Revised Common Lectionary (Complementary)
இஸ்ரவேல் தேவனுடைய விசேஷமான தோட்டம்
5 இப்பொழுது, நான் எனது நண்பருக்காக (தேவன்) ஒரு பாடல் பாடுவேன். இப்பாடல் என் நண்பர் திராட்சைத் தோட்டத்தின் (இஸ்ரவேல்) மேல் வைத்த அன்பைப்பற்றியது.
எனது நண்பருக்கு வளமான வெளியில் ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது.
2 எனது நண்பர் அதனைச் சுத்தப்படுத்தினார்.
அதில் சிறந்த திராட்சைக் கொடிகளை நட்டார்.
அதன் நடுவில் ஒரு கோபுரம் அமைத்தார். அதில் நல்ல திராட்சை வளரும் என்று நம்பினார்
ஆனால் அதில் கெட்ட திராட்சைகளே இருந்தன.
3 எனவே தேவன் சொன்னார், “எருசலேமில் வாழும் ஜனங்களே யூதாவில் உள்ள மனிதர்களே
என்னையும் என் திராட்சைத் தோட்டத்தையும் எண்ணிப் பாருங்கள்.
4 எனது திராட்சைத் தோட்டத்திற்காக நான் இன்னும் என்ன செய்ய முடியும்?
என்னால் முடிந்தவற்றை நான் செய்துவிட்டேன்.
நல்ல திராட்சை வளரும் என்று நம்பினேன்.
ஆனால் கெட்ட திராட்சைகளே உள்ளன. ஏன் இவ்வாறு ஆயிற்று?
5 இப்பொழுது, எனது திராட்சைத் தோட்டத்தில் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வேன்.
நான் முட்புதர்களை விலக்குவேன். அவை வயலைக் காக்கின்றன. அவற்றை எரித்துப்போடுவேன்.
கற்சுவர்களை இடித்துப்போடுவேன்.
அது மிதியுண்டு போகும்.
6 என் திராட்சைத் தோட்டத்தை காலியாக வைப்பேன்.
எவரும் கொடிகளைப்பற்றி கவலைப்படமாட்டார்கள். எவரும் தோட்டத்தில் வேலை செய்யமாட்டார்கள். முட்களும், புதர்களும் வளரும்.
தோட்டத்தில் மழைபொழியவேண்டாம் என்று
நான் மேகங்களுக்குக் கட்டளை இடுவேன்.”
7 சர்வ வல்லமையுள்ள கர்த்தருக்கான திராட்சைத் தோட்டம் என்பது இஸ்ரவேல் நாட்டைக் குறிக்கும். கர்த்தருடைய மனமகிழ்ச்சியின் செடியானது யூதாவின் ஜனங்களே.
கர்த்தர் நியாயத்துக்குக் காத்திருந்தார்.
ஆனால் கொலைகளே நடைபெற்றன.
கர்த்தர் நீதிக்காகக் காத்திருந்தார்.
ஆனால் அழுகைகளே இருந்தன. மோசமாக நடத்தப்பட்வர்கள் முறையிட்டார்கள்.
7 சர்வ வல்லமையுள்ள தேவனே, எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்.
எங்களை ஏற்றருளும், எங்களைக் காப்பாற்றும்.
8 கடந்த காலத்தில் எங்களை முக்கியமான ஒரு தாவரத்தைப்போன்று நடத்தி வந்தீர்.
நீர் உமது “திராட்சைக்கொடியை” எகிப்திலிருந்து கொண்டுவந்தீர்.
இத்தேசத்திலிருந்து பிறர் விலகிப்போகுமாறு கட்டாயப்படுத்தினீர்.
உமது “திராட்சைக் கொடியை” நீர் இங்கு நட்டு வைத்தீர்.
9 “திராட்சைக்கொடிக்காக” நீர் நிலத்தைப் பண்படுத்தினீர்.
அதன் வேர்கள் வேரூன்றிச் செல்வதற்கு நீர் உதவினீர்.
உடனே அத் “திராட்சைக்கொடி” தேசமெங்கும் படர்ந்தது.
10 அது பர்வதங்களை மூடிற்று.
அதன் இலைகள் பெரும் கேதுரு மரங்களுக்கு நிழல் தந்தன.
11 அதன் கொடிகள் மத்தியதரைக் கடல் வரைக்கும் படர்ந்தது.
அதன் கிளைகள் ஐபிராத்து நதிவரைக்கும் சென்றது.
12 தேவனே, உமது “திராட்சைக்கொடி” யைப் பாதுகாக்கும் சுவர்களை ஏன் இடித்துத் தள்ளினீர்?
இப்போது வழிநடந்து செல்பவன் ஒவ்வொருவனும் திராட்சைக் கனிகளைப் பறித்துச் செல்கிறான்.
13 காட்டுப்பன்றிகள் வந்து உமது “திராட்சைக் கொடியின்” மீது நடந்து செல்கின்றன.
