Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
உபாகமம் 18:15-20

15 உங்கள் தேவனாகிய கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை உங்களிடம் அனுப்புவார். அந்தத் தீர்க்கதரிசியை உங்கள் சொந்த ஜனங்களிடமிருந்தே வரச் செய்வார். அவர் என்னைப்போன்ற ஒருவராய் இருப்பார். நீங்கள் அவர் சொல்வதைக் கேட்க வேண்டும். 16 தேவன் இந்தத் தீர்க்கதரிசியை உங்களிடம் அனுப்புவது எதற்கென்றால், நீங்கள் இதைத்தான் தேவனிடம் கேட்டுக்கொண்டீர்கள். ஒரேப் மலையிலே நீங்கள் எல்லாரும் ஒன்றாகக் கூடிய நாளில் நீங்கள் தேவனுடைய சத்தத்தைக்கேட்டும், மலையின்மீது நீங்கள் பார்த்த நெருப்பினைக் கண்டும், பயந்தீர்கள். ஆதலால் நீங்கள்: ‘நமது தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை நாங்கள் கேட்க அனுமதிக்க வேண்டாம்! நாங்கள் மரிக்கின்ற அளவிற்கு ஏற்படக் கூடிய மிகப்பெரிய அந்த அக்கினியை நாங்கள் பார்த்திட அனுமதிக்க வேண்டாம்!’ என்றீர்கள். அதற்காகவே, இந்தத் தீர்க்கதரிசியை அனுப்புகிறார்.

17 “கர்த்தர் என்னிடம், ‘அவர்கள் கேட்டுக்கொண்டது சரியே. 18 நான் உன்னைப்போல் ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடம் அனுப்புவேன். அந்தத் தீர்க்கதரிசி அவர்களின் சொந்த ஜனங்களில் ஒருவனாக இருப்பான். நான் அவன் பேசவேண்டியதை எல்லாம் அவனுக்குச் சொல்லுவேன். அதை அவன் அந்த ஜனங்களிடம் சொல்லுவான். நான் அவனுக்கு கட்டளையிட்டதையெல்லாம் அவன் அந்த ஜனங்களுக்குக் கூறுவான். 19 அந்தத் தீர்க்கதரிசி எனக்காகப் பேசுவான். அவன் அப்படி எனக்காகப் பேசும்போதும், என்னுடையக் கட்டளைகளைக் கூறும்போதும், யாராவது அதைக் கேட்க மறுத்தால், நான் அந்த நபரைத் தண்டிப்பேன்’ என்று கூறினார்.

பொய்த் தீர்க்கதரிசிகளை அறிவது எப்படி

20 “ஆனால் நான் உங்களிடம் சொல்லும்படி சொல்லாத சிலவற்றை ஒரு தீர்க்கதரிசி கூறலாம். அதுமட்டுமின்றி, அந்தத் தீர்க்கதரிசி நான் தேவனுக்காகப் பேசுகிறேன் என்று சொல்லலாம். அப்படி ஏதும் நடந்தால் பின் அந்தத் தீர்க்கதரிசி கொல்லப்பட வேண்டும். ஒரு தீர்க்கதரிசி பொய்த் தெய்வங்களுக்காகப் பேச வந்திருக்கலாம். அப்படிப்பட்ட தீர்க்கதரிசி கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும்.

சங்கீதம் 111

[a]111 கர்த்தரைத் துதியங்கள்!

நல்லோர் கூடிச் சந்திக்கும் கூட்டங்களில்
    நான் கர்த்தருக்கு முழு இருதயத்தோடும் நன்றி செலுத்துவேன்.
கர்த்தர் அற்புதமான காரியங்களைச் செய்கிறார்.
    தேவனிடமிருந்து வரும் நல்ல காரியங்களை ஜனங்கள் விரும்புகிறார்கள்.
உண்மையிலேயே மகிமையும் அற்புதமுமான காரியங்களை தேவன் செய்கிறார்.
    அவரது நன்மை என்றென்றைக்கும் தொடருகிறது.
கர்த்தர் தயவும் இரக்கமுமுள்ளவர் என்பதை நாம் நினைவுக்கூரும்படி
    தேவன் வியக்கத்தக்க காரியங்களைச் செய்கிறார்.
தேவன் அவரைப் பின்பற்றுவோருக்கு உணவளிக்கிறார்.
    அவரது உடன்படிக்கையை தேவன் என்றென்றும் நினைவுகூருகிறார்.
அவர் தமது தேசத்தைத் தமது ஜனங்களுக்குக் கொடுக்கப்போகிறார் என்பதை
    தேவன் செய்த வல்லமையான காரியங்கள் காட்டும்.

