Revised Common Lectionary (Complementary)
தாவீதின் பாடல்.
27 கர்த்தாவே, நீரே என் ஒளியும் இரட்சகருமானவர்.
யாருக்கும் நான் பயப்படமாட்டேன்!
கர்த்தர் என் வாழ்க்கையின் பாதுகாப்பானவர்.
எந்த மனிதனுக்கும் நான் அஞ்சேன்.
2 தீய ஜனங்கள் என்னைத் தாக்கக்கூடும்.
என்னைத் தாக்கி என் சரீரத்தை அழிக்க என் பகைவர்கள் முயலக்கூடும்.
3 ஒரு படையே என்னைச் சூழ்ந்தாலும் நான் அஞ்சமாட்டேன்.
போரில் ஜனங்கள் என்னைத் தாக்கினாலும் நான் பயப்படேன்.
ஏனெனில் நான் கர்த்தரை நம்புகிறேன்.
4 எனக்குத் தருமாறு ஒன்றையே நான் கர்த்தரிடம் கேட்பேன்.
இதுவே என் கோரிக்கை:
“என் வாழ்க்கை முழுவதும் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கி
கர்த்தருடைய அழகைக்கண்டு அவர் அரண்மனையை தரிசிக்க அனுமதியும்.”
5 ஆபத்தில் நான் இருக்கையில் கர்த்தர் என்னைக் காப்பார்.
அவரது கூடாரத்தில் என்னை ஒளித்து வைப்பார்.
அவரது பாதுகாப்பிடம் வரைக்கும் என்னை அழைத்துச் செல்வார்.
6 என் பகைவர்கள் என்னைச் சூழ்ந்துள்ளனர்.
அவர்களைத் தோற்கடிக்க கர்த்தர் எனக்கு உதவுவார்.
அப்போது அவரது கூடாரத்தில் பலிகளைச் செலுத்துவேன்.
மகிழ்ச்சி ஆரவாரத்தோடு என் பலிகளை அளிப்பேன்.
கர்த்தரை, மகிமைப்படுத்தும் பாடல்களை இசைத்துப் பாடுவேன்.
எல்க்கானாவும் அவனது குடும்பமும் சீலோவில் ஆராதித்தனர்
1 எப்பிராயீம் என்னும் மலைநாட்டில் உள்ள ராமா என்னும் நகரில் எல்க்கானா என்னும் பெயருள்ள மனிதன் இருந்தான். அவன் சூப் என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவன். எல்க்கானா எரோகாமின் குமாரன், எரோகாம் எலிகூவின் குமாரன், எலிகூ தோகுவின் குமாரன், தோகு சூப்பின் குமாரன், எப்பிராயீம் என்னும் கோத்திரத்திலிருந்து வந்தவன்.
2 எல்க்கானாவிற்கு இரண்டு மனைவிமார்கள் இருந்தனர். அவர்களில் ஒருத்தியின் பெயர் அன்னாள், மற்றொருவள் பெயர் பெனின்னாள், பெனின்னாளுக்கு பிள்ளைகள் இருந்தனர். ஆனால் அன்னாளுக்கோ பிள்ளைகள் இல்லை.
3 ஒவ்வொரு ஆண்டும் எல்க்கானா தனது நகரமான ராமாவை விட்டு சீலோவுக்குப் போவான். அங்கு அவன் சர்வ வல்லமையுள்ள கர்த்தரை தொழுதுகொண்டான், அங்கு கர்த்தருக்குப் பலிகளும் செலுத்தினான். சீலோவில் ஓப்னியும் பினெகாசும் கர்த்தருடைய ஆசாரியர்களாக சேவை செய்து வந்தனர். இவர்கள் ஏலியின் குமாரர்கள். 4 ஒவ்வொரு முறையும் எல்க்கானா பலிகளை செலுத்தும் போது அதில் ஒரு பங்கினை பெனின்னாளுக்கும், அவளது பிள்ளைகளுக்கும் கொடுத்து வந்தான். 5 எல்க்கானா அன்னாளுக்கும் இரட்டிப்பான பங்கினை எப்போதும் கொடுத்து வந்தான். ஏனென்றால் அவளில் அவன் அன்பு செலுத்தினான். கர்த்தர் அவளது கர்ப்பத்தை அடைத்திருந்தார்.
