Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 23

தாவீதின் பாடல்.

23 கர்த்தர் என் மேய்ப்பர்.
    எனக்குத் தேவையானவை எப்போதும் என்னிடமிருக்கும்.
அவர் பசுமையான புல்வெளிகளில் என்னை இளைப்பாறச் செய்கிறார்.
    குளிர்ந்த நீரோடைகளருகே அவர் என்னை வழிநடத்துகிறார்.
அவர் நாமத்தின் நன்மைக்கேற்ப, என் ஆத்துமாவிற்குப் புது வலிமையைத் தருகிறார்.
    அவர் நல்லவரெனக் காட்டும்படி, நன்மையின் பாதைகளில் என்னை நடத்துகிறார்.
மரணத்தின் இருண்ட பள்ளத்தாக்குகளில் நான் நடந்தாலும் எந்தத் தீமைக்கும் பயப்படமாட்டேன்.
    ஏனெனில் கர்த்தாவே, நீர் என்னோடிருக்கிறீர்.
    உமது கோலும் தடியும் எனக்கு ஆறுதல் நல்கும்.

கர்த்தாவே, என் பகைவர்களின் முன்னிலையில் என் பந்தியை ஆயத்தமாக்கினீர்.
    என் தலையில் எண்ணெயை ஊற்றினீர். என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
என் ஆயுள் முழுவதும் உமது நன்மையும் இரக்கமும் என்னோடிருக்கும்.
    நித்திய காலமாக நான் கர்த்தருடைய ஆலயத்தில் அமர்ந்திருப்பேன்.

எரேமியா 10:1-16

கர்த்தரும், விக்கிரகங்களும்

10 இஸ்ரவேல் குடும்பத்தாரே! உங்களைக் குறித்து கர்த்தர் சொன்னதை கவனித்து கேளுங்கள்!

“மற்ற நாடுகளில் உள்ள ஜனங்களைப் போன்று வாழாதீர்கள்!
    வானத்தில் தோன்றும் சிறப்பான அடையாளங்களைக் கண்டு பயப்படாதீர்கள்!
அயல் நாடுகளில் உள்ளவர்கள் தாம் வானத்தில் காண்கின்றவற்றைப்பற்றி பயப்படுகிறார்கள்.
    ஆனால் அவற்றைப்பற்றி நீங்கள் பயப்பட வேண்டாம்!
மற்ற ஜனங்களின் பழக்கவழக்கங்கள் பயனற்றவை.
ஏனெனில், அவர்களது விக்கிரகங்கள் காட்டிலுள்ள மரக்கட்டைகளைத் தவிர, வேறில்லை.
அவர்களின் விக்கிரகங்கள் வேலையாளால் உளியால் செதுக்கப்பட்டவை.
அவர்கள் தமது விக்கிரகங்களைப் பொன்னாலும் வெள்ளியாலும் அழகுபடுத்துகின்றனர்.
அவர்கள் ஆணிகளையும், சுத்திகளையும் பயன்படுத்தி, விக்கிரகங்கள் விழாமல் செய்கிறார்கள்.
    எனவே, அவை விழுவதில்லை.
அயல்நாடுகளில் உள்ள விக்கிரகங்கள் வெள்ளரிக்காய் வயலிலே,
    குருவிகளை விரட்டுவதற்காக வைக்கப்பட்ட கொல்லை பொம்மையைப் போன்றுள்ளன.
அவர்களின் விக்கிரகங்களால் பேசமுடியாது.
    அவர்களின் விக்கிரகங்களால் நடக்கமுடியாது.
    ஜனங்கள் அந்த விக்கிரகங்களைத் தூக்கிச் செல்லவேண்டும்.
அவற்றுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்.
    அவைகளால் உங்களைக் காயப்படுத்த முடியாது.
அவை உங்களுக்கு உதவியும் செய்யாது”
    என்று கர்த்தர் சொல்லுகிறார்.

