Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 24

தாவீதின் பாடல்.

24 பூமியும் அதிலுள்ள எல்லாப் பொருள்களும் கர்த்தருடையவை.
    உலகமும் அதன் ஜனங்களும் அவருக்கே உரிமையாம்.
கர்த்தர் பூமியை தண்ணீரின் மேல் உண்டாக்கினார்.
    ஆறுகளின் மீது அதை உண்டாக்கினார்.

கர்த்தருடைய மலைகளின் மேல் யார் ஏறக்கூடும்?
    கர்த்தருடைய பரிசுத்த ஆலயத்தில் யார் நிற்கக்கூடும்?
    யார் அங்கு வழிபட முடியும்?
தீயவை செய்யாத ஜனங்களும்,
    பரிசுத்த இருதயம் உடையோரும்,
பொய்யை உண்மையெனக் கூறுவதற்கு என் பெயரைப்[a] பயன்படுத்தாதோரும், பொய்யும்,
    பொய்யான வாக்குறுதிகளும் அளிக்காதோரும், மட்டுமே அங்கு தொழுதுகொள்ள முடியும்.

நல்ல ஜனங்கள் கர்த்தரிடம் மற்ற ஜனங்களை ஆசீர்வதிக்கச் சொல்வார்கள்.
    அந்த நல்ல ஜனங்கள் தங்கள் இரட்சகராகிய தேவனை நல்லக் காரியங்களைச் செய்யச் சொல்வார்கள்.
அந்த நல்லோர் தேவனைப் பின்பற்ற முயல்வார்கள்.
    யாக்கோபின் தேவனிடம் உதவி வேண்டி அவர்கள் செல்வார்கள்.

வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்!
    பழைமையான கதவுகளே! திறவுங்கள்!
    மகிமை வாய்ந்த ராஜா உள்ளே வருவார்.
யார் இந்த மகிமைமிக்க ராஜா?
    கர்த்தரே அந்த ராஜா. அவரே வல்லமையுள்ள வீரர்.
    கர்த்தரே அந்த ராஜா. அவரே போரின் நாயகன்.

வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்!
    பழைமையான கதவுகளே, திறவுங்கள்!
    மகிமை மிக்க ராஜா உள்ளே வருவார்.
10 யார் அந்த மகிமை மிக்க ராஜா?
    சர்வ வல்லமையுள்ள கர்த்தரே அந்த ராஜா.
    அவரே மகிமை மிக்க ராஜா.

ஏசாயா 60:8-16

ஜனங்களைப் பாருங்கள்!
    மேகங்கள் விரைவாக வானத்தைக் கடப்பதுபோன்று அவர்கள் உன்னிடம் விரைந்து வருகின்றனர்.
    புறாக்கள் தம் கூடுகளுக்குப் பறந்து போவதுபோல் போகின்றனர்.
எனக்காகத் தொலைதூர நாடுகள் எல்லாம் காத்திருக்கின்றன.
    பெரிய சரக்குக் கப்பல்களும் பயணத்திற்குத் தயாராக உள்ளன.
அக்கப்பல்கள் தொலை தூர நாடுகளிலிருந்து, உனது பிள்ளைகளைக் கொண்டுவரத் தயாராக உள்ளன.
    அவர்கள் பொன்னையும், வெள்ளியையும் தங்களோடு எடுத்து வந்து
உங்கள் தேவனாகிய கர்த்தரும், இஸ்ரவேலின் பரிசுத்தருமானவரை மகிமைப்படுத்துவார்கள்.
    கர்த்தர் உனக்காக அற்புதச் செயல்களைச் செய்கிறார்.
10 மற்ற நாடுகளில் உள்ள பிள்ளைகள், உனது சுவர்களை மீண்டும் கட்டுவார்கள்.
    அவர்களின் ராஜாக்கள் உனக்குச் சேவைசெய்வார்கள்.

