Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எரேமியா 23:1-6

23 “இது யூதா ஜனங்களின் மேய்ப்பர்களுக்கு (தலைவர்களுக்கு) மிகவும் கெட்டதாகும். அம்மேய்ப்பர்கள் ஆடுகளை அழித்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லா திசைகளிலும் என் மேய்ச்சல் நிலத்திலிருந்து ஆடுகளை ஓட வைக்கிறார்கள்” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.

எனது ஜனங்களுக்கு அம்மேய்ப்பர்களே பொறுப்பானவர்கள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அம்மேய்ப்பர்களுக்கு இதனைச் சொல்கிறார்: “மேய்ப்பர்களாகிய நீங்கள் எனது ஆடுகளை எல்லாத் திசைகளிலும் ஓடச்செய்கிறீர்கள். அவை போகுமாறு நீங்கள் பலவந்தப்படுத்துகிறீர்கள். நீங்கள் அவற்றைப்பற்றி அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், நான் உங்களைப்பற்றி அக்கறை எடுத்துக்கொள்வேன். நீங்கள் செய்த தீமைக்காக நான் உங்களைத் தண்டிப்பேன்.” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “நான் எனது ஆடுகளை வேறு நாடுகளுக்கு அனுப்பினேன். ஆனால், விடுபட்ட ஆடுகளை நான் சேகரிப்பேன். நான் அவற்றை மீண்டும் அவற்றின் மேய்ச்சல் நிலத்திற்குக் கொண்டுவருவேன். எனது ஆடுகள் தம் மேய்ச்சல் நிலத்திற்குத் திரும்பியதும், அவற்றுக்கு நிறைய குட்டிகள் வர அவை எண்ணிக்கையில் பெருகும். நான் எனது ஆடுகளுக்குப் புதிய மேய்ப்பர்களை ஏற்படுத்துவேன். அம்மேய்ப்பர்கள் எனது ஆடுகளை அக்கறையோடு பார்த்துக்கொள்வார்கள். எனது ஆடுகள் பயப்படவோ, கலங்கவோ செய்யாது. எனது ஆடுகள் எதுவும் காணாமல் போகாது” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.

நீதியுள்ள “துளிர்”

இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது:
“காலம் வந்துக்கொண்டு இருக்கிறது.
    நான் ஒரு நல்ல ‘துளிரை’ எழுப்புவேன்.
அவன் ராஜா ஆவான்.
அவன் ஞான வழியில் ஆள்வான்.
    நாட்டில் எது சரியோ நியாயமானதோ, அதைச் செய்வான்.
நல்ல ‘துளிருள்ள’ காலத்தில், யூதாவின் ஜனங்கள் காப்பாற்றப்படுவார்கள்.
    இஸ்ரவேலர்கள் பாதுகாப்பாக வாழ்வார்கள்.
இது அவரது நாமமாக இருக்கும்:
    கர்த்தர் நமது நன்மை.

சங்கீதம் 46

அலமோத் என்னும் கருவியில் வாசிக்கும்படி கொடுக்கப்பட்ட கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு, ஒரு பாடல்.

46 தேவன் நம் வல்லமையின் ஊற்றாயிருக்கிறார்.
    தொல்லைகள் சூழ்கையில் நாம் அவரிடமிருந்து எப்பொழுதும் உதவி பெறலாம்.
எனவே பூமி நடுங்கினாலும்,
    மலைகள் கடலில் வீழ்ந்தாலும் நாம் அஞ்சோம்.
கடல் கொந்தளித்து இருள் சூழ்ந்தாலும்
    பர்வ தங்கள் நடுங்கி அதிர்ந்தாலும் நாம் அஞ்சோம்.

உன்னத தேவனுடைய பரிசுத்த நகரத்திற்கு,
    மகிழ்ச்சி அளிக்கிற ஓடைகளையுடைய நதி ஒன்று இருக்கிறது.
அந்நகரம் அழியாதபடி தேவன் அங்கிருக்கிறார்.
    சூரிய உதயத்திற்குமுன் தேவன் அதற்கு உதவுவார்.
தேசங்கள் பயத்தால் நடுங்கும்.
    கர்த்தர் சத்தமிடுகையில் அந்த இராஜ்யங்கள் விழும், பூமி சீர்குலையும்.
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நம்மோடிருக்கிறார்.
    யாக்கோபின் தேவன் நமது பாதுகாப்பிடம்.

