Revised Common Lectionary (Complementary)
அலமோத் என்னும் கருவியில் வாசிக்கும்படி கொடுக்கப்பட்ட கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு, ஒரு பாடல்.
46 தேவன் நம் வல்லமையின் ஊற்றாயிருக்கிறார்.
தொல்லைகள் சூழ்கையில் நாம் அவரிடமிருந்து எப்பொழுதும் உதவி பெறலாம்.
2 எனவே பூமி நடுங்கினாலும்,
மலைகள் கடலில் வீழ்ந்தாலும் நாம் அஞ்சோம்.
3 கடல் கொந்தளித்து இருள் சூழ்ந்தாலும்
பர்வ தங்கள் நடுங்கி அதிர்ந்தாலும் நாம் அஞ்சோம்.
4 உன்னத தேவனுடைய பரிசுத்த நகரத்திற்கு,
மகிழ்ச்சி அளிக்கிற ஓடைகளையுடைய நதி ஒன்று இருக்கிறது.
5 அந்நகரம் அழியாதபடி தேவன் அங்கிருக்கிறார்.
சூரிய உதயத்திற்குமுன் தேவன் அதற்கு உதவுவார்.
6 தேசங்கள் பயத்தால் நடுங்கும்.
கர்த்தர் சத்தமிடுகையில் அந்த இராஜ்யங்கள் விழும், பூமி சீர்குலையும்.
7 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நம்மோடிருக்கிறார்.
யாக்கோபின் தேவன் நமது பாதுகாப்பிடம்.
8 கர்த்தர் செய்யும் வல்லமை மிக்க காரியங்களைப் பாருங்கள்.
அவர் பூமியின்மேல் செய்துள்ள பயத்திற்குரிய காரியங்களைப் பாருங்கள்.
9 பூமியில் எவ்விடத்தில் போர் நிகழ்ந்தாலும் கர்த்தர் அதை நிறுத்த வல்லவர்.
வீரர்களின் வில்லுகளை அவர் முறித்து அவர்கள் ஈட்டிகளைச் சிதறடிக்கிறார்.
இரதங்களை நெருப்பினால் அழிக்க தேவன் வல்லவர்.
10 தேவன், “நீங்கள் சண்டையிடுவதை நிறுத்தி அமைதியாயிருந்து நானே தேவன் என உணருங்கள்!
நான் பூமியில் பெருமையுற்று தேசங்களில் வாழ்த்தப்படுவேன்” என்று கூறினார்.
11 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நம்மோடிருக்கிறார்.
யாக்கோபின் தேவன் நமது பாதுகாப்பிடம்.
18 எனவே, கர்த்தர் இதைத்தான் யோசியாவின் குமாரனான, ராஜா யோயாக்கீமிடம் கூறுகிறார்.
“யூதாவின் ஜனங்கள் யோயாக்கீமிற்காக அழமாட்டார்கள்.
அவர்கள் மற்றவர்களிடம்,
‘ஓ, எனது சகோதரனே, யோயாக்கீம் பற்றி வருந்துகிறேன்!
ஓ, எனது சகோதரியே, நான் யோயாக்கீம் பற்றி மிகவும் வருந்துகிறேன்!’ என்று சொல்லமாட்டார்கள்.
யோயாக்கீமிற்காக யூதா ஜனங்கள் அழமாட்டார்கள்.
அவர்கள் அவனைப்பற்றி,
‘ஓ, எஜமானே, நான் சோகமாக இருக்கிறேன்!
ஓ, ராஜாவே, நான் சோகமாக இருக்கிறேன்!’ என்று சொல்லமாட்டார்கள்.
19 எருசலேம் ஜனங்கள் யோயாக்கீமை ஒரு கழுதையை அடக்கம் செய்வதுபோன்று அடக்கம் செய்வார்கள்.
அவர்கள் அவனது உடலை இழுத்துச் செல்வார்கள்.
அவர்கள் அவனது உடலை எருசலேமின் வாசல்களுக்கு வெளியே வீசுவார்கள்.
20 “யூதா, லீபனோன் மலைகளுக்கு மேலே செல், அழு.
பாசான் மலைகளில் உனது ஓசை கேட்கட்டும்.
அபரீமின் மலைகளில் அழு.
ஏனென்றால், உனது ‘நேசர்கள்’ அனைவரும் அழிக்கப்படுவார்கள்.
21 “யூதா, நீ பாதுகாப்பை உணர்ந்தாய்.
ஆனால் நான் உன்னை எச்சரித்தேன்!
ஆனால் நீ கேட்க மறுத்தாய்.
நீ இவ்வாறு உனது இளமைகாலம் முதல் வாழ்ந்திருக்கிறாய்.
உனது இளமை காலத்திலிருந்து
நீ எனக்கு கீழ்ப்படியவில்லை.