“நான் கோபமாக இருந்தபோது, நான் உன்னைக் காயப்படுத்தினேன்.
    ஆனால் இப்போது, நான் உன்னிடம் தயவாயிருக்க விரும்புகிறேன்.
    எனவே உனக்கு நான் ஆறுதல் செய்வேன்.
11 உனது கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்.
    அவை, இரவு அல்லது பகல் எவ்வேளையிலும் மூடப்படாதவை.
    நாடுகளும் ராஜாக்களும் தங்கள் செல்வங்களை உனக்குக் கொண்டுவருவார்கள்.
12 உனக்குச் சேவைசெய்யாத
    எந்த நாடும், இராஜ்யமும் அழிக்கப்படும்.
13 லீபனோனில் உள்ள மிகச்சிறந்த பொருட்கள் உனக்குக் கொடுக்கப்படும்.
    ஜனங்கள் உனக்கு தேவதாரு, பாய்மரம், புன்னை போன்ற மரங்களைக் கொண்டுவருவார்கள்.
இம்மரங்கள் எனது பரிசுத்தமான இடத்தைக் கட்டவும் மேலும் அழகுபடுத்தவும் பயன்படும்.
    இந்த இடம் சிங்காசனத்திற்கு முன்பு உள்ள சிறு நாற்காலிபோல் இருக்கும்.
    நான் இதற்கு பெருமதிப்பு கொடுப்பேன்.
14 கடந்த காலத்தில், ஜனங்கள் உன்னைக் காயப்படுத்தினார்கள்,
    அந்த ஜனங்கள் இப்பொழுது உன் முன்னால் பணிவார்கள்.
கடந்த காலத்தில், ஜனங்கள் உன்னை வெறுத்தனர்.
    அந்த ஜனங்கள் உன் காலடியில் பணிவார்கள்.
அவர்கள் உன்னை ‘கர்த்தருடைய நகரம்’
    ‘இஸ்ரவேலுடைய பரிசுத்தமானவரின் சீயோன்’ என்றும் அழைப்பார்கள்.

15 “நீ மீண்டும் தனியாகக் கைவிடப்படமாட்டாய்.
    நீ மீண்டும் வெறுக்கப்படமாட்டாய்.
நீ மீண்டும் வெறுமையாக்கப்படமாட்டாய்.
    நான் என்றென்றும் உன்னை பெரியவனாக்குவேன்.
    நீ என்றென்றும் மகிழ்ச்சியோடு இருப்பாய்.
16 உனக்குத் தேவையான அனைத்தையும் நாடுகள் தரும்.
    இது குழந்தை தன் தாயிடமிருந்து பால் குடிப்பதுபோன்று இருக்கும்.
ஆனால் நீ ராஜாக்களிடமிருந்து செல்வத்தைக் குடிப்பாய்.
    பிறகு நீ, அது நான் என்றும் உன்னைக் காப்பாற்றும் கர்த்தர் என்றும் அறிந்துகொள்வாய்.
    யாக்கோபின் பெரிய தேவன் உன்னைக் காப்பாற்றுகிறவர், என்பதை நீ அறிந்துகொள்வாய்.

லூக்கா 1:1-4

லூக்காவின் நோக்கம்

அன்பான தெயோப்பிலுவே,

நம்மிடையே நடந்த பல நிகழ்ச்சிகளின் வரலாற்றைத் தொகுத்தளிக்க பலர் முயற்சி செய்தனர். வேறு சில மக்களிடமிருந்து நாம் கேட்டறிந்த செய்திகளையே அவர்கள் எழுதியிருந்தார்கள். இம்மக்கள் தொடக்கத்திலிருந்து எல்லாவற்றையும் கண்டவர்களும், தேவனுடைய நற்செய்தியை மற்றவர்களுக்குப் போதிப்பதின் மூலம் தேவனுக்கு சேவை செய்துகொண்டிருந்தவர்களும் ஆவார்கள். மதிப்புக்குரிய தெயோப்பிலுவே, துவக்கத்திலிருந்தே எல்லாவற்றையும் நானும் கவனமாகக் கற்று அறிந்தேன். அவற்றை உங்களுக்காக எழுதவேண்டும் என்று எண்ணினேன். எனவே அவற்றை ஒரு நூலில் முறைப்படுத்தி எழுதினேன். உங்களுக்குப் போதிக்கப்பட்டிருக்கிற அனைத்தும் உண்மையே என்பதை நீங்கள் அறியும்பொருட்டு இவற்றை எழுதுகிறேன்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center