Revised Common Lectionary (Complementary)
அன்னாள் நன்றி சொன்னது (அன்னாளின் ஜெபம்)
2 அன்னாள் ஜெபம் பண்ணி,
“என் இதயம் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருக்கிறது!
நான் என் தேவனுக்குள் மிக்க பலத்துடன் இருப்பதை உணருகிறேன்!
என் எதிரிகளைக் கண்டு நகைக்கிறேன்.
உமது இரட்சிப்பினாலே நான் மகிழ்ச்சி அடைகிறேன்!
2 கர்த்தரைப்போல பரிசுத்தமான வேறு தேவன் இல்லை.
உம்மைத் தவிர வேறு தேவன் இல்லை! நமது தேவனைப் போன்ற ஒரு கன்மலை வேறில்லை.
3 இனி அகம்பாவத்தோடும் தற்பெருமையோடும் பேசாதிருங்கள்!
ஏனென்றால் தேவனாகிய கர்த்தர் எல்லாவற்றையும் அறிவார், செய்கைகள் அவராலே நியாயந்தீர்க்கப்படும்.
4 வலிமையான வீரர்களின் வில்கள் முறிகிறது!
பலவீனமானவர்கள் பெலன் பெறுகிறார்கள்.
5 கடந்த காலத்தில் ஏராளமான உணவுப் பொருட்களை வைத்திருந்த ஜனங்கள் இப்போது உணவுக்காகக் கஷ்டப்பட்டு வேலை செய்யவேண்டும்.
ஆனால் கடந்த காலத்தில் பசியோடு இருந்தவர்கள், எல்லாம் இனிமேல் பசியாயிரார்கள்.
முன்பு குழந்தை பேறு இல்லாமல் இருந்த பெண் இப்போது ஏழு குழந்தைகளைப் பெற்றிருக்கிறாள்!
ஆனால் முன்பு நிறைய குழந்தைகளைப் பெற்ற பெண் அக்குழந்தைகள் தம்மை விட்டு விலகியதால் வருத்தமாயிருக்கிறாள்.
6 கர்த்தர் மரணத்தைக் கொண்டு வருகிறவராகவும் வாழ வைக்கிறவராகவும் இருக்கின்றார்.
அவரே பாதாளத்தில் இறங்கவும், அதிலிருந்து ஏறவும் பண்ணுகிறவர்.
7 கர்த்தர் சிலரை ஏழையாக்குகிறார், அவரே இன்னும் சிலரைச் செல்வந்தராக்குகிறார்.
கர்த்தர் சிலரைத் தாழ்த்துகிறார், மற்றவர்களை மேன்மையாக்குகிறார்.
8 கர்த்தர் ஏழை ஜனங்களை புழுதியிலிருந்து உயிர்ப்பிக்கிறார் மற்றும் அவர்களை குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.
கர்த்தர் ஏழை ஜனங்களை முக்கியமானவர்களாக்குகிறார்.
அவர்களை அவர் இளவரசர்களோடும் மதிப்புக்குரிய விருந்தினர்களோடும் அமர வைக்கிறார்.
கர்த்தர் உலகம் முழுவதையும் படைத்தார்!
இந்த முழு உலகமும் அவருக்குரியது!
9 கர்த்தர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைப் பாதுகாக்கிறார்.
அவர்களை அழிவினின்றும் காப்பார்.
ஆனால் தீயவர்கள் இருளிலே அமைதியாவார்கள்.
அவர்களின் பெலன் அவர்களை வெற்றியடையச் செய்யாது.
10 கர்த்தரை எதிர்ப்பவர்கள் சிதறடிக்கப்படுவார்கள்.
உன்னதமான தேவன் பரலோகத்திலிருந்த தமது எதிரிகளுக்கு எதிராக இடியாய் முழங்குவார்.
கர்த்தர் பூமியின் கடைசி பகுதியையும் நீயாயந்தீர்ப்பார்.
அவர் தமது ராஜாவுக்கு வல்லமையை அளிப்பார்.
தாம் அபிஷேகம் பண்ணினவரின் கொம்பை உயரப்பண்ணுவார்” என்றாள்.
இறுதியாக, சாராளுக்கு ஒரு குழந்தை
21 கர்த்தர், சாராளுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றினார். 2 சாராள் கர்ப்பமுற்றாள். ஆபிரகாமின் வயோதிப காலத்தில் அவனுக்கு ஓர் ஆண் குமாரனைப் பெற்றுக் கொடுத்தாள். இவையெல்லாம் தேவன் வாக்களித்தபடியே நடந்தது. 3 சாராள் ஒரு குமாரனைப் பெற்றெடுத்தாள். ஆபிரகாம் அவனுக்கு ஈசாக்கு என்று பெயரிட்டான். 4 ஈசாக்கு பிறந்து எட்டு நாள் கழிந்தபோது ஆபிரகாம் அவனுக்கு விருத்தசேதனம் செய்து வைத்தான். தேவனின் ஆணைப்படி இவ்வாறு நடந்தது.
