Revised Common Lectionary (Complementary)
8 தேவனாகிய கர்த்தர் கூறியதை நான் கேட்டேன்.
அவரது ஜனங்களுக்கும், உண்மையான சீடர்களுக்கும் சமாதானம் உண்டாகுமென்று கர்த்தர் கூறினார்.
எனவே மூடத்தனமான வாழ்க்கை முறைக்கு அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்லக் கூடாது.
9 தேவன் தம்மைப் பின்பற்றுவோரை விரைவில் மீட்பார்.
நமது தேசத்தில் நாம் பெருமையோடு விரைவில் வாழுவோம்.
10 தேவனுடைய உண்மையான அன்பு அவரை பின்பற்றுவோரை வந்தைடையும்.
நன்மையும் சமாதானமும் முத்தமிட்டு அவர்களை வாழ்த்தும்.
11 பூமியின் ஜனங்கள் தேவனிடம் நேர்மையானவர்களாயிருப்பார்கள்.
பரலோகத்தின் தேவனும் அவர்களுக்கு நல்லவராக இருப்பார்.
12 கர்த்தர் நமக்குப் பல நல்ல பொருள்களைத் தருவார்.
நிலம் பல நல்ல பயிர்களை விளைவிக்கும்.
13 நன்மை தேவனுக்கு முன்பாகச் செல்லும்.
அது அவருக்கு வழியை ஆயத்தப்படுத்தும்.
இஸ்ரவேலுக்கான எச்சரிக்கை
3 இஸ்ரவேல் ஜனங்களே, இந்தச் செய்தியைக் கவனியுங்கள். இஸ்ரவேலே உங்களைபற்றி கர்த்தர் இவற்றைக் கூறினார். இந்த செய்தி நான் எகிப்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த எல்லாக் குடும்பங்களையும் (இஸ்ரவேல்) பற்றியது. 2 “பூமியில் அநேகக் குடும்பங்கள் இருந்தன. ஆனால் உன்னுடைய ஒரே குடும்பத்தைதான் சிறப்பான வழியில் அறிந்துகொள்ள நான் தேர்ந்தெடுத்தேன். நீ எனக்கு எதிராகத் திரும்பினாய். எனவே, நான் உனது எல்லா பாவங்களுக்காக உன்னைத் தண்டிப்பேன்.”
இஸ்ரவேலின் தண்டனைக்கான காரணம்
3 இரண்டு பேர் ஒத்துப்போனாலொழிய
ஒரே வழியில் நடக்க முடியாது.
4 காட்டிலுள்ள சிங்கம்,
ஒரு மிருகத்தைப் பிடித்த பிறகுதான் கெர்ச்சிக்கும்.
ஒரு இளஞ்சிங்கம் தன் குகையில் கெர்ச்சிக்கிறது என்றால்,
அது ஏதோ ஒன்றைப் பிடித்துவிட்டது என்று அர்த்தம்.
5 கண்ணிக்குள்ளே உணவு இல்லாவிட்டால்
ஒரு பறவை தரையிலுள்ள கண்ணிக்குள் பறக்காது.
கண்ணி மூடினால்
அது பறவையைப் பிடிக்கும்.
6 எக்காளம் எச்சரிக்கையாக ஊதினால்,
ஜனங்கள் நிச்சயம் பயத்தால் நடுங்குவார்கள்.
நகரத்திற்கு துன்பம் வந்தால்,
அதற்கு கர்த்தர் காரணமாவார்.
7 எனது கர்த்தராகிய ஆண்டவர் சிலவற்றைச் செய்ய முடிவுசெய்வார். ஆனால் அவர் எதையும் செய்யும் முன்னால் அவர் தனது தீர்க்கதரிசிகளிடம் சொல்வார். 8 ஒரு சிங்கம் கெர்ச்சித்தால் ஜனங்கள் பயப்படுவார்கள். கர்த்தர் பேசினால் தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்.
