Revised Common Lectionary (Complementary)
23 ஒவ்வொரு காலையிலும் அவர் அதை புதிய வழிகளில் காண்பிக்கிறார்!
கர்த்தாவே, உமது உண்மையும், பற்றுதலும் மிகப் பெரியது!
24 நான் எனக்குள், “கர்த்தரே எனது தேவனாயிருக்கிறார்,
ஆகவே நான் அவரை நம்புவேன்” என்கிறேன்.
25 கர்த்தர் தனக்காகத் காத்திருக்கும் ஜனங்களுக்கு நல்லவராய் இருக்கிறார்.
கர்த்தர் அவரைத் தேடும் ஜனங்களுக்கு நல்லவராய் இருக்கிறார்.
26 ஒருவன் தன்னை இரட்சித்துக்கொள்ள
கர்த்தருக்காக அமைதியாகக் காத்திருப்பது நல்லது.
27 ஒருவன் கர்த்தருடைய நுகத்தை அணிந்துகொள்ளுவது நல்லது.
ஒருவன், தன் இளமை காலத்திலிருந்தே அந்த நுகத்தடியைச் சுமப்பது நல்லது.
28 கர்த்தர் நுகத்தை அவன் மீது வைக்கும்போது,
அந்த மனிதன் தனியாகவும் அமைதியாகவும் இருப்பான்.
29 அம்மனிதன் கர்த்தருக்கு முன் தன் முகம் தரையில் படும்படி குப்புற விழுந்து வணங்க வேண்டும்.
அதில் இன்னும் நம்பிக்கை இருக்கலாம்.
30 அம்மனிதன் தன் ஒரு கன்னத்தில் அடிக்கிறவனுக்கு மறு கன்னத்தைத் திருப்பவேண்டும்.
அம்மனிதன் ஜனங்கள் தன்னை நிந்திக்கும்படி அனுமதிக்கவேண்டும்.
31 கர்த்தர் என்றென்றும் ஜனங்களை புறக்கணிக்கமாட்டார் என்பதை
அம்மனிதன் நினைவில்கொள்ளவேண்டும்.
32 கர்த்தர் தண்டிக்கும்போது
அவனுக்கும் இரக்கத்தையும் வெளிபடுத்துகிறார்.
அவரது பேரன்பாலும் கருணையாலும் அன்பாலும்
அவனுக்கு இரக்கம் வெளிப்படுகிறது.
33 கர்த்தர் ஜனங்களைத் தண்டிக்க விரும்புவதில்லை.
அவர் ஜனங்கள் மகிழ்ச்சியற்று இருப்பதை விரும்புவதில்லை.
தாவீது பாடிய பாடல்களுள் ஒன்று. ஆலயத்தின் அர்ப்பணிப்புக்காகப் பாடிய பாடல்.
30 கர்த்தாவே, என் தொல்லைகளினின்று என்னை விடுவித்தீர்.
எனது பகைவர்கள் என்னைத் தோற்கடித்து என்னை நோக்கி நகைக்காமல் இருக்கச் செய்தீர்.
எனவே நான் உம்மை கனப்படுத்துவேன்.
2 என் தேவனாகிய கர்த்தாவே, நான் உம்மிடம் ஜெபித்தேன்.
நீர் என்னைக் குணமாக்கினீர்.
3 கல்லறையினின்று என்னை விடுவித்தீர்.
என்னை வாழவிட்டீர்.
குழிகளில் இருக்கும் பிணங்களோடு நான் தங்கியிருக்க நேரவில்லை.
4 தேவனைப் பின்பற்றுவோர் கர்த்தருக்குத் துதிகளைப் பாடுவார்கள்!
அவரது பரிசுத்த நாமத்தைத் துதியுங்கள்!
5 தேவன் கோபங்கொண்டார். அதன் முடிவு “மரணமே.”
ஆனால் அவர் அன்பை வெளிப்படுத்தினார், எனக்கு “உயிரைக்” கொடுத்தார்.
இரவில் அழுதபடி படுத்திருந்தேன்.
