Revised Common Lectionary (Complementary)
தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று.
141 கர்த்தாவே, நான் உதவிக்காக உம்மைக் கூப்பிடுகிறேன்.
நான் உம்மிடம் ஜெபம் செய்யும்போது, எனக்குச் செவிகொடும்.
விரைவாக எனக்கு உதவும்!
2 கர்த்தாவே, என் ஜெபத்தை ஏற்றுக் கொள்ளும்.
எரியும் நறுமணப் பொருள்களின் பரிசைப் போலவும், மாலையின் பலியாகவும் அது இருக்கட்டும்.
3 கர்த்தாவே, நான் கூறுபவற்றில் கட்டுப்பாட்டோடிருக்க எனக்கு உதவும்.
நான் கூறுபவற்றில் கவனமாக இருக்க எனக்கு உதவும்.
4 தீயவற்றை செய்ய நான் விரும்பாதிருக்கும்படி பாரும்.
தீயோர் தவறுகளைச் செய்யும்போது அவர்களோடு சேராதிருக்குமாறு என்னைத் தடுத்துவிடும்.
தீயோர் களிப்போடு செய்யும் காரியங்களில் நான் பங்குகொள்ளாதிருக்கும்படி செய்யும்.
5 நல்லவன் ஒருவன் என்னைத் திருத்த முடியும்.
அது அவன் நற்செயலாகும்.
உம்மைப் பின்பற்றுவோர் என்னை விமர்சிக்கட்டும்.
அது அவர்கள் செய்யத்தக்க நல்ல காரியமாகும்.
நான் அதை ஏற்றுக்கொள்வேன்.
ஆனால் தீயோர் செய்யும் தீயவற்றிற்கெதிராக நான் எப்போதும் ஜெபம் செய்கிறேன்.
6 அவர்களின் ராஜாக்கள் தண்டிக்கப்படட்டும்.
அப்போது நான் உண்மை பேசினேன் என்பதை ஜனங்கள் அறிவார்கள்.
7 ஜனங்கள் நிலத்தைத் தோண்டி உழுவார்கள், சேற்றை எங்கும் பரப்புவார்கள்.
அவ்வாறே கல்லறையில் எங்கள் எலும்புகளும் எங்கும் பரந்து கிடக்கும்.
8 என் ஆண்டவராகிய கர்த்தாவே, நான் உதவிக்காக உம்மை நோக்கிப் பார்ப்பேன்.
நான் உம்மை நம்புகிறேன்.
தயவுசெய்து என்னை மரிக்கவிடாதேயும்.
9 தீயோர் எனக்குக் கண்ணிகளை வைத்தார்கள்.
அவர்கள் கண்ணிகளில் நான் விழாதபடி செய்யும்.
அவர்கள் என்னைக் கண்ணிக்குள் அகப்படுத்தாதபடி பாரும்.
10 நான் பாதிக்கப்படாது நடந்து செல்கையில் கெட்ட
ஜனங்கள் தங்கள் கண்ணிக்குள் தாங்களே விழட்டும்.
எருசலேமில் உள்ள மீதி தப்பிப்பிழைத்தவர்களுக்கு எதிரான தீர்க்கதரிசனம்
14 ஆனால், கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 15 “மனுபுத்திரனே, உனது சகோதரர்களை நினைத்துப்பார். இஸ்ரவேல் குடும்பத்தாரையும் இந்நகரை விட்டு வெளியேற்றப்பட்டவர்களையும் நினைத்துப்பார்! அந்த ஜனங்கள் இந்நாட்டிலிருந்து தொலை தூரத்தில் வாழ்கிறார்கள். ஆனால் எருசலேமில் வாழ்கிற ஜனங்களே அவர்களிடம் கூறுகிறார்கள்: ‘கர்த்தரிடமிருந்து விலகி தூரத்தில் இருங்கள். இந்த நிலம் எங்களுக்குக் கொடுக்கப்பட்டது, இது எங்களுடையது!’
16 “எனவே, ஜனங்களிடம் இவற்றைப்பற்றிச் சொல்; எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்; ‘இது உண்மை. நான் எனது ஜனங்களை அந்நிய நாடுகளுக்குப் போகும்படி கட்டாயப்படுத்தினேன். பல நாடுகளில் அவர்களைச் சிதறும்படிச் செய்தேன். அவர்கள் அங்குத் தங்கும்பொழுது, குறுகிய காலத்திற்கு நான் அவர்களுடைய ஆலயமாயிருப்பேன். 17 எனவே நீ அந்த ஜனங்களிடம் அவர்களது கர்த்தராகிய ஆண்டவர், அவர்களைத் திரும்ப கொண்டு வருவார் என்று சொல்லவேண்டும். உங்களைப் பல நாடுகளில் சிதறடித்திருந்தேன். ஆனால் நான் உங்களைச் சேர்த்து அந்நாடுகளில் இருந்து திரும்ப அழைப்பேன். நான் இஸ்ரவேல் நாட்டை உங்களுக்கு திரும்பத் தருவேன்! 18 எனது ஜனங்கள் திரும்பி வரும்போது அவர்களுடைய வெறுக்கத்தக்க அருவருக்கத்தக்கச் சிலைகளை அழிப்பார்கள். 19 நான் அவர்களை ஒன்று சேர்த்து ஒரே ஆள்போன்று செய்வேன். நான் அவர்களுக்குப் புதிய ஆவியைக் கொடுப்பேன். நான் அவர்களிடமுள்ள கல்போன்ற இருதயத்தை எடுத்துவிட்டு அந்த இடத்தில் உண்மையான இருதயத்தை வைப்பேன். 20 பின்னர் அவர்கள் எனது சட்டங்களுக்குப் பணிவார்கள். நான் அவர்களிடம் சொல்வதைச் செய்வார்கள். அவர்கள் எனது உண்மையான ஜனங்களாக இருப்பார்கள். நான் அவர்களின் தேவனாக இருப்பேன்.’”
