Revised Common Lectionary (Complementary)
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.
20 தொல்லைகள் சூழ்ந்திருக்கையில் நீ கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது கர்த்தர் பதிலளிக்கட்டும்.
யாக்கோபின் தேவன் உன் பெயரை முக்கியமாக்கட்டும்.
2 அவரது பரிசுத்த இடத்திலிருந்து தேவன் உதவி அனுப்பட்டும்.
சீயோனிலிருந்து அவர் உனக்குத் துணை நிற்கட்டும்.
3 நீ அளித்த அன்பளிப்புகளை தேவன் நினைவுகூரட்டும்.
உன் பலிகளையெல்லாம் அவர் ஏற்றுக்கொள்ளட்டும்.
4 தேவன் உனக்குத் தேவையான எல்லாவற்றையும் தருவார் என நம்புகிறேன்.
உன் எல்லாத் திட்டங்களையும் நிறைவேற்றுவார் என நம்புகிறேன்.
5 தேவன் உனக்கு உதவும்போது நாம் மகிழ்வடைவோம்.
நாம் தேவனுடைய நாமத்தைத் துதிப்போம்.
நீ கேட்பவற்றை யெல்லாம் கர்த்தர் தருவார் என்று நான் நம்புகிறேன்.
6 கர்த்தர் தான் தேர்ந்தெடுத்த ராஜாவுக்கு உதவுகிறார் என இப்போது அறிகிறேன்.
தேவன் அவரது பரிசுத்த பரலோகத்தில் இருந்தார்.
அவர் தேர்ந்தெடுத்த ராஜாவுக்குப் பதில் தந்தார்.
அவனைப் பாதுகாக்க தேவன் தன் உயர்ந்த வல்லமையைப் பயன்படுத்தினார்.
7 சிலர் தங்கள் இரதங்களை நம்புகின்றனர்.
மற்றோர் தங்கள் வீரர்களை நம்புகின்றனர்.
ஆனால் நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தரை நினைக்கின்றோம்.
அவரின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவோம்.
8 அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.
அவர்கள் யுத்தத்தில் மடிந்தனர்.
ஆனால் நாங்கள் வென்றோம்!
நாங்கள் வெற்றிபெற்றவர்கள்.
9 கர்த்தர் தாம் தேர்ந்தெடுத்த ராஜாவை மீட்டார்!
தேவன் தேர்ந்தெடுத்த ராஜா உதவி வேண்டினான். தேவன் பதில் தந்தார்!
தேவனைப்போற்றும் பாடல்
26 அந்த நேரத்தில் யூதாவில் இந்தப் பாடலை ஜனங்கள் பாடுவார்கள்:
கர்த்தரே நமக்கு இரட்சிப்பைத் தருகிறார்.
நமக்குப் பலமான நகரம் உள்ளது.
நமது நகரத்திற்குப் பலமான சுவர்களும், தற்காப்புகளும் உள்ளன.
2 கதவுகளைத் திறவுங்கள். நல்ல ஜனங்கள் நுழைவார்கள்.
தேவனுடைய நல்ல போதனைகளுக்கு அந்த ஜனங்கள் கீழ்ப்படிவார்கள்.
3 கர்த்தாவே, உம்மை அண்டியுள்ள ஜனங்களுக்கும்,
உம்மை நம்புகிற ஜனங்களுக்கும், நீர் உண்மையான சமாதானத்தைக் கொடுக்கிறீர்.
4 எனவே, எப்பொழுதும் கர்த்தரை நம்புங்கள்.
ஏனென்றால், கர்த்தராகிய யேகோவாவில் உங்களுக்கு என்றென்றைக்கும் பாதுகாப்பான இடமுண்டு.
5 ஆனால், கர்த்தர் தற்பெருமை கொண்ட நகரத்தை அழிப்பார்.
அங்கே வாழுகின்ற ஜனங்களை அவர் தண்டிப்பார்.
கர்த்தர் அந்த உயர்வான நகரத்தை தரையில் போடுவார்.
அது புழுதிக்குள் விழும்.
6 பிறகு, ஏழ்மையும் பணிவும் உள்ள ஜனங்களின் கால்கள் அதனை மிதித்துச் செல்லும்.
7 நல்ல ஜனங்களுக்கு நேர்மையே சிறந்த பாதை.
நல்ல ஜனங்கள் நேர்மையாகவும், உண்மையாகவும் உள்ள பாதையில் செல்வார்கள்.
தேவனே நீர் அந்தப் பாதையை மென்மையாக்கி
எளிதாக செல்லும்படிச் செய்கிறீர்.
8 ஆனால் கர்த்தாவே, நாங்கள் உமது நீதியின் பாதைக்காகக் காத்திருக்கிறோம்.
எங்கள் ஆத்துமா, உம்மையும் உமது நாமத்தையும் நினைவு கொள்ள விரும்புகின்றது.
9 இரவில் எனது ஆத்துமா உம்மோடு இருக்க விரும்புகிறது.
என்னுள் இருக்கிற ஆவி ஒவ்வொரு புதிய நாளின் அதிகாலையிலும் உம்மோடு இருக்க விரும்புகிறது.
தேசத்திற்கு உமது நீதியின் பாதை வரும்போது,
ஜனங்கள் வாழ்வின் சரியான பாதையைக் கற்றுக்கொள்வார்கள்.
விசுவாசத்தால் வாழ்தல்
16 அதனால் நாங்கள் ஒருபோதும் பலவீனர்களாக ஆவதில்லை. எங்களது சரீரம் வேண்டுமானால் முதுமையாலும் பலவீனத்தாலும் சோர்வடையலாம். ஆனால் எங்களுக்குள் இருக்கிற ஆவி ஒவ்வொரு நாளும் புதிதாக்கப்படுகிறது. 17 தற்சமயத்திற்கு சிற்சில தொந்தரவுகள் எங்களுக்கு உண்டு. எனினும் அவை, முடிவற்ற மகிமையைப் பெறவே எங்களுக்கு உதவும். அந்த முடிவற்ற மகிமையானது இந்தத் தொல்லைகளைவிட மிகப் பெரியது. 18 ஆகையால் நம்மால் காணமுடிந்தவற்றைப் பற்றியல்ல, காணமுடியாதவற்றைப் பற்றியே நாங்கள் சிந்திக்கிறோம். காணப்படுகிறவை தற்காலிகமானவை. காணப்படாதவையோ நிரந்தரமானவை.
2008 by World Bible Translation Center