Revised Common Lectionary (Complementary)
ஆசாபின் ஒரு மஸ்கீல்.
78 என் ஜனங்களே, என் போதனைகளுக்கு செவிக்கொடுங்கள்.
நான் கூறுவனவற்றைக் கவனித்துக் கேளுங்கள்.
2 நான் உங்களுக்கு இந்தக் கதையைக் கூறுவேன்.
நான் உங்களுக்கு இப்பழங்கதையைக் கூறுவேன்.
3 நாங்கள் இக்கதையைக் கேட்டோம், அதை நன்றாக அறிந்தோம்.
எங்கள் தந்தையர் இக்கதையைக் கூறினார்கள்.
4 நாங்கள் இக்கதையை மறக்கவும்மாட்டோம்.
இறுதி தலைமுறை வரைக்கும் எங்கள் ஜனங்கள் இக்கதையைச் சொல்லிக்கொண்டேயிருப்பார்கள்.
நாம் அனைவரும் கர்த்தரைத் துதிப்போம்.
அவர் செய்த அற்புதமான காரியங்களைக் குறித்துச் சொல்வோம்.
52 அப்போது தேவன் இஸ்ரவேலரை ஒரு மேய்ப்பனைப்போல் வழிநடத்தினார்.
அவர் தமது ஜனங்களை மந்தைகளைப் போல் பாலைவனத்தினூடே வழிநடத்திச் சென்றார்.
53 அவர் தமது ஜனங்களைப் பத்திரமாக வழிகாட்டி நடத்தினார்.
தேவனுடைய ஜனங்கள் அஞ்ச வேண்டியது எதுவுமில்லை.
தேவன் அவர்களது பகைவர்களைச் செங்கடலில் அமிழச் செய்தார்.
54 தேவன் அவரது ஜனங்களை அவரது பரிசுத்த தேசத்திற்கு வழிநடத்தினார்.
தமது வல்லமையால் எடுத்துக்கொண்ட மலைக்கு அவர்களை அழைத்துச் சென்றார்.
55 பிற தேசத்தினரை அந்நாட்டிலிருந்து போகும்படியாக தேவன் கட்டாயப்படுத்தினார்.
தேவன் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தேசத்தில் அவரவர்களின் பங்கைக் கொடுத்தார்.
தேவன் ஒவ்வொரு இஸ்ரவேல் கோத்திரத்தினருக்கும் வசிப்பதற்கு வீட்டைத் தந்தார்.
56 ஆனால் அவர்கள் மிக உன்னதமான தேவனை சோதித்து அவரை விசனத்திற்குள்ளாக்கினார்கள்.
அந்த ஜனங்கள் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை.
57 இஸ்ரவேலர் தேவனிடமிருந்து விலகிச் சென்றார்கள். அவர்கள் தந்தையர் செய்தாற்போன்று அவர்கள் அவருக்கெதிராகத் திரும்பினார்கள்.
எறியும் வில்லைப்போன்று அவர்கள் தங்கள் போக்கினை மாற்றிக்கொண்டார்கள்.
58 இஸ்ரவேலர் உயர்ந்த பீடங்களைக் கட்டி, தேவனை கோபமடையச் செய்தார்கள்.
அவர்கள் பொய் தெய்வங்களுக்குச் சிலைகளை எழுப்பி, தேவனை பொறாமை அடையச் செய்தார்கள்.
59 தேவன் இதைக் கேட்டு மிகுந்த கோபமடைந்தார்.
அவர் இஸ்ரவேலரை முற்றிலும் தள்ளினார்.
60 தேவன் சீலோவிலுள்ள பரிசுத்தக் கூடாரத்தை விட்டு நீக்கினார்.
ஜனங்களோடு கூட தேவன் அக்கூடாரத்தில் வாழ்ந்திருந்தார்.
61 பிற தேசங்கள் அவரது ஜனங்களைச் சிறை பிடிக்க, தேவன் அனுமதித்தார்.
பகைவர்கள் தேவனுடைய “அழகிய நகையை” எடுத்துக்கொண்டார்கள்.
62 தேவன் அவரது ஜனங்களுக்கெதிராகத் தமது கோபத்தைக் காட்டினார்.
அவர்கள் போரில் கொல்லப்படும்படியாக அனுமதித்தார்.
63 இளைஞர்கள் மரணமடையும்படியாக எரிக்கப்பட்டார்கள்.
அவர்கள் மணக்க வேண்டிய இளம் பெண்கள் திருமணப்பாடல் எதையும் பாடவில்லை.
64 ஆசாரியர்கள் கொல்லப்பட்டார்கள்.
ஆனால் அவர்களின் விதவைகள் அவர்களுக்காக அழவில்லை.
65 இறுதியாக, தூக்கத்திலிருந்து விழித்தெழும் ஒரு மனிதனைப்போல நம் ஆண்டவர் எழுந்திருந்தார்.
