும், இரத்தத்துக்கும் எதிராகப் பாவம் செய்தவனாகிறான். 28 இந்த அப்பத்தை பகிர்ந்துகொள்வதற்கு முன்னரும், இந்த பாத்திரத்தில் இருந்து பருகும் முன்னரும் ஒவ்வொருவனும் தன் இதயத்தைப் பரீட்சித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும். 29 கர்த்தருடைய சரீரத்தின் பொருளை நிதானித்து அறியாமல் ஒருவன் இந்த அப்பத்தை உண்ணவோ இந்த பானத்தைப் பருகவோ செய்தால் அந்த மனிதன் உண்பதாலும் பருகுவதாலும் குற்றவாளியாக நியாயம் தீர்க்கப்படுவான். 30 எனவே தான், உங்களில் பலர் நோயுற்றவராகவும் பலவீனராகவும் காணப்படுகிறீர்கள். பலர் இறந்தும் போய்விட்டார்கள். 31 நாமே நம்மைச் சரியான வழியில் நியாயம் தீர்த்திருந்தோமானால் தேவன் நம்மை நியாயம் தீர்த்திருக்கமாட்டார். 32 ஆனால், தேவன் நம்மை நியாயம் தீர்க்கும்போது, நமக்குச் சரியான வழியைக் காட்டும்படி நமக்குத் தண்டனை அளிக்கிறார். நாம் இந்த உலகத்திலுள்ள பிற மனிதரோடு குற்றம் சாட்டப்படாதபடிக்கு தேவன் இதைச் செய்கிறார்.
33 சகோதர சகோதரிகளே! எனவே, நீங்கள் ஒன்று சேர்ந்து உண்ணுவதற்கு வருகையில் பிறருக்காகக் காத்திருங்கள். 34 ஒருவன் மிகுந்த பசியால் வாடினால், அவன் வீட்டில் உண்ணட்டும். தேவனுடைய நியாயத்தீர்ப்பு உங்கள்மேல் வராதபடிக்கு நீங்கள் ஒன்று கூடுகையில் இதைச் செய்யுங்கள். நான் வரும்போது நீங்கள் செய்யவேண்டிய பிற காரியங்களைக் குறித்து உங்களுக்குக் கூறுவேன்.
2008 by World Bible Translation Center