Revised Common Lectionary (Complementary)
அலமோத் என்னும் கருவியில் வாசிக்கும்படி கொடுக்கப்பட்ட கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு, ஒரு பாடல்.
46 தேவன் நம் வல்லமையின் ஊற்றாயிருக்கிறார்.
தொல்லைகள் சூழ்கையில் நாம் அவரிடமிருந்து எப்பொழுதும் உதவி பெறலாம்.
2 எனவே பூமி நடுங்கினாலும்,
மலைகள் கடலில் வீழ்ந்தாலும் நாம் அஞ்சோம்.
3 கடல் கொந்தளித்து இருள் சூழ்ந்தாலும்
பர்வ தங்கள் நடுங்கி அதிர்ந்தாலும் நாம் அஞ்சோம்.
4 உன்னத தேவனுடைய பரிசுத்த நகரத்திற்கு,
மகிழ்ச்சி அளிக்கிற ஓடைகளையுடைய நதி ஒன்று இருக்கிறது.
5 அந்நகரம் அழியாதபடி தேவன் அங்கிருக்கிறார்.
சூரிய உதயத்திற்குமுன் தேவன் அதற்கு உதவுவார்.
6 தேசங்கள் பயத்தால் நடுங்கும்.
கர்த்தர் சத்தமிடுகையில் அந்த இராஜ்யங்கள் விழும், பூமி சீர்குலையும்.
7 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நம்மோடிருக்கிறார்.
யாக்கோபின் தேவன் நமது பாதுகாப்பிடம்.
8 கர்த்தர் செய்யும் வல்லமை மிக்க காரியங்களைப் பாருங்கள்.
அவர் பூமியின்மேல் செய்துள்ள பயத்திற்குரிய காரியங்களைப் பாருங்கள்.
9 பூமியில் எவ்விடத்தில் போர் நிகழ்ந்தாலும் கர்த்தர் அதை நிறுத்த வல்லவர்.
வீரர்களின் வில்லுகளை அவர் முறித்து அவர்கள் ஈட்டிகளைச் சிதறடிக்கிறார்.
இரதங்களை நெருப்பினால் அழிக்க தேவன் வல்லவர்.
10 தேவன், “நீங்கள் சண்டையிடுவதை நிறுத்தி அமைதியாயிருந்து நானே தேவன் என உணருங்கள்!
நான் பூமியில் பெருமையுற்று தேசங்களில் வாழ்த்தப்படுவேன்” என்று கூறினார்.
11 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நம்மோடிருக்கிறார்.
யாக்கோபின் தேவன் நமது பாதுகாப்பிடம்.
12 மிகாயாவை அழைத்துவரப்போன தூதுவன் அவனிடம் போய், “மிகாயா! கவனி. அனைத்து தீர்க்கதரிசிகளும் ஒரே மாதிரி கூறுகின்றனர். ராஜா வெற்றிபெற முடியும் என அவர்கள் கூறுகின்றனர். எனவே அவர்கள் சொல்வதையே நீயும் கூறு. நீயும் நல்ல செய்தியைக் கூறவேண்டும்” என்றான்.
13 ஆனால் மிகாயா, “கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்கிறேன். எனது தேவன் சொல்வதையே நான் சொல்ல முடியும்” என்று பதிலளித்தான்.
14 பிறகு மிகாயா ஆகாப் ராஜாவிடம் வந்தான். ராஜா அவனிடம், “மிகாயா நாங்கள் ராமோத் கீலேயாத் நகரத்திற்குப் போரிடப் போகலாமா வேண்டாமா?” என்று கேட்டான்.
அதற்கு மிகாயா, “போ அவர்களோடு போர் செய். அந்த ஜனங்களை வெல்ல கர்த்தர் துணைசெய்வார்” என்றான்.
15 ராஜா ஆகாப் மிகாயாவிடம், “கர்த்தருடைய நாமத்தால் என்னிடம் உண்மையை மட்டுமே கூற வேண்டுமென்று பலமுறை உன்னை நான் சத்தியம் செய்ய வைத்தேன்” என்றான்.
16 பிறகு மிகாயா, “இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் மலைப்பகுதியில் சிதறி ஓடுவதை நான் பார்த்தேன். அவர்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் உள்ளனர். கர்த்தர், ‘அவர்களுக்குத் தலைவன் இல்லை. ஒவ்வொருவரும் பத்திரமாக வீட்டிற்குப் போகட்டும்’ என்று கூறினார்” என்றான்.