9-10 நீங்கள் அஸ்தோத்தின் கோபுரங்களுக்கும், எகிப்துக்கும் போய் இச்செய்தியைக் கூறுங்கள். “சமாரியாவின் மலைகளுக்கு வாருங்கள். நீங்கள் அங்கே பெருங்குழப்பத்தைக் காண்பீர்கள். ஏனென்றால் ஜனங்களுக்குச் சரியாக வாழ்வது எப்படி என்று தெரியாது. அந்த ஜனங்கள் மற்ற ஜனங்களிடம் கொடூரமாக இருந்தார்கள். அவர்கள் மற்றவர்களிடமிருந்து பொருட்களை எடுத்துத் தங்கள் கோபுரங்களில் ஒளித்து வைத்தார்கள். அவர்கள் போரில் எடுத்தப் பொருட்களால் அவர்களது கருவூலங்கள் நிறைந்திருக்கின்றன.”
11 எனவே கர்த்தர் சொல்கிறார்: “ஒரு பகைவன் அந்த நாட்டிற்கு வருவான். அந்தப் பகைவன் உன் பலத்தை எடுத்துப்போடுவான். நீ உயர்ந்த கோபுரங்களில் ஒளித்து வைத்த பொருட்களை அவன் எடுப்பான்.”
12 கர்த்தர் கூறுகிறார்,
“ஒரு சிங்கம் ஒரு ஆட்டுக் குட்டியை தாக்கலாம்.
மேய்ப்பன் அந்த ஆட்டைக் காப்பாற்ற முயற்சி செய்யலாம்.
ஆனால் மேய்ப்பன் ஆட்டுக்குட்டியின் ஒரு பகுதியைத்தான் காப்பாற்றுவான்.
அவன் சிங்கத்தின் வாயிலிருந்து இரண்டு கால்கள்
அல்லது காதின் ஒரு பகுதியை மட்டும் பிடுங்க முடியும்.
அவ்வாறே இஸ்ரவேலின் பெரும் பாலான ஜனங்கள் காப்பாற்றப்படமாட்டார்கள்.
சமாரியாவில் வாழ்கிற ஜனங்கள் படுக்கையின் ஒரு மூலையையோ
அல்லது ஒரு மஞ்சத்தின் மேலிருக்கும் துணியின் ஒரு துண்டையோ காப்பாற்றிக்கொள்வார்கள்.”
கிறிஸ்தவர்களுக்குப் போதித்த கருத்துக்கள்
2 தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் பிரார்த்தனை செய்யும்போது, மனதைத் தயார் நிலையில் வைத்திருங்கள். மேலும் தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். 3 எங்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள். தேவனுடைய செய்தியை நாங்கள் மக்களிடம் பரப்பிட வாய்ப்பு அளிக்குமாறு அவரை வேண்டுங்கள். கிறிஸ்துவைப் பற்றி தேவன் வெளிப்படுத்தியிருக்கிற இரகசிய உண்மையை நாங்கள் பிரச்சாரம் செய்ய பிரார்த்தனை செய்யுங்கள். இதனைப் பிரச்சாரம் செய்ததால் நான் சிறையில் இருக்கிறேன். 4 இந்த உண்மையை நான் மக்களிடம் தெளிவுபடுத்த முடியும். இதுவே நான் செய்ய வேண்டியதாகும்.
5 கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களோடு சேர்ந்து வாழும்போது எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பதில் ஞானமுடையவர்களாக இருங்கள். உங்களால் முடிந்தவரை நல்வழியில் உங்கள் காலத்தைச் செலவு செய்யுங்கள். 6 நீங்கள் பேசும்போது கருணையுடனும், ஞானத்துடனும் இருங்கள். பிறகு, உங்களால் எவருக்கும் பதில் சொல்ல இயலும்.
