Revised Common Lectionary (Complementary)
ஆசாபின் ஒரு மஸ்கீல்.
74 தேவனே, என்றென்றும் நீர் எங்களைவிட்டு விலகினீரா?
உமது ஜனங்களிடம் நீர் இன்னும் கோபமாயிருக்கிறீரா?
2 பல்லாண்டுகளுக்கு முன் நீர் மீட்டுக்கொண்ட உமது ஜனங்களை நினைவுகூரும்.
நீர் எங்களை மீட்டீர். நாங்கள் உமக்குச் சொந்தமானவர்கள்.
நீர் வாழ்ந்த இடமாகிய சீயோன் மலையை நினைவுகூரும்.
3 தேவனே, பழைமையான இந்த இடிபாடுகளுக்கு மத்தியில் நீர் நடந்துவாரும்.
பகைவன் அழித்த பரிசுத்த இடத்திற்குத் திரும்ப வாரும்.
4 ஆலயத்தில் பகைவர்கள் தங்கள் யுத்த ஆரவாரத்தைச் செய்தார்கள்.
போரில் தங்கள் வெற்றியைக் குறிப்பதற்கு ஆலயத்தில் அவர்கள் தங்கள் கொடிகளை ஏற்றினார்கள்.
5 பகைப்படை வீரர்கள்
கோடரியால் களைகளை அழிக்கும் ஜனங்களைப் போன்றிருந்தார்கள்.
6 தேவனே, அவர்கள் தங்கள் கோடாரிகளையும், சம்மட்டிகளையும் பயன்படுத்தி,
உமது ஆலயத்தில் மரத்தினாலான சித்திர வேலைப்பாடுகளை நாசம் செய்தார்கள்.
7 அந்த வீரர்கள் உமது பரிசுத்த இடத்தை எரித்துவிடடார்கள்.
அந்த ஆலயம் உமது நாமத்தின் மகிமைக்காகக் கட்டப்பட்டது.
அவர்கள் அதைத் தரையில் விழும்படி இடித்துத் தள்ளினார்கள்.
8 பகைவன் எங்களை முழுமையாக அழிக்க முடிவு செய்தான்.
தேசத்தின் ஒவ்வொரு பரிசுத்த இடத்தையும் அவர்கள் எரித்தார்கள்.
9 எங்களுக்கான அடையாளங்கள் எதையும் நாங்கள் காண முடியவில்லை.
எந்தத் தீர்க்கதரிசிகளும் இங்கு இல்லை.
யாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.
10 தேவனே, எத்தனைக் காலம்வரைக்கும் பகைவன் எங்களைப் பரிகாசம் பண்ணுவான்?
உமது நாமத்தை அவர்கள் என்றென்றும் இழிவுபடுத்த நீர் அனுமதிப்பீரா?
11 தேவனே, நீர் ஏன் எங்களைக் கடுமையாகத் தண்டிக்கிறீர்?
நீர் உமது மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி, எங்களை முற்றிலும் அழித்துவிட்டீர்.
12 தேவனே, நீண்டகாலம் நீரே எங்கள் ராஜாவாக இருந்தீர்.
இத்தேசத்தில் பல போர்களில் வெல்ல நீர் எங்களுக்கு உதவினீர்.
13 தேவனே, நீர் மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி
செங்கடலைப் பிளக்கச் செய்தீர்.
14 கடலின் பெரிய விலங்குகளை நீர் தோற்கடித்தீர்!
லிவியாதானின் தலைகளை நீர் சிதைத்துப்போட்டீர்.
பிற விலங்குகள் உண்ணும்படி அதன் உடலை விட்டுவிட்டீர்.
15 நீர் நீரூற்றுக்களும் நதிகளும் பாயும்படி செய்கிறீர்.
நதிகள் உலர்ந்து போகும்படியும் செய்கிறீர்.
16 தேவனே, நீர் பகலை ஆளுகிறீர்.
நீர் இரவையும் ஆளுகிறீர். நீர் சந்திரனையும் சூரியனையும் உண்டாக்கினீர்.
17 பூமியிலுள்ள ஒவ்வொன்றிற்கும் நீர் எல்லையை வகுத்தீர்.
நீர் கோடையையும் குளிர் காலத்தையும் உண்டாக்கினீர்.
18 தேவனே, இவற்றை நினைவுகூரும். பகைவன் உம்மை இழிவுபடுத்தினான் என்பதை நினைவு கூரும்.
அம்மூடர்கள் உமது நாமத்தை வெறுக்கிறார்கள்.
19 அக்கொடிய விலங்குகள் உமது புறாவை எடுத்துக்கொள்ளவிடாதேயும்!
என்றென்றும் உமது ஏழை ஜனங்களை மறந்துவிடாதேயும்.