அவர் மிகுதியாகத் திராட்சைரசத்தைப் பருகிய வீரனைப்போல காணப்பட்டார்.
66 தேவன் தமது பகைவர்களை பின்வாங்கச் செய்து, அவர்களை முறியடித்தார்.
தேவன் தமது பகைவர்களைத் தோற்கடித்து, என்றென்றும் அவர்கள் அவமானமுறும்படி செய்தார்.
67 ஆனால் தேவன் யோசேப்பின் குடும்பத்தை நிராகரித்தார்.
எப்பிராயீமின் குடும்பத்தாரை தேவன் ஏற்கவில்லை.
68 இல்லை, தேவன் யூதாவின் கோத்திரத்தினரைத் தேர்ந்தெடுத்தார்.
தேவன், தாம் நேசிக்கும் சீயோன் மலையைத் தேர்ந்துக் கொண்டார்.
69 அம்மலையின் மேல் உயரத்தில் தேவன் அவரது பரிசுத்த ஆலயத்தைக் கட்டினார்.
பூமியைப் போல என்றென்றும் இருக்கும்படியாக தேவன் அவரது பரிசுத்த ஆலயத்தைக் கட்டினார்.
70 தனது விசேஷ பணியாளாக தேவன் தாவீதைத் தேர்ந்தெடுத்தார்.
தாவீது ஆட்டுத் தொழுவங்களைக் காத்துக்கொண்டிருந்தான்.
ஆனால் தேவன் அவனை அப்பணியிலிருந்து அகற்றினார்.
71 தாவீது மந்தை ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான்.
ஆனால் தேவன் அவனை அவ்வேலையிலிருந்து அகற்றினார்.
தேவன் அவரது ஜனங்களைக் கவனிக்கும் வேலையை தாவீதுக்குக் கொடுத்தார்.
தேவனுடைய சொத்தாகிய யாக்கோபின் ஜனங்களையும் இஸ்ரவேலரின் ஜனங்களையும் கவனிக்கும் பொறுப்பை அவனுக்கு அளித்தார்.
72 தாவீது அவர்களை பரிசுத்த இருதயத்தோடும்,
மிகுந்த ஞானத்தோடும் வழிநடத்தினான்.
தாவீது ஆசாரியனாகிய அகிமெலேக்கைப் பார்க்கப் போகிறான்
21 பின்பு தாவீது வெளியே போனான். யோனத்தான் நகரத்திற்குத் திரும்பிப் போனான். தாவீது நோப் எனும் நகரத்திற்கு ஆசாரியனான அகிமெலேக்கைப் பார்க்கப் போனான்.
அகிமெலேக்கு தாவீதை சந்திக்க வெளியே வந்தான். அவன் பயத்தால் நடுங்கினான். அவன், “ஏன் தனியாக வந்தீர்கள்? உங்களோடு ஏன் யாரும் வரவில்லை?” என்று கேட்டான்.
2 அதற்கு தாவீது, “ராஜா எனக்கு விசேஷ கட்டளையை இட்டிருக்கிறான். அவர் என்னிடம், ‘எவரும் இதனைப் பற்றித் தெரிந்துக்கொள்ளாமல் இருக்கட்டும். நீ செய்ய வேண்டுமென்று நான் சொன்னதை ஒருவரும் தெரிந்துக்கொள்ளாமல் இருக்கட்டும்’ என்றார். நான் என் ஜனங்களிடம் என்னை சந்திக்கிற இடத்தைப் பற்றி கூறியிருக்கிறேன். 3 இப்போது உன்னோடு என்ன உணவை வைத்திருக்கிறாய்? எனக்கு 5 அப்பங்களையோ அல்லது உன்னிடம் உள்ள எதையேனும் புசிக்கக் கொடு” என்றான்.
4 ஆசாரியன் தாவீதிடம், “என்னிடம் சாதாரணமான அப்பங்கள் இல்லை. பரிசுத்த அப்பங்கள் மட்டுமே உள்ளன. உங்கள் ஆட்கள் எந்தப் பெண்ணோடும் பாலின உறவு கொள்ளாமல் இருந்தால், அவர்கள் அவற்றை உண்ணலாம்” என்றான்.
5 அதற்கு தாவீது, ஆசாரியனிடம், “எங்களோடு பெண்கள் இல்லை. எங்கள் வீரர்கள் போருக்குப் போகும்போது தங்கள் உடலை பரிசுத்தமாக வைத்திருப்பார்கள். எங்கள் வேலை மிகவும் சிறப்பானது. எனவே, விசேஷமாக இன்று இது உண்மை” என்றான்.
6 பரிசுத்த அப்பங்களைத் தவிர வேறு அப்பங்கள் இல்லாததால் ஆசாரியன் அவற்றை தாவீதுக்கு கொடுத்தான். அவை கர்த்தருக்கு முன்பு பரிசுத்தமான மேஜையின் மேல் வைக்கப்பட்டவை. ஒவ்வொரு நாளும் ஆசாரியர் புதிய அப்பங்களை வைப்பர்கள்.
