Revised Common Lectionary (Complementary)
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்.
123 தேவனே, நான் மேலே நோக்கி, உம்மிடம் ஜெபம் செய்கிறேன்.
நீர் பரலோகத்தில் ராஜாவாக வீற்றிருக்கிறீர்.
2 தங்களுக்குத் தேவையான பொருள்களுக்காக
அடிமைகள் தங்களின் எஜமானரை சார்ந்திருக்கிறார்கள்.
அவ்வாறே, நாமும் நமது தேவனாகிய கர்த்தரை சார்ந்திருக்கிறோம்.
நம்மிடம் இரக்கம் காட்டுமாறு நாம் தேவனுக்காகக் காத்திருக்கிறோம்.
3 கர்த்தாவே, எங்களிடம் இரக்கமாயிரும்.
நாங்கள் நீண்டகாலம் அவமானப்படுத்தப்பட்டதால் எங்களிடம் கிருபையாயிரும்.
4 நாங்கள் வெறுப்படையும் அளவுக்கு இழிவுரைகளையும் அவமானங்களையும், சோம்பேறி ஜனங்களாகிய பெருமைக்காரர்களினால் பெற்றிருந்தோம்.
பிறரைக் காட்டிலும் தாங்கள் மேலானவர்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
27 “எரேமியா! நீ யூதா ஜனங்களிடம் இவற்றை எல்லாம் சொல்லுவாய். ஆனால் அவர்கள் நீ சொல்வதை கவனிக்கமாட்டார்கள்! நீ அவர்களை அழைப்பாய். ஆனால் அவர்கள் பதில் சொல்லமாட்டார்கள். 28 எனவே, நீ அவர்களிடம் இவற்றைச் சொல்லவேண்டும். நமது தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படியாத தேசம் இதுதான். தேவனுடைய போதனைகளை அதன் ஜனங்கள் கவனிக்கவில்லை, இந்த ஜனங்கள் உண்மையான போதனைகளை அறியவில்லை.
கொலையின் பள்ளத்தாக்கு
29 “எரேமியா, உனது தலைமுடியை வெட்டி எறிந்துபோடு. பாறையின் உச்சிக்குப் போய் அழு. ஏனென்றால், கர்த்தர் இந்த தலைமுறை ஜனங்களை மறுத்திருக்கிறார். இந்த ஜனங்களுக்கு கர்த்தர் தனது முதுகைத் திருப்பிக்கொண்டார். கோபத்துடன் அவர்களைத் தண்டிப்பார். 30 இவற்றைச் செய். ஏனென்றால், யூதா ஜனங்கள் தீமை செய்வதை நான் பார்த்திருக்கிறேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “அவர்கள் தம் விக்கிரகங்களை அமைத்திருக்கிறார்கள், அதனை எனது நாமத்தால் அழைக்கப்படுகிற ஆலயத்தில் அவர்கள் அந்த விக்கிரகங்களை வைத்திருக்கிறார்கள். அவற்றை நான் வெறுக்கிறேன். அவர்கள் எனது வீட்டை ‘தீட்டு’ செய்திருக்கிறார்கள்! 31 யூதா ஜனங்கள், இன்னோமின் பள்ளத்தாக்கிலுள்ள தோப்பேத்தின் மேடைகளைக் கட்டியிருக்கிறார்கள். அந்த இடங்களில் அவர்கள் தமது குமாரர்களையும், குமாரத்திகளையும் கொன்று, பலியாக எரித்தார்கள். இவற்றைச் செய்யுமாறு நான் கட்டளையிடவில்லை. இவை போன்றவற்றை நான் மனதிலே நினைத்துப் பார்க்கவுமில்லை. 32 எனவே, நான் உன்னை எச்சரிக்கிறேன். நாட்கள் வந்துகொண்டிருக்கின்றன” என்று கர்த்தர் சொல்லுகிறார். “ஜனங்கள் இந்த இடத்தை தொப்பேத் என்னும் இன்னோமின் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்போவதில்லை. அவர்கள் இதனை ‘சங்காரப் பள்ளத்தாக்கு’ என்று அழைப்பார்கள். அவர்கள் இதற்கு இந்தப் பெயரை இடுவார்கள். ஏனென்றால் மரித்தவர்களை அவர்கள் தோப்பேத்தில் இனி புதைக்க இடமில்லை என்று கூறுமளவுக்குப் புதைப்பார்கள். 33 பிறகு, மரித்தவர் களின் உடல்கள் பூமிக்கு மேலே கிடக்கும், வானத்து பறவைகளுக்கு உணவாகும். அந்த ஜனங்களின் உடல்களைக் காட்டு மிருகங்கள் உண்ணும். அந்தப் பறவைகள் அல்லது மிருகங்களைத் துரத்திட அங்கு எவரும் உயிரோடு இருக்கமாட்டார்கள். 34 எருசலேமின் தெருக்களிலும், யூதாவின் நகரங்களிலும் உள்ள, சந்தோஷம் மகிழ்ச்சி ஆகியவற்றின் ஒலிகளை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவேன். எருசலேம் அல்லது யூதாவில் இனிமேல் மணவாளன் மற்றும் மணவாட்டியின் சத்தமும் இனிமேல் இருக்காது. இந்த நாடு ஒரு பாழடைந்த பாலைவனமாகும்.”
இயேசுவைப் பின்தொடர்தல்
(லூக்கா 9:57-62)
18 அனைத்து மக்களும் தன்னைச் சுற்றி இருப்பதை இயேசு கண்டார். எனவே, இயேசு தன் சீஷர்களிடம் ஏரியின் மறு கரைக்குச் செல்லுமாறு கூறினார். 19 பின் வேதபாரகரில் ஒருவன் இயேசுவிடம் வந்து, “போதகரே, நீர் போகுமிடமெல்லாம் நான் உங்களைத் தொடர்ந்து வருவேன்” என்றான்.
20 அதற்கு இயேசு, “நரிகள் தாம் வாழ குழிகளைப் பெற்றுள்ளன. பறவைகள் தாம் வாழ கூடுகளைப் பெற்றுள்ளன. ஆனால், மனிதகுமாரனுக்குத் தலை சாய்க்க ஓரிடமும் இல்லை” என்று கூறினார்.
21 இயேசுவின் சீஷர்களில் மற்றொருவன் அவரிடம், “போதகரே, நான் போய் முதலில் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுப் பின், உம்மைத் தொடர்ந்து வருகிறேன்” என்றான்.
22 ஆனால் இயேசு அவனிடம், “என்னைப் பின்பற்றி வா. மரித்தோர் தம் மரித்தோரை அடக்கம் செய்துகொள்ளட்டும்” என்றார்.
2008 by World Bible Translation Center