கர்த்தாவே, உம்மைப் போன்று எவரும் இல்லை!
    நீர் பெரியவர்!
    உமது நாமம் மகிமையும் பெருமையும் வல்லமையும் வாய்ந்தது!
தேவனே! எல்லோரும் உமக்கு மரியாதைச் செலுத்தவேண்டும்.
அனைத்து தேசத்தாருக்கும் நீரே ராஜா.
    அவர்களின் மரியாதைக்கு நீர் பாத்திரர்.
அந்த நாடுகளுக்கிடையில் பல ஞானமுள்ளவர்கள் இருக்கிறார்கள்.
    ஆனால், அவர்கள் எவரும் உம்மைப் போன்று ஞானமுள்ளவர்கள் இல்லை.
வேறு நாடுகளில் உள்ள, அனைத்து ஜனங்களும், அறியாமையும், மூடத்தனமும் கொண்டவர்கள்.
அவர்களின் போதனைகள் பயனற்றவை.
அவர்களின் தெய்வங்கள் மரச் சிலைகளே.
அவர்கள் தர்ஷீசிலிருந்து கொண்டுவந்த வெள்ளியையும்
    ஊப்பாசிலிருந்து கொண்டு வந்த பொன்னையும் வைத்து அந்தச் சிலைகளைச் செய்திருக்கின்றனர்.
அந்த விக்கிரகங்கள், தச்சன்களாலும், தட்டான்களாலும் செய்யப்பட்டவை.
அவர்கள் அந்த விக்கிரகங்களுக்கு, இளநீலமும், ஊதா ஆடையும் அணிவிக்கிறார்கள்.
    “ஞானமுள்ளவர்கள்” அந்த “தெய்வங்களைச்” செய்கின்றனர்.
10 ஆனால் கர்த்தர்தான் உண்மையான ஒரே தேவன்.
    உண்மையில் ஜீவனுள்ள ஒரே தேவன் அவர்தான்!
    அவர் என்றென்றும் ஆளுகின்ற ராஜா!
தேவன் கோபங்கொண்டால் பூமி அதிர்கிறது,
    தேசங்களிலுள்ள ஜனங்களால் அவரது கோபத்தை தாங்க முடியாது.

11 “அந்த ஜனங்களிடம் இந்தச் செய்தியைக் கூறுங்கள்,
    ‘அந்தப் பொய்த் தெய்வங்கள் பரலோகத்தையும் பூமியையும் படைக்கவில்லை.
    அந்தப் பொய்த் தெய்வங்கள் அழிக்கப்படுவார்கள்.
    வானம் மற்றும் பூமியிலிருந்து மறைவார்கள்’” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

12 தேவன் ஒருவரே தமது வல்லமையால் பூமியைச் செய்தார்.
    தேவன் தனது ஞானத்தைப் பயன்படுத்தி பூமியை உண்டாக்கினார்.
தேவன் தமது ஞானத்தினால்
    பூமியின்மேல் வானத்தை விரியச் செய்தார்.
13 சத்தமான இடிக்கும் தேவனே காரணமாகிறார்.
    வானத்திலிருந்து பெருவெள்ளம் பொழியவும் அவரே காரணமாகிறார்.
அவர் பூமியின் அனைத்து இடங்களிலிருந்தும் வானத்திற்கு மேகம் எழும்பும்படி செய்கிறார்.
    அவர் மின்னலுடன் மழையை அனுப்புகிறார்.
    அவர் தமது பண்டகச் சாலையிலிருந்து காற்றை அனுப்புகிறார்.
14 ஜனங்கள் மூடர்களாக இருக்கிறார்கள்!
    உலோகச் சிற்பிகள் தாங்கள் செய்த விக்கிரகங்களைக் கொண்டு அவமானத்துக்குள்ளாகின்றனர்.
அந்தச் சிலைகள் வெறும் பொய் என்று அவர்கள் அறிவார்கள்.
    அந்த விக்கிரகங்களுக்கு உயிர் இல்லை.
15 அந்த விக்கிரகங்கள் பயனற்றவை.
    அவை பொய்யானவை. வஞ்சிக்கும்படியாக செய்யப்பட்டவை.
நியாயத்தீர்ப்புக் காலத்தில்,
    அவ்விக்கிரகங்கள் அழிக்கப்படும்.
16 ஆனால் யாக்கோபின் தேவன், அந்த விக்கிரகங்களைப் போன்றவரல்ல.
    தேவன் எல்லாவற்றையும் படைத்தார், தேவன் தமது சொந்த ஜனங்கள் என்று இஸ்ரவேல் ஜனங்களை தேர்ந்தெடுத்தார்.
“சர்வ வல்லமையுள்ள கர்த்தர்” என்பது தேவனுடைய நாமம்.

