Revised Common Lectionary (Complementary)
5 கர்த்தாவே, நீர் வியக்கத்தக்க காரியங்களைச் செய்கிறீர்.
வின்ணுலகம் இதற்காக உம்மைத் துதிக்கும்.
ஜனங்கள் உம்மைச் சார்ந்திருக்கமுடியும்.
பரிசுத்தரின் கூட்டம் இதைப்பற்றிப் பாடும்.
6 பரலோகத்தில் கர்த்தருக்கு நிகரானவர் எவருமில்லை.
“தெய்வங்களில்” எவரையும் கர்த்தரோடு ஒப்பிட முடியாது.
7 தேவன் பரிசுத்தமானவரைச் சந்திக்கிறார்.
அவருடைய தூதர்கள் அவரைச் சுற்றியிருப்பார்கள்.
அவர்கள் தேவனுக்குப் பயந்து அவரை மதிப்பார்கள்.
அவரைக் கண்டு பயபக்தியோடு நிற்பார்கள்.
8 சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்மைப் போன்றோர் வேறெவருமில்லை.
உம்மை நாங்கள் முழுமையாக நம்பமுடியும்.
9 நீர் பெருமிதத்தோடு கடலை ஆளுகிறீர்.
அதன் கோபமான அலைகளை நீர் அமைதிப்படுத்த முடியும்.
10 தேவனே, நீர் ராகாபைத் தோற்கடித்தீர்.
உமது சொந்த வல்லமைமைமிக்க கரங்களால் நீர் உமது பகைவர்களைச் சிதறடித்தீர்.
11 தேவனே, பரலோகத்திலும், பூமியிலுமுள்ள அனைத்தும் உமக்குரியவை.
உலகையும் அதிலுள்ள அனைத்தையும் நீரே உண்டாக்கினீர்.
12 வடக்கு, தெற்கு, அனைத்தையும் நீர் படைத்தீர்.
தாபோர் மலையும் எர்மோன் மலையும் உமது நாமத்தைத் துதித்துப் பாடும்.
13 தேவனே, உமக்கு வல்லமை உண்டு!
உமது வல்லமை மேன்மையானது! வெற்றியும் உமக்குரியதே!
14 உண்மையிலும் நீதியிலும் உமது அரசு கட்டப்பட்டது.
அன்பும் நம்பிக்கையும் உமது சிங்காசனத்திற்கு முன்பு நிற்கும் பணியாட்கள்.
15 தேவனே, உம்மை நேர்மையாகப் பின்பற்றுவோர் உண்மையிலேயே மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
அவர்கள் உமது தயவின் ஒளியில் வாழ்கிறார்கள்.
16 உமது நாமம் அவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக்கும்.
அவர்கள் உமது நன்மையைத் துதிக்கிறார்கள்.
17 நீரே அவர்களின் வியக்கத்தக்க பெலன்.
அவர்களுடைய வல்லமை உம்மிடமிருந்து வரும்.
18 கர்த்தாவே, நீரே எமது பாதுகாவலர்.
இஸ்ரவேலின் பரிசுத்தமானவரே எங்கள் ராஜா.
19 உம்மைப் பின்பற்றுவோருக்குத் தரிசனம் தந்த நீர், “கூட்டத்திலிருந்து ஒரு இளைஞனை நான் தேர்ந்தெடுத்தேன்.
அந்த இளைஞனை முக்கியமானவனாக்கினேன். அந்த இளம் வீரனை ஆற்றலுடையவனாக்கினேன்.
20 நான் எனது பணியாளாகிய தாவீதைக் கண்டெடுத்தேன்.
விசேஷமான எண்ணெயால் அவனை அபிஷேகம் செய்தேன்.
21 என் வலது கரத்தால் தாவீதைத் தாங்கினேன்.
எனது வல்லமையால், அவனை வலிமையுள்ளவனாக்கினேன்.
22 தேர்ந்தெடுத்த அந்த ராஜாவைப் பகைவன் தோற்கடிக்க முடியாமற்போயிற்று.
தீயோர் அவனைத் தோற்கடிக்க இயலவில்லை.
23 அவனது பகைவர்களை நான் அழித்தேன்.
நான் தேர்ந்தெடுத்த ராஜாவைப் பகைத்தவர்களை நான் தோற்கடித்தேன்.
24 நான் தேர்ந்தெடுத்த ராஜாவை எப்போதும் நேசித்து அவனைத் தாங்குவேன்.
அவனை எப்போதும் ஆற்றல் பெறச்செய்வேன்.