38 வருட நோயாளி குணமடைதல்
5 பிறகு, இயேசு எருசலேமுக்கு யூதர்களின் ஒரு பண்டிகையின்போது சென்றார். 2 அங்கே ஐந்து மண்டபங்கள் உள்ள ஒரு குளம் இருந்தது. யூதமொழியில் இதற்கு பெதஸ்தா[a] என்று பெயர். இந்தக் குளம் ஆட்டுவாசல் அருகே இருந்தது. 3 குளத்தின் அருகில் உள்ள மண்டபத்தில் நோயாளிகள் பலர் படுத்துக்கிடந்தனர்.[b] 4 அவர்களில் சிலர் குருடர்கள்; சிலர் சப்பாணிகள்; சிலர் சூம்பிப்போன உறுப்புகளை உடையவர்கள். 5 அவர்களில் ஒருவன் முப்பத்தெட்டு ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டிருந்தான். 6 இயேசு அந்த நோயாளி அங்கு படுத்துக்கிடப்பதைக் கண்டார். அவன் நீண்ட காலமாக நோயாளியாக இருப்பதை அவர் அறிந்தார். ஆகையால் அவர் அவனிடம், “நீ குணமடைய விரும்புகிறாயா?” என்று கேட்டார்.
7 “ஐயா, தண்ணீர் கலங்கும்போது நான் போய் நீரில் இறங்குவதற்கு எனக்கு உதவி செய்ய யாருமில்லை. முதல் மனிதனாகப் போய் மூழ்குவதற்கு முயல்வேன். ஆனால் எனக்கு முன்னால் எவனாவது ஒருவன் முதல் மனிதனாகப் போய் மூழ்கிவிடுகிறான்” என்று அந்த நோயாளி பதில் சொன்னான்.
8 பிறகு இயேசு “எழுந்து நில். உனது படுக்கையை எடுத்துக்கொண்டு நட” என்றார். 9 உடனே அந்த நோயாளி குணமடைந்தான். அவன் தனது படுக்கையை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
இது நிகழ்ந்த அந்த நாளோ ஓய்வு நாள். 10 ஆகையால் யூதர்கள், “இன்று ஓய்வு நாள். நீ படுக்கையை எடுத்துக்கொண்டு போவது சரியல்ல” என்று அவனிடம் கூறினர்.
11 ஆனால் அந்த மனிதன், “ஒரு மனிதர் என்னைக் குணமாக்கினார். எனது படுக்கையை எடுத்துக்கொண்டு போகும்படிக் கூறினார்” என்றான்.
12 “உன்னை குணமாக்கிப் படுக்கையை எடுத்துக் கொண்டு போகும்படி சொன்ன அவன் யார்?” என்று யூதர்கள் கேட்டனர்.
13 ஆனால் அந்த மனிதனுக்கு தன்னைக் குணமாக்கியவர் யார் என்று தெரியவில்லை. அங்கே ஏராளமான மக்கள் இருந்தனர். இயேசுவும் அவ்விடம் விட்டு மறைந்து போயிருந்தார்.
14 பிறகு இயேசு அவனை ஆலயத்தில் கண்டுபிடித்தார். இயேசு அவனிடம், “பார், இப்பொழுது நீ குணமாகிவிட்டாய். உனக்குக் கேடுவராதபடி மேலும் பாவம் செய்யாமல் இருப்பாயாக” என்று கூறினார்.
15 பிறகு அந்த மனிதன் யூதர்களிடம் திரும்பிப் போனான். அவன் யூதர்களிடம், “இயேசுதான் என்னைக் குணமாக்கியவர்” என்று சொன்னான்.
16 இயேசு இவ்வாறு ஓய்வு நாளில் நோயைக் குணப்படுத்தியதால் யூதர்கள் இயேசுவைக் குற்றம்சாட்டத் தொடங்கினர். 17 ஆனால் இயேசுவோ யூதர்களிடம், “எனது பிதா (தேவன்) வேலை செய்வதை நிறுத்துவதே இல்லை. நானும் வேலை செய்துகொண்டிருக்கிறேன்” என்றார்.
18 இதைக் கேட்ட யூதர்கள் இயேசுவைக் கொன்றுவிடக் கடுமையாக முயற்சி செய்தார்கள். அவர்கள், “முதலில் இயேசு ஓய்வு நாளின் சட்டத்தை உடைத்துவிட்டார். பிறகு அவர் தேவனை அவரது பிதா என்று கூறுகிறார். அவர் தன்னை தேவனுக்குச் சமமாகக் கூறி வருகிறார்” என்று விளக்கம் கூறினர்.
2008 by World Bible Translation Center