பெனின்னாள் அன்னாளை துன்புறுத்தல்
6 பெனின்னாள் எப்பொழுதும் அன்னாளைத் துக்கப்படுத்தி அவள் துயருறுமாறு செய்வாள், ஏனென்றால் அன்னாள் குழந்தைப்பேறு இல்லாதவளாக இருந்தாள். 7 இது ஒவ்வொரு ஆண்டும் நிகழ்ந்து வந்தது. ஒவ்வொரு முறையும் அவர்களின் குடும்பம் சீலோவிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திற்கு போகும் போதும், பெனின்னாள் அன்னாளை வேதனைப்படுத்துவாள். ஒரு நாள் எல்க்கானா பலிகளைச் செலுத்திக்கொண்டிருந்தான். அன்னாள் துக்கம் மீறி அழ ஆரம்பித்தாள். அவள் அன்று எதையும் உண்ணவில்லை. 8 அவளது கணவனான எல்க்கானா அவளிடம், “அன்னாள்! ஏன் நீ அழுகிறாய்? ஏன் உண்ணாமல் இருக்கிறாய்? ஏன் துக்கமாய் இருக்கிறாய்? நீ எனக்குரியவள், நான் உனது கணவன். நான் பத்து குமாரர்களை விட உனக்கு மேலானவன் என்பதை சிந்திக்க கூடாதா” என்றான்.
அன்னாளின் ஜெபம்
9 உணவை உண்டு குடித்த பின் அன்னாள் அமைதியாக எழுந்து கர்த்தரிடம் ஜெபம் செய்யச் சென்றாள். கர்த்தருடைய பரிசுத்த ஆலயத்தின் கதவருகில் ஏலி எனும் ஆசாரியன் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்தான். 10 அன்னாள் மிகவும் துக்கமாக இருந்தபடியால் அவள் கர்த்தரிடம் அழுது கொண்டே வேண்டுதல் செய்தாள், 11 அவள் தேவனிடம் ஒரு விசேஷ வாக்குறுதியைக் கொடுத்தாள். அவள், “சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, நான் எவ்வளவு துக்கத்தில் இருக்கிறேன் என்பதைப் பாரும். என்னை நினைவு கூறும்! என்னை மறவாதேயும். நீர் எனக்கு ஒரு குமாரனைத் தந்தால், நான் அவனை உமக்கே தருவேன். அவன் நசரேயனாக இருப்பான். அவன் திராட்சை ரசமோ அல்லது வெறிகொள்ளத்தக்கவைகளை அருந்தாமலும் இருப்பான். எவரும் அவனது தலை மயிரை வெட்டாமல் இருப்பார்கள்”[a] என்று வேண்டிக்கொண்டாள்.
12 இவ்வாறு அன்னாள் நீண்ட நேரம் கர்த்தரிடம் ஜெபிக்கும்பொழுது அவளது வாயையே ஏலி கவனித்துக்கொண்டிருந்தான். 13 அன்னாள் தன் இருதயத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தாள். அவளது உதடுகள் அசைந்தன, ஆனால் அவள் உரக்க எதையும் சொல்லவில்லை. எனவே ஏலி, அன்னாளைக் குடித்திருப்பவளாக எண்ணினான். 14 ஏலி அன்னாளிடம், “நீ அதிகப்படியாகக் குடித்திருக்கின்றாய்! இது குடியை விடவேண்டிய நேரம்” என்றான்.
15 அதற்கு அன்னாள், “ஐயா, நான் திராட்சை ரசமோ அல்லது மதுவையோ குடிக்கவில்லை. நான் ஆழமான துயரத்தில் இருக்கிறேன். நான் எனது துன்பங்களையெல்லாம் கர்த்தரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். 16 மோசமான பெண் என்று என்னை எண்ணவேண்டாம். நான் நீண்ட நேரமாக பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். ஏனென்றால் எனக்கு அநேக தொல்லைகள் உள்ளன. மற்றும் நான் மிகவும் துக்கத்தில் இருக்கிறேன்” என்றாள்.
17 ஏலி அவளிடம், “சமாதானத்துடனே போ. இஸ்ரவேலரின் தேவன் நீ கேட்டதையெல்லாம் உனக்குத் தருவாராக” என்றான்.
18 அன்னாள், “உம்முடைய அடியாளுக்கு உம் கண்களில் இரக்கத்தைக் காணட்டும்” என்றாள். பிறகு அவள் அங்கிருந்து போய் உணவருந்தினாள். அதற்குப்பின் அவள் துக்கமாயிருக்கவில்லை.
19 மறுநாள் அதிகாலையில் எல்க்கானாவின் குடும்பம் எழுந்து கர்த்தரைத் தொழுதுகொண்ட பிறகு ராமாவிலுள்ள தங்கள் வீட்டிற்கு திரும்பிப் போனார்கள்.