கர்த்தர் செய்யும் வல்லமை மிக்க காரியங்களைப் பாருங்கள்.
    அவர் பூமியின்மேல் செய்துள்ள பயத்திற்குரிய காரியங்களைப் பாருங்கள்.
பூமியில் எவ்விடத்தில் போர் நிகழ்ந்தாலும் கர்த்தர் அதை நிறுத்த வல்லவர்.
    வீரர்களின் வில்லுகளை அவர் முறித்து அவர்கள் ஈட்டிகளைச் சிதறடிக்கிறார்.
    இரதங்களை நெருப்பினால் அழிக்க தேவன் வல்லவர்.
10 தேவன், “நீங்கள் சண்டையிடுவதை நிறுத்தி அமைதியாயிருந்து நானே தேவன் என உணருங்கள்!
    நான் பூமியில் பெருமையுற்று தேசங்களில் வாழ்த்தப்படுவேன்” என்று கூறினார்.

11 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நம்மோடிருக்கிறார்.
    யாக்கோபின் தேவன் நமது பாதுகாப்பிடம்.

கொலோசெயர் 1:11-20

11 தேவன் தனது சொந்த வல்லமையால் உங்களைப் பலப்படுத்தவும், அதனால் துன்பங்கள் வரும்போது அவரை விட்டு நீங்கள் விலகாமல் இருக்கவும் அதற்கான பொறுமையோடும்,

மகிழ்ச்சியோடும் இருக்கவும் வேண்டுமென்பதே. 12 பிறகு நீங்கள் நம் பிதாவுக்கு நன்றி சொல்லலாம். அவர் தான் ஏற்பாடு செய்த காரியங்களில் பங்குகொள்ளும் பொருட்டு உங்களைத் தகுதியுள்ளவர்கள் ஆக்கினார். அவர் வெளிச்சத்தில் வாழ்கிற அவரது மக்கள் அனைவருக்காகவும் இதை ஆயத்தம் செய்கிறார். 13 இருளின் அதிகாரங்களிலிருந்து நம்மை அவர் விடுதலை செய்திருக்கிறார். நம்மை அவரது அன்பு குமாரனான இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்துக்குள் கொண்டு வந்தார். 14 நமது பாவங்களுக்குரிய விலையை அவர் கொடுத்தார். அவருக்குள் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டன.

கிறிஸ்துவைப் பார்க்கும்போது நாம் தேவனைக் காண்கிறோம்

15 ஒருவராலும் தேவனைக் காண இயலாது.
    ஆனால் இயேசு தேவனைப் போன்றவர்.
    படைக்கப்பட்ட அனைத்து பொருட்களின் மேலும் இயேசுவே ஆட்சியாளர்.
16 பரலோகத்திலும் பூலோகத்திலும் உள்ள அனைத்துப் பொருட்களும் இயேசுவின் வல்லமையால் படைக்கப்பட்டவை.
    அவை கண்ணால் காணப்படுகிறவை, காணப்படாதவை, ஆன்மீக சக்திகள்,
    அதிகாரங்கள், பிரபுக்கள், ஆள்வோர்கள் என அனைத்துமே
அவருக்காகவும், அவர் மூலமாகவும் படைக்கப்பட்டவை.

17 எதுவும் படைக்கப்படுவதற்கு முன்னரே கிறிஸ்து இருந்தார்.
    அவராலேயே அனைத்துப் பொருட்களும் தொடர்ந்து இருக்கின்றன.
18 கிறிஸ்துதான் சரீரத்தின் தலையாக இருக்கிறார் (சரீரம் என்பது சபையாகும்).
    எல்லாப் பொருட்களுமே அவராலேயே வருகின்றன.
    அவரே கர்த்தர். அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார்.
எல்லாவற்றையும் விட இயேசுவே அதிமுக்கியமானவர்.

