Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஏசாயா 7:10-16

இம்மானுவேல், தேவன் நம்மோடு இருக்கிறார்.

10 பிறகு கர்த்தர் தொடர்ந்து ஆகாசோடு பேசினார். 11 கர்த்தர், “இவையெல்லாம் உண்மை என்று உங்களுக்கு நிரூபிக்க ஒரு அடையாளத்தைக் கேளுங்கள், நீங்கள் விரும்புகிற எந்த அடையாளத்தையும் நீங்கள் கேட்கலாம். அந்த அடையாளம் பாதாளம் போன்ற ஆழமான இடத்தில் இருந்தும் வரலாம், அல்லது அந்த அடையாளம் வானம் போன்ற உயரமான இடத்திலிருந்தும் வரலாம்” என்றார்.

12 ஆனால் ஆகாஸ், “அதை நிரூபிக்க நான் அடையாளத்தைக் கேட்கமாட்டேன். நான் கர்த்தரைச் சோதிக்கமாட்டேன்” என்றான்.

13 பிறகு ஏசாயா, “தாவீதின் குடும்பமே, கவனமாகக் கேளுங்கள்! நீங்கள் ஜனங்கள் பொறுமையைச் சோதிக்கிறீர்கள். அது உங்களுக்கு முக்கியமாகப்படவில்லை. எனவே இப்பொழுது என் தேவனுடைய பொறுமையைச் சோதிக்கிறீர்கள். 14 ஆனால் எனது தேவனாகிய ஆண்டவர் உனக்கு ஒரு அடையாளம் காட்டுவார்.

“இந்த இளம் கன்னிப் பெண்ணைப் பாரும். இவள் கர்ப்பமாக இருக்கிறாள்.
    இவள் ஒரு குமாரனைப் பெறுவாள் அவள் அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவாள்.
15 இம்மானுவேல் வெண்ணெயையும் தேனையும் தின்பார்,
    அவர் இவ்வாறு வாழ்வார், நல்லவற்றை எவ்வாறு செய்வது என்றும்
    பாவத்தை எவ்வாறு செய்யாமல் விடுவது என்றும் வாழ்ந்துக்காட்டுவார்.
16 ஆனால் அக்குழந்தை நன்மை தெரிந்து தீமையை வெறுக்க கற்றுக்கொள்ளும் வயது வரும் முன்னால்,
    எப்பிராயீம் (இஸ்ரவேல்) மற்றும் ஆராம் நாடு காலியாகிவிடும்.
    நீ இப்பொழுது அந்த இரண்டு நாட்டு ராஜாக்கள் பற்றியும் பயப்படுகிறாய்.

சங்கீதம் 80:1-7

“உடன்படிக்கையின் அல்லிகள்” என்னும் பாடலை இசைக்கும் இராகத் தலைவனுக்கு ஆசாப் அளித்த துதிப் பாடல்களுள் ஒன்று.

80 இஸ்ரவேலின் மேய்ப்பரே, என்னைக் கேளும்.
    நீர் யோசேப்பின் ஆடுகளை (ஜனங்களை) வழி நடத்துகிறீர்.
கேருபீன்கள் மேல் ராஜாவாக நீர் வீற்றிருக்கிறீர்.
    நாங்கள் உம்மைப் பார்க்கட்டும்.
இஸ்ரவேலின் மேய்ப்பரே, உமது பெருமையை எப்பிராயீமுக்கும் பென்யமீனுக்கும், மனாசேக்கும் காட்டும்.
    வந்து எங்களைக் காப்பாற்றும்.

தேவனே, எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்.
    எங்களை ஏற்றருளும், எங்களைக் காப்பாற்றும்.

சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, எப்போது நீர் எங்கள் ஜெபங்களைக் கேட்பீர்?
    என்றென்றைக்கும் எங்களோடு கோபமாயிருப்பீரோ?
உமது ஜனங்களுக்கு நீர் கண்ணீரையே உணவாகக் கொடுத்தீர்.
    உமது ஜனங்களின் கண்ணீர் நிரம்பிய பாத்திரத்தையே உமது ஜனங்களுக்கு நீர் கொடுத்தீர்.
    அதுவே அவர்கள் பருகும் தண்ணீராயிற்று.
எங்கள் சுற்றத்தினர் சண்டையிடுவதற்கான பொருளாக எங்களை மாற்றினீர்.
    எங்கள் பகைவர்கள் எங்களைப் பார்த்து நகைக்கிறார்கள்.

சர்வ வல்லமையுள்ள தேவனே, எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்.
    எங்களை ஏற்றருளும், எங்களைக் காப்பாற்றும்.

