Revised Common Lectionary (Complementary)
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்.
123 தேவனே, நான் மேலே நோக்கி, உம்மிடம் ஜெபம் செய்கிறேன்.
நீர் பரலோகத்தில் ராஜாவாக வீற்றிருக்கிறீர்.
2 தங்களுக்குத் தேவையான பொருள்களுக்காக
அடிமைகள் தங்களின் எஜமானரை சார்ந்திருக்கிறார்கள்.
அவ்வாறே, நாமும் நமது தேவனாகிய கர்த்தரை சார்ந்திருக்கிறோம்.
நம்மிடம் இரக்கம் காட்டுமாறு நாம் தேவனுக்காகக் காத்திருக்கிறோம்.
3 கர்த்தாவே, எங்களிடம் இரக்கமாயிரும்.
நாங்கள் நீண்டகாலம் அவமானப்படுத்தப்பட்டதால் எங்களிடம் கிருபையாயிரும்.
4 நாங்கள் வெறுப்படையும் அளவுக்கு இழிவுரைகளையும் அவமானங்களையும், சோம்பேறி ஜனங்களாகிய பெருமைக்காரர்களினால் பெற்றிருந்தோம்.
பிறரைக் காட்டிலும் தாங்கள் மேலானவர்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
எரேமியாவின் ஆலயத்துப் பிரசங்கம்
7 எரேமியாவிற்கான கர்த்தருடைய செய்தி இது: 2 எரேமியா, தேவனுடைய வீட்டுக் கதவருகில் நில். வாசலில் இந்த செய்தியைப் பிரசங்கம் செய்: “யூதா நாட்டிலுள்ள அனைத்து ஜனங்களே! கர்த்தரிடமிருந்து வந்த செய்தியைக் கேளுங்கள்! இந்த வாசல் வழியாக கர்த்தரை ஆராதிக்க வருகின்ற ஜனங்களே, இந்தச் செய்தியைக் கேளுங்கள். 3 இஸ்ரவேல் ஜனங்களின் தேவனாகிய கர்த்தர் இருக்கிறார். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இதைத் தான் சொல்கிறார்: ‘உங்களது வாழ்க்கையை மாற்றுங்கள். நல்லவற்றைச் செய்யுங்கள், இதனை நீங்கள் செய்தால், நான் உங்களை இந்த இடத்தில் வாழவிடுவேன். 4 சில ஜனங்கள் கூறுகிற பொய்களில் நம்பிக்கை வைக்காதீர்கள். இதுதான் கர்த்தருடைய ஆலயம், கர்த்தருடைய ஆலயம், கர்த்தருடைய ஆலயம்’ என்று அவர்கள் கூறுகின்றனர். 5 நீங்கள் உங்களது வாழ்க்கையை மாற்றிக்கொண்டு நற் செயல்களைச் செய்தால், நான் உங்களை இந்த இடத்தில் வாழவிடுவேன். நீங்கள் ஒருவருக்கு ஒருவர் நியாயமாக இருக்கவேண்டும். 6 நீங்கள் அந்நியர்களுக்கும் நியாயமாக இருக்கவேண்டும். நீங்கள் விதவைகளுக்கும் அநாதைகளுக்கும் நல்லவற்றைச் செய்யவேண்டும். ஒன்றுமறியாத ஜனங்களைக் கொல்லவேண்டாம். மற்ற தெய்வங்களைப் பின் பற்றவேண்டாம். ஏனென்றால் அவை உங்கள் வாழ்வை அழித்துவிடும். 7 நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்தால், நான் உங்களை இந்த இடத்தில் வாழவிடுவேன்: நான் உங்களது முற்பிதாக்களுக்கு இந்த நாட்டை என்றென்றைக்கும் வைத்திருக்கும்படி கொடுத்தேன்.