கர்த்தருடைய மகிமை எருசலேமை விட்டு வெளியேறுதல்
21 பிறகு தேவன் சொன்னார்: “ஆனால், இப்போது அவர்கள் இருதயம் அந்த வெறுக்கத்தக்க அருவருக்கத்தக்கச் சிலைகளுக்குரியதாக இருக்கிறது. நான், அவர்கள் செய்த தீயச்செயல்களுக்காக தண்டிப்பேன்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைச் சொன்னார். 22 பிறகு கேருபீன்கள் தம் சிறகை விரித்து காற்றில் பறக்க ஆரம்பித்தன, சக்கரங்களும் அவற்றோடு இருந்தன. இஸ்ரவேல் தேவனுடைய மகிமை அதற்கு மேல் இருந்தது. 23 கர்த்தருடைய மகிமை காற்றில் எழுந்து எருசலேமை விட்டு வெளியேறியது. அது நகரத்துக்குக் கிழக்கே இருக்கிற மலையின் மேல் நின்றது. 24 பிறகு ஆவியானவர் என்னை மேலே தூக்கி பாபிலோனியாவிற்கு இஸ்ரவேலை விட்டுக் கட்டாயமாக வெளியே அனுப்பப்பட்ட ஜனங்களிடம் திரும்பக் கொண்டுவந்தார். நான் அதையெல்லாம் தேவ தரிசனத்தில் கண்டேன். பின்னர் நான் தரிசனத்தில் கண்ட அவர் காற்றில் எழுந்து என்னைவிட்டுப் போனார். 25 பிறகு நான் நாடுகடத்தப்பட்ட ஜனங்களிடம் பேசினேன். கர்த்தர் எனக்குக் காட்டிய எல்லாவற்றையும் நான் சொன்னேன்.
25 எனவே நீங்கள் பொய் சொல்வதை நிறுத்துங்கள். ஒருவருக்கொருவர் எப்பொழுதும் உண்மையையே பேசுங்கள். ஏனென்றால் நாம் அனைவரும் ஒரே சரீரத்தின் பல்வேறு உறுப்புகளாகச் சேர்ந்திருக்கிறோம். 26 உங்கள் கோபம் உங்களைப் பாவம் செய்யக் கொண்டுசெல்லுமளவு அனுமதிக்காதீர்கள். நாள் முழுவதும் கோபம் உடையவர்களாக இருக்காதீர்கள். 27 உங்களை வீழ்த்துவதற்குரிய வழியைப் பிசாசுக்குக் கொடுக்க வேண்டாம். 28 ஒருவன் திருடுகின்றவனாக இருந்தால் தன் திருட்டை நிறுத்துவானாக. அவன் வேலை செய்யத் தொடங்கட்டும். அவன் தனது கைகளை நல்ல செயல்களைச் செய்வதற்குப் பயன்படுத்தட்டும். பிறகு ஏழைகளோடு பகிர்ந்துகொள்ள அவனுக்கென்று சில இருக்கும்.
29 நீங்கள் பேசும்போது தீயவற்றைச் சொல்லாதீர்கள். ஆனால் மற்றவர்களுக்குப் பயன் தரத்தக்கதும், மற்றவர்களைப் பலமுள்ளதாக்குகிறவைகளை மட்டும் பேசுங்கள். அதனால் உங்கள் பேச்சைக் கேட்பவர்களுக்கு உங்கள் பேச்சு ஆசீர்வாதங்களைக் கொண்டு வரும். 30 பரிசுத்த ஆவியானவரைச் சோகப்படுத்தாதீர்கள். நீங்கள் தேவனுக்குரியவராக இருக்கிறீர்கள் என்பதற்கு ஆவியானவரே சான்றாக உள்ளார். தேவன் உங்களுக்குச் சரியான நேரத்தில் விடுதலை தருவார் என்பதைக் காட்டவே தேவன் பரிசுத்த ஆவியானவரை உங்களுக்குத் தந்துள்ளார். 31 கசப்பும், கோபமும், மூர்க்கமும் அடையாதீர்கள். கோபத்தில் சத்தம் இடாதீர்கள். கடுஞ்சொற்களைச் சொல்லாதீர்கள். பாவங்களை செய்யாதீர்கள். 32 ஒருவருக்கொருவர் தயவாயும், மனஉருக்கமாயும் இருங்கள். கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களை மன்னித்துவிடுவதைப்போல நீங்களும் மற்றவர்களை மன்னித்துவிடுங்கள்.
5 நீங்கள் தேவனால் நேசிக்கப்படுகிற அவரது பிள்ளைகள். எனவே தேவனைப் போல ஆக முயலுங்கள். 2 அன்புக்குரிய ஒரு வாழ்க்கையை வாழுங்கள். கிறிஸ்து நம்மை நேசித்தது போலவே மற்றவர்களை நேசியுங்கள். கிறிஸ்து தம்மையே நமக்கு ஒப்புக்கொடுத்துவிட்டார். இனிய நறுமணம் உடைய காணிக்கையாகவும், பலியாகவும் தேவனுக்குத் தம்மைத் தந்தார்.
2008 by World Bible Translation Center