தேவன் செய்பவை ஒவ்வொன்றும் நல்லவையும் நியாயமுள்ளவையும் ஆகும்.
    அவரது கட்டளைகள் நம்பத்தக்கவை.
தேவனுடைய கட்டளைகள் என்றென்றும் தொடரும்.
    அக்கட்டளைகளை தேவன் கொடுப்பதற்கான காரணங்கள் நேர்மையும் தூய்மையானவையுமாகும்.
தேவன் தம் ஜனங்களைக் காப்பாற்ற ஒருவரை அனுப்புகிறார்.
    தேவன் அவர்களுடன் உடன்படிக்கை என்றென்றும் தொடருமாறு செய்தார். தேவனுடைய நாமம் அஞ்சத்தக்கதும் பரிசுத்தமானதுமாகும்.

10 தேவனுக்குப் பயப்படுவதும் அவரை மதிப்பதுமே ஞானத்தின் தொடக்கமாயிருக்கிறது.
    தேவனுக்குக் கீழ்ப்படிகிற ஜனங்கள் மிகுந்த ஞானமுள்ளவர்கள்.
    என்றென்றும் தேவனுக்குத் துதிகள் பாடப்படும்.

1 கொரி 8

விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்ட உணவு

விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட இறைச்சி குறித்து இப்போது எழுதுவேன். “நாம் அறிவுடையவர்கள்” என்பது நம் அனைவருக்கும் தெரியும். “அறிவு” உங்களைப் பெருமை உடையவர்களாக மாற்றும். ஆனால், அன்பு பிறருக்கு உதவி செய்யுமாறு உங்களை மாற்றும். தனக்கு ஏதோ தெரியுமென எண்ணுகிற ஒருவனுக்கு, இருக்க வேண்டிய அளவுக்கு ஞானம் இருப்பதில்லை. ஆனால், தேவனை நேசிக்கிற மனிதனோ தேவனால் அறியப்பட்டவன்.

எனவே விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட இறைச்சி உண்பதைப் பற்றி நான் கூறுவது இதுவே: விக்கிரகமானது இவ்வுலகத்தில் ஒரு பொருட்டல்ல என்பது நமக்குத் தெரியும். ஒரே ஒரு தேவனே உள்ளார் என்பதையும் நாம் அறிவோம். பரலோகத்திலும் பூலோகத்திலும் தேவர்களாக அழைக்கப்படும் பல பொருள்கள் இருக்கின்றன. எனினும் அவை நமக்கு முக்கியமல்ல. “தேவனென்றும்,” “கர்த்தரென்றும்” மனிதர்கள் கருதுகின்ற பல பொருள்கள் உண்டு. ஆனால் நமக்கோ ஒரே ஒரு தேவன் உள்ளார். அவர் நமது பிதாவே. எல்லாம் அவரிலிருந்தே வந்தன. நாம் அவருக்காக வாழ்கிறோம். ஒரே ஒரு கர்த்தரே உண்டு. அவர் இயேசு கிறிஸ்து ஆவார். எல்லாப் பொருள்களும் இயேசுவின் மூலமாக உண்டாக்கப்பட்டன. நாம் அவர் மூலமாகவே உயிரைப் பெறுகிறோம்.

ஆனால் எல்லோரும் இதனை அறியார். விக்கிரக வழிபாட்டுக்குப் பழகிப்போன சிலர் இருக்கிறார்கள். எனவே இறைச்சி உண்ணும்போது அது விக்கிரகத்துக்குரியது என்ற எண்ணம் அவர்களுக்கு உண்டாகிறது. இந்த இறைச்சியைச் சாப்பிடுவது சரியா என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே அதனைச் சாப்பிடும்போது அவர்கள் குற்றமனப்பான்மை உடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால், இறைச்சியுண்பது தேவனுக்கு நெருக்கமாக நம்மை அழைத்துச் செல்லாது. இறைச்சியுண்ணாமையும் தேவனுக்குக் குறைவான மகிழ்ச்சியைத் தருபவர்களாக நம்மை ஆக்காது.