சங்கீதம் 80:17-19

17 தேவனே, உமது வலது பக்கத்தில் நின்ற உமது குமாரனை நெருங்கும்.
    நீர் வளர்த்தெடுத்த உமது மகனிடம் நெருங்கி வாரும்.
18 அவர் மீண்டும் உம்மை விட்டுச் செல்லமாட்டார்.
    அவர் வாழட்டும், அவர் உமது நாமத்தைத் தொழுதுகொள்வார்.
19 சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரே, எங்களிடம் மீண்டும் வாரும்.
    எங்களை ஏற்றுக்கொள்ளும், எங்களைக் காப்பாற்றும்.

ரோமர் 1:1-7

இயேசு கிறிஸ்துவின் ஒரு ஊழியனும், அப்போஸ்தலனாகும்படி தேவனால் அழைக்கபட்டவனுமாகிய பவுல் எழுதுவது:

தேவனுடைய நற்செய்தியை எல்லாருக்கும் சொல்வதற்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். தனது மக்களுக்கு நற்செய்தியை தரப்போவதாக தேவன் ஏற்கெனவே வாக்குறுதி தந்துள்ளார். தேவன் தனது தீர்க்கதரிசிகள் மூலம் இவ்வாக்குறுதியை வழங்கினார். இந்த வாக்குறுதி பரிசுத்த வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது. 3-4 அந்த நற்செய்தி தேவனுடைய குமாரனும் நமது கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றியது. ஒரு மனிதனைப் போன்று அவர் தாவீதின் குடும்பத்தில் பிறந்தார். ஆனால் பரிசுத்த ஆவியானவரின் மூலம் இயேசு தேவனுடைய குமாரன் என்பதை மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்ததன் மூலம் பலமாய் நிரூபித்துக் காட்டினார்.

கிறிஸ்துவின் மூலம் தேவனுக்குச் சேவை செய்யும் சிறப்பை எனக்குக் கொடுத்தார். தேவன் மேல் நம்பிக்கையும், கீழ்ப்படிதலுமுள்ளவர்களாக உலகில் உள்ள அனைத்து நாட்டு மக்களையும் வழிநடத்தும்படிக்கு இப்பணியை தேவன் எனக்குக் கொடுத்தார். நான் கிறிஸ்துவுக்காக இப்பணியைச் செய்கிறேன். ரோமிலுள்ள நீங்களும் இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்களாக அழைக்கப்பட்டீர்கள்.

தன் பரிசுத்த மக்களாக தேவனால் அழைக்கப்பட்ட, ரோமிலுள்ள உங்கள் அனைவருக்கும் இக்கடிதம் எழுதப்படுகிறது.

தேவனுடைய நேசத்துக்குரியவர்கள் நீங்கள். பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாலும் உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் உண்டாவதாக.

மத்தேயு 1:18-25

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு

(லூக்கா 2:1-7)

18 இயேசு கிறிஸ்துவின் தாய் மரியாள். இயேசுவின் பிறப்பு இப்படி நிகழ்ந்தது. மரியாள் யோசேப்புக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தாள். அவர்கள் திருமணத்திற்கு முன்பே மரியாள் தான் கருவுற்றிருப்பதை அறிந்தாள். பரிசுத்த ஆவியின் வல்லமையால் மரியாள் கருவுற்றிருந்தாள். 19 மரியாளின் கணவனாகிய யோசேப்பு மிகவும் நல்லவன். மக்களின் முன்னிலையில் மரியாளை அவன் அவமதிக்க விரும்பவில்லை. எனவே யோசேப்பு மரியாளை இரகசியமாகத் தள்ளிவிட நினைத்தான்.

20 யோசேப்பு இந்த சிந்தையாயிருக்கும்பொழுது, கர்த்தருடைய தூதன் யோசேப்பின் கனவில் தோன்றி, “தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, மரியாளை உன் மனைவியாக ஏற்றுக்கொள்ளத் தயங்காதே. அவள் கருவிலிருக்கும் குழந்தை பரிசுத்த ஆவியானவரால் உண்டானது. 21 அவள் ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாள். அக்குழந்தைக்கு இயேசு[a] எனப் பெயரிடு. அவர் தமது மக்களின் பாவங்களை நீக்கி இரட்சிப்பார்” என்றான்.

22 இவையெல்லாம் தீர்க்கதரிசியின் மூலமாகத் தேவன் சொன்னவைகளின் நிறைவேறுதல்களாக நடந்தன. தீர்க்கதரிசி சொன்னது இதுவே:

23 “கன்னிப் பெண் ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாள்.
    அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்கள்.” (A)
(இம்மானுவேல் என்பதற்கு,
    “தேவன் நம்முடன் இருக்கிறார்” என்று பொருள்.)

24 விழித்தெழுந்த யோசேப்பு, கர்த்தருடைய தூதன் சொன்னபடியே மரியாளை மணந்தான். 25 ஆனால் மரியாள் தன் குமாரனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவளை அறியவில்லை. யோசேப்பு அவருக்கு, “இயேசு” எனப் பெயரிட்டான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center