Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 24

தாவீதின் பாடல்.

24 பூமியும் அதிலுள்ள எல்லாப் பொருள்களும் கர்த்தருடையவை.
    உலகமும் அதன் ஜனங்களும் அவருக்கே உரிமையாம்.
கர்த்தர் பூமியை தண்ணீரின் மேல் உண்டாக்கினார்.
    ஆறுகளின் மீது அதை உண்டாக்கினார்.

கர்த்தருடைய மலைகளின் மேல் யார் ஏறக்கூடும்?
    கர்த்தருடைய பரிசுத்த ஆலயத்தில் யார் நிற்கக்கூடும்?
    யார் அங்கு வழிபட முடியும்?
தீயவை செய்யாத ஜனங்களும்,
    பரிசுத்த இருதயம் உடையோரும்,
பொய்யை உண்மையெனக் கூறுவதற்கு என் பெயரைப்[a] பயன்படுத்தாதோரும், பொய்யும்,
    பொய்யான வாக்குறுதிகளும் அளிக்காதோரும், மட்டுமே அங்கு தொழுதுகொள்ள முடியும்.

நல்ல ஜனங்கள் கர்த்தரிடம் மற்ற ஜனங்களை ஆசீர்வதிக்கச் சொல்வார்கள்.
    அந்த நல்ல ஜனங்கள் தங்கள் இரட்சகராகிய தேவனை நல்லக் காரியங்களைச் செய்யச் சொல்வார்கள்.
அந்த நல்லோர் தேவனைப் பின்பற்ற முயல்வார்கள்.
    யாக்கோபின் தேவனிடம் உதவி வேண்டி அவர்கள் செல்வார்கள்.

வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்!
    பழைமையான கதவுகளே! திறவுங்கள்!
    மகிமை வாய்ந்த ராஜா உள்ளே வருவார்.
யார் இந்த மகிமைமிக்க ராஜா?
    கர்த்தரே அந்த ராஜா. அவரே வல்லமையுள்ள வீரர்.
    கர்த்தரே அந்த ராஜா. அவரே போரின் நாயகன்.

வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்!
    பழைமையான கதவுகளே, திறவுங்கள்!
    மகிமை மிக்க ராஜா உள்ளே வருவார்.
10 யார் அந்த மகிமை மிக்க ராஜா?
    சர்வ வல்லமையுள்ள கர்த்தரே அந்த ராஜா.
    அவரே மகிமை மிக்க ராஜா.

ஏசாயா 33:17-23

17 உங்கள் கண்கள் ராஜாவின் (தேவன்) அழகைப் பார்க்கும். நீங்கள் பெரிய தேசத்தைப் பார்ப்பீர்கள். 18-19 கடந்த காலத்தில் நீங்கள் பெற்றிருந்த தொல்லைகளை நீங்கள் நினைத்துப் பார்ப்பீர்கள். “வேறு நாடுகளிலிருந்து வந்த அந்த ஜனங்கள் எங்கே? நாம் புரிந்துகொள்ள முடியாத ஒரு மொழியுடைய அந்த அதிகாரிகளும் வரி வசூலிப்பவர்களும் எங்கே? நமது பாதுகாப்புக் கோபுரங்களை எண்ணிய ஒற்றர்கள் எங்கே? அவர்கள் அனைவரும் போய்விட்டார்கள்.”

எருசலேமை தேவன் காப்பாற்றுவார்

20 நமது மதப்பண்டிகையின் விடுமுறைகளைக் கொண்டாடும் நகரமாகிய. சீயோனைப் பாருங்கள். ஓய்வெடுப்பதற்குரிய அழகான இடமான எருசலேமைப் பாருங்கள். எருசலேம் என்றும் நகர்த்தப்படாத கூடாரம்போல் உள்ளது. இனி அதன் முளைகள் என்றைக்கும் பிடுங்கப்படுவதில்லை. அதன் கயிறுகளில் ஒன்றும் அறுந்துபோவதில்லை. 21-23 ஏனென்றால் அங்கே வல்லமையுள்ள கர்த்தர் இருக்கிறார். அந்த நாடானது ஓடைகளும் அகன்ற ஆறுகளும் உள்ள இடமாக இருக்கிறது. ஆனால் அந்த ஆறுகளில் பகைவர்களின் படகுகளோ அல்லது சக்தி வாய்ந்த கப்பல்களோ இருப்பதில்லை. அந்தப் படகுளில் வேலைசெய்கிற நீங்கள் கயிறுகளோடு வேலையை உதற முடியும். பாய்மரத்தைப் பலமுள்ளதாக்க உங்களால் முடியாது. உங்களால் பாயை விரிக்கவும் முடியாமல் போகும். ஏனென்றால், கர்த்தர் நமது நீதிபதியாக இருக்கிறார். நமது சட்டங்களை கர்த்தர் உருவாக்குகிறார். கர்த்தர் நமது ராஜா, அவர் நம்மைக் காப்பாற்றுகிறார். எனவே, கர்த்தர் நமக்கு மிகுந்த செல்வத்தைத் தருவார். முடவர்களும்கூட போரில் கொள்ளையிடுவதின் மூலம் பெருஞ்செல்வத்தைப் பெறுவார்கள்.