சாமுவேலின் பிறப்பு
எல்க்கானா தன் மனைவியான அன்னாளோடு பாலின உறவுகொண்டான், கர்த்தர் அன்னாளை நினைவுக்கூர்ந்தார். 20 அதே காலம் அதற்கடுத்த ஆண்டில் அவள் கர்ப்பமுற்று ஒரு குமாரனைப் பெற்றெடுத்தாள். அவள் தன் குமாரனுக்கு சாமுவேல் என்று பெயரிட்டாள். அவள், “இவன் பெயர் சாமுவேல் ஏனென்றால் நான் கர்த்தரிடம் இவனைக் கேட்டேன்” என்றாள்.
பவுலின் அதிகாரம் தேவனிடமிருந்து வந்தது
11 சகோதரர்களே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட நற்செய்தியானது மனிதர்களால் உருவாக்கப்பட்டதல்ல. இதனை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 12 நான் இந்த நற்செய்தியை மனிதர்களிடம் இருந்து பெறவில்லை. எந்த மனிதனும் நற்செய்தியை எனக்குக் கற்பிக்கவில்லை. இயேசு கிறிஸ்து இதனை எனக்குக் கொடுத்தார். மக்களிடம் நான் சொல்ல வேண்டும் என்பதற்காகவே அவர் எனக்கு வெளிப்படுத்தினார்.
13 நீங்கள் எனது கடந்த கால வாழ்வைப் பற்றி அறிந்திருக்கிறீர்கள். நான் யூதர்களின் மதத்தில் இருந்தேன். தேவனுடைய சபையை நான் மிகவும் துன்புறுத்தினேன். அதனை அழித்துவிட முயன்றேன். 14 நான் யூதர்களின் மதத்தில் தலைவனாக இருந்தேன். என் வயதுள்ள மற்ற யூதர்களைவிட நான் அதிகச் செயல்கள் செய்தேன். மற்றவர்களைவிட நான் பழைய மரபு விதிகளைக் கடுமையாகக் கடைப்பிடிக்க முயன்றேன். அவ்விதிகள் நமது முன்னோர்களிடமிருந்து நாம் பெற்றவை ஆகும்.
15 ஆனால் நான் பிறப்பதற்கு முன்னரே தேவன் எனக்காக வேறு ஒரு தனித் திட்டம் வைத்திருந்தார். அதனால் அவர் கிருபையாக என்னை அழைத்தார். அவரிடம் எனக்காக வேறு திட்டங்கள் இருந்தன. 16 நான் யூதர் அல்லாதவர்களிடம் போய் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியைப் போதிக்க வேண்டும் என்று தேவன் விரும்பினார். எனவே அவர் தமது குமாரனை எனக்கு வெளிப்படுத்தினார். தேவன் என்னை அழைத்த போது, வேறு எந்த மனிதரிடமிருந்தும் நான் ஆலோசனையோ, அறிவுரையோ கேட்கவில்லை. 17 எருசலேமில் உள்ள அப்போஸ்தலர்களையும் நான் போய்ப் பார்க்கவில்லை. அவர்கள் எல்லாம் எனக்கு முன்னரே அப்போஸ்தலர்களாய் இருக்கிறவர்கள். ஆனால் நான் யாருக்காகவும் காத்திருக்காமல் அரேபியாவுக்குப் போனேன். பிறகு அங்கிருந்து தமஸ்கு என்ற நகருக்குத் திரும்பிவந்தேன்.
18 மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, நான் எருசலேமுக்குப் போனேன். நான் பேதுருவைச்[a] சந்திக்க விரும்பினேன். அவரோடு பதினைந்து நாட்கள் நான் தங்கி இருந்தேன். 19 வேறு எந்த அப்போஸ்தலர்களையும் அங்கு நான் சந்திக்கவில்லை. இயேசுவின் சகோதரனான யாக்கோபை மட்டும் சந்தித்தேன். 20 நான் எழுதுபவை எல்லாம் பொய் அல்ல என்று தேவனுக்குத் தெரியும். 21 பிறகு சீரியா, சிலிசியா போன்ற பகுதிகளுக்கு நான் சென்றேன்.
22 யூதேயாவில் இருக்கிற சபைகளில் உள்ளவர்கள் என்னை இதற்கு முன்னால் பார்த்ததில்லை. 23 அவர்கள் என்னைப்பற்றி சிலவற்றைக் கேள்விப்பட்டிருந்தார்கள். அதாவது, “முன்பு நம்மைத் துன்பப்படுத்தியவனே தான் அழிக்க நினைத்த விசுவாசத்தைக் குறித்து இப்பொழுது பிரசங்கம் செய்கிறான்.” 24 எனவே விசுவாசிகள் என்னைக் குறித்து தேவனைப் புகழ்ந்தனர்.
2008 by World Bible Translation Center