5 ஈசாக்கு பிறக்கும்போது அவனது தந்தை ஆபிரகாமுக்கு 100 வயதாயிருந்தது. 6 சாராள், “தேவன் என்னை மகிழ்ச்சியடையச் செய்தார். இதைக் கேள்விப்படும் எவரும் என்னோடு சேர்ந்து மகிழ்ச்சியடைவார்கள். 7 ஆபிரகாமின் குழந்தையை நான் பெற்றெடுப்பேன் என்று எவரும் நினைத்திருக்கமாட்டார்கள். ஆனால் நான் இந்த வயோதிப காலத்திலும் அவருக்கு ஆண் பிள்ளையைப் பெற்றுக் கொடுத்தேன்” என்றாள்.
வீட்டில் பிரச்சனை
8 ஈசாக்கு பால்குடிக்க மறக்கும் நாளில் ஆபிரகாம் பெரிய விருந்து கொடுத்தான். 9 ஆகார் என்னும் எகிப்திய அடிமைப்பெண் ஆபிரகாமின் முதல் குமாரனைப் பெற்றிருந்தாள். சாராள் அவனைப் பார்த்தாள். அவன் கேலிச் செய்துகொண்டிருப்பதைக் கண்டு அவளுக்கு அவன் மேல் எரிச்சல் வந்தது. 10 சாராள் ஆபிரகாமிடம், “இந்த அடிமைப் பெண்ணையும் அவள் குமாரனையும் வெளியே தள்ளும். நாம் சாகும்போது நமக்குரிய அனைத்தையும் ஈசாக்கே பெற வேண்டும். அந்த அடிமைப் பெண்ணின் குமாரன் அதில் பங்கு போடுவதை நான் விரும்பவில்லை” என்றாள்.
11 இது ஆபிரகாமுக்கு துயரத்தைத் தந்தது. அவன் தன் குமாரன் இஸ்மவேலைப்பற்றிக் கவலைப்பட ஆரம்பித்தான். 12 ஆனால் தேவன் ஆபிரகாமிடம், “அடிமைப் பெண்ணையும், அவள் குமாரனையும்பற்றிக் கவலைப்படாதே, சாராள் விரும்புவது போலவே செய். ஈசாக்கு ஒருவனே உனது வாரிசு. 13 ஆனால் நான் உனது அடிமைப் பெண்ணின் குமாரனையும் ஆசீர்வதிப்பேன். அவனும் உன் குமாரன் என்பதால் அவனிடமிருந்தும் ஒரு பெரிய தேசத்தை உருவாக்குவேன்” என்றார்.
14 மறுநாள் அதிகாலையில் ஆபிரகாம் கொஞ்சம் தண்ணீரும், உணவும் எடுத்து அவற்றை ஆகாரிடம் கொடுத்தான். அவள் அவற்றை எடுத்துக்கொண்டு தன் மகனோடு வெளியேறி, பெயெர்செபா பாலைவனத்தில் அலைந்து திரிந்தாள்.
15 கொஞ்ச நேரம் கழிந்ததும் தண்ணீர் தீர்ந்து போனதால் குடிப்பதற்கு எதுவும் இல்லாமல் போயிற்று. எனவே ஆகார் தன் குமாரனை ஒரு புதரின் அடியில் விட்டாள். 16 ஆகார் கொஞ்ச தூரம் போய் உட்கார்ந்தாள். அவள் தன் குமாரன் தண்ணீர் இல்லாமலேயே மரித்துப்போவான் என்று எண்ணினாள். அவன் மரிப்பதை அவள் பார்க்க விரும்பவில்லை. எனவே அவள் அங்கே உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள்.
17 சிறுவனின் அழுகையை தேவன் கேட்டார். தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு: “ஆகாரே! உனக்கு என்ன நடந்தது? அஞ்ச வேண்டாம், கர்த்தர் சிறுவனின் அழுகையைக் கேட்டார். 18 போய் சிறுவனுக்கு உதவி செய், அவனது கையைப் பிடித்து வழிநடத்திச்செல். நான் அவனை ஏராளமான ஜனங்களுக்குத் தந்தையாக்குவேன்” என்றார்.