22 யூதா, நான் தரும் தண்டனை ஒரு புயலைப்போன்று வரும்.
அது உங்கள் மேய்ப்பர்களை அடித்துச்செல்லும்.
சில அந்நியநாடுகள் உதவும் என்று நினைத்தாய்.
ஆனால் அந்நாடுகளும் தோற்கடிக்கப்படும்.
பிறகு நீ உண்மையிலேயே ஏமாறுவாய்.
நீ செய்த தீயவற்றுக்காக அவமானம் அடைவாய்.
23 “ராஜாவே, நீ கேதுரு மரங்களாலான உனது வீட்டில் உயரமான மலையின்மேல் வாழ்கிறாய்.
நீ ஏறக்குறைய அம்மரங்கள் இருந்த லீபனோனில் இருப்பதுபோல் உள்ளாய்.
நீ உனது பெரிய வீட்டில் மலையின்மேல் பாதுகாப்பாக இருப்பதாய் நினைக்கிறாய்.
ஆனால் உனது தண்டனை வரும்போது நீ புலம்புவாய்.
நீ பிரசவிக்கும் பெண்ணைப் போன்று பெரும் வேதனையில் இருப்பாய்.”
யோயாக்கீன் ராஜாவுக்கு எதிரான தீர்ப்பு
24 “நான் வாழ்வது எவ்வளவு உண்மையோ அது போன்று” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “நான் இதனை உனக்குச் செய்வேன் யோயாக்கீமின் குமாரனான யோயாக்கீன் யூதாவின் ராஜாவே. நீ எனது வலது கை முத்திரை மோதிரமாய்[a] இருந்தாலும், நான் உன்னைக் கழற்றிப்போடுவேன். 25 யோயாக்கீன், நான் உன்னைப் பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடமும் பாபிலோனியர்களிடமும் கொடுப்பேன். அவர்கள் நீ அஞ்சுகின்ற ஜனங்கள் ஆவர். அந்த ஜனங்கள் உன்னைக் கொல்ல விரும்புகின்றனர். 26 நீங்கள் யாரும் பிறந்திருக்காத வேறு நாட்டில் உன்னையும், உனது தாயையும் வீசுவேன். அந்த நாட்டில் நீயும், உன் தாயும் மரிப்பீர்கள். 27 யோயாக்கீன், நீ உனது நாட்டுக்குத் திரும்பிவர விரும்புவாய். ஆனால் நீ திரும்பிவர அனுமதிக்கப்படமாட்டாய்.”
28 யோயாக்கீன் (கோனியா) யாரோ எறிந்ததால் உடைந்த ஜாடியைப் போன்றவன்.
எவராலும் விரும்பப்படாத ஜாடியைப் போன்றவன்.
யோயாக்கீனும் அவனது பிள்ளைகளும் ஏன் எறியப்பட்டார்கள்?
ஏன் அவர்கள் அந்நிய நாட்டில் வீசி எறியப்பட்டார்கள்?
29 யூதாவின் நாடே!
கர்த்தருடைய செய்தியைக் கேள்:
30 கர்த்தர் கூறுகிறார், “யோயாக்கீன் பற்றி இதனை எழுதிக்கொள்ளுங்கள்.
‘அவன் இனிமேல் குழந்தைகளே இல்லாதவன்.
யோயாக்கீன் இனி வாழ்நாள் முழுவதும் கீர்த்தி பெறமாட்டான்.
தாவீதின் சிங்காசனத்தில் அவனது பிள்ளைகள் எவரும் அமரமாட்டார்கள்.
அவனது பிள்ளைகள் எவரும் யூதாவை ஆளமாட்டார்கள்.’”
குழந்தைகளும்-இயேசுவும்
(மத்தேயு 19:13-15; மாற்கு 10:13-16)
15 இயேசு தொடுமாறு சிலர் தங்கள் சிறு குழந்தைகளை இயேசுவின் அருகில் கொண்டு வந்தார்கள். ஆனால் சீஷர்கள் இதைப் பார்த்ததும் மக்களை அதட்டித் தடுத்தார்கள். 16 ஆனால் இயேசு அந்தச் சிறு குழந்தைகளைத் தம்மிடம் அழைத்து, அதன் பின் சீஷர்களை நோக்கி, “சிறு குழந்தைகள் என்னிடம் வரட்டும். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இச்சிறு குழந்தைகளைப் போன்ற மக்களுக்கே தேவனின் இராஜ்யம் சொந்தமாக இருக்கிறது. 17 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். சிறு குழந்தை எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதைப்போல் நீங்களும் தேவனின் இராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும். அல்லது நீங்கள் ஒருபோதும் அதற்குள் செல்ல முடியாது” என்றார்.
2008 by World Bible Translation Center