25 நான் தேர்ந்தெடுத்த ராஜாவைக் கடலுக்கு அதிகாரியாக வைத்தேன்.
அவன் ஆறுகளைக் கட்டுப்படுத்துவான்.
26 அவன் என்னை நோக்கி, ‘நீரே என் தந்தை.
நீர் என் தேவன், என் பாறை, என் மீட்பர்’ என்பான்.
27 நான் அவனை என் முதற்பேறான குமாரனாக்குவேன்.
அவன் பூமியின் முதன்மையான ராஜாவாக இருப்பான்.
28 நான் தேர்ந்தெடுத்த ராஜாவை என் அன்பு என்றென்றும் பாதுகாக்கும்.
அவனோடு நான் செய்த உடன்படிக்கை ஒருபோதும் மாறாது.
29 அவன் குடும்பம் என்றென்றும் தொடரும்,
அவன் அரசு வானங்களிருக்கும்வரை நிலைக்கும்.
30 “அவனது சந்ததியினர் என் சட்டத்தைப் பின்பற்றாது விலகும்போதும்,
அவர்கள் என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாது மீறும்போதும் நான் அவர்களைத் தண்டிப்பேன்.
31 நான் தேர்ந்தெடுத்த ராஜாவின் சந்ததியினர் எனது சட்டங்களை மீறி,
என் கட்டளைகளை உதாசீனப்படுத்தினால்,
32 அப்போது நான் அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பேன்.
33 ஆனால் அந்த ஜனங்களிடமிருந்து என் அன்பை விலக்கமாட்டேன்.
நான் அவர்களிடம் எப்போதும் நேர்மையாக இருப்பேன்.
34 நான் தாவீதோடு செய்த உடன்படிக்கையை மீறமாட்டேன்.
நான் எனது உடன்படிக்கையை மாற்றமாட்டேன்.
35 எனது பரிசுத்தத்தினால் நான் அவனுக்கு ஒரு வாக்குறுதி அளித்தேன்.
நான் தாவீதிடம் பொய் கூறமாட்டேன்!
36 தாவீதின் குடும்பம் என்றென்றும் நிலைத்திருக்கும்.
சூரியன் இருக்கும்வரை அவன் அரசு நிலைக்கும்.
37 சந்திரன் இருக்கும்வரை என்றென்றும் அது தொடரும்.
வானங்கள் அந்த உடன்படிக்கைக்கு சான்று.
அந்த உடன்படிக்கையை நம்பலாம்” என்றீர்.
பெத்தேலில் யாக்கோபு
35 தேவன் யாக்கோபிடம், “பெத்தேல் நகரத்திற்குப் போய், அங்கே வாசம் செய். தொழுதுகொள்ள எனக்கொரு பலிபீடம் கட்டு. நீ உன் சகோதரனாகிய ஏசாவிற்குப் பயந்து ஓடிப்போனபோது உனக்குக் காட்சி தந்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை அமைத்து அங்கு தேவனைத் தொழுதுகொள்” என்றார்.
2 எனவே, யாக்கோபு தன் குடும்பத்தார் வேலைக்காரர்கள் அனைவரிடமும், “உங்களிடம் உள்ள மரத்தாலும் உலோகங்களாலும் செய்யப்பட்ட அந்நிய தெய்வங்களையெல்லாம் அழித்துப்போடுங்கள். உங்களைத் தூய்மைப்படுத்திக்கொண்டு, சுத்தமான ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள். 3 நாம் இந்த இடத்தைவிட்டு பெத்தேலுக்குப் போகிறோம். அங்கே எனக்குத் துன்பத்தில் உதவிய தேவனுக்கு நான் பலிபீடம் கட்டப்போகிறேன். அந்த தேவன் நான் எங்கு போனாலும் என்னோடு இருக்கிறார்” என்றான்.
4 எனவே, ஜனங்கள் தம்மிடம் இருந்த அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதுகளில் அணிந்திருந்த வளையங்களையும் யாக்கோபிடம் கொடுத்தார்கள். அவற்றை சீகேம் நகருக்கருகில் இருந்த ஒரு கர்வாலி மரத்தின் அடியிலே புதைத்துவிட்டான்.