மறுநாள் காலையில் மகிழ்ச்சியோடு பாடிக்கொண்டிருந்தேன்!
6 இப்போது இவ்வாறு நான் கூறமுடியும்.
அது உண்மையென நிச்சயமாய் நான் அறிவேன்.
“நான் ஒருபோதும் தோற்கடிக்கப்படமாட்டேன்!”
7 கர்த்தாவே, என்னிடம் தயவாயிருந்தீர்.
எதுவும் என்னை வெல்ல முடியாது என உணர்ந்தேன்.
சிலகாலம், நீர் என்னை விட்டு விலகினீர்,
நான் மிகவும் பயந்தேன்.
8 தேவனே, நான் உம்மிடம் திரும்பி ஜெபித்தேன்.
எனக்கு இரக்கம் காட்டுமாறு வேண்டினேன்.
9 நான், “தேவனே, நான் மரித்துக் கல்லறைக்குள் அடக்கம் பண்ணப்பட்டால் என்ன பயன்?
மரித்தோர் புழுதியில் கிடப்பார்கள்.
அவர்கள் உம்மைத் துதிப்பதில்லை!
என்றென்றும் தொடரும் உம் நன்மையை அவர்கள் பேசார்கள்” என்றேன்.
10 கர்த்தாவே என் ஜெபத்தைக் கேளும்.
என்னிடம் தயவாயிரும்!
கர்த்தாவே, எனக்கு உதவும்.
11 நான் ஜெபித்தேன், நீர் எனக்கு உதவினீர்!
என் அழுகையை நடனக்களிப்பாய் மாற்றினீர்.
அழுகையின் ஆடைகளை நீர் அகற்றிப்போட்டீர்.
மகிழ்ச்சியால் என்னைப் பொதிந்து வைத்தீர்.
12 எனது தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றும் நான் துதிப்பேன்.
ஒருபோதும் அமைதியாயிராமல் நான் இதைச் செய்வேன்.
எப்போதும் யாராவது ஒருவர் உம்மை கனப்படுத்திக் கொண்டிருப்பார்கள்.
7 நம்பிக்கையிலும், பேச்சிலும், அறிவிலும், உண்மை விருப்பத்தோடு உதவுவதிலும், எங்கள் மேலுள்ள அன்பிலும் நீங்கள் செல்வந்தராய் இருக்கிறீர்கள். இந்த கொடுக்கும் நற்காரியத்திலும் நீங்கள் செல்வந்தராய் இருக்க வேண்டும்.
8 கொடுக்க வேண்டுமென்று உங்களுக்குக் கட்டளையிடவில்லை, ஆனால் உங்கள் அன்பு உண்மையான அன்பென்று நாங்கள் பார்க்க விரும்புகிறோம். மற்றவர்களும் உண்மையில் உதவ விரும்புவதை உங்களுக்குக் காட்டவே இதைச் செய்கிறோம். 9 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கருணையை நீங்கள் அறிவீர்கள். கிறிஸ்து தேவனோடு செல்வந்தராயிருந்தார். ஆனால் உங்களுக்காக அவர் ஏழையானார். அதன் மூலம் அவர் உங்களைச் செல்வந்தர்களாக்க விரும்பினார்.
10 உங்கள் நன்மைக்காகவே நீங்கள் இதைச் செய்ய வேண்டுமென நான் சொல்ல விரும்புகிறேன். சென்ற ஆண்டில் கொடுக்க விரும்பியதில் நீங்களே முதலாவதாக இருந்தீர்கள். அது போல் கொடுப்பதிலும் முதலாவதாக இருந்தீர்கள். 11 எனவே, இப்பொழுது தொடங்கிய செயலை முடித்துவிடுங்கள். பிறகு உங்கள் செயலானது உங்களுடைய விருப்பத்துக்கு ஏற்றதாக அமையும். உங்களிடம் இருப்பதைக் கொடுங்கள். 12 நீங்கள் விரும்பிக் கொடுத்தால் அது ஏற்றுக்கொள்ளப்படும். உங்களது கொடுத்தலானது உங்களிடம் இல்லாததை வைத்து தீர்மானிக்கப்படாது; இருப்பதைக்கொண்டே தீர்மானிக்கப்படும். 13 மற்றவர்கள் சௌகரியமாக இருக்கையில் நீங்கள் மட்டும் தொல்லைப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எல்லாம் சமமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். 14 இப்பொழுது உங்களிடம் நிறைய உள்ளது. அவற்றைத் தேவையானவர்களுக்குக் கொடுங்கள். அவர்களிடம் மிகுதியாக இருக்கும்போது அவர்கள் உங்களுக்குத் தேவையானதைக் கொடுத்து உதவுவார்கள். இப்படியே எல்லாம் சமமாகும்.