19 பிறகு தேவன், ஆகாரை ஒரு கிணற்றைப் பார்க்கும்படிச் செய்தார். அவள் அந்த கிணற்றின் அருகே சென்று, தன் பை நிறைய தண்ணீரை நிரப்பியதுடன், தன் குமாரனுக்கும் குடிக்கக் கொடுத்தாள். 20 அவன் வளர்ந்து ஆளாகும்வரை தேவன் அவனோடு இருந்தார். இஸ்மவேல் பாலைவனத்தில் வாழ்ந்து பெரிய வேட்டைக்காரன் ஆனான். வில்லைப் பயன்படுத்தத் தெரிந்துகொண்டான். 21 அவனது தாய் அவனுக்கொரு மனைவியை எகிப்தில் கண்டுபிடித்தாள். அவர்கள் பாரான் பாலைவனத்தில் வாழ்ந்தனர்.
ஆகார், சாராளின் சான்று
21 உங்களில் சிலர் இப்பொழுதும் மோசேயின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டிருக்க விரும்புகிறீர்கள். எனக்குச் சொல்லுங்கள். சட்டம் என்னச் சொல்லுகின்றது என கவனிக்கவில்லையா? 22 ஆபிரகாமுக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு. ஒருவனின் தாய் ஒரு அடிமைப் பெண். இன்னொருவனின் தாய் சுதந்தரமானவள். 23 அடிமைப் பெண்ணின் குமாரன் சாதாரண முறையில் பிறந்தான். அடுத்த பெண்ணின் மகனோ தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி பிறந்தவன்.
24 இந்த உண்மையான சம்பவம் நமக்கு ஒரு சித்திரத்தை உருவாக்கி காட்டுகிறது. இந்த இரண்டு பெண்களும் தேவன் மனிதனோடு செய்துகொண்ட இரண்டு உடன்படிக்கைகளைப் போன்றவர்கள். ஒன்று சீனாய் மலையில் தேவன் மனிதனோடு செய்த உடன்படிக்கை. இந்த உடன்படிக்கைக்குக் கீழ்ப்பட்ட மக்கள் எல்லோரும் அடிமைகளைப் போன்றவர்கள். ஆகார் இந்த உடன்படிக்கைக்கு உரியவள். 25 ஆகையால் ஆகார் என்பவள் அரேபியாவின் சீனாய் மலையைப் போன்று விளங்கினாள். இவள் தற்போதுள்ள எருசலேம் நகரத்தின் படமாயிருக்கிறாள். இந்த நகரமும் அடிமைப்பட்டிருக்கிறது. அதிலுள்ள யூத மக்களும் அடிமைப்பட்டு இருக்கின்றனர். 26 ஆனால் மேலிருக்கிற பரலோக எருசலேம் சுதந்தரமான பெண்ணைப் போன்றது. இதுவே நமது தாய். 27 கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டிருக்கிறது.
“பிள்ளை பெறாத மலடியே! மகிழ்ச்சியாய் இரு.
எப்போதும் நீ குழந்தை பெறாதவள்.
உனக்குப் பிரசவ வேதனை என்னவெனத் தெரியாது.
அதனால் நீ மகிழ்ச்சியுடன் சத்தமிடு.
கணவனுள்ள பெண்ணைவிட தனியாக இருக்கிற
பெண்ணுக்கே அதிகப் பிள்ளைகள் உண்டு.”(A)
28-29 ஆபிரகாமின் ஒரு பிள்ளை சாதாரண முறையில் பிறந்தவன். அவரது இன்னொரு பிள்ளை தேவனுடைய வாக்குறுதிப்படி ஆவியானவரின் வல்லமையால் பிறந்தான். சகோதர சகோதரிகளே, ஈசாக்கைப் போல நீங்களும் வாக்குறுதியால் வந்த பிள்ளைகளே! சாதாரண முறையில் பிறந்தவன், ஈசாக்கை மிக மோசமாக நடத்தினான். அது போலவே இன்றும் நடைபெறுகிறது. 30 ஆனால் வேதவாக்கியங்கள் என்ன கூறுகிறது? “அடிமைப் பெண்ணையும் அவளது குமாரனையும் தூக்கி எறியுங்கள். அடிமையாய் இல்லாதவளின் குமாரன் அவனது தந்தைக்குரியவற்றை எல்லாம் பெற்றுக்கொள்வான். ஆனால் அடிமைப் பெண்ணின் மகனோ எதையும் பெற்றுக்கெள்ளமாட்டான்.”(B) 31 ஆகையால் சகோதர சகோதரிகளே, நாம் அடிமைப் பெண்ணின் பிள்ளைகள் அல்ல. நாம் சுதந்தரமான பெண்ணின் பிள்ளைகள்.
சுதந்தரத்தைப் பாதுகாத்துக்கொள்
5 நமக்கு இப்போது சுதந்தரம் இருக்கிறது. கிறிஸ்து நம்மைச் சுதந்தரம் உள்ளவர்கள் ஆக்கினார். எனவே உறுதியாய் நில்லுங்கள். மாறாதீர்கள். மீண்டும் அடிமைகளாக மறுத்துவிடுங்கள்.
2008 by World Bible Translation Center