20 நமது உடன்படிக்கையை நினைவுகூரும்!
இத்தேசத்தின் ஒவ்வொரு இருண்ட இடத்திலும் கொடுமை நிகழ்கிறது.
21 தேவனே, உமது ஜனங்கள் மோசமாக நடத்தப்பட்டார்கள்.
இனிமேலும் அவர்கள் துன்புறாதபடி பாரும். உமது திக்கற்ற, ஏழை ஜனங்கள் உம்மைத் துதிப்பார்கள்.
22 தேவனே, எழுந்து போரிடும்!
அம்மூடர்கள் உம்மோடு போட்டியிடுகிறார்கள் என்பதை நினைவுகூரும்.
23 உமது பகைவர்களின் கூக்குரலை மறவாதேயும்.
மீண்டும், மீண்டும் அவர்கள் உம்மை இழிவுப்படுத்தினார்கள்.
16 கர்த்தாவே, ஜனங்கள் துன்பத்தில் இருக்கும்போது உம்மை நினைப்பார்கள்.
நீர் அவர்களைத் தண்டிக்கும்போது உம்மிடம் அமைதியான பிரார்த்தனைகளை ஜனங்கள் செய்வார்கள்.
17 கர்த்தாவே, நாங்கள் உம்மோடு இல்லாதபோது,
நாங்கள் குழந்தையைப் பெற்றெடுத்தப் பெண்ணைப்போல் இருக்கிறோம்.
அவள் பிரசவ வலியுடன் அழுகிறாள்.
18 அதே வழியில், எங்களுக்கு வலி உள்ளது.
நாங்கள் குழந்தை பெற்றோம். ஆனால் அது காற்றாகியது.
நாங்கள் உலகத்துக்காக புதிய ஜனங்களை உருவாக்கவில்லை.
நாங்கள் தேசத்திற்கு இரட்சிப்பைக் கொண்டுவரவில்லை.
19 ஆனால் கர்த்தர் கூறுகிறார், “உம்முடைய ஜனங்கள் மரித்திருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் மீண்டும் வாழ்வார்கள்.
எங்கள் ஜனங்களின் உடல்களும்
மரணத்திலிருந்து எழும்.
மரித்த ஜனங்கள் மண்ணிலிருந்து எழுந்து மகிழ்வார்கள்.
உம்முடைய பனி
செடிகொடிகளின் மேல் பெய்யும் பனி போல இருக்கும்.
புதிய நேரம் வந்துகொண்டிருப்பதை இது காட்டும். ஜனங்கள் இப்போது பூமியில் புதைக்கப்படுகிறார்கள்.
ஆனால் பூமியானது மரித்தவர்களை வெளியே அனுப்பும்.”
தீர்ப்பு: பரிசு அல்லது தண்டனை
20 எனது ஜனங்களே! உங்கள் அறைக்குள் போங்கள்.
உங்கள் கதவுகளை மூடுங்கள்.
கொஞ்ச காலத்திற்கு உங்கள் அறைகளில் ஒளிந்திருங்கள்.
தேவனுடைய கோபம் முடியும்வரை ஒளிந்திருங்கள்.
21 கர்த்தர் அவரது இடத்தை விட்டு
உலக ஜனங்களை அவர்கள் செய்த தீமைக்காக நியாயந்தீர்க்க வருவார்.
கொல்லப்பட்ட ஜனங்களின் இரத்தத்தைப் பூமி காட்டும்.
இந்த ஜனங்களை இனி பூமி மூடி வைக்காது.
27 அந்தக் காலத்திலேயே, கர்த்தர் லிவியாதான் என்னும் கோணலான பாம்பை நியாயந்தீர்ப்பார்.
கர்த்தர் தனது கடினமும் வல்லமையும் கொண்ட பெரிய வாளை,
லிவியாதான் என்னும் நீண்ட பாம்பைத் தண்டிக்கப் பயன்படுத்துவார்.
கடலில் உள்ள பெரிய பிராணியை கர்த்தர் கொல்வார்.
இயேசுவின் வல்லமை
(மத்தேயு 12:22-30; மாற்கு 3:20-27)
14 ஊமையான ஒரு மனிதனிடமிருந்து ஒரு பிசாசை ஒருமுறை இயேசு துரத்திக்கொண்டிருந்தார். பிசாசு வெளிவந்தபோது, அந்த மனிதனால் பேசமுடிந்தது. மக்கள் வியப்படைந்தனர். 15 ஆனால் சிலர் “பெயல்செபூலின் (பிசாசின்) ஆற்றலை இயேசு பயன்படுத்தி, பிசாசுகளைத் துரத்திவிடுகிறார். அசுத்த ஆவிகளுக்குத் தலைவன் பெயல்செபூல்” என்றனர்.