ஆனால், உங்கள் சுதந்திரத்தைக் குறித்துக் கவனமாக இருங்கள். விசுவாசத்தில் வலிமையற்ற மக்களை உங்கள் சுதந்திரம் பாவத்தில் விழக் காரணமாக இருக்கும். 10 உங்களுக்குப் புரிந்துகொள்ளும் திறமை இருக்கிறது. எனவே விக்கிரகங்களுக்குரிய கோயிலில் உண்பதை நீங்கள் இயல்பானதாகக் கருதலாம். ஆனால் விசுவாசம் குறைவுள்ள மனிதன் உங்களை அங்கு பார்க்கக் கூடும். விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவை உண்பதற்கு அவன் முற்பட இது வழி வகுக்கும். ஆனால், அது சரியானதல்ல என்றும் அவன் நினைப்பான். 11 உங்கள் அறிவினால் பலவீனமான இந்தச் சகோதரன் அழிக்கப்படுவான். ஆனால் இந்தச் சகோதரனுக்காகவும் இயேசு மரித்தார். 12 கிறிஸ்துவுக்குள்ளான உங்கள் சகோதர சகோதரிகளுக்கு எதிராக நீங்கள் இவ்வாறு பாவம் செய்தாலும் அவர்கள் தவறென நினைக்கிற காரியங்களைச் செய்யும்படியாகத் தூண்டி அவர்களைத் துன்புறுத்தினாலும் நீங்கள் கிறிஸ்துவுக்கு எதிராக பாவம் செய்கின்றீர்கள். 13 நான் உண்ணும் உணவு எனது சகோதரனைப் பாவம் செய்யத் தூண்டினால் நான் மீண்டும் இறைச்சி சாப்பிடவேமாட்டேன். எனது சகோதரன் மீண்டும் பாவம் செய்யாதபடி இறைச்சி உண்ணுவதை விட்டுவிடுவேன்.

மாற்கு 1:21-28

அசுத்த ஆவியுள்ளவன் குணமாகுதல்

(லூக்கா 4:31-37)

21 இயேசுவும் அவரது சீஷர்களும் கப்பர்நகூமுக்குச் சென்றார்கள். ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திற்குள் சென்று இயேசு போதனை செய்தார். 22 அங்கே இருந்த மக்கள் இயேசுவின் போதகத்தைக் கேட்டு வியப்படைந்தார்கள். அவர்களின் ஏனைய வேதபாரகரைப்போல இயேசு உபதேசிக்கவில்லை. அவர் எல்லா அதிகாரங்களையும் உடையவராக உபதேசித்தார். 23 ஜெப ஆலயத்திற்குள் இயேசு இருந்தபோது அசுத்த ஆவியால் பிடிக்கப்பட்ட ஒரு மனிதனும் அங்கே இருந்தான். 24 அவன், “நசரேயனாகிய இயேசுவே! எங்களிடம் நீர் என்ன விரும்புகிறீர்? எங்களை அழிக்கவா வந்தீர்? நீர் தேவனின் பரிசுத்தர் என்பது எனக்குத் தெரியும்” என்று சத்தமிட்டான்.

25 இயேசு பலமான குரலில், “அமைதியாக இரு. இவனை விட்டு வெளியே வா” என்று கட்டளையிட்டார். 26 அந்த அசுத்த ஆவி அம்மனிதனை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டு அவனை விட்டுப் பெரும் சத்தத்தோடு வெளியேறியது.

27 மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். அவர்கள், “இங்கு என்ன நடக்கிறது? இந்த மனிதர் புதிதாக ஏதோ உபதேசிக்கிறார். இவர் அதிகாரத்துடன் உபதேசம் செய்கிறார். இவர் அசுத்த ஆவிகளுக்கும் கட்டளை இடுகிறார். ஆவிகளும் அவருக்கு அடிபணிகின்றன” என்று ஒருவரோடொருவர் பேசிக் கொண்டனர். 28 எனவே, கலிலேயாவின் அனைத்துப் பகுதிகளிலும் இயேசுவைப்பற்றிய செய்தி வேகமாகப் பரவியது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center