15 “அதிகமாகச் சேர்த்தவன் எவனும் அதிகமாக வைத்திருப்பதில்லை.
குறைவாக சேர்த்தவன் எவனும் குறைவுடன் இருப்பதில்லை” என்று எழுதப்பட்டுள்ளது.(A)
உயிரடைதலும், நோயாளி குணமாகுதலும்
(மத்தேயு 9:18-26; லூக்கா 8:40-56)
21 படகிலேறி இயேசு கடலின் அக்கரைக்குத் திரும்பிச் சென்றார். அக்கரையில் ஏராளமான மக்கள் கடற்கரையிலிருக்கும்போது இயேசுவைச் சுற்றிக் கூடினர். 22 அப்பொழுது, ஜெப ஆலயத் தலைவர்களுள் ஒருவன் அங்கு வந்தான். அவன் பெயர் யவீரு. அவன் இயேசுவைப் பார்த்ததும் அவரைப் பணிவுடன் குனிந்து வணங்கினான். 23 அவன் இயேசுவை மேலும், மேலும் பணிந்தான். அவன் “என்னுடைய சின்ன குமாரத்தி செத்துக்கொண்டிருக்கிறாள். தயவுசெய்து அங்கு வந்து அவள் மீது உங்கள் கைகளை வைக்க வேண்டும். அதனால் அவள் குணம் பெற்று வாழ்வாள்” என்றான்.
24 ஆகையால் இயேசு அவனுடன் சென்றார். ஏராளமான மக்கள் இயேசுவைப் பின்தொடர்ந்தனர். அவர்கள் அவரை நெருக்கிக்கொண்டு சென்றனர்.
25 அம்மக்களின் நடுவில் ஒரு பெண்ணும் இருந்தாள். அவள் பன்னிரண்டு ஆண்டுகளாக இரத்தப்போக்கால் அவதிப்பட்டு வந்தாள். 26 அவள் மிகவும் துன்பப்பட்டு விட்டாள். ஏராளமான மருத்துவர்கள் அவளுக்கு உதவ முயற்சி செய்தனர். அவளிடமிருந்த செல்வமெல்லாம் செலவழிந்தது. ஆனால் குணமாகவில்லை. அவள் மேலும் நோயால் துன்பப்பட்டாள்.
27 அவள் இயேசுவைப்பற்றி கேள்விப்பட்டிருந்தாள். ஆகையால் அவள் இயேசுவிடம் கூட்டத்திற்குள் வந்தாள். அவள் இயேசுவின் மேலாடையைத் தொட்டாள். 28 அவளோ, “நான் அவரது ஆடையைத் தொட்டாலே போதும். நான் குணமாகிவிடுவேன்” என்று நம்பினாள். 29 அவள் இயேசுவின் மேலாடையைத் தொட்டதும் அவளது இரத்தப் போக்கு நின்றது. தான் நோயிலிருந்து குணமாகிவிட்டதை அவள் சரீரத்தில் உணர்ந்தாள். 30 இயேசுவும் தன்னிடமிருந்து வல்லமை வெளிப்பட்டதை அறிந்தார். எனவே, அவர் நின்று சுற்றிலும் பார்த்தார். பிறகு அவர், “என் ஆடையைத் தொட்டது யார்?” என்று கேட்டார்.