வெளி 22:8-21

நான் யோவான், நானே இவற்றைக் காணவும் கேட்கவும் செய்தேன். இவற்றை நான் பார்த்தும் கேட்டும் முடிந்த பின்னால், இவற்றை எனக்குக் காட்டிய அத்தூதனின் கால்களில் விழுந்து வணங்கக் குனிந்தேன். ஆனால் அத்தூதன் என்னிடம், “என்னை வணங்க வேண்டாம். நானும் உன்னைப் போல ஒரு ஊழியன் மட்டுமே. தீர்க்கதரிசிகளாகிய உன் சகோதரர்களைப் போன்றவன் நான். இந்நூலிலுள்ள வசனங்களுக்குக் கீழ்ப்படிகிற மற்றவர்களைப்போல நானும் ஒருவனே. நீ தேவனை வணங்கு” என்றான்.

10 மேலும் அத்தூதன் என்னிடம், “இந்நூலில் உள்ள தீர்க்கதரிசனமான வசனங்களை இரகசியம் போல் மூடிவைக்க வேண்டாம். இவை நிகழ்வதற்குரிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. 11 அநியாயம் செய்கிறவன் தொடர்ந்து அநியாயம் செய்யட்டும். அசுத்தமாய் இருக்கிறவன் மேலும் அசுத்தமாய் இருக்கட்டும். பரிசுத்தவான் மேலும் பரிசுத்தவானாய் இருக்கட்டும்.

12 “கவனி! நான் விரைவில் வருவேன். என்னோடு பலன்களைக் கொண்டு வருவேன். ஒவ்வொருவனுக்கும் அவனவனுடைய செயல்களுக்கு பலன் அளிப்பேன். 13 நானே அல்பாவும் ஒமேகாவுமாக இருக்கிறேன்; நானே முந்தினவரும், பிந்தினவருமாய் இருக்கிறேன். நானே துவக்கமும் முடிவுமாய் இருக்கிறேன்.

14 “தேவனுடைய கட்டளைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். அவர்களுக்கு வாழ்வின் மரத்தில் உள்ள கனிகளைப் புசிப்பதற்கு உரிமை இருக்கும். அவர்கள் வாசல் வழியாக நகரத்துக்குள் நுழைய முடியும். 15 நகரத்துக்கு வெளியே, நாய் போன்றவர்களும், சூனியக்காரர்களும், விபசாரகர்களும், கொலைகாரர்களும், உருவ வழிபாடு செய்கிறவர்களும் பொய்யை விரும்பி, அதின்படி செய்பவர்களும் இருப்பார்கள்.

16 “இயேசுவாகிய நான் சபைகளில் இவற்றை உங்களுக்குச் சொல்லும் பொருட்டு என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் குடும்ப வாரிசு. நான் பிரகாசமான விடிவெள்ளியாக இருக்கிறேன்” என்றார்.

17 ஆவியானவரும் மணமகளும் “வாருங்கள்” என்கிறார்கள். இதைக் கேட்பவர்களும் “வாருங்கள்” என்று சொல்லவேண்டும். தாகமாய் இருக்கிறவன் வருவானாக. விருப்பம் உள்ளவன் ஜீவத் தண்ணீரைப் பெறுவானாக.

18 இந்நூலில் உள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறேன். “எவனாவது ஒருவன் இவைகளோடு எதையாவது கூட்டினால் இந்நூலில் எழுதப்பட்டிருக்கிற துன்பங்களை தேவன் அவன் மேல் கூட்டுவார்.” 19 எவனாவது ஒருவன் தீர்க்கதரிசனப் புத்தக வசனங்களிலிருந்து எதையேனும் நீக்கினால் இந்நூலில் எழுதப்பட்டிருக்கிற வாழ்வின் மரத்திலிருந்தும் பரிசுத்த நகரிலிருந்தும் அவனுடைய பங்கை தேவன் நீக்கிவிடுவார்.

20 இவ்வார்த்தைகள் உண்மையென சாட்சியாய் அறிவிக்கிறவர் இயேசுவே. இப்போது அவர், “ஆம், நான் விரைவில் வருகிறேன்” என்று சொல்கிறார்.

ஆமென். கர்த்தராகிய இயேசுவே, வாரும்!

21 கர்த்தராகிய இயேசுவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக!

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center