8 “ஆனால் நீங்கள் பொய்களை நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். அந்தப் பொய்கள் பயனில்லாதவை. 9 நீங்கள் களவும், கொலையும் செய்வீர்களா? நீங்கள் விபச்சாரம் என்னும் பாவத்தை செய்வீர்களா? நீங்கள் மற்றவர்கள் மேல் பொய்வழக்கு போடுவீர்களா? நீங்கள் பொய்த் தெய்வமான பாகாலைத் தொழுதுகொண்டு, உங்களால் அறியப்படாத அந்நிய தெய்வங்களைப் பின்பற்றுவீர்களா? 10 நீங்கள் அந்தப் பாவங்களைச் செய்தால், எனது நாமத்தால் அழைக்கப்படும். இந்த வீட்டில் எனக்கு முன்னால் நிற்க முடியும் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் இதுபோன்ற கெட்ட செயல்களையெல்லாம் செய்துகொண்டு, எனக்கு முன்னால் நின்று, ‘நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம்’ என்று சொல்லிக்கொண்டே தீய செயல்களைத் தொடர்ந்து செய்யலாம் என்று நினைக்கிறீர்களா? 11 இந்த ஆலயம் எனது நாமத்தால் அழைக்கப்படுகின்றது. இந்த ஆலயம் உங்களுக்கு, கள்ளர் பதுங்கும் இடமே ஒழிய, வேறு எதுவுமில்லையா? நான் உங்களை கவனித்துக்கொண்டிருக்கிறேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
12 “யூதாவின் ஜனங்களே! இப்பொழுது சீலோ என்னும் நகரத்திற்குப் போங்கள். நான் முதலில் எந்த இடத்தில் எனது நாமத்தால் ஒரு வீட்டை அமைத்தேனோ அங்கு போங்கள். இஸ்ரவேல் ஜனங்களும் தீயச்செயல்களைச் செய்தனர். அவர்கள் செய்த தீயச்செயல்களுக்கு நான் அந்த இடத்துக்குச் செய்தவற்றைப் போய் பாருங்கள். 13 யூதா ஜனங்களாகிய நீங்கள், இத்தீயச் செயல்களையெல்லாம் செய்தீர்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் உங்களிடம் மீண்டும், மீண்டும் பேசினேன். ஆனால் நீங்கள் என்னை கவனிக்க மறுத்துவிட்டீர்கள். நான் உங்களை அழைத்தேன். ஆனால் நீங்கள் பதில் சொல்லவில்லை. 14 எனவே, எருசலேமில் எனது நாமத்தால் அழைக்கப்பட்ட வீட்டை அழிப்பேன். நான் சீலோவை அழித்தது போன்று, அந்த ஆலயத்தையும் அழிப்பேன். எனது நாமத்தால் அழைக்கப்படும் எருசலேமில் உள்ள அந்த வீடு, நீங்கள் நம்பிக்கை வைத்த ஆலயம். நான் அந்த இடத்தை உங்களுக்கும் உங்கள் முற்பிதாக்களுக்கும் கொடுத்தேன். 15 எப்பிராயீமிலுள்ள உங்கள் சகோதரர்களை நான் தூர எறிந்ததைப்போன்று, உங்களையும் என்னைவிட்டுத் தூர எறிவேன்.
8 உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் நீங்கள் பெற்றிருப்பதாக நினைக்கிறீர்கள். நீங்கள் செல்வந்தர்களென எண்ணுகிறீர்கள். எங்கள் உதவியின்றி நீங்கள் ஆளுபவர்களாக விளங்குவதாகக் கருதுகிறீர்கள். நீங்கள் உண்மையிலேயே மன்னர்களாக விளங்க வேண்டுமென நான் விரும்புகிறேன். அப்போது, நாங்களும் உங்களோடுகூட ஆளுபவர்களாக இருந்திருப்போம். 9 ஆனால் தேவன் எனக்கும் பிற அப்போஸ்தலர்களுக்கும் கடைசியான இடத்தையே கொடுத்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. எல்லோரும் பார்த்திருக்க மரண தண்டனை அளிக்கப்பட்ட மனிதர்களைப் போன்றவர்கள் நாங்கள். தேவ தூதர்களும் மனிதர்களும் முழு உலகமும் பார்த்திருக்கும் ஒரு காட்சியைப் போன்றவர்கள் நாங்கள். 10 கிறிஸ்துவுக்கு நாங்கள் மூடர்கள். ஆனால் கிறிஸ்துவுக்குள் ஞானிகளாக நீங்கள் உங்களைக் கருதுகிறீர்கள். நாங்கள் பலவீனர்கள். ஆனால் நீங்கள் பலசாலிகளாக நினைக்கிறீர்கள். மக்கள் உங்களை கௌரவிக்கின்றனர். ஆனால் அவர்கள் எங்களை கௌரவப்படுத்துவதில்லை. 11 இப்போதும் குடிப்பதற்கும், உண்பதற்கும் தேவையான பொருள்கள் எங்களுக்குக் கிடைப்பதில்லை. எங்களுக்கு வேண்டிய ஆடைகள் இருப்பதில்லை. அவ்வப்போது பிறரால் அடிக்கப்படுகிறோம். எங்களுக்கு வீடுகள் இல்லை. 12 எங்களுக்குத் தேவையான உணவின்பொருட்டு எங்கள் கைகளால் கடினமாக உழைக்கிறோம். மக்கள் எங்களை சபிக்கிறார்கள். ஆனால் நாங்கள் அவர்களை ஆசீர்வதிக்கிறோம். நாங்கள் மோசமான முறையில் நடத்தப்படுகிறபோது பொறுமையுடன் சகித்துக்கொள்கிறோம். மக்கள் குறை கூறுகையில் பொறுத்துக்கொள்கிறோம். 13 மக்கள் எங்களைக் குறித்துத் தீமைகளைப் பேசினாலும், நாங்கள் அவர்களைக் குறித்து நல்லவற்றையே பேசுகிறோம். பூமியின் கழிவுப் பொருள்களாகவும், அழுக்காகவுமே மக்கள் எங்களை இதுவரைக்கும் நடத்தி வந்துள்ளனர்.
2008 by World Bible Translation Center