பவுலோடிருந்த மக்களைப் பற்றிய செய்தி
7 தீகிக்கு கிறிஸ்துவுக்குள் என் அன்பான சகோதரன். கர்த்தருக்குள் அவன் நம்பிக்கைக்கு உரிய ஊழியன். என்னோடு பணியாற்றும் கர்த்தரின் வேலையாள். என் வாழ்வில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற எல்லாவற்றையும் அவன் உங்களுக்குக் கூறுவான். 8 அதற்காகத் தான் அவனையும் அனுப்புகிறேன். நாங்கள் எப்படி இருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். உங்களை உற்சாகப்படுத்த அவனை அனுப்புகிறேன். 9 ஒநேசிமுவோடு அவனை அனுப்புகிறேன். ஒநேசிமுவும் கிறிஸ்துவுக்குள் எனது அன்பான நம்பிக்கைக்கு உரிய சகோதரன். அவன் உங்கள் கூட்டத்திலிருந்து வந்தவன். எங்களைப் பற்றிய செய்திகளை எல்லாம் தீகிக்குவும், ஒநேசிமுவும் உங்களிடம் கூறுவார்கள்.
10 அரிஸ்தர்க்கு தன் வாழ்த்துக்களை உங்களுக்குத் தெரிவிக்கிறான். அவன் என்னோடு சிறையில் இருக்கிறான். பர்னபாவின் உறவினனான மாற்கும் வாழ்த்து கூறுகிறான். நான் ஏற்கெனவே சொன்ன தகவல்களின்படி இவன் வந்தால் வரவேற்றுக்கொள்ளுங்கள். 11 இயேசுவும் வாழ்த்து கூறுகிறான். (யுஸ்து என்பது அவனது மறு பெயர்) யூதர்களாகிய இவர்கள் தேவனுடைய இராஜ்யத்திற்காக என்னோடு பாடுபடுகிறார்கள். இவர்கள் எனக்கு ஆறுதலாக இருக்கிறார்கள்.
12 எப்பாப்பிராவும் வாழ்த்து கூறுகிறான். அவன் இயேசு கிறிஸ்துவின் ஊழியன். அவனும் உங்கள் கூட்டத்தைச் சேர்ந்தவன். அவன் எப்போதும் உங்களுக்காகவே பிரார்த்தனை செய்கிறான். நீங்கள் ஆன்மீக வாழ்வில் முழுமை பெறவும், தேவன் விரும்புகிறவைகளை நீங்கள் பெற வேண்டும் என்றும் அவன் பிரார்த்திக்கிறான். 13 அவன் உங்களுக்காகவும் லவோதிக்கேயருக்காகவும், எராப்போலியருக்காகவும் கடுமையாகப் பாடுபட்டான் என அவனுக்காக நான் சான்றுரைக்கிறேன். 14 தேமாவும் நமது அன்பான நண்பனும் மருத்துவனுமான லூக்காவும் உங்களுக்கு வாழ்த்து கூறுகிறார்கள்.
15 லவோதிக்கேயாவில் உள்ள சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்து கூறுங்கள். நிம்பாவுக்கும் அவனது வீட்டில் கூடுகிற சபைக்கும் வாழ்த்து கூறுங்கள். 16 உங்களிடத்தில் இந்த கடிதம் வாசிக்கப்பட்ட பின்பு லவோதிக்கேயா சபைக்கும் வாசிக்க ஏற்பாடு செய்யுங்கள். நான் லவோதிக்கேயா சபைக்கு எழுதிய நிருபத்தையும் வாசியுங்கள். 17 அர்க்கிப்பைக் கண்டு, “கர்த்தர் நமக்குக் கொடுத்த பணியை முழுமையாய் செய்வதில் உறுதியாய் இரு” என்று சொல்லுங்கள்.
18 பவுலாகிய நானே என் கையால் எழுதி உங்களை வாழ்த்துகிறேன். நான் சிறையில் இருப்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். தேவனுடைய கிருபை உங்களோடு இருப்பதாக. ஆமென்.
2008 by World Bible Translation Center