16 பிறரும் இயேசுவைச் சோதிக்க விரும்பினர். வானத்திருலிருந்து ஓர் அடையாளத்தைக் காட்டும்படியாக இயேசுவைக் கேட்டனர். 17 அவர்கள் எண்ணிக்கொண்டிருந்த நினைவுகளை இயேசு அறிந்திருந்தார். எனவே இயேசு மக்களை நோக்கி, “தனக்குள் ஒன்றுக்கொன்று எதிர்த்துக்கொண்டிருக்கிற எந்த இராஜ்யமும் உடைந்து சிதறும். தனக்குள் சண்டை இடுகிற எந்தக் குடும்பமும் பிரிந்து போகும். 18 எனவே சாத்தான் தனக்குள் சண்டையிட்டால், அவனது இராஜ்யம் எப்படி நிலைபெறும்? இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் அசுத்த ஆவிகளைத் துரத்துவதற்கு நான் பெயல்செபூலின் ஆற்றலைப் பயன்படுத்துவதாக நீங்கள் கூறுகிறீர்கள். 19 நான் அசுத்த ஆவிகளைத் துரத்துவதற்குப் பெயல்செபூலின் ஆற்றலைப் பயன்படுத்தினால், உங்களைச் சார்ந்தவர்கள் அசுத்த ஆவிகளை வெளியேற்ற எந்த ஆற்றலைப் பயன்படுத்துகிறார்கள்? எனவே, உங்களைச் சார்ந்தவர்களே நீங்கள் கூறுவது தவறு என்பதை நிரூபிக்கிறார்கள். 20 அசுத்த ஆவிகளைத் துரத்த நான் தேவனுடைய வல்லமையைப் பயன்படுத்துகிறேன். தேவனுடைய இராஜ்யம் உங்களிடம் வந்திருக்கிறது என்பதை இது காட்டுகிறது.
21 “பல ஆயுதங்கள் ஏந்திய ஒரு வலிய மனிதன் தன் சொந்த வீட்டைக் காவல் காக்கும்போது அவன் வீட்டில் உள்ள பொருட்கள் பாதுகாப்பாக இருக்கும். 22 அவனைக் காட்டிலும் வலிய மனிதன் ஒருவன் வந்து அவனைத் தோற்கடிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். தனது வீட்டைக் காக்கும் பொருட்டு முதல் மனிதன் வைத்திருந்த ஆயுதங்களை வலிய மனிதன் எடுத்துக்கொள்வான். முதல் மனிதனின் பொருட்களைக்கொண்டே வலிய மனிதன் தான் செய்ய நினைப்பதைச் செய்வான்.
23 “ஒருவன் என்னோடு இருக்கவில்லை என்றால், அவன் எனக்கு எதிரானவன். என்னோடு வேலை செய்யாதவன் எனக்கு எதிராகச் செயல் புரிகின்றான்.
வெறுமையான மனிதன்
(மத்தேயு 12:43-45)
24 “பிசாசுக்குரிய அசுத்த ஆவியானது ஒரு மனிதனைவிட்டு வெளியேறும்போது, அந்த ஆவியானது வனாந்தரத்திற்குச் சென்று ஓய்வெடுக்க ஓர் இடம் தேடும். ஆனால் அதற்கு எந்த இடமும் அகப்படுவதில்லை. எனவே ஆவியானது, ‘நான் விட்டு வந்த மனிதனிடம் திரும்பிச் செல்வேன்’ என்று கூறும். 25 ஆவியானது மீண்டும் அவனிடம் வரும்போது, தனது வீடு சுத்தமானதாகவும் அழகானதாகவும் இருப்பதைக் காணும். 26 அப்போது அந்த அசுத்த ஆவியானது வெளியேபோய் தன்னைக் காட்டிலும் அசுத்த குணம்கொண்ட மேலும் ஏழு ஆவிகளைக் கூடவே அழைத்து வரும். பின்பு எல்லா அசுத்த ஆவிகளும் அவனுள்ளே சென்று வசிக்கும். முன்னே இருந்ததைக் காட்டிலும் அம்மனிதனுக்கு மிகுந்த தொல்லை உண்டாகும்” என்றார்.
மகிழ்ச்சியுள்ள மனிதர்கள்
27 இயேசு இக்காரியங்களைக் கூறியபோது, மக்களிடையே இருந்த ஒரு பெண் பேச ஆரம்பித்தாள். அவள் இயேசுவை நோக்கி, “உங்களைப் பெற்றெடுத்து தன் மார்பில் பால் ஊட்டிய உங்கள் தாய் ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்றாள்.
28 ஆனால் இயேசு, “தேவனுடைய போதனைகளைக் கேட்டு அதற்குக் கீழ்ப்படிகிற மக்களே உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்ட மனிதர்கள்” என்றார்.
2008 by World Bible Translation Center