Revised Common Lectionary (Complementary)
“உடன்படிக்கையின் அல்லிகள்” என்னும் பாடலை இசைக்கும் இராகத் தலைவனுக்கு ஆசாப் அளித்த துதிப் பாடல்களுள் ஒன்று.
80 இஸ்ரவேலின் மேய்ப்பரே, என்னைக் கேளும்.
நீர் யோசேப்பின் ஆடுகளை (ஜனங்களை) வழி நடத்துகிறீர்.
கேருபீன்கள் மேல் ராஜாவாக நீர் வீற்றிருக்கிறீர்.
நாங்கள் உம்மைப் பார்க்கட்டும்.
2 இஸ்ரவேலின் மேய்ப்பரே, உமது பெருமையை எப்பிராயீமுக்கும் பென்யமீனுக்கும், மனாசேக்கும் காட்டும்.
வந்து எங்களைக் காப்பாற்றும்.
3 தேவனே, எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்.
எங்களை ஏற்றருளும், எங்களைக் காப்பாற்றும்.
4 சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, எப்போது நீர் எங்கள் ஜெபங்களைக் கேட்பீர்?
என்றென்றைக்கும் எங்களோடு கோபமாயிருப்பீரோ?
5 உமது ஜனங்களுக்கு நீர் கண்ணீரையே உணவாகக் கொடுத்தீர்.
உமது ஜனங்களின் கண்ணீர் நிரம்பிய பாத்திரத்தையே உமது ஜனங்களுக்கு நீர் கொடுத்தீர்.
அதுவே அவர்கள் பருகும் தண்ணீராயிற்று.
6 எங்கள் சுற்றத்தினர் சண்டையிடுவதற்கான பொருளாக எங்களை மாற்றினீர்.
எங்கள் பகைவர்கள் எங்களைப் பார்த்து நகைக்கிறார்கள்.
7 சர்வ வல்லமையுள்ள தேவனே, எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்.
எங்களை ஏற்றருளும், எங்களைக் காப்பாற்றும்.
17 தேவனே, உமது வலது பக்கத்தில் நின்ற உமது குமாரனை நெருங்கும்.
நீர் வளர்த்தெடுத்த உமது மகனிடம் நெருங்கி வாரும்.
18 அவர் மீண்டும் உம்மை விட்டுச் செல்லமாட்டார்.
அவர் வாழட்டும், அவர் உமது நாமத்தைத் தொழுதுகொள்வார்.
19 சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரே, எங்களிடம் மீண்டும் வாரும்.
எங்களை ஏற்றுக்கொள்ளும், எங்களைக் காப்பாற்றும்.
தாவீது தேவனிடம் ஜெபம் செய்கிறான்
18 அப்போது தாவீது ராஜா உள்ளே சென்று கர்த்தருக்கு முன்பாக அமர்ந்தான்.
தாவீது, “கர்த்தராகிய என் ஆண்டவரே, நான் ஏன் உமக்கு முக்கியமானவனானேன்? என் குடும்பம் ஏன் உமக்கு முக்கியமானதாயிற்று? என்னை ஏன் முக்கியமானவனாக மாற்றினீர்? 19 நான் ஊழியக்காரனன்றி வேறெதுவுமல்ல. நீர் என்னிடம் மிகவும் இரக்கம் காட்டினீர். எனது எதிர்கால குடும்பம் பற்றியும் இரக்கமான சொற்களைக் கூறினீர்! கர்த்தராகிய என் ஆண்டவரே, நீர் எப்போதும் ஜனங்களிடம் இவ்வாறு பேசுவதில்லை அல்லவா? 20 நான் எவ்வாறு தொடர்ந்து உம்மோடு பேச முடியும்? கர்த்தராகிய என் ஆண்டவரே, நான் உமது ஊழியன் என்பதை அறிவீர். 21 நீர் செய்வதாகக் கூறியதாலும் அவற்றைச் செய்ய விரும்புவதாலும் இந்த அற்புதமான காரியங்களை நீர் செய்வீர். இக்காரியங்கள் எல்லாவற்றையும் நான் அறிந்துகொள்ள நீர் முடிவு செய்தீர்.
22 கர்த்தராகிய என் ஆண்டவரே, அதனால்தான் நீர் மிகவும் பெரியவர்! உம்மைப் போன்று வேறொருவரும் இல்லை. உம்மைத் தவிர வேறு தேவன் இல்லை! நீர் செய்த காரியங்களைக் குறித்து நாங்கள் கேள்விப்பட்டிருப்பதால் அதை அறிவோம்.
4 இதை உங்களுக்குச் சொல்ல நான் விரும்புகிறேன். ஒருவன் தன் சொத்துக்களுக்கெல்லாம் உரிமையுடையவனாய் இருந்தும் அவன் சிறுபிள்ளையாய் இருந்தால் அவனுக்கும் அடிமைக்கும் எந்த வேறுபாடும் இல்லை. 2 ஏனென்றால் அவன் குழந்தை. அவன் தன் பாதுகாப்பாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறான். ஆனால் தன் தந்தையின்படி குறித்த வயதை அடையும்போது அவன் சுதந்தரம் உள்ளவனாக விளங்குகிறான். 3 நாமும் இதைப் போலத்தான். நாம் எல்லாரும் குழந்தைகளைப் போன்றவர்கள். நாம் பயனற்ற சட்டங்களுக்கு அடிமையாய் இருந்தோம். 4 ஆனால் சரியான நேரம் வந்தபோது, தேவன் தன் குமாரனை அனுப்பினார். தேவனுடைய குமாரன் ஒரு பெண்ணினிடத்தில் பிறந்தார். அவரும் விதிமுறைகளின்படியே வாழ்ந்தார். 5 இதனைச் செய்ததன் மூலம், சட்டங்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த மக்களுக்கு தேவன் விடுதலையை வழங்கினார். நம்மை அவரது பிள்ளைகளாக ஆக்கவேண்டும் என்பது தான் இவரது நோக்கம்.
6 நீங்கள் தேவனுடைய பிள்ளைகள். அதனால் தான் தேவன் தம் குமாரனின் ஆவியை நமது இதயங்களுக்குள் அனுப்பினார். ஆவியானவரும் “பிதாவே, அன்பான பிதாவே” என்று கதறுகிறார். 7 ஆகையால் இப்பொழுது நீங்கள் முன்பு போல அடிமைகள் அல்ல. நீங்கள் தேவனுடைய பிள்ளைகள். அவர் வாக்குறுதிப்படி உங்களுக்குத் தருவார். ஏனென்றால் நீங்கள் அவரது பிள்ளைகளாயிருக்கிறீர்கள்.
2008 by World Bible Translation Center