17 இஸ்ரவேல் ராஜாவாகிய ஆகாப் யோசபாத்திடம், “கர்த்தரிடமிருந்து எனக்கு மிகாயா நல்ல செய்தியைச் சொல்லமாட்டான் என்று ஏற்கெனவே கூறியிருக்கிறேன். அவன் எனக்கு கெட்டச் செய்திகளை மட்டுமே கூறுவான்” என்றான்.
18 அதற்கு மிகாயா, “கர்த்தரிடமிருந்து வந்த செய்தியைக் கேள்: கர்த்தர் தன் சிங்காசனத்தில் அமர்ந்திருப்பதை நான் பார்த்தேன். பரலோகத்தின் படை அவரது வலதுபுறமும் இடதுபுறமும் உள்ளன. அனைத்து படைகளும் அவரைச் சுற்றிலும் நின்றுக்கொண்டிருக்கிறது. 19 கர்த்தர், ‘ராமோத் கீலேயாத் நகரின் மேல் படையெடுக்குமாறு செய்து அப்போரில் ஆகாப் மரிக்குமாறு செய்ய, யாரால் தந்திரமாய்ச் செயல்பட முடியும்?’ என்று கேட்டார். அதற்கு ஒவ்வொருவரும் வெவ்வேறானதைக் கூறினார்கள். 20 பிறகு ஒரு ஆவி வந்து கர்த்தருக்கு முன்பாக நின்றது. அந்த ஆவி ‘நான் ஆகாபிடம் தந்திரமாய்ச் செயல்படுகிறேன்’ என்று கூறியது. அதனிடம், ‘எப்படி?’ என்று கர்த்தர் கேட்டார். 21 அதற்கு அது, ‘நான் போய் ஆகாபின் தீர்க்கதரிசிகளின் வாயில் பொய் சொல்லும் ஆவியாக இருப்பேன்’ என்றது. அதற்குக் கர்த்தர், ‘நீ ஆகாபை ஏமாற்றுவதில் வெற்றி பெறுவாய். எனவே போய் அவ்வாறே செய்’ என்றார்.
22 “இப்போது ஆகாப் கவனி. பொய் சொல்லும் ஆவியை உன் தீர்க்கதரிசிகளின் வாயில் கர்த்தர் இருக்கச் செய்துள்ளார். எனவே கர்த்தர் சொன்னபடி உனக்கு தீமையே ஏற்படும்” என்றான்.
கிறிஸ்துவின் பலி பாவங்களை நீக்குகிறது
23 எனவே பரலோகத்தில் உள்ளவற்றின் சாயலாக உள்ள இவற்றை விலங்குகளைப் பலி கொடுத்து சுத்தம் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். ஆனால் பரலோகத்தில் உள்ளவற்றிற்கு இதைவிடச் சிறப்பான பலிகள் அவசியம் ஆகும். 24 கிறிஸ்து மிகப் பரிசுத்தமான இடத்திற்குப் போனார். ஆனால் உண்மையானதின் சாயலாக மனிதக் கைகளால் செய்யப்பட்ட இடத்திற்குப் போகவில்லை. கிறிஸ்து பரலோகத்திற்கே சென்றார். இப்போது அங்கே நமக்காக தேவனுக்கு முன் தோன்றுகிறார்.
25 ஒவ்வொரு ஆண்டும் தனக்குச் சொந்தமற்ற இரத்தத்தோடு பிரதான ஆசாரியன் மிகப் பரிசுத்தமான இடத்திற்குள் செல்ல வேண்டும். ஆனால் மீண்டும், மீண்டும் கிறிஸ்து தன்னையே வழங்கிக்கொள்ள வேண்டியதில்லை. 26 அப்படியானால் உலகம் உண்டானது முதல் அவர் அநேகந்தரம் இதுபோல் பாடுபட வேண்டியது இருந்திருக்கும். அவர் தம்மை தாமே பலியிட வேண்டியிருந்தது. அதனால் அவர் இந்தக் கடைசி காலத்தில் ஒரே ஒருதரம் தம்மைப் பலியிட்டார். இதன் மூலம் அவர் அனைவரது பாவங்களையும் நீக்கிவிட்டார்.
27 ஒவ்வொரு மனிதனும் ஒருமுறை மட்டுமே சாகிறான். அதன் பிறகு நியாயந்தீர்க்கப்படுகிறான். 28 ஆகையால் ஒவ்வொருவரின் பாவங்களையும் தீர்க்கும்படி கிறிஸ்து ஒருமுறை மரித்தார். மேலும் கிறிஸ்து இரண்டாம் முறையும் வருவார். பாவங்களைத் தீர்க்கும்படி அல்ல. தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அளிக்க வருவார்.
2008 by World Bible Translation Center