19 கிறிஸ்துவில் சகலமும் வாழ்வதே தேவனுடைய விருப்பமாக இருந்தது.
20     பரலோகத்திலும், பூலோகத்திலும் உள்ள அனைத்துப் பொருள்களையும்
    கிறிஸ்துவின் மூலமாகத் தனக்குள்ளேயே திரும்பவும் கொண்டு வருவதில் தேவன் மகிழ்ச்சியடைந்தார்.
சிலுவையில் கிறிஸ்து இரத்தம் சிந்தியதன் மூலம் உலகில் தேவன் சமாதானத்தை உருவாக்கினார்.

லூக்கா 23:33-43

33 இயேசுவும், அக்குற்றவாளிகளும் “கபாலம்” என்று அழைக்கப்பட்ட இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு வீரர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள். அவர்கள் குற்றவாளிகளையும் சிலுவையில் அறைந்தார்கள். ஒரு குற்றவாளியை இயேசுவின் வலது பக்கத்திலும், இன்னொரு குற்றவாளியை இயேசுவின் இடது பக்கத்திலும் சிலுவையில் அறைந்தார்கள்.

34 இயேசு, “தந்தையே, என்னைக் கொல்கிற இந்த மக்களை மன்னித்தருளுங்கள். அவர்கள் செய்துகொண்டிருப்பதை அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள்” என்றார்.

இயேசுவின் ஆடைகளை எடுப்பது யார் என்று சீட்டுப்போட்டுப் பார்த்தார்கள். 35 இயேசுவைப் பார்த்தபடி மக்கள் நின்றனர். யூத அதிகாரிகள் இயேசுவைப் பார்த்து நகைத்தனர். அவர்கள், “தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிறிஸ்து என்றால் அவனே தன்னைக் காப்பாற்றிக்கொள்ளட்டும். அவன் பிற மக்களைக் காப்பாற்றவில்லையா?” என்றார்கள்.

36 வீரர்களும் கூட இயேசுவைப் பார்த்துச் சிரித்து எள்ளி நகையாடினார்கள். அவர்கள் இயேசுவை நெருங்கி புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்தனர். 37 வீரர்கள், “நீ யூதர்களின் ராஜாவானால் உன்னைக் காப்பாற்றிக்கொள்” என்றனர். 38 சிலுவையில் மேல் பகுதியில் “இவன் யூதர்களின் ராஜா” என்ற சொற்கள் எழுதப்பட்டிருந்தன.

39 சிலுவையில் அறையப்பட்ட குற்றவாளிகளில் ஒருவன் இயேசுவுக்கு எதிராகத் தீய சொற்களைச் சொல்லிக்கொண்டிருந்தான். “நீ கிறிஸ்து அல்லவா? உன்னைக் காப்பாற்றிக்கொள். எங்களையும் காப்பாற்று” என்றான்.

40 ஆனால் இன்னொரு குற்றவாளி அவனைத் தடுத்தான். அவன், “நீ தேவனுக்கு பயப்பட வேண்டும். நாம் எல்லாரும் விரைவில் இறந்து போவோம். 41 நீயும், நானும் குற்றவாளிகள். நாம் செய்த குற்றங்களுக்கான விலையைக் கொடுக்க வேண்டியிருப்பதால் நீயும் நானும் கொல்லப்பட வேண்டியவர்கள். ஆனால் இம்மனிதரோ (இயேசு) எந்தத் தவறும் செய்ததில்லை” என்றான். 42 பின்பு இக்குற்றவாளி இயேசுவை நோக்கி, “இயேசுவே, உங்கள் இராஜ்யத்தை ஆரம்பிக்கும்போது என்னை நினைவுகூர்ந்துகொள்ளுங்கள்” என்றான்.

43 இயேசு அவனை நோக்கி, “கவனி, நான் சொல்வது உண்மை. இன்று நீ என்னோடு சேர்ந்து பரலோகத்திலிருப்பாய்” என்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center