கொலோசெயர் 1:15-23

கிறிஸ்துவைப் பார்க்கும்போது நாம் தேவனைக் காண்கிறோம்

15 ஒருவராலும் தேவனைக் காண இயலாது.
    ஆனால் இயேசு தேவனைப் போன்றவர்.
    படைக்கப்பட்ட அனைத்து பொருட்களின் மேலும் இயேசுவே ஆட்சியாளர்.
16 பரலோகத்திலும் பூலோகத்திலும் உள்ள அனைத்துப் பொருட்களும் இயேசுவின் வல்லமையால் படைக்கப்பட்டவை.
    அவை கண்ணால் காணப்படுகிறவை, காணப்படாதவை, ஆன்மீக சக்திகள்,
    அதிகாரங்கள், பிரபுக்கள், ஆள்வோர்கள் என அனைத்துமே
அவருக்காகவும், அவர் மூலமாகவும் படைக்கப்பட்டவை.

17 எதுவும் படைக்கப்படுவதற்கு முன்னரே கிறிஸ்து இருந்தார்.
    அவராலேயே அனைத்துப் பொருட்களும் தொடர்ந்து இருக்கின்றன.
18 கிறிஸ்துதான் சரீரத்தின் தலையாக இருக்கிறார் (சரீரம் என்பது சபையாகும்).
    எல்லாப் பொருட்களுமே அவராலேயே வருகின்றன.
    அவரே கர்த்தர். அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார்.
எல்லாவற்றையும் விட இயேசுவே அதிமுக்கியமானவர்.

19 கிறிஸ்துவில் சகலமும் வாழ்வதே தேவனுடைய விருப்பமாக இருந்தது.
20     பரலோகத்திலும், பூலோகத்திலும் உள்ள அனைத்துப் பொருள்களையும்
    கிறிஸ்துவின் மூலமாகத் தனக்குள்ளேயே திரும்பவும் கொண்டு வருவதில் தேவன் மகிழ்ச்சியடைந்தார்.
சிலுவையில் கிறிஸ்து இரத்தம் சிந்தியதன் மூலம் உலகில் தேவன் சமாதானத்தை உருவாக்கினார்.

21 ஒரு காலத்தில் நீங்கள் தேவனை விட்டுப் பிரிந்தீர்கள். உங்கள் மனதில் தேவனுக்குப் பகைவராக இருந்தீர்கள். ஏனென்றால் நீங்கள் செய்த எல்லா செயல்களும் தேவனுக்கு எதிரானவை. 22 ஆனால் இப்போது கிறிஸ்து மீண்டும் உங்களை தேவனுக்கு நண்பர்களாக்கிவிட்டார். கிறிஸ்து இதனைத் தனது மரணத்தின் மூலம் தான் சரீரத்தில் இருக்கும்போது செய்தார். இதன் மூலம் அவர் உங்களைப் பரிசுத்தமுள்ளவர்களாகவும், உங்களில் குற்றம் இல்லாதவர்களாகவும், தேவனால் நீங்கள் பாவிகள் என்று தீர்ப்பளிக்க முடியாத வகையில் தேவன் முன் நிறுத்துகிறார். 23 நீங்கள் கேட்டறிந்த நற்செய்தியில் தொடர்ந்து விசுவாசம் கொண்டவர்களாக இருந்தால், உங்களுக்காகக் கிறிஸ்து இதைச் செய்வார். உங்கள் விசுவாசத்தில் தொடர்ந்து உறுதியாகவும், ஸ்திரமாகவும் இருக்கவேண்டும். நற் செய்தியின் மூலம் பெற்ற விசுவாசத்தில் இருந்து கொஞ்சம் கூட விலகக் கூடாது. இந்த நற்செய்தியே உலகம் முழுவதும் சொல்லப்பட்டிருக்கிறது. பவுலாகிய நான் அந்த நற்செய்தியைப் பரவலாக ஆக்கும் பொருட்டு உதவி செய்கிறேன்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center