5 யாக்கோபும் அவனது குமாரர்களும் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுப் போனபோது, அப்பகுதியில் உள்ள ஜனங்கள் அவர்களைப் பின் தொடர்ந்து போய் அவர்களைக் கொலைசெய்ய விரும்பினார்கள். ஆனால் தேவனால் ஏற்படுத்தப்பட்ட ஒரு பயம் அவர்களுக்கு ஏற்பட்டபடியால் அவர்கள் யாக்கோபைப் பின்தொடரவில்லை. 6 எனவே, யாக்கோபும் அவனைச் சேர்ந்தவர்களும் கானானிலுள்ள லூசை அடைந்தனர். லூஸ் இப்போது பெத்தேல் என்று அழைக்கப்பட்டது. 7 யாக்கோபு அவ்விடத்தில் ஒரு பலிபீடத்தைக் கட்டினான். அதற்கு “ஏல் பெத்தேல்” என்று பெயரிட்டான். காரணம் அவன் சகோதரனுக்குப் பயந்து ஓடியபோது தேவன் அந்த இடத்தில் தான் அவனுக்கு முதலில் காட்சியளித்தார்.
8 தெபோராள் எனும் ரெபெக்காளின் தாதி அங்கு மரித்துபோனாள். பெத்தேலில் கர்வாலி மரத்தின் அடியில் அவளை அடக்கம் செய்தனர். அந்த இடத்திற்கு அல்லோன் பாகூத் என்று பெயர் வைத்தனர்.
யாக்கோபின் புதிய பெயர்
9 பதான் அராமிலிருந்து யாக்கோபு திரும்பி வந்தபோது தேவன் மீண்டும் அவனுக்குக் காட்சியளித்தார், தேவன் யாக்கோபை ஆசீர்வதித்தார். 10 தேவன், யாக்கோபிடம், “உன் பெயர் யாக்கோபு, உன் பெயர் இனி யாக்கோபு என அழைக்கப்படாது. உன் பெயர் இஸ்ரவேல் எனப்படும்” என்று கூறி அவனுக்கு “இஸ்ரவேல்” என்று பெயரிட்டார்.
11 தேவன் அவனிடம், “நான் சர்வ வல்லமையுள்ள தேவன். உனக்கு இந்த ஆசீர்வாதத்தைத் தருவேன். நீ நிறைய குழந்தைகளைப் பெற்று ஒரு நாட்டை உருவாக்குவாய். வேறு ஜாதிகளின் கூட்டமும், ராஜாக்களும் உன்னிடமிருந்து தோன்றுவார்கள். 12 நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் சிறந்த இடங்களைக் கொடுத்திருந்தேன். இப்போது அதனை உனக்குக் கொடுக்கிறேன். உனக்குப் பின்னால் வரும் உன் பிள்ளைகளுக்கும் கொடுப்பேன்” என்றார். 13 பிறகு தேவன் அந்த இடத்தை விட்டு எழுந்தருளிப் போனார். 14-15 யாக்கோபு தேவன் தன்னோடு பேசின அந்த இடத்தில் ஒரு ஞாபகக் கல் நிறுத்தி அதில் திராட்சைரசத்தையும் எண்ணெயையும் ஊற்றினான். இது ஒரு சிறப்பான இடம். ஏனென்றால் அதுதான் தேவன் அவனிடம் பேசிய இடம். எனவே யாக்கோபு அதற்கு “பெத்தேல்” என்று பெயரிட்டான்.
யூதரல்லாதவருக்கும் பரிசுத்த ஆவி
44 பேதுரு இந்த வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருக்கையிலேயே, பரிசுத்த ஆவியானவர் அப்பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த எல்லா மக்களின் மீதும் வந்திறங்கினார். 45 பேதுருவோடு வந்த யூத விசுவாசிகள் வியந்தனர். யூதரல்லாத மக்களுக்கும் பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டதைக் கண்டு அவர்கள் ஆச்சரியமடைந்தனர். 46 ஏனெனில் அவர்கள் வேற்று மொழிகளைப் பேசுவதையும், தேவனைத் துதிப்பதையும் யூத விசுவாசிகள் கேட்டனர். பின்பு பேதுரு 47 “தண்ணீரின் மூலம் இம்மக்கள் ஞானஸ்நானம் பெறுவதை நாம் மறுக்க முடியாது. நாம் பெற்றதைப் போலவே இவர்களும் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள்!” என்றான். 48 கொர்நேலியுவும் அவன் உறவினரும் நண்பர்களும் இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஞானஸ்நானம் பெறவேண்டும் என்று பேதுரு கட்டளையிட்டான். பின் அம்மக்கள் பேதுருவைச் சில நாட்கள் தங்களோடு தங்கும்படியாகக் கேட்டுக்கொண்டனர்.
2008 by World Bible Translation Center