31 இதனைக் கேட்டதும் சீஷர்கள் “போதகரே, ஏராளமான மக்கள் உங்களை நெருக்கிக்கொண்டு வருகிறார்கள். ‘யார் என்னைத் தொட்டது’ என்று கேட்கிறீரே” என்றனர்.
32 ஆனால் இயேசுவோ தன்னைத் தொட்டவருக்காகத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். 33 அந்தப் பெண்ணும் தான் முழுமையாகக் குணம் பெற்றதை உணர்ந்தாள். எனவே அவள் இயேசுவின் முன்வந்து அவரைப் பணிந்தாள். அவள் பயத்தால் நடுங்கினாள். அவள் தன் கதை முழுவதையும் இயேசுவிடம் கூறினாள். 34 இயேசு அவளிடம், “அன்பான பெண்ணே! உன் விசுவாசத்தினால் நீ சுகமானாய். சமாதானமாகச் செல். இனி மேல் உனக்கு ஒரு துன்பமும் இல்லை” என்றார்.
35 இவ்வாறு இயேசு அங்கே பேசிக்கொண்டிருந்தபோது யவீருவின் வீட்டிலிருந்து சிலர் வந்தனர். அவர்கள் யவீருவிடம், “ஐயா, உங்கள் குமாரத்தி இறந்துபோனாள். எனவே, இனிமேல் இந்தப் போதகருக்கு (இயேசுவுக்கு) எந்தத் தொந்தரவும் கொடுக்க வேண்டாம்” என்றனர்.
36 அந்த மக்கள் சொன்னதைப்பற்றி இயேசு கவலைப்படவில்லை. அந்த ஜெப ஆலயத்தலைவரிடம் இயேசு, “பயப்பட வேண்டாம். விசுவாசத்துடன் இரு” என்று கூறினார்.
37 மற்ற அனைவரையும் விட்டு பேதுரு, யாக்கோபு, யாக்கோபுவின் சகோதரனான யோவான் ஆகியோரை மட்டும் தன்னுடன் வர இயேசு அனுமதித்தார். 38 இயேசு இம்மூன்று சீஷர்களோடு மட்டும் யவீருவின் வீட்டுக்குச் சென்றார். அங்கு நிறையப்பேர் கதறி அழுதுகொண்டிருப்பதைக் கண்டார். அந்த இடம் ஒரே குழப்பமாய் இருந்தது. 39 இயேசு அவ்வீட்டுக்குள் நுழைந்து அவர்களிடம், “ஏன் நீங்கள் இவ்வளவு அழுது சத்தமிடுகிறீர்கள்? இக்குழந்தை சாகவில்லை. இது தூங்கிக் கொண்டுள்ளது” என்றார். 40 இதைக்கேட்ட மக்கள் இயேசுவைப் பார்த்து சிரித்தார்கள்.
இயேசு அம்மக்களை வீட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டார். பின்னர் அவர் அக்குழந்தை கிடத்தப்பட்டிருந்த அறைக்குள் சென்றார். அவர் தன்னோடு அக்குழந்தையின் தாய், தந்தை, மூன்று சீஷர்கள் ஆகியோரை மட்டும் அனுமதித்தார். 41 அவர் அந்தக் குழந்தையின் கையைப்பிடித்துக்கொண்டு, “தலீத்தாகூமி!” என்று சொன்னார். (அதற்கு, “சிறுமியே, நான் சொல்கிறேன் நீ எழுந்திரு” என்று பொருள்.) 42 அச்சிறு பெண்ணும் உடனே எழுந்து நடக்க ஆரம்பித்தாள். அவளுக்கு அப்போது பன்னிரண்டு வயது. அப்பெண்ணின் தாயும், தந்தையும், சீஷர்களும் வியப்படைந்தனர். 43 இயேசு அப்பெண்ணின் பெற்றோரிடம் இதைப்பற்றி யாரிடமும் எதுவும் கூற வேண்டாம் என்று கண்டிப்பாகக் கூறினார். பிறகு அப்பெண்ணுக்கு உண்ண உணவு அளிக்குமாறு சொன்னார்.
2008 by World Bible Translation Center