காட்டு மிருகங்கள் வந்து அதன் இலைகளைத் தின்கின்றன.
14 சர்வ வல்லமையுள்ள தேவனே, மீண்டும் வாரும்.
பரலோகத்திலிருந்து கீழே உமது “திராட்சைக்கொடி” யைப் பார்த்து அதனைப் பாதுகாத்துக்கொள்ளும்.
15 தேவனே, உமது கைகளால் நட்ட “திராட்சைக் கொடியைப்” பாரும்.
நீர் வளர்த்தெடுத்த இளமையான செடியை நீர் பாரும்.
4 என் மீது நான் நம்பிக்கை வைக்க முடியும் என்றாலும் நான் நம்பிக்கை வைப்பதில்லை. வேறு யாராவது ஒருவர் தன் மீது நம்பிக்கை வைக்கக் காரணம் இருக்கும் என்று கருதினால், எனக்கும் என் மீது நம்பிக்கை வைக்க நிறைய காரணங்கள் உள்ளன. 5 நான் பிறந்த எட்டு நாட்களுக்குப் பின் விருத்தசேதனம் செய்யப்பட்டேன். நான் இஸ்ரவேலைச் சேர்ந்தவன். பென்யமீன் குடும்பத்தில் இருந்து வந்தவன். நான் எபிரேயன். என் பெற்றோர்களும் எபிரேயர்கள். மோசேயின் சட்டங்கள் எனக்கு மிகவும் முக்கியமாக இருந்தது. அதனால்தான் பரிசேயனாக ஆனேன். 6 நான் எனது யூத மதவெறி காரணமாக சபைகளைத் துன்புறுத்தி வந்தேன். எவனொருவனும் என்மீது நான் மோசேயின் சட்டங்களைக் கைக்கொள்வதைக் குறித்து குற்றம் சாட்ட முடியவில்லை.
7 ஒரு காலத்தில் எனக்கு இவை முக்கியமாய்த் தோன்றியது. ஆனால் கிறிஸ்துவுக்கு முன்னால் அவை பயனற்றுப் போய்விட்டன. 8 அவை மட்டுமல்ல எனது கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டம் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றேன். 9 இதனால்தான் நான் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன். கிறிஸ்துவுக்குள் நான் தேவனுக்கு வேண்டியவனாகிறேன். நான் சட்டங்களைப் பின்பற்றியதால் இப்பேறு பெறவில்லை. தேவனிடமிருந்து விசுவாசத்தின் மூலம் இது எனக்கு வந்தது. நான் கிறிஸ்துவிடம் கொண்ட விசுவாசத்தைப் பயன்படுத்தி தேவன் தனக்கு ஏற்றவனாகச் செய்துகொண்டார். 10 அவரையும் அவரது உயிர்த்தெழுதலின் வல்லமையையும் நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன். அவரது துன்பத்தில் பங்குகொள்ளவும் மரணத்தில் அவரைப் போல் ஆகவும் விரும்புகிறேன். 11 அவற்றை நான் பெறுவேனேயானால் பிறகு மரணத்தில் இருந்தும் உயிர்த்தெழுந்து வருவேன் என்ற நம்பிக்கை பெறுவேன்.
குறிக்கோளை எட்டுவதற்கான முயற்சி
12 நான் எப்படி இருக்க வேண்டுமென தேவன் விரும்புகிறாரோ அப்படி நான் ஏற்கெனவே இருக்கிறேன் என்று எண்ணவில்லை. நான் இன்று வரை கூட எனக்காக கிறிஸ்துவால் ஆக்கப்பட்ட அந்த குறிக்கோளை அடையவில்லை. ஆனால் தொடர்ந்து அந்தக் குறிக்கோளை அடைவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். 13 சகோதர சகோதரிகளே! இன்னும் அந்த இலக்கை நான் அடையவில்லை என்று எனக்குத் தெரியும். ஆனால் எப்பொமுதும் நான் ஒன்றை மட்டும் செய்து வருகிறேன். அதாவது கடந்த காலத்தில் உள்ளவற்றை நான் மறந்துவிடுகிறேன். என முன்னால் உள்ள குறிக்கோளை அடைய எவ்வளவு முயல முடியுமோ அவ்வளவு முயலுகிறேன். 14 குறிக்கோளை அடைந்து பரிசு பெறுவதற்கான முயற்சியையும் விடாமல் தொடர்ந்து நான் கைக்கொண்டு வருகிறேன். அது என்னுடையது. ஏனென்றால் அத்தகைய வாழ்வுக்குத்தான் இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவன் என்னை அழைத்திருக்கிறார்.
திராட்சைத் தோட்ட உவமை
(மாற்கு 12:1-12; லூக்கா 20:9-19)
33 “இந்த உவமையைக் கேளுங்கள். ஒரு மனிதனுக்கு ஒரு தோட்டமிருந்தது. அவன் அதில் திராட்சை பயிரிட்டான். தன் தோட்டத்தைச் சுற்றிலும் மதில் சுவரெழுப்பி திராட்சை இரசம் சேகரிக்கும் குழியையும் வெட்டினான். பின் ஒரு கோபுரத்தையும் கட்டினான். பிறகு தோட்டத்தை சில விவசாயிகளுக்குக் குத்தகைக்குக் கொடுத்துவிட்டு ஒரு பயணம் மேற்கொண்டான். 34 பின்னர், திராட்சைப் பழங்களைப் பறிக்கவேண்டிய காலம் வந்தபொழுது, தனது வேலைக்காரர்களை குத்தகைக்காரர்களிடம் விளைச்சலில் தனது பங்கை வாங்கி வர அனுப்பினான்.
35 “ஆனால் அவ்விவசாயிகளோ வேலைக்காரர்களைப் பிடித்து அவர்களில் ஒருவனை அடித்துவிட்டார்கள். மற்றொரு வேலைக்காரனைக் கொன்றார்கள். மற்றொரு வேலைக்காரனைக் கல்லால் அடித்துக் கொன்றார்கள். 36 எனவே தோட்டத்துச் சொந்தக்காரன் மேலும் சில வேலைக்காரர்களை அனுப்பினான். முதலில் அனுப்பிய ஆட்களைவிட அதிக எண்ணிக்கையில் இப்பொழுது ஆட்களை அனுப்பினான். ஆனால் குத்தகை எடுத்த விவசாயிகள் முதலில் செய்தது போலவே இம்முறையும் செய்தார்கள். 37 ஆகவே, தோட்டக்காரன் தன் குமாரனை அனுப்ப முடிவு செய்தான்! ‘விவசாயிகள் என் குமாரனுக்கு மதிப்பு கொடுப்பார்கள்’ என்று அவன் நினைத்தான்.
38 “ஆனால் குமாரனைக் கண்ட விவசாயிகள் தங்களுக்குள், ‘இவன் நிலச் சொந்தக்காரனின் குமாரன். நிலம் இவனுக்கே சொந்தமாகும். நாம் இவனைக் கொன்றால் நிலம் நமக்குச் சொந்தமாகிவிடும்’ என்று பேசிக்கொண்டனர். 39 எனவே, அந்த விவசாயிகள் திராட்சைத் தோட்டத்துச் சொந்தக்காரனின் குமாரனைத் தோட்டத்திற்கு வெளியில் எறிந்து கொன்றார்கள்.
40 “திராட்சைத் தோட்டத்துச் சொந்தக்காரனே வரும்பொழுது அவன் அந்த விவசாயிகளை என்ன செய்வான்?” என்று இயேசு கேட்டார்.
41 அதற்கு யூத ஆசாரியர்களும் தலைவர்களும், “அவன் நிச்சயம் அந்தத் தீயவர்களைக் கொல்வான். பின் தனது நிலத்தை மற்றவர்களுக்குக் குத்தகைக்கு விடுவான். அதாவது அறுவடை காலத்தில் தனக்கு சேரவேண்டிய பங்கைச் தனக்கு அளிக்கும் விவசாயிகளுக்கு குத்தகைக்கு விடுவான்” என்றனர்.
42 இயேசு அவர்களுக்குக் கூறினார், “நீங்கள் வேதவாக்கியங்களில் கட்டாயம் படித்திருப்பீர்கள்:
“‘கட்டிடம் கட்டியவர்கள் விரும்பாத கல்லே மூலைக் கல்லாயிற்று.
இது கர்த்தரின் செயல், நமக்கு வியப்பானது.’(A)
43 “எனவே தேவனுடைய இராஜ்யம் உங்களிடமிருந்து பறிக்கப்படும் என்பதை நான் உங்களுக்குக் கூறுகிறேன். தம் இராஜ்யத்தில் தேவன் விரும்பும் செயல்களைச் செய்பவர்களுக்கே தேவனுடைய இராஜ்யம் கிட்டும். 44 இக்கல்லின் மீது விழுகிறவன் துண்டுகளாக நொறுங்கிவிடுவான். மேலும் இக்கல் ஒருவன் மீது வீழ்ந்தால் அவன் நசுங்கிப் போவான்” என்று கூறினார்.
45 இயேசு கூறிய இந்த உவமைகளைத் தலைமை ஆசாரியர்களும் பரிசேயரும் கேட்டனர். தம்மைப்பற்றியே இயேசு பேசினார் என்பதை அவர்கள் அறிந்தார்கள். 46 எனவே இயேசுவைக் கைது செய்ய ஒரு வழி தேடினார்கள். ஆனால், அவர்கள் மக்களைக் குறித்து பயந்தார்கள். ஏனெனில் மக்கள் இயேசுவைத் தீர்க்கதரிசி என நம்பினர